திருச்சதகம் - திருவாசகம்

திருவாசகம்



திருச்சதகம் 

(திருப்பெருந்துறையில் அருளியது)


1. மெய் உணர்தல் (கட்டளைக் கலித்துறை) 


மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என் 
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம் 
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும் 
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே. 5 

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும் 
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால் நரகம் புகினும் 
எள்ளேன் திருஅருளாலே இருக்கப் பெறின் இறைவா 
உள்ளேன் பிற தெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே. 6 

உத்தமன் அத்தன் உடையான் அடியே நினைந்து உருகி 
மத்த மனத்தொடு மால் இவன் என்ன மனம் நினைவில் 
ஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் 
தம் தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே. 7 

சாவ முன் நாள் தக்கன் வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி 
ஆவ எந்தாய் என்று அவிதா இடும் நம்மவர் அவரே 
மூவர் என்றே எம்பிரானொடும் எண்ணி விண் ஆண்டு மண்மேல் 
தேவர் என்றே இறுமாந்து என்ன பாவம் திரதவரே. 8 

தவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்டாது இறைஞ்சேன் 
அவமே பிறந்த அருவினையேன் உனக்கு அன்பர் உள்ளாம் 
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன் நின் திருவடிக்கு ஆம் 
பவமே அருளு கண்டாய் அடியேற்கு எம்பரம்பரனே. 9 

பரந்து பல் ஆய்மலர் இட்டு முட்டாது அடியே இறைஞ்சி 
இரந்த எல்லாம் எமக்கே பெறலாம் என்னும் அன்பர் உள்ளம் 
கரந்து நில்லாக் கள்வனே நின்தன் வார்சுழற்கு அன்பு எனக்கும் 
நிரந்தரமாய் அருளாய் நின்னை ஏத்த முழுவதுமே. 10 

முழுவதும் கண்டவனைப் படைத்தான் முடிசாய்ந்து முன்னாள் 
செழு மலர் கொண்டு எங்கும் தேட அப்பாலன் இப்பால் எம்பிரான் 
கழுதொடு காட்டிடை நாடகம் ஆடிக் கதி இலியாய் 
உழுவையின் தோல் உடுத்து உன் மத்தம் மேல் கொண்டு உழிதருமே. 11 

உழிதரு காலுங் கனலும் புனலொடு மண்ணுவிண்ணும் 
இழிதரு காலமெக் காலம் வருவது வந்ததற்பின் 
உழிதரு காலத்த உன்னடி யேன்செய்த வல்வினையக் 
கழிதரு காலமு மாயவை காத்தெம்மைக் காப்பேவனே. 12 

பவனெம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண் ணோர்பெருமான் 
சிவனெம் பிரான்என்னை ஆண்டுகொண்டான் என் சிறுமைகண்டும் 
அவனெம் பிரானென்ன நானடி யேனென்ன இப்பரிசே 
புவனெம் பிரான்தெரி யும்பரிசாவ தியம்புகவே. 13 

புகவே தகேன்உனக் கன்பருள் யானென்பொல் லாமணியே 
தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மையெப் புன்மையரை 
மிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண் ணாவமுதே 
நகவே தகும்எம் பிரானென்னை நீசெய்த நாடகமே. 14 

2. அறிவுறுத்தல் (தரவு கொச்சகக் கலிப்பா) 


நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே 
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் 
ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என் 
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15 

யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன் 
வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் 
தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் 
மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16 

வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் 
இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் 
பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் 
வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17 

ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் 
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் 
கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் 
சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18 

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி 
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் 
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு 
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19 

வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின்பால் 
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழ வேண்டிக் 
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன் 
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20 

பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் 
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம் 
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன் 
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21 

அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம் 
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ் 
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்துஉருகேன் 
தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22 

வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய 
பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே 
ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய் 
வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23 

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு 
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே 
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் 
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே. 24 

3. சுட்டறுத்தல் (எண் சீர் ஆசிரிய விருத்தம்) 


வெள்ளம் தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் 
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் 
பள்ளம் தாழ் உறு புனலில் கீழ் மேல் ஆகப் 
பதைத்து உருகும் அவ நிற்க என்னை ஆண்டாய்க்கு 
உள்ளம்தான் நின்று உச்சி அளவும் நெஞ்சாய் 
உருகாதால் உடம்பு எல்லாம் கண்ணாய் அண்ணா 
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல் ஆம் 
கண் இணையும் மரம் ஆம் தீ வினையினேற்கே. 25 

