ராமாயணம் பகுதி-14
சீதை தன்னோடு வர விருப்பப்பட்டாலும், வனத்தில் வாழ்வதால் ஏற்படப்போகும் சிரமங்களை அவள் தாங்கிக் கொள்ள மாட்டாள் என்பதால் ராமன் அவளுக்கு பல புத்திமதிகளை சொன்னார். என் கண்மணியே! நீ வனத்துக்கு வர வேண்டாம். என் சொல்லைக் கேள். நினைப்பதை சாதிக்க முயலக்கூடாது. நான் சொன்னதைக் கேட்டால் நீ சுகமாக வாழ்வாய். காடு என்றால் சாதாரண விஷயமல்ல. அங்கே ஏராளமான விஷ பூச்சிகள் இருக்கும். கல்லும் முள்ளும் குவிந்து கிடக்கும். மனிதர்களால் அங்கே வசிக்கவே முடியாது. உன்னை என்னுடன் கூட்டிச்செல்வதால் எனக்கு அதிக இடைஞ்சலாக இருக்கும் என கருதி இப்படி சொல்கிறேனோ என நினைக்காதே. உனது சுகமே எனது சுகம். காட்டிற்கு நீ வந்துவிட்டால் சுகம் என்ற வார்த்தையே காற்றோடு பறந்துவிடும். அங்கே ஏராளமான குகைகள் இருக்கின்றன. அவற்றில் வன விலங்குகள் தங்கியிருக்கும். நம்மைப்போன்ற வித்தியாசமான பிராணிகளை அவை பார்த்ததில்லை. அதன் காரணமாக அவை நம்மை கொல்ல நினைக்கும். மதம் பிடித்த யானைகள் கூட தாண்டமுடியாத சகதி நிறைந்த ஆழமான புதைகுழிகள் இருக்கும். அவற்றைத் தாண்டி உன்னால் நடக்க முடியாது.
உன் அழகிய உடலை முட்கள் பதம்பார்க்கும். காட்டுக்கோழிகளின் சத்தத்தைக் கேட்டால் கூட அதன் வித்தியாசமான ஒலியால் நீ பயந்துபோவாய். வன வாழ்க்கை இலகுவான தல்ல. இங்கே நீ பஞ்சு மெத்தையில் புரள்கிறாய். அங்கோ மரங்கள் சொரியும் இலைகளின்மீதும், காய்ந்த சருகுகளின் மீதும் தான் படுக்கவேண்டும். இங்கு கிடைப்பது போல ஆகார வகைகள் அங்கு கிடைக்காது. என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு திருப்தியடைய வேண்டும். அழகிய பட்டாடைகள் அணியமுடியாது. மரங்களின் பட்டைகளாலான ஆடைகளையே அணியவேண்டும். அடிக்கடி விரதம் இருக்க வேண்டும். காட்டு வாழ்க்கையில் தவமே முக்கியமானது. எனவே தவம் செய்வோருக்கு என விதிக்கப்பட்டுள்ள கடுமையான நியமங்களை கடைபிடிக்க வேண்டும். தினமும் பூக்களை பறித்துவந்து தெய்வ பூஜை செய்ய வேண்டும். நாம் செல்லும் வழியில் ஏராளமான மலைப்பாம்புகள் படுத்திருக்கும். அவற்றிடம் சிக்கிவிடக்கூடாது. விட்டில் பூச்சிகள், புழுக்கள், கொசுக்கள், தேள்கள் என நம்மை இரவும் பகலும்பாடாய் படுத்தும் ஜந்துக்களிடமிருந்து தப்பவேண்டும். அவை தரும் கொடுமையை இன்முகத்துடன் சகித்துக்கொள்ள வேண்டும். தர்ப்பைகள் நம் உடலைக்கிழிக்கும். என்ன நடந்தாலும் கோபப்படக்கூடாது.
மனிதனின் இயற்கை உபாதையான காமத்தை மறந்து விட வேண்டும். எதற்கும் பயப்படாமல் இருக்க வேண்டும். இதெல்லாம் உன்னால் முடியாது. எனவேதான் உன் மீது கொண்ட பிரியம் காரணமாக உன்னை இங்கேயே விட்டுச்செல்ல விரும்புகிறேன், என்றார். சீதையின் கண்களிலிருந்து மலையருவியென கண்ணீர் வழிந்தது. அவள் தொண்டை அடைக்க, ஸ்ரீராமா! நீங்கள் இதுவரை காட்டு வாழ்க்கையின் கஷ்டங்களைப்பற்றி மட்டுமே சொன்னீர்கள். ஆனால், நீங்கள் இல்லாத இந்த அரண்மனை அந்தக் காட்டைவிடக் கொடியதாக என் கண்ணுக்கு புலப்படும். உங்களோடு நான் இருந்தால், மிருகங்களின் கர்ஜனை குயிலின் பாட்டைப்போல என் காதுகளில் ஒலிக்கும். சந்தன மணமும், தென்றல் காற்றும் தரும் சுகத்தை நான் அனுபவிப்பேன். உங்களைக் கண்டாலே மிருகங்கள் எல்லாம் ஒதுங்கிப் போய்விடும். மேலும் உங்களிடம் என் தந்தை செய்துகொடுத்த உறுதியை அதற்குள் மறந்து விட்டீர்களா? நான் உங்களோடு இருந்து தர்மத்தை அனுஷ்டிப்பேன் என்றும், உங்களை நிழல்போல தொடர்வேன் என்றும் அவர் சொன்னாரல்லவா? அந்த உத்தரவாதத்தை நான் கடைபிடித்தாக வேண்டும். உங்களோடு இருந்தால்தான் எனக்கு பாதுகாப்பு. தேவர்களின் அரசனான இந்திரன் கூட உங்களோடு நான் இருந்தால் என்னைப்பார்க்க அஞ்சுவான். கணவனைப் பிரிந்த மனைவி உயிரோடு இருக்கக்கூடாது என நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள். அது மற்றவர்களுக்கு பொருந்தும் போது, உங்கள் மனைவியான எனக்கும் தானே பொருந்தும்!
