ராமாயணம் பகுதி-13

ராமாயணம் பகுதி-13



அவள் ராமனின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள். ராமனுக்கோ மன தைரியம் பறந்துவிட்டது. நம்மைப் பிரிந்து இவள் எத்தனை நாள் கஷ்டப்படுவாளோ? இங்கு இருப்பவர்களை எல்லாம் அனுசரித்து எப்படித்தான் காலம் கழிப்பாளோ? என்று வேதனைப்பட்டார். சீதையே ஆரம்பித்தாள். அன்புக்குரியவரே! உங்கள் முகத்தில் ஏதோ வேதனை தெரிகிறது. நீங்கள் இப்படி இருந்து நான் பார்த்ததே இல்லை. மேலும் இன்று தங்கள் பட்டாபிஷேக நாள். இந்த நிலையில் நீங்கள் சோகமாக இருப்பது எனக்குள் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனந்தமாக இருக்க வேண்டிய தாங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? பிராமண அறிஞர்கள் எல்லாம் இன்றைய நாளை நல்லநாள் என சொல்லியிருக்கிறார்கள். இன்றைய தினம் குருபகவானை அதிபதியாக கொண்ட பூச நட்சத்திரம் சந்திரனுடன் கூடியிருக்கும் நன்னாள். இந்த நன்னாளைத் தான் தாங்கள் அரசுப்பொறுப்பேற்கும் நாளாக குறித்துள்ளனர். இந்த முகூர்த்தநேரத்தில் நீங்கள் துக்கப்பட வேண்டிய காரணம் என்ன? தங்கள் முகம் எப்போதும் கடல் நுரையைப் போல வெண்மையாக காட்சி தரும்.

தங்கக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட குடை போல பிரகாசிக்கும். அது இன்று வாடியிருப்பது ஏன்? உங்கள் கண்கள் தாமரை போல மலர்ந்திருக்கும். இன்று அதில் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறதே. நிலாவையும் அன்னப் பறவையையும் போல காட்சியளிக்கும் தங்கள் முகம் பட்டுப்போய் இருக்கிறது. தாங்கள் பட்டாபிஷேகத்திற்கு தயாராக இருந்தால் உங்கள் முன்னால் மங்கள வாத்தியங்கள் முழங்கிச் செல்லுமே. அந்த வாத்தியக்காரர்கள் எங்கே? பிராமணர்கள் மந்திரங்கள் ஓதி புண்ணிய ஜலம் கொண்டு வருவார்களே! அவர்களை ஏன் காணவில்லை? உங்கள் பின்னால் மக்களும், மக்கள் தலைவர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும் வரவேண்டுமே. அவர்களும் வரவில்லையே! பட்டாபிஷேகத்திற்கு நான்கு குதிரைகள் பூட்டிய மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதம் முன் செல்லுமே. அதையும் காணவில்லையே! நமது பட்டத்து யானையை எங்கே? அதை அலங்கரித்து உங்கள் முன்னால் அனுப்புவார்களே. நீங்கள் அமர்வதற்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பத்ராசனம் என்ற அரியணை செல்லுமே. அதையும் காணவில்லையே, என்று வேதனை ததும்ப கேட்டாள். ராமன் எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.


சீதா! என் தந்தை என்னை காட்டிற்கு போகச் சொல்லியிருக்கிறார் என சொல்லிவிட்டு அமைதியானார். இந்த சொற்கள் காதில் விழுந்ததும், சீதையின் உள்ளம் நொறுங்கிப் போயிருக்குமென அவருக்கு தெரியும். அவள் விக்கித்து நின்றாள். அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ராமனே தொடர்ந்தார். சீதா! உனக்கு எல்லா தர்மங்களும் தெரியும். ஏனெனில் நீ மகாஞானியான ஜனகரின் மகள். ராஜதர்மங்களை நன்கு அறிந்தவள். தர்மத்தை கடைபிடிப்பதில் உனக்கு நிகர் யாருமில்லை. எனவே நான் சொல்வதை அமைதியாகக் கேள். எனது தந்தை என் தாய் கைகேயிக்கு முற்காலத்தில் இரண்டு வரங்கள் தருவதாக சத்தியம் செய்து கொடுத்திருந்தார். அதை என் தாய் இப்போது கேட்டிருக்கிறாள். அதன்படி பரதன் இந்த நாட்டின் யுவராஜன் ஆவான். நான் 14 ஆண்டுகள் தண்டகாரண்யத்தில் வசிக்க வேண்டும் என்பது நிபந்தனை. எனவே நான் காட்டிற்கு புறப்படப் போகிறேன். அதை உன்னிடம் சொல்லிவிட்டு போகலாம் என வந்தேன், என்றார். அத்துடன் அவர் நிறுத்தவில்லை. வேகமாக தன் மனதில் இருந்த கருத்துக்களை எல்லாம் கொட்டினார். ராமன் காட்டிற்கு செல்வது பற்றியோ, பதவியேற்பு நின்று போனது பற்றியோ சீதை அதிக விசனப்பட வில்லை. ஆனால், அவன் சொன்ன புத்திமதிகள் அவளது நெஞ்சை உருக்கின. கோபக்கனலை கிளப்பின.