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று 
போதுநான் வினைக் கேடன் என்பாய் போல 
இனையன் நான் என்று உன்னை அறிவித்து என்னை 
ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை 
அனைய நான் பாடேன் நின்று ஆடேன் அந்தோ 
அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் 
முனைவனே முறையோ நான் ஆனவாறு 
முடிவு அறியேன் முதல் அந்தம் ஆயினானே? 26 

ஆயநான் மறையனும் நீயே ஆதல் 
அறிந்து யான் யாவரினும் கடையேன் ஆய 
நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும் 
நாதனே நான் உனக்கு ஓர் அன்பன் என்பேன் 
ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் 
அடியார் தாம் இல்லையே அன்றி மற்று ஓர் 
பேயனேன் இதுதான் நின்பெருமை அன்றே 
எம்பெருமான் என் சொல்லிப் பேசுகேனே. 27 

பேசின் தாம் ஈசனே எந்தாய் எந்தை 
பெருமானே என்று என்றே பேசிப் பேசிப் 
பூசின்தான் திருமேனி நிறைப் பூசி 
போற்றி எம்பெருமானே என்று பின்றா 
நேசத்தால் பிறப்பு இறப்பைக் கடந்தார் தம்மை 
ஆண்டானே அவா வெள்ளம் கள்வனேனை 
மாசு அற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ 
என்னை நீ ஆட்கொண்ட வண்ணம் தானே. 28 

வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று 
அநேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்று அங்கு 
எண்ணம்தான் தடுமாறி இமையோர் கூட்டம் 
எய்துமாறு அறியாத எந்தாய் உன் தன் 
வண்ணம்தான் அது காட்டி வடிவு காட்டி 
மலர்க்கிழல்கள் அவைகாட்டி வழி அற்றேனைத் 
திண்ணம்தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய் 
எம்பெருமான் என் சொல்லிச் சிந்துக்கேனே. 29 

சிந்தனை நின்தனக்கு ஆக்கி நாயினேன் தன் 
கண் இனை நின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி 
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்கு உன் 
மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்கள் ஆர 
வந்தனை ஆட்கொண்டு உள்ளே புகுந்து விச்சை 
மால் அமுதப் பெரும் கடலே மலையே உன்னைத் 
தந்தனை செந் தாமரைக்காடு அனைய மேனித் 
தனிச்சுடரே இரண்டுமிலி இத்தனிய னேற்கே. 30 

தனியேனன் பெரும் பிறவிப் பௌவத்து எவ்வம் 
தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக் 
கனியைநேர் துவர்வாயார் என்னும் காலால் 
கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு 
இனி என்னே உய்யும் ஆற என்று என்று எண்ணி 
அஞ்சு எழுத்தின் பணை பிடித்துக் கிடக்கின்றேனை 
முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற் 
கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே. 31 

கேட்டு ஆரும் அறியாதான் கேடு ஒன்று இல்லான் 
கிளை இலான் கேளாதே எல்லாம் கேட்டான் 
நாட்டார்கன் விழித்திருப்ப ஞாலத்து உள்ளே 
நாயினுக்கு தவிசு இட்டு நாயினேற்கே 
காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும் 
கேளாதான எல்லாம் கேட்பித்து என்னை 
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் 
எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே. 32 

விச்சைதான் இது ஒப்பது உண்டோ கேட்கின் 
மிகுகாதல் அடியார்தம் அடியன் ஆக்கி 
அச்சம் தீர்த்து ஆட்கொண்டான் அமுதம் ஊறி 
அகம் நெகவே புகுந்து ஆண்டான் அன்பு கூர 
அச்சன் ஆண் பெண் அலி ஆகாசம் ஆகி 
ஆர் அழல் ஆய் அந்தம் ஆய் அப்பால் நின்ற 
செச்சை மலர் புரையும் மேனி எங்கள் 
சிவபெருமான் எம்பெருமான் தேவா கோவே. 33 

தேவர்க்கோ அறியாத தேவ தேவன் 
செழும் பொழில்கள் பயந்து காத்து அழிக்கும் மற்றை 
மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி 
மூதாதை மாது ஆளும் பாகத்து எந்தை 
யாவர் கோன் என்னையும் வந்து ஆண்டு கொண்டான் 
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் யாதும் அஞ்சோம் 
மேவினோம் அவன் அடியார் அடியரோடும் 
மேன்மேலும் குடைந்து ஆடி ஆடுவோமே. 34 