நீங்கள் என்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் ஜாதக ரீதியாக நான் காட்டுவாசத்தை அனுபவிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பு எங்கள் அரண்மனைக்கு வந்த ஜோதிடர்கள், நான் காட்டில் வசிக்க வேண்டிய காலகட்டம் இருப்பதாக தெரிவித்தனர். அந்த வாழ்க்கையைச் சந்திக்க நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். விதியின் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். சுவாமி! காட்டில் வசித்தால் பல கஷ்டங்கள் நேரும் என்பதை நானும் அறிவேன். சாதாரண மனிதர்கள் அக்கஷ்டங்களைக் கண்டு அஞ்சலாம். நான் இந்திரியங்களை அடக்கியவள். என் மனம் எனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. எனவே காடு தரும் துன்பங்களை நான் இலகுவாக எடுத்துக் கொள்வேன். ஒருமுறை என் வீட்டிற்கு வந்த மகாசாதுவான பெண் ஒருத்தி எனது தாயிடம், இவள் காட்டில் சென்று வசிக்க வேண்டிய காலம் இருக்கிறது என்று சொன்னாள். அது இப்போது நடக்கப்போகிறது. நான் உங்களோடு காட்டில் வசித்தால் என்னைப் பிடித்துள்ள சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவேன். நீங்களே எனக்கு குலதெய்வம். இந்த உலகத்தில் ஒரு பெண் ஒரு ஆணின் கையில் தாரை வார்த்து ஒப்படைக்கப்பட்டுவிட்டால், அவள் உயிரோடு இருக்கும்வரை தன் கணவனை விட்டு பிரியவே கூடாது என்று வேதம் சொல்கிறது. இது உங்களுக்கு தெரியாததல்ல. இருப்பினும் வேதத்தை உதாரணம் காட்டினாலாவது தாங்கள் என்னை அழைத்துச் செல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் சொல்கிறேன். மேலும் என்னை இங்கேதான் விட்டு செல்வேன் என்று உங்களால் சொல்ல முடியாது. நான் உங்கள் மனைவி.
உங்களுடன் வாழும் உரிமை எனக்கிருக்கிறது. எதற்காக என்னை இங்கே விட்டுச் செல்ல எண்ணுகிறீர்கள்? என் பணிவிடையில் நீங்கள் இதுவரை ஏதாவது குற்றம் கண்டீர்களா? நீங்களே கதி என இருக்கிறேன். என்னைவிட உங்கள் மீது பக்தி உள்ளவர்கள் இருக்கவே முடியாது. நீங்கள் பல சுபச்செய்திகளை என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள். அதற்காக மகிழ்ந்து நான் ஆட்டம் போட்டது கிடையாது. சில சமயங்களில் மனதிற்கு வருத்தமான சம்பவங்களையும் சொல்வீர்கள். அப்போது நான் துக்கப்பட்டது கிடையாது; அழுது புரண்டதும் கிடையாது. இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகவே கருதியுள்ளேன். உங்களுக்கு சுகம் வந்தாலும், துக்கம் வந்தாலும் அது எனக்கும் சேர்த்து தான். இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். பிரபு! நீங்கள் என்னை அழைத்துப் போகாவிட்டால் விஷம் குடிப்பேன். அதில் எனக்கு சாவு வராவிட்டால் தீயில் குதிப்பேன். அதிலும் மரணம் வராவிட்டால் ஆழமான ஆற்றில் குதிப்பேன். ஏதாவது ஒரு வகையில் என் உயிர் போவது உறுதி, என்று உருக்கமாகவும், மனம் பதறியும், சற்று ஆவேசம் கலந்தும் உணர்ச்சிகளின் வடிவமாகிச் சொன்னாள் சீதாபிராட்டி. ராமன் இது எதற்குமே மசியவில்லை. மனிதர்களே வசிக்காத காட்டிற்கு இவளை அழைத்துச் செல்வது உசிதமில்லை என்றே கருதினார். சீதையோ தன் நிலையில் பிடிவாதமாக இருந்தாள்.