சீதா! நான் இல்லாத நேரத்தில், உன்னை வணங்குவதற்காக பரதன் வருவான். அப்போது அவனிடம் நீ என்னைப்பற்றி அதிகம் புகழ்ந்து பேசக்கூடாது. லட்சுமணனின் மனைவிக்கும், சத்ருக்கனனின் மனைவிக்கும் உன்னைவிட அதிகமான கவனிப்பு மற்றவர்களால் தரப்படலாம். உனக்கும் அதுபோன்ற மரியாதை வேண்டுமென எதிர்பார்க்கக்கூடாது. பரதன் நமது நாட்டின் அரசனாகிறான். எனவே அவனுக்கு நாம் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் ஆகிறோம். நீ உறுதியான மனம் படைத்தவள் என்பதை நான் அறிவேன். இதுவரையில் நீ என் குடும்பத்தினர் மீது எப்படி பாசம் செலுத்தினாயோ அதே பாசத்தை தொடர்ந்து செலுத்த வேண்டும். நான் காட்டிற்கு சென்றபிறகு வழக்கம்போல நீ விரதங்களையும், உபவாசங்களையும் கடைபிடிக்க வேண்டும். நான் இல்லாத காலத்தில் புண்ணியத்தை சேர்க்க வேண்டும். அதிகாலையில் எழுந்து தேவதைகளுக்கு பூஜை செய்தபிறகு என் தந்தைக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். என் தாய் மிகவும் வயதானவள். என்னை பிரிந்த காரணத்தால் அவள் அழுதுகொண்டே இருப்பாள். அவளை நீ சமாதானம் செய்ய வேண்டும். நீ அவளுக்கு கொடுக்கும் மரியாதையிலிருந்தே அவள் ஆறுதல் பெறவேண்டும். என் தாய்க்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறாயோ அதே அளவுக்கு என் மற்ற இரண்டு அன்னைகளுக்கும் மரியாதை செய்ய வேண்டும். அவர்களுக்கும் எந்த குறையும் வைக்கக்கூடாது. நான் என்னுடைய தாயையும் மற்ற அன்னைகளையும் பிரித்தே பார்ப்பதில்லை. பரதன் உனக்கு சகோதரன் போன்றவன். சத்ருக்கனன் மகன் போன்றவன். இந்த ஸ்நேக பாவத்துடன் அவர்களுடன் பழக வேண்டும். என் உயிரை நான் மதிப்பதைவிட அவர்களை பெரிதாக மதிக்கிறேன்.



பரதன் அரசனாகிவிட்டான் என்பதற்காக அவனுக்கு பிரியமில்லாத காரியங்களை நீ செய்யக்கூடாது. அவன் இந்த நாட்டிற்கு ராஜா. ராஜாக்களிடம் தர்மம் தவறாமல் நடக்க வேண்டியது நமது கடமை. அதை மறந்துவிடாதே. நான் இப்போதே காட்டிற்கு புறப்படுகிறேன், என்று சொல்லி முடித்தார். சீதைக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. ஒரு நல்ல மனைவியிடம் கணவன் என்னவெல்லாம் சொல்லக்கூடாதோ அது அத்தனையும் ராமன் சொல்லி முடித்துவிட்டார். தான் சொல்லாமலே, சீதை இதையெல்லாம் செய்வாள் என்று அவருக்கும் தெரியும். இருந்தாலும், இதை சொன்னதற்கு காரணம் அவளை கோபப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான். இப்படியெல்லாம் சொன்னால் சீதை கோபப்பட்டு தான் வரும்வரை தான் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே குடும்பத்தை கவனித்துக் கொள்வாள் என்று எண்ணிதான் அவர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ராமன் அதிர்ச்சியடையும் வகையில் சீதையின் பதில் அமைந்தது. இப்படியெல்லாம் புத்திமதி சொன்னீர்களே! ஒரு மருமகள் ஒரு குடும்பத்தை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற தர்மத்தை எடுத்துச் சொன்னீர்கள். ஆனால், ஒன்றை மட்டும் ஏன் சொல்லவே இல்லை? மனைவி என்பவள் கணவனில் பாதி. பாதியைப் பிரிந்து மீதி எப்படி இங்கே இருக்கும்? தாங்கள் இருக்குமிடம் தானே எனக்கு அயோத்தி! என்னை மட்டும் இங்கே இருக்க வைத்துவிட்டு, தாங்கள் தனித்து காட்டுக்கு செல்வதில் என்ன நியாயம்? என்றாள்.

To Top