4. ஆத்ம சுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்) 


ஆடுகின்றிலை கூத்து உடையான் கழற்கு அன்பு இலை என்புஉருகிப் 
பாடுகின்றிலை பதைப்பதும் செய்கிலை பணிகிலை பாதமலர் 
சூடுகின்றிலை சூட்டுகின்றதும் இலை துணை இலி பிண நெஞ்சே 
தேடிகின்றிலை தெருவுதோறு அலறிலை செய்வதொன்று அறியேனே? 35 

அறிவு இலாத எனைப்புகுந்து ஆண்டு கொண்டு அறிவதை அருளிமேல் 
நெறிஎலாம் புலம் ஆக்கிய எந்தையைப் பந்தனை அறுப் பானைப் 
பிறிவு இலாத இன் அருள் கண் பெற்றிருந்தும் மாறி ஆடுதி பிண நெஞ்சே 
கிறி எலாம் மிகக் கீழ்ப்படுத்தாய் கெடுத்தாய் என்னைக் கெடுமாறே. 36 

மாறிநின்று எனைக் கெடக் கிடந்தனையை எம் மிதி இலிமட நெஞ்சே 
தேறுகின்றிலம் இனி உனைச் சிக்கனெக் சிவன் அவன் திரங் கோள் மேல் 
நீறு நின்றது கண்டனை ஆயினும் நெக்கிலை இக்காயம் 
கீறு நின்றிலை கெடுவது உன் பரிசு இது கேட்கவும் கில்லேனே. 37 

கிற்றவா மனமே கெடுவாய் உடையான் அடி நாயேனை 
விற்று எலாம் மிக ஆள்வதற்கு உரியவன் விரைமலர் திருப் பாதம் 
முற்று இலா இளந்தளிர் பிரிந்திருந்து நீ உண்டன எல்லாம் 
அற்றவாறும் நின் அறிவும் நின்பெருமையும் அளவு அறுக் கில்லேனே. 38 

அளவு அறுப்பதற்கு அரியவன் இமையவர்க்கு 
அடியவர்க்கு எளியான் நம் 
களவு அறுத்து நின்று ஆண்டமை கருத்தினுள் 
கசிந்து உணர்ந்து இருந்தேயும் 
உள கறுத்து உனை நினைந்து உளம் பெரும் களன் 
செய்ததும் இலை நெஞ்சே 
பளகு அறுத்து அடையான் கழல் பணிந்திலை 
பரகதி புகுவானே. 39 

புகுவ தாவதும் போதர வில்லதும் பொன்னகர் புகப்போதற் 
குகுவ தாவதும் எந்தையெம் பிரானென்னை யாண்டவன் சுழற்கன்பு 
நெகுவ தாவதும் நித்தலும் அமுதொடு தேனொடு பால்கட்டி 
மிகுவ தாவதும் இன்றெனின் மற்றிதற் கென்செய்கேன் வினையேனே. 40 

வினையென் போலுடை யார்பிற ராருடை யானடி நாயேனைத் 
திசையின் பாகமும் பிரிவது திருக்குறிப் பன்றுமற் றதணாலே 
முனைவன் பாதநன் மலர்பிரிந் திருந்தும்நான்முட்டிலேன் தலைகீறேன் 
இனையன் பாவனை யிரும்புகல் மனஞ்செவி யின்னதென் றறியேனே. 41 

ஏனை யாவரும் எய்திட லுற்றமற் றின்ன தென் றறியாத 
தேனை ஆன்நெயைக் கரும்பின் இன் தேறலைச் சிவனையென் சிவலோகக் 
கோனை மான்அன நோக்கிதன் கூறனைக் குறுகிலேன் நெடுங்காலம் 
ஊனை யானிருந் தோம்புகின் றேன்கெடு வேனுயி ரோயாதே. 42 

ஓய்வி லாதன உவமனில் இறந்தன ஒண்மலர்த் தாள்தந்து 
நாயி லாகிய குலத்தினுங் கடைப்படும் என்னைநன் னெறிகாட்டித் 
தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன் 
தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவேனே. 43 

