பரமராசியமாலை


காலனைக் கடிந்த காலனே உமையாள் கணவனே கடவுளே என்றென்(று), 

ஓலமிட் டலறி என் மனம் உருகி உளங்களித் தோதும் நாள் உளதோ, 

சீலமெய்த் தவமார் வியாக்கிர பாத தெய்வமா முனிபயந் தெடுத்த, 

பாலனுக் குதவும் பாலனே பொன்னம் பலவனே! பரமரா சியனே! (1) 


முத்தனே உனையே புகழ்ந்துநின் றேத்தி முன்னுறக் கண்டுகண் களிப்பார், 

எத்தனை பிறப்பில் அருந்தவம் புரிந் தார் இவர்பணி ஏழையேற் கருள்வாய், 

சித்தநைந் துருகி ஆலயஞ் சூழ்ந்து தினந்தினந் தெண்டனிட் டிறைஞ்சும், 

பத்தருக் குதவும் பதத்தனே பொன்னம் பலவனே! பரமரா சியனே! (2) 


அசைவற மனத்தில் நின்னைவைத் துருகி அன்பினால் வணங்கிநின் றேத்தி, 

அசைவற மனத்தோ ருடன்கலந் திருக்கும் அநுக்கிரகம் என்றுநீ அருள்வாய், 

பசுவென வனத்தே திரிபவர் முதலாப் பற்பல தேவரும் பலரும், 

பசுபதி எனப்பேர் படைத்திடும் பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (3) 


செஞ்சடா டவியுங் கரியமா மிடறும் திருவெண் ணீற் றொளி திகழ் சிறப்பும், 

குஞ்சிதாம் புயப்பொற் பாதமுஞ் சிறியேன் குறித்திருந் துருகுநாள் உளதோ, 

வஞ்சனாம் அடியேன் பிழையெலாம் பொறுத்து வாழ்வுற வாழ்விக்கும் மருந்தே, 

பஞ்சினேர் அடியாள் பாகனே பொன்னம்பலவனே! பரமரா சியனே ! (4) 


தந்தையும் நீயே தாயுமாய் வளர்த்த சற்குரு நாதனும் நீயே, 

எந்தையும் நீயே இறைவனும் நீயே எனும் நினை வேழையேற் கருள்வாய், 

முந்தையின் மூல முடிவிலா முதலே முதலியர் மூவருந் துதித்த, 

பைந்தமிழ் வேதம் முழங்கிடும் பொன்னம்பலவனே ! பரமரா சியனே! (5) 


கந்தமு மலரு முதலிய கொண்டுன் கழலிணை அருச்சனை புரிந்து, 

மந்திர வடிவாம் நின் திரு நாமம் மனத் தில்வைத் துருகவே தருவாய், 

இந்திரன் முதலாய் எண் டிசை யோரும் இறைஞ்சிடும் ஒரு தனி முதலே, 

பந்தணி விரலாள் பாகனே பொன்னம் பலவனே! பரமராசியனே ! (6)


மண்ணினாற் பொன்னான் மாதரால் மயங்கி மனக்கவலை லையில் அழுந் தாமல், 

எண்ணினாற் பஞ்சாக் கரத்தையே எண்ணி ஏழையேன் வாழும் நாள் உளதோ? 

கண்ணினாற் கண்டு கருத்தினாற் கருதிக் காதலித் துருகுசீர் அடியார் 

பண்ணினால் பாடிப் பணிந்திடும் பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (7) 


மாதர்தங் கலவிக் கடலில் வீழ்ந் தழுந்தி மயங்கினும் மாதவ ருடனே, 

போதகம் பொருந்தி வாழினும் உனது பொன்னடிக் கமலமே தருவரய், 

வேதகம் இரும்பைச் சொன்னமாக்குதல் போல் விரும்புவார் தமைச்சிவம் ஆக்கும், 

பாதபங் கயனே ஐயனே பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (8) 


காலமே எழுந்து மஞ்சனம் ஆடிக் காயமீ திலங்க நீ றணிந்து,

சீலமாய் வணங்கிப் போற்றி நின் நாமம் செபித் திடும் செனனமே தருவாய், 

ஆலமே அருந்தி அகிலமுஞ் சுரரும் அறிந்திடா வகையருள் புரிந்த, 

பாலமேல் விளங்கும் கண்ணனே! பொன்னம்பலவனே! பரமரா சியனே ! (9) 


நாற்கவி உணர்ந்து நான்மறை யோதி நால்வகை ஆகிய உண்மை, 

மார்க்கமும் அறிந்த மாதவம் புரிவார் மலரடி வணங்கவே தருவாய், 

சீர்க்கலை தெரிந்த சீரடி யார்தம் சிந்தையில் இருள்அணு காமல், 

பாற்கரன் எனவே விளங்கிடும் பொன்னம்பலவனே! பரமரா சியனே! (10) 


நாத்தனிற் பஞ்சாக் கரத்தையே செபித்து ஞானநாட் டத்தினால் உனது, 

கூத்தினைக் கண்டு கும்பிடும் பெருமை கொடியநாய் அடியனோ பெறுவேன் ? 

