திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

திருவாசகம்



திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர் ஆவார். இது 656 பாடல்களைக் கொண்டது. 51 பிரிவுகள் உள்ளன. எட்டாம் திருமுறை என்று அழைக்கப்படுகிறது. சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை அமைந்துள்ளது. திருவாசகத்தைப் படித்தால் உள்ளம் இளகும். உயிர் உருகும். கரும்புச் சாற்றில் தேன் கலந்து, பால் கலந்து, கனியின் சுவை கலந்து இனிக்கும் திருவாசகப் பாடல்கள் உயிரில் கலந்து உவகை தரும் என்று இராமலிங்க வள்ளலார் கூறுவார்.


“திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற தொடர் பாடல்களின் கனிவுத் தன்மையைப் புலப்படுத்தும். ‘எலும்பை உருக்கும் பாட்டு’ என்று டாக்டர்.ஜி.யூ.போப் கூறுவார். திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
தாயுமானவர், இராமலிங்கர் ஆகியோரது பாடல்கள் மாணிக்க வாசகரது பாட்டு அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன எனில் இதன் செல்வாக்குப் புலப்படும். சிவனைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே திருவாசகம். அப்பாடல்கள் இன்றும் சைவர்களது வீடுகளில் வழிபாட்டின்போது பாடப்படுகின்றன. பாடினால் மனத்தை நெகிழ்விப்பவை அவை. மக்களிடையே வழக்கத்தில் இருந்த சில நாட்டுப்புறப்பாடல் வடிவங்களை மாணிக்கவாசகர் பயன்படுத்தி உள்ளார்.

*இளம்பெண்கள் உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு அம்மானை. அப்போது அவர்கள் பாடுவர். அப்பாடல் அமைப்பில் மாணிக்கவாசகர் பாடியது திருவம்மானை ஆகும்.
*பெண்கள் வாசனைப்பொடி இடித்தபடியே பாடுவது பொற்சுண்ணம் ஆகும். அந்தப் பாடல்களின் அமைப்பில் மாணிக்கவாசகர் இயற்றியது, திருப்பொற்சுண்ணம் ஆகும்.
*பெண்கள் பூப்பறிக்கும்போது பாடும் அமைப்பில் அவர் எழுதியது, திருப்பூவல்லி.
*பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது பாடும் பாடல் வடிவில் அவர் அமைத்த பாக்கள், திருப்பொன்னூஞ்சல் ஆகும்.
மாணிக்கவாசகரது உள்ளம் சிவனை மையமிட்டது.


உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன் பேர்
                                      வேண்டேன்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே
(திருப்புலம், 3)

என்று தான் வேண்டுவது பற்றி அவர் கூறுவது அவரது ஆழ்ந்த பக்தியைப் புலப்படுத்தும்.
மாணிக்கவாசகர் மதுரையை அடுத்த திருவாதவூரில் பிறந்தவர். ஆதிசைவ அந்தணர் இனத்தவர். அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தவர். ‘தென்னவன் பிரமராயன்’ என்ற விருது பெற்றவர். இயற்பெயர் வாதவூரர். ‘ஆளுடைய அடிகள், அழுது அடியடைந்த அன்பர்’ என்றெல்லாம் குறிக்கப்படுபவர்.


பாண்டியனுக்காகக் குதிரைகள் வாங்க நாகப்பட்டினத் துறைமுகத்துக்குச் சென்றார். செல்லும் வழியில் திருப்பெருந்துறையில் சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். வந்த வேலையை மறந்தார். கொண்டு வந்த பணத்தைச் சிவனுக்குக் கோயில் கட்டும் பணியில் செலவிட்டார். மன்னனால் பல தொல்லைகளை அடைந்தார். இறுதியில் மன்னன் இவரது சிறப்பை உணர்ந்து வணங்கினான் என்று அவரது வாழ்க்கைக் குறிப்பு உரைக்கும்.

திருவெம்பாவை

மாணிக்கவாசகர் பாடியது, ‘திருவெம்பாவை’. இது திருவாசகத்தில் ஒரு பகுதி. இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் சைவர்களால் பாடப்படுகிறது. 20 பாடல்களைக் கொண்டது. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பி, கூடி, பொய்கைக்குச் சென்று நீராடி பாவை வைத்து வழிபடுவதைச் சொல்லுகிறது.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்..          (1)

என்று இறைவழிபாட்டுக்கு உயிர்களை ஆயத்தப்படுத்தும் அழகு நயமிக்கது.

திருப்பள்ளி எழுச்சி

அதிகாலையில் எழுக என்று பாடுவது ‘பள்ளி எழுச்சி’ ஆகும். மன்னர்களை எழுப்ப, பள்ளியெழுச்சி பாடும் நிலை அந்நாளில் இருந்தது. மாணிக்கவாசகர் சிவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதாகப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். இதுவும் திருவாசகத்தில் ஒரு பகுதியே.

கீர்த்தித் திரு அகவல்

மாணிக்கவாசகர் பாடியது. கீர்த்தி என்பது புகழ். சிவனது புகழைப் பாடும் நூல் இது. அடியார் பார்க்கும் வகையிலும், நினைக்கும் வகையிலும் அருள் செய்தவன் சிவன். தில்லையில் ஆடுபவன் சிவன். வேட்டுவன் வடிவம் தாங்கியவன். வலைஞன் ஆக வந்து கெளிற்று மீனைக் கொன்றவன்; உமையைக் கூடியவன் என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர். இதுவும் திருவாசகத்தின் ஒரு பகுதியே ஆகும்.

திருவண்டப் பகுதி

மாணிக்கவாசகர் பாடியது, ‘திருவண்டப் பகுதி’ ஆகும். சிவன் எல்லாம் வல்லவன். பெரியதில் பெரியவன், சிறியதில் சிறியவன் என்று அவனது வடிவத்தைப் போற்றுவது ‘திருவண்டப் பகுதி’ ஆகும்.
படைப்பாற் படைக்கும் பழையோன், படைத்தவை
காப்போற் காக்கும் கடவுள், காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்
(திருவண்டப் பகுதி : 13-16)
சூரியனுக்கு ஒளி தந்தவன். சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன். தீயில் வெப்பத்தை வைத்தவன். காற்றில் இயக்கத்தை வைத்தவன். நீரில் சுவையைத் தந்தவன். மண்ணில் திட்பத்தை வைத்தவன் என்று சிவனை வியக்கிறார் மாணிக்கவாசகர்.

போற்றித் திரு அகவல்

‘போற்றி’ என்றால் வணக்கம் என்று பொருள். உலகில் உயிர்கள் உடம்புடன் பொருந்தித் தோன்றும் உலக உற்பத்தியைக் கூறுவது, போற்றித் திருவகவல் ஆகும்.
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
(அடிகள் :112-117)
To Top