வேனில் வேள்கணை கிழித்திட மதிகெடும் அதுதனை நினையாதே 
மான்நி லாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகித் 
தேன்நி லாவிய திருவருள் புரிந்தவென் சிவனகர் புகப்போகேன் 
ஊனில் ஆவியை ஓம்புதற் பொருட்டினும் உண்டுடுத் திருந்தேனே. 44 

5. கைம்மாறு கொடுத்தல் (கலிவிருத்தம்) 


இருகை யானையை ஒத்திருந் தென்னுளக் 
கருவை யான்கண்டி லேன் கண்ட தெவ்வமே 
வருக வென்று பணித்தனை வானுளோர்க்கு 
ஒருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே. 45 

உண்டோ ர் ஒண்பொரு ளென்றுணர் வார்க்கெலாம் 
பெண்டிர் ஆண்அலி யென்றறி யொண்கிலை 
தொண்ட னேற்குள்ள வாவந்து தோன்றினாய் 
கண்டுங் கண்டிலேன் என்னகண் மாயமே. 46 

மேலை வானவ ரும்மறி யாததோர் 
கோல மேயெனை ஆட்கொண்ட கூத்தனே 
ஞால மேவிசும் பேயிவை வந்துபோம் 
கால மேயுளை யென்றுகொல் காண்பதே. 47 

காண லாம்பர மேகட் கிறந்ததோர் 
வாணி லாப் பொரு ளேயிங்கொர் பார்ப்பெனப் 
பாண ளேன்படிற் றாக்கையை விட்டுனைப் 
பூணு மாற்றி யேன் புலன் போற்றியே. 48 

போற்றி யென்றும் புரண்டும் புகழ்ந்தும்நின்று 
ஆற்றன் மிக்கஅன் பாலழைக் கின்றிலேன் 
ஏற்று வந்தெதிர் தாமரைத் தாளுறுங் 
கூற்ற மன்னதொர் கொள்கையென் கொள்கையே. 49 

கொள்ளுங் கில்லெனை யன்பரிற் கூய்ப்பணி 
கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான் 
நள்ளுங் கீழளும் மேலுளும் யாவுளும் 
எள்ளும் எண்ணெயும் போல்நின்ற எந்தையே. 50 

எந்தை யாயெம் பிரான்மற்றும் யாவர்க்குந் 
தந்தை தாய்தம் பிரான்தனக் கஃதிலான் 
முந்தி யென்னுள் புகுந்தனன் யாவருஞ் 
சிந்தை யாலும் அறிவருஞ் செல்வனே. 51 

செல்வம் நல்குர வின்றிவிண் ணோர்புழுப் 
புல்வரம் பின்றி யார்க்கும் அரும்பொருள் 
எல்லை யில்கழல் கண்டும் பிரிந்தனன் 
கல்வ கைமனத் தேன்பட்ட கட்டமே. 52 

கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு 
இட்ட அன்பரொ டியாவருங் காணவே 
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை 
எட்டி னோடிரண் டும் அறி யேனையே. 53 

அறிவ னேயமு தேஅடி நாயினேன் 
அறிவ னாகக் கொண்டோ எனை ஆண்டது 
அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள் 
அறிவ னோவல்ல னோஅரு ளீசனே. 54 

6. அநுபோகசுத்தி (அறுசீர் ஆசிரிய விருத்தம்) 


ஈசனேயென் எம்மானே யெந்தை பெருமான் என்பிறவி 
நாசனே நான் யாதுமென் றல்லாப் பொல்லா நாயான 
நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்க மாட்டேன் கண்டாயே 
தேசனேஅம் பலவனே செய்வ தொன்றும் அறியேனே. 55 

செய்வ தறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாப் 
பொய்யார் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யிலா 
மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டுங் கேட்டிருந்தும் 
பொய்ய னேன்நான் உண்டுடுத்திங் கிருப்ப தானேன் போரேறே. 56 

போரேறேநின் பொன்னகர்வாய் நீபோந்தருளி இருள்நீக்கி 
வாரே றிளமென் முலையாளே டுடன்வந் தருள அருள்பெற்ற 
சீரே றடியார் நின்பாதஞ் சேரக் கண்டுங் கண்கெட்ட 
ஊரே றாயிங் குழல்வேணே கொடியான் உயிர்தான் உளவாதே. 57 

உலவாக் காலந் தவமெய்தி உறுப்பும் வெறுத்திங் குனைக்காண்பான் 
பலமா முனிவர் நனிவாடப் பாவி யேனைப் பணிக்கொண்டாய் 
மலமாக் குரம்பை யிதுமாய்க்க மாட்டேன் மணியே உனைக்காண்பான் 
அலவா நிற்கும் அன்பிலேன் என்கொண்டெழுகேன் எம்மானே. 58 

மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட 
தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக் 
கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட 
ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே. 59 

உடையா னேநின்றனையுள்கி உள்ளம் உருகும் பெருங்காதல் 
உடையா ருடையாய் நின்பாதஞ் சேரக் கண்டிங் கூர்நாயிற் 
கடையா னேன்நெஞ் சுருகாதேன் கல்லா மனந்தேன் கசியாதேன் 
முடையா புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தாக் முடித்தாயே. 60 

முடித்த வாறும் என்றைக்கே தக்க தேமுன் னடியாரைப் 
பிடித்த வாறுஞ் சோராமற் சோர னேனிங் கொருத்திவாய் 
துடித்த வாறுங் துகிலிறையே சோர்ந்த வாறும் முகங்குறுவேர் 
பொடித்த வாறு மிவையுணர்ந்து கேடென்றனக்கே சூழ்ந்தேனே. 61 

தேனைப் பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார்தம் 
ஊனை உருக்கும் உடையானை உம்ப ரானை வம்பனேன் 
தானின் னடியேன் நீயென்னை ஆண்டா யென்றால் அடியேற்குத் 
தானுஞ் சிரித்தே யருளலாந் தன்மை யாமென் தன்மையே. 62 

தன்மை பிறரா லறியாத தலைவா பொல்லா நாயன 
புன்மை யேனை ஆண்டையா புறமே போக விடுவாயோ 
என்மை நோக்கு வார்யாரே என்நான் செய்கேன் எம்பெருமான் 
பொன்னே திகழுந் திருமேனி எந்தா யெங்குப் புகுவேனே. 63 

புகுவே னெனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று 
நகுவேன் பண்டு தோணோக்கி நாண மில்லா நாயினேன் 
நெடுமன் பில்லை நினைக்காண நீயாண்டருள் அடியேனுந் 
தகுவ னேயென் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே. 64 

7. காருணியத்து இரங்கல் (அறுசீர் ஆசிரிய விருத்தம்) 


தரிக்கிலேன் காய வாழ்க்கை சங்கரா போற்றி வான 
விருத்தனே போற்றி எங்கள் விடலையே போற்றி ஒப்பில் 
ஒருத்தனே போற்றி உம்பர் தம்பிரான் போற்றி தில்லை 
நிருத்தனே போற்றி எங்கள் நின்மலா போற்றி போற்றி. 65 

போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன் 
போற்றியோ நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை 
போற்றியோ நமச்சி வாய புறமெனைப் போக்கல் கண்டாய் 
போற்றியோ நமச்சி வாய சயசய போற்றி போற்றி. 66 

போற்றியென் போலும் பொய்யர் தம்மைஆட் கொள்ளும் வள்ளல் 
போற்றிநின் பாதம் போற்றி நாதனே போற்றி போற்றி 
போற்றி நின் கருணை வெள்ளம் புதுமதுப் புவனம் நீர்தீக் 
காற்றிய மானன் வானம் இருசுடர்க் கடவுளானே. 67 

கடவுளே போற்றி யென்னைக் கண்டுகொண் டருளு போற்றி 
விடவுளே உருக்கி யென்னை ஆண்டிட வேண்டும் போற்றி 
உடலிது களைந்திட் டொல்லை உம்பர்தந் தருளு போற்றி 
சடையுளே கங்கை வைத்த சங்கரா போற்றி போற்றி. 68 

சங்கரா போற்றி மற்றோர் சரணிலேன் போற்றி கோலப் 
பொங்கரா அல்குற் செவ்வாய் வெண்ணைக் கரிய வாட்கண் 
மங்கையோர் பங்க போற்றி மால்விடை யூர்தி போற்றி 
இங்கிவ்வாழ் வாற்ற கில்லேன் எம்பிரான் இழித்திட்டேனே. 69 

இழித்தனன் என்னை யானே எம்பிரான் போற்றி போற்றி 
பழித்தனன் உன்னை என்னை ஆளுடைப் பாதம் போற்றி 
பிழைத்தவை பொறுக்கை எல்லாம் பெரியவர் கடமை போற்றி 
ஒழித்திடில் வாழ்வு போற்றி உம்பர்நாட டெம்பி ரானே. 70 