மாத்தநுப் பாசு பதமுத லாக மனத்திலே நினைத்தவை அனைத்தும், 

பாத் தனுக் குதவும் சகாயனே பொன்னம் பலவனே பரமரா சியனே ! (11) 


தூணினிற் பிறந்த சிங்கவீ றடங்கச் சுந்தரச் சிம்புளா னதுவும், 

ஊணெனக் கொடிய விடத்தையுண் டருளி உம்பரைக் காத்ததும் மறவேன், 

சேணினிற் பறந்து பங்கயன் தேடும் திருமுடி தன்னிலே விறகைப், 

பாணனுக் காகச் சுமந்தருள் பொன்னம்பலவனே! பரமராசியனே! (12) 


சாம்பணி ஓழியச் சஞ்சலப் பிறவி தவிரநின் சந்நிதி தனக்கே, 

ஆம்பணி செய்யும் அடியவர்க் கடியேன் அடிமை செய் தொழுகும்நாள் உளதோ? 

காம்பணி தோளி கெளரி கல் யாணி கணவனே! கதிர்மதி யுடனே, 

பாம்பணி வேணிப் பரமனே! பொன்னம் பலவனே! பரமரா சியனே! (13)


கரங்கள்உன் அடியை அருச்சனை புரியக் கண்கள் உன் காட்சியே காண, 

வரங்கொளும் மனம்உன் வடிவையே நாட மகிழ்ந்தெனக் கருளும் நாள் உளதோ? 

சிரங்களை அரிந்த மாலிகா பரண சீரடி யார்தமக் கிரங்கும், 

பரங்கரு ணையனே! ஒப்பிலாப் பொன்னம் பலவனே பரமரா சியனே! (14) 


பேருல கதனில் பிறந்திறந் துழலும் பெருவிடாய் உனது சீர்க் கருணை,

வாரிதி தனிலே குளித்தபோ தன்றி மாறுமோ மாறிடா தன்றே வீரதி,

வீர பத்திரன் ஆகி வேள்விசெய் தக்கனார் தலையைப் பாரதி மூக்கை, 

அரிந் திடும் பொன்னம் பலவனே! பரமரா சியனே! (15) 


நஞ்செனக் கொடிய நயனலீ லையினால் நகையினால் மொழியினால் முலையால்,

வஞ்சகச் சிறியோர் தம்மையே மயக்கும் மாதர்பால் மனங்கொடேன் அடியேன், 

அஞ்செழுத் துருவம் ஆகிநின் றருளி ஐவராய் அநுக்ரகம் முதலாம், 

பஞ்சகிர்த் யஞ்செய் கூத்தனே பொன்னம் பலவனே ! பரமரா சியானே ! (16 ) 


திருவரத்துறையின் முத்தினாற் சமைத்த சிவிகையும் பந்தரும் எதிரே, 

வரவருள் கொடுத்துப் புகலிகா வலற்கு வழங்கிய வண்மையான் மறவேன் , 

அருமறைப் பெரியோர் மாதவர் முனிவர் அடைந்திடும் தில்லையம் பதிவாழ். 

பருவ ரைக் கயிலைக் குறைவனே! பொன்னம்பலவனே! பரமரா சியனே! (17) 


அருந்தவ முனிவர் அந்தணர் பசுக்கள் அடியவர் தமைஇகழ்ந் தவர்கள், 

விரிந்திடு நரகில் வீழ்வரே இதனை மெய்த்தவர் அன்றியார் அறிவார்?

திருந்திழை குமரி அம்பிகை கெளரி திரியம்பகி பங்கஎன் றவரைப் 

பரிந் தருள் புரியும் கடாட்சனே பொன்னம் பலவனே! பரமரா சியனே! (18) 


ஓரொணாப் பெருமை உளவிராட் புருடன் உட்கம் லாலயப் பொதுவில், 

சீரெலாம் உதவும் புனித அஞ் செழுத்தே திருவுரு ஆகநின் றருளி; 

நேரிலா உமையாள் கண்டுகண் களிக்க நீடுமா தவர்தொழு தேத்துப், 

பாரெலாம் உய்ய நடஞ்செயும் பொன்னம்பலவனே! பரமரா சியனே! (19 ) 


மதியினாற் பல நூல் கற்றும்என் துறந்து மாதவம் புரிந்துமென் மண்மேல், 

நதியெலாஞ் சென்று தோய்ந்தும் என் நினது நடந்தெரி சித்திடார் ஆயின், 

அதிகைகே தாரம் கோவலூர் குடந்தை அருட்டுறை நாவலூர் முதலாம், 

பதியெலாம் உடைய கடவுளே! பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (20) 


சூதரும் வேத ! வியாதரும் துதிக்கத் தும்புரு நாரதர் பாட, 

வேதவாக் கியங்கள் ஓதிட வாணன் வித்தகக் குட முழா முழக்கப், 

போதன்மால் முதலாம் வானவர் முனிவர் பூமழை பொழிந்துபோற் றிடவே, 

பாதமேல் எடுத்து நடம்புரி பொன்னம் பலவனே ! பரமரா சியனே ! (21) 


சிரதலந் தனிலே வைத்தசே வடியும் தேசிகர் ஆய் எழுந் தருளிக், 

கரதலந் தனிலே தந்த ஒண் பொருளும் கண்டுகண் களிப்பனோ? அடியேன் 

வரதலம் புலியூர் மகா தலம் அடைந்தேன் மகாநடங் கண்டனன் இனியான், 

பரதலங் களிற்போய் உழன்றிடேன் பொன்னம் பலவனே! பரமரா சியனே ! (22) 


 (குருநமசிவாயர்)


பரமராசியமாலை முற்றிற்று 


# paramarasiya malai , # paramarasiya maalai

To Top