ராமாயணம் பகுதி-12
பின்னர் கைகேயி தேவாசுர யுத்தத்தில் மன்னனைத் தான் காப்பாற்றிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுவிட்டு, அப்போது மன்னன் தருவதாய்ச் சொன்ன இரு வரங்களையும் இப்போது தரவேண்டும் எனக் கேட்கின்றாள். அவள் சூழ்ச்சி அறியாத மன்னனோ உடனே ஒத்துக் கொள்கின்றான். உடனேயே கைகேயி, இப்போது ராமன் பட்டாபிஷேகத்துக்குச் செய்யப் பட்டிருக்கும் பொருட்களைக் கொண்டே என் மகன் பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யவேண்டும். இது முதல் வரம். இரண்டாம் வரம் என்னவெனில் ராமன் மரவுரி தரித்துப் பதினான்கு வருஷம் காட்டில் வாசம் செய்யவேண்டும். எனக் கூறுகின்றாள். மன்னன் மனம் கலங்கியது. மூர்ச்சித்துக் கீழே விழுந்தான். நாகப் பாம்பின் நஞ்சைத் தன் நாவிலே வைத்திருக்கும் கைகேயியின் சொற்களைக் கேட்ட மன்னன், அந்த விஷம் உடம்பில் பரவியதால் விஷம் உண்ட யானையைப் போலத் தரையில் வீழ்ந்தான். கைகேயி, தசரதனிடம் பிடிவாதம் செய்து தம்மகன் பரதன் நாடாளும்படியாகவும், இராமர் பதினான்கு ஆண்டு காடாளும்படியாகவும் உறுதிமொழி வாங்கி விட்டாள். அப்போது கைகேயி சுமந்திரரைப் பார்த்து ராமனை உடனேயே மன்னன் பார்க்கவேண்டும் எனச் சொல்லி அழைத்து வரும்படி பணிக்கின்றாள்.
அமைச்சர் சுமந்திரர் மின்னலென வந்து நின்றார். மகாராணியின் திருப்பாதங்களுக்கு நமஸ்காரம். கட்டளையிடுங்கள் தாயே,. சுமந்திரரே! மன்னர் ஸ்ரீராமனைப் பார்க்க விரும்புகிறார். அவனை உடனே வரச்சொல்லுங்கள்,. உத்தரவு தாயே! என்ற சுமந்திரர் தசரதர் இருந்த அறைக்குச் சென்றார். மன்னரின் நிலை மோசமாக இருந்ததைப் புரிந்து கொண்டார். ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொண்டார். மன்னரை புகழ் மொழி பேசி எழுப்பினார். அவரோ அசைவற்றுக் கிடந்தார். அவசர அவசரமாக ராமபிரானை அழைத்து வந்தார். அரசர் படுத்திருந்த அறையில் ராமர் நுழையவும் கைகேயி எதிர்ப்பட்டாள். அன்னையே! வணக்கம், என்றவர் அவளது காலடியில் விழுந்து ஆசிபெற்றார். தந்தையின் பொற்பாதம் தொட்டு வணங்கினார். தசரதருக்கு நெஞ்சில் ஏதோ குடைச்சல். அவர் ராமனின் முகத்தைப் பார்க்கவே கூசிக் கிடந்தார். ஸ்ரீராம என முனகியதோடு சரி. எதுவும் பேசாமல் மீண்டும் மஞ்சத்தில் முகம் புதைத்து விட்டார். அம்மா! தந்தை அழைத்ததாக அமைச்சர் சொன்னாரே, என்ன விஷயம்? தந்தையார் ஏன் இப்படி அலங்கோலமாக கிடக்கிறார்? அவரது உடலுக்கு ஏதாவது? என்று நிறுத்திய ராமனிடம், கைகேயி விஷத்தைக் கொட்டினாள்.