எம்பிரான் போற்றி வானத் தவரவர் ஏறு போற்றி 
கொம்பரார் மருங்குல் மங்கை கூறவெண் ணீற போற்றி 
செம்பிரான் போற்றி தில்லைத் திருச்சிற்றம் பலவ போற்றி 
உம்பரா போற்றி என்னை ஆளுடை ஒருவ போற்றி. 71 

ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர் 
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி 
வருவவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி 
தருகநின் பாதம் போற்றி தமியனேன் தீர்த்தே. 72 

தீர்ந்தஅன் பாய அன்பர்க் கவரினும் அன்ப போற்றி 
பேர்ந்துமென் பொய்மை யாட்கொண்டருளும் பெருமை போற்றி 
வார்ந்தநஞ் சயின்று வானோர்க் கமுதமா வள்ளல் போற்றி 
ஆர்ந்தநின் பாதம் நாயேற் கருளிட வேண்டும் போற்றி. 73 

போற்றிப் புவனம் நீர்தீர் காலொடு வான மானாய் 
போற்றியெவ் வுயிர்க்குந் தோற்றம் ஆகிநீ தோற்ற மில்லாய் 
போற்றியெல் லாவுயிரக்கும் ஈறாயீ றின்மை யானாய் 
போற்றியைம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கை யானே. 74 

8. ஆனந்தத்து அழுத்தல் (எழுசீர் ஆசிரிய விருத்தம்) 


புணர்ப்பது ஒக்க எந்தை என்னை ஆண்டு பூண நோக்கினாய் 
புணர்ப்பது அன்று இது என்றபோது நின்னொடு என்னொடு என்இது ஆம் 
புணர்ப்பது ஆக அன்று இது ஆக அன்பு நின்கழல் கணே 
புணர்ப்பது அது ஆக அம் கனாள் புங்கம் ஆன போகமே. 75 

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தரஆதி இன்பமும் 
ஏகநின் கழல் இணை அலாது இலேன் எம்பிரான் 
ஆகம் விண்டு கம்பம் வந்து குஞ்சி அஞ்சலிக் கணே 
ஆக என் கை கண்கள் தாரை ஆறு அது ஆக ஐயனே. 76 

ஐய நின்னது அல்லது இல்லை மற்று ஓர் பற்று வஞ்சனேன் 
பொய் கலந்தது அல்லது இல்லை பொய்மையேன் என்பிரான் 
மை கலந்த கண்ணி பங்க வந்து நின் கழல் கணே 
மெய் கலந்த அன்பர் அன்பு எனக்கும் ஆகவேண்டுமே. 77 

வேண்டும் நின் கழல் கண் அன்பு பொய்மை தீர்த்து மெய்மையே 
ஆண்டு கொண்டு நாயினேனை ஆவ என்று அருளு நீ 
பூண்டு கொண்டு அடியனேனும் போற்றி போற்றி என்றும் என்றும் 
மாண்டு மாண்டு வந்து வந்து மன்ன நின் வணங்கவே. 78 

வணங்கும் நின்னை மண்ணும் விண்ணும் வேதம் நான்கும் ஓலம் இட்டு 
உணங்கும் நின்னை எய்தல் உற்று மற்று ஓர் உண்மை இன்மையின் 
வணங்கியாம் விடேங்கள் என்ன வந்து நின்று அருளுதற்கு 
இணங்கு கொங்கை மங்கை பங்க என் கொலோ நினைப்பதே. 79 

நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஆய வாக்கினால் 
தினைத் தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆவ கேட்பவே 
அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா 
எனைத்து எனைத்து அது எப்புறத்து அது எந்தை பாதம் எய்தவே. 80 

எய்தல் ஆவது என்று நின்னை எம்பிரான் இவ்வஞ்சனேற்கு 
உய்தல் ஆவது உன் கண் அன்றி மற்று ஓர் உண்மை இன்மையில் 
பைதல் ஆவது என்று பாதுகாத்து இரங்கு பாவியேற்கு 
ஈது அல்லாது நின்கண் ஒன்றும் வண்ணம் இல்லை ஈசனே. 81 

ஈசனே நீ அல்லது இல்லை இங்கும் அங்கும் என்பதும் 
பேசினேன் ஓர் பேதம் இன்மை பேதையேன் என் எம்பிரான் 
நீசனேனை ஆண்டுகொண்ட நின்மலா ஓர் நின் அலால் 
தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே. 82 

சிந்தை செய்கை கேள்வி வாக்குச் சீர் இல் ஐம்புலன்களால் 
முந்தை ஆன காலம் நின்னை எய்திடாத மூர்க்கனேன் 
வெந்து ஐயா விழுந்திலேன் என் உள்ளம் வெள்கி விண்டிலேன் 
எந்தை ஆய நின்னை இன்னம் எய்தல் உற்று இருப்பனே. 83 

இருப்பு நெஞ்சம் வஞ்சனேனை ஆண்டு கொண்ட நின்னதாள் 
கருப்புமட்டு வாய் மடுத்து எனைக் கலந்து போகவும் 
நெருப்பும் உண்டு யானும் உண்டு இருந்தது உண்டது ஆயினும் 
விருப்பும் உண்டு நின்கண் என்கண் என்பது என்ன விச்சையே. 84 

9. ஆனந்த பரவரசம் (கலிநிலைத்துறை) 


விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது என்று இங்கு இனை வைத்தாய் 
இச்சைக்கு ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் 
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன் ஆரூர் எம் 
மிச்சைத் தேவா என் நான் செய்தேன் பேசாயே. 85 

பேசப்பட்டேன் நின் அடியாரில் திருநீறே 
பூசப்பட்டேன் பூதரால் உன் அடியான் என்று 
ஏசப்பட்டேன் இனிப்படுகின்றது அமையாதால் 
ஆசைப்பட்டேன் ஆட்பட்டேன் உன் அடியேனே. 86 

அடியேன் அல்லேன் கொல்லோ தானெனை ஆட்கொண்டு இலை கொல்லோ 
அடியார் ஆனார் எல்லாரும் வந்து உன்தாள் சேர்ந்தார் 
செடிசேர் உடலம் இது நீக்கமாட்டேன் எங்கள் சிவலோகா 
கடியேன் உன்னைக் கண்ணாரக் காணுமாறு காணேனே. 87 

காணுமாறு காணேன் உன்னை அந்நாள் கண்டேனும் 
பாணே பேசி என் தன்னைப் படுத்தது என்ன பரஞ்சோதி 
ஆணே பெண்ணே ஆர் அமுதே அத்தா செத்தே போயினேன் 
ஏண் நாண் இல்லா நாயினேன் என்கொண்டு எழுகேன் எம்மானே. 88 

மான் நேர் நோக்கி உமையாள் பங்கா மறை ஈறு அறியா மறையானே 
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய் சிறியேன் பிழை பொறுக்கும் 
கோனே சிறிதே கொடுமை பறைந்தேன் சிவம் மாநகர் குறுகப் 
போனார் அடியார் யானும் பொய்யும் புறமே போந்தோமே. 89 

புறமே போந்தோம் பொய்யும் யானும் மெய் அன்பு 
பெறவே வல்லேன் அல்லா வண்ணம் பெற்றேன் யான் 
அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்று ஒன்று அறியாதார் 
சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தான் சேர்ந்தாரே. 90 

தாராய் உடையாய் அடியேற்கு உன்தான் இணை அன்பு 
போரா உலகம் புக்கார் அடியார் புறமே போந்தேன் யான் 
ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆமிலைத்து இங்கு உன்தான் இணை அன்புக்கு 
ஆராய் அடியேன் அயலே மயல் கொண்டு அழுகேனே. 91 

அழுகேன் நின்பால் அன்பாம் மனம் ஆய் அழல் சேர்ந்த 
மெழுகே அன்னார் மின்ஆர் பொன் ஆர் கழல் கண்டு 
தொழுதே உன்னைத் தொடர்ந்தாரோடும் தொடராதே 
பழுதே பிறந்தேன் என் கொண்டு உன்னைப் பணிகேனே. 92 

பணிவார் பிணி தீர்ந்து அருளிப் பழைய அடியார்க்கு உன் 
அணி ஆர் பாதம் கொடுக்கி அதுவும் அரிது என்றால் 
திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித் 
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய் பொய்தீர் மெய்யானே. 93 

யானே பொய் என்நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் 
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே 
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் 
மானே அருளாய் அடியேன் உனை வந்து உறுமாறே. 94 

10. ஆனந்த அதீதம் (எண்சீர் ஆசிரிய விருத்தம்) 


மாறு இலாத மாக் கருணை வெள்ளமே 

வந்து முந்தி நின்மலர் கொள்தாள் இணை 
வேறு இலாப் பதம் பரிசு பெற்ற நின் 

மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் 
ஈறு இலாத நீ எளியை ஆகி வந்து 