ராமா! மன்னர் உன்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்லத் தயங்குகிறார். அவரது விருப்பத்தை நீ நிறைவேற்றியாக வேண்டும். ஒரு மகன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையிலிருந்து நீ வழுவக்கூடாது. அவ்வாறு செய்தால் உன்னை விட புகழ்மிக்கவன் யாரும் இருக்க முடியாது, என புதிர் போட்டாள். கைகேயியை பொறுத்த வரை இவ்வார்த்தைகள் புதிர். ஆனால், ஸ்ரீராமன் என்றும் சஞ்சலமில்லாதவர். எதற்கும் அஞ்சாதவர். எப்பேர்ப்பட்ட சூழலையும் ஏற்கும் மனப்பக்குவம் உடையவர். அவருக்கு இவ்வார்த்தைகள் மிக சாதாரணமாகவே பட்டன. சொல்லுங்கள் தாயே! அரசரின் விருப்பம் என்ன? என்னால் ஆகக்கூடியதாயின் அதை உடனே நிறைவேற்றுவேன். இது சத்தியம், என்றார். சத்தியம் என்று ராமன் சொன்னது கைகேயிக்கு இரட்டிப்பு பலத்தைத் தந்தது. ராமா! நான் அரசரிடம் ஏற்கனவே இரண்டு வரங்கள் கேட்பேன் உறுதி பெற்றிருந்தேன். அதை இன்று கேட்டேன். அதன்படி பரதனுக்கு பட்டாபிஷேகம் நடத்த வேண்டும். நீ தண்டகாரண்யத்துக்கு புறப்பட வேண்டும்,. இங்கு தான் மனிதன் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்மம் சொல்லித் தரப்படுகிறது. ஒருவனுக்கு கல்யாணம் என வைத்துக் கொள்வோம். மணமேடையில் வந்து அமர்ந்து விட்டான். மணமகளின் தந்தை திடீரென கல்யாணத்துக்கு மறுக்கிறார். மேடையில் இருப்பவன் எத்தனை பேர் முன்பு அவமானப்படுவான்! உடனே, ஆத்திரத்தில் கத்தித் தீர்ப்பான். உணர்ச்சிவசப்பட்டு, கத்தியும் கூட எடுத்து விடுவான். இதுதான் மானிட இயல்பு.
ஆனால், இன்னும் சிறிது நேரத்தில் பட்டாபிஷேகம் என நிச்சயிக்கப்பட்டிருந்த ராமன், கைகேயியின் இவ்வார்த்தைகள் கேட்டு சலனமின்றி இருக்கிறான். அழுகை இல்லை, ஆவேசம் இல்லை. சற்று கூட இயல்பு மாறாத நிலையில், தாயே! இதைச் சொல்லவா தந்தையாருக்கு இவ்வளவு தயக்கம். நான் அவரது உத்தம குமாரானாயிற்றே. இதை அவரே என்னிடம் நேரடியாகச் சொல்லியிருக்கலாமே! என் தம்பி பரதனுக்கு இந்த நாட்டை நானாகவே கொடுத்திருப்பேனே! இதோ! இப்போதே வனம் புகுகிறேன் தாயே, என்றவர் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்றார். வெளியே நின்ற லட்சுமணனின் காதுகளில் இது கேட்டது. அவனுக்கு கடுமையான ஆத்திரம். அவன் ராமனைப் பின்தொடர்ந்தான். இதற்குள் மாமுனிவர் வசிஷ்டர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முடித்து விட்டார். புனித நீர்க்குடங்களை ஏந்திய அந்தணர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர். இதை எதையும் ராமன் கண்டு கொள்ளவில்லை. தாய் கவுசல்யாவின் இருப்பிடம் சென்றார். தாயின் பாதம் பணிந்து, நடந்ததைச் சொன்னார்.
கொதித்து விட்டாள் கவுசல்யா. என்ன சொன்னார் உன் தந்தை? நீ கானகம் செல்ல வேண்டுமென்றும், பரதன் நாடாள வேண்டும் என்றா? இது என்ன கொடுமை? இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே. அப்படியே நிலைமையை மாற்றிக் கொண்டாலும், நீ காட்டுக்கு போக வேண்டும் என்ற அவசியம் என்ன வந்தது? இது நீதியற்ற செயல், அவள் கதறினாள். பெற்ற வயிறு பற்றி எரிந்தது. மயங்கி விழுந்தாள்.
ராமனும் லட்சுமணனும் அவளைத் தாங்கிக் கொண்டனர். பின்னர் ராமன் மனைவியைக் காணச் சென்றார்.சீதா என்ற அவர் அன்புமொழி கேட்டு மயிலென பறந்து வந்தாள் அந்த தர்மபத்தினி. கணவரின் பட்டாபிஷேகத்திற்காக தன்னை அதிகாலையிலேயே தயார்படுத்திக் கொண்டிருந்தாள். வழக்கத்தை விட அதிக அலங்காரம் செய்திருந்தாள். சீதா! உன் மைத்துனன் பரதன் இந்நாட்டின் மாமன்னன் ஆகப் போகிறான். நான் தண்டகாரண்யம் புறப்படுகிறேன். நீ இங்கேயே தங்கியிருந்து, உன் மூன்று மாமியார்களையும் தாயாகக் கருதி, கண்போல் பாதுகாத்து வா. பதினான்கே வருடத்தில் நான் திரும்பி விடுவேன், என்றார். சீதாவுக்கு ராமன் சொல்வது எதுவுமே புரியவில்லை. சுவாமி! தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? இவ்வளவு கொடூரமான வார்த்தைகளை மிக இலகுவாக சலனமின்றி சொல்கிறீர்களே? என்ன நடந்தது? என்று பதைபதைக்க கேட்டாள்.