ஒளி செய் மானுடம் ஆக நோக்கியும் 
கீறு இலாத நெஞ்சு உடையேன் ஆயினன் 

கடையன் நாயினன் பட்ட கீழ்மையே. 95 

மை இலங்கு நல் கண்ணிப் பங்கனே 

வந்து என்னைப் பணிகொண்ட பின்மழக் 
கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால் 

அரியை என்று உனைக் கருது கின்றேன் 
மெய் இலங்கு வெண் நீற்று மேனியாய் 

மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார் 
பொய் இலங்கு எனைப் புகுதவிட்டு நீ 

போவதோ சொலாய் பொருத்தம் ஆவதே. 96 

பொருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் 

போதஎன்றுஎனைப் புரிந்து நோக்கவும் 
வருத்தம் இன்மையேன் வஞ்சம் உண்மையேன் 

மாண்டிலேன் மலர்க் கமல பாதனே 
அரத்த மேனியாய் அருள் செய் அன்பரும் 

நீயும் அங்கு எழுந்தருளி இங்கு எனை 
இருத்தினாய் முறையோ என் எம்பிரான் 

வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே. 97 

இல்லை நின் கழற்கு அன்பு அது என் கணே 

ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே 
கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு 

என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய் 
எல்லை இல்லை நின் கருணை எம்பிரான் 

ஏதுகொண்டு நான் ஏது செய்யினும் 
வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் 

காட்டி மீட்கவும் மறு இல் வானனே. 98 

வான நாடரும் அறி ஒணாத நீ 

மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ 
ஏனை நாடரும் தெரி ஒணாத நீ 

என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா 
ஊனை நாடகம் ஆடு வித்தவா 

உருகி நான் உனைப் பருக வைத்தவா 
ஞான நாடகம் ஆடு வித்தவா 

நைய வையகத்து உடைய விச்சையே. 99 

விச்சு அது இன்றியே விளைவமு செய்குவாய் 

விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் 
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் 

புலையனேனை உன்கோயில் வாயிலிற் 
பிச்சன்ஆக்கினாய் பெரிய அன்பருக்கு 

உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர் 
நச்சு மாமரம் ஆயினும் கொலார் 

நானும் அங்கனே உடைய நாதனே. 100 

உடைய நாதனே போற்றி நின் அலால் 

பற்று மற்று எனக்கு ஆவது ஒன்று இனி 
உடையனே பணி போற்றி உம்பரார் 

தம் பராபரா போற்றி யாரினும் 
கடையன் ஆயினேன் போற்றி என் பெரும் 

கருணையாளனே போற்றி என்னை நின் 
அடியன் ஆக்கினாய் போற்றி ஆதியும் 

அந்தம் ஆயினாய் போற்றி அப்பனே. 101 

அப்பனே எனக்கு அமுதனே ஆனந்தனே 

அகம்நெக அள் ஊறு தேன் 
ஒப்பனே உனக்கு அரிய அன்பரில் 

உரியனாய் உனைப் பருக நின்றது ஓர் 
துப்பனே சுடர் முடியனே துணை 

யாளனே தொழும்பாளர் எய்ப்பனில் 
வைப்பனே எனை வைப்பதோ சொலாய் 

நைய வையகத்து எங்கள் மன்னனே. 102 

மன்ன எம்பிரான் வருக என் எனை 

மாலும் நான்முகத்து ஒருவன் யாரினும் 
முன்ன எம்பிரான் வருக என் எனை 

முழுதும் யாவையும் இறுதி உற்ற நான் 
பின்ன எம்பிரான் வருக என் எனைப் 

பெய் கழற் கண் அன்பாய் என் நாவினால் 
பன்ன எம்பிரான் வருக என் எனைப் 

பாவ நாச நின் சீர்கள் பாடவே. 103 

பாடவேன்டும் நான் போற்றி நின்னையே 

பாடிநைந்துறைந்துறுகி நெக்குநெக்கு 
ஆடவேன்டும் நான் போற்றி அம்பலத் 

தாடுநின்கழற்போது நாயினேன் 
கூடவேண்டும் நான்போற்றி யிப்புழுக் 

கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் 
வீடவேண்டும் நான் போற்றி வீடுதந் 

தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே. 104 

திருச்சிற்றம்பலம்

To Top