தேவி மகாத்மியம் - பாகம் 1

தேவி மகாத்மியம் - பாகம் 1


மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு மந்திரங்களடங்கியதால் ஸப்தசதீ என்றும் கூறப்படும். ஆஸ்திகர்களால் இது இமயம் முதல் கன்யாகுமரி வரை பாரததேசம் முழுதும் பாராயணத்திற்கும் ஜபத்திற்கும் ஹோமத்திற்கும் உலக ஷேமத்திற்காகவும் அரிஷ்ட நிவிருத்திக்காகவும் தொன்றுதொட்டுப் பெரிதும் கையாளப்பட்டு வருகிறது.

இதற்கு உரைகள் பல உள. இவற்றுள் சில சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் என்பனவாம். காத்யாயனீதந்த்ரம், கடகதந்த்ரம், க்ரோடதந்த்ரம், மேருதந்த்ரம், மரீசிகல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.

பூர்வ பாகத்தில் கவசம், அர்க்கலம், கீலகம், ராத்ரி ஸூக்தம், நவாக்ஷரீ விவேசனம் ஆகியனவும் நடுவில் முன்று சரித்திர வடிவில் தேவீ மஹாத்மியமும், கடைசியில் தேவீ ஸூக்தம், ரஹஸ்யத்ரயம் ஆகியனவும், அநுபந்தமாக துர்க்கா ஸப்த ச்லோகீ, துர்க்கா ஸூக்தம், இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம், துர்க்கா ஆபதுத்தாராஷ்டகம், தேவ்யபராக்ஷமாபன ஸ்தோத்ரம் முதலியவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பிரம்ம வித்தையும் ஸ்ரீ வித்தையும் ஒன்றே என்பதைக் கருத்தில் கொண்டு தேவீ மஹாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். பிரம்ம வித்தையான வேதாந்தம் கூறும் உண்மைகளை அனுபவத்திற்குக் கொண்டுவர வழிகாட்டுவது ஸ்ரீ வித்தை. மந்திரமும் தந்திரமும் ஸ்ரீ வித்தையில் அடக்கம். ததா தாம் தார - மித்யாஹூ - ரோமத்மேதி பஹுச்ருதா : தாமவே சக்திம் ப்ருவதே ஹ்ரீ - மாத்மேதி சாபரே ஒரே பரம்பொருள் தான் ஓம் என்ற பிரம்மவித்யா மந்திரத்தாலும் ஹ்ரீம் என்ற ஸ்ரீ வித்யா மந்திரத்தாலும் கூறப்படுகிறது. பிரம்மமும் பிரம்ம சக்தியும் பிக்க முடியாதாதலால் ஒங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீங்காரமும் உபயாத்மகம். ஹ்ரீம் என்பது மாயா பீஜம் அல்லது புவனேசுவரீ பீஜம் எனப்படும். விதையிலிருந்து முளை, கிளை, அரும்பு, மலர், காய், கனி முதலியன தோன்றுமாப் போல் புவனேசுவரீ பீஜத்திலிருந்து மஹாகாளீ, மஹாலக்ஷ்மீ, மஹாஸரஸ்வதீ தோன்றுகின்றனர். அவர்களுடைய ஸமஷ்டி மந்திர வடிவங்களில் முக்கியமானவை இரண்டு - நவாக்ஷரீ மந்திரதீøக்ஷ பெற்றவர் நவார்ண ஜபத்திற்கு அங்கமாக ஸப்தசதீ பாராயணத்தையும், ஸப்தசதீ மந்திரதை முக்கியமாய்க் கொண்டவர் அதற்கங்மாக நவாக்ஷரீ ஜபத்தையும் அனுஷ்டிப்பது காணப்படுகிறது.

சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரர் பார்வதிக்குக் கூறியது: தேவியே! ஸப்தசதீயின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மையினின்று விடுபடுவர், சின்மயமான திரிபுரா மூன்று வடிவு கொண்டாள். அசுரர்களை போக்கித் தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுப் பரதேவதை காளியுருக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும் தோன்றினாள். அவள் வரலாறு பதின்மூன்று அத்தியாயங்களில் எழுநூறு மந்திரங் களில் மார்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுளது, அதைப் படிப்பவர் எல்லா உபத்திரவங்களினின்றும் விடுபட்டு ஸகல சௌக்கியங்களையும் அடைவர்.

கிரதுக்களில் எங்ஙனம் அசுவமேதமோ, தேவர்களில் எங்ஙனம் ஹரியோ, அங்ஙனம் ஸ்துதிகளில் ஸப்தசதீ என்று டாமரதந்திரம் கூறுகிறது. (யதா வேதோ ஹ்யனாதிர்ஹி தத்வத் ஸப்தசதீ ஸ்ம்ருதா) வேதம் எப்படி அனாதியோ அப்படி ஸப்தசதீ என புவனேசுவரி ஸம்ஹிதை கூறுகிறது. இதை பாராயணம் செய்ய நித்திய கர்மாவை முடித்துப் பரிசுத்தமான இடத்திலமர்ந்து ஆசமனம், பிராணாயாமம், ஸங்கல்பம் முதலியவற்றைச் செய்துகொண்டு ஸாவாதானமாக முன் பின் கூறியுள்ள அங்கங்களுடனும் நவாக்ஷரீ ஜபத்துடனும் கைக்கொள்ள வேண்டும். ஒரே தடவையில் பதின்மூன்று அத்தியாயங்களையும் பாராயணம் செய்ய அவகாசமில்லாதபோது மத்திம சரித்திரத்தை மட்டிலும் படிக்கலாம் அல்லது தொடர்ச்சியாக ஏழு தினங்களில் 1 ; 2-3 ; 4 ; 5-6-7-8 ; 9-10 ; 11 ; 12-13 என்ற கிரமத்தில் படிக்கலாம். ஒரு சரித்திரதில் அரை குறையாகப் படிக்கக் கூடாது என்ற நியமம் இந்த முறைக்கு இல்லை. மனப்பாடம் செய்து புஸ்தகமில்லாமல் ஜபித்தல் சிறந்தது. ஜ்ஞானினாமபி சேதாம்ஸி, துர்க்கே ஸ்ம்ருதா, ஸர்வாபாதா - ப்ரசமனம் போன்ற மந்திரங்களைத் தனியாக ஜபம் செய்தால் அந்தந்த மந்திரத்திற் கனுகுணமான முர்த்தியை அந்தந்தச் சரித்திரத்தில் கூறியபடி, நியாஸமும் தியானமும் செய்து அதற்கியைந்தபடி. விச்வேச்வரீம் ஜகத் - தாத்ரீம், சக்ராதய: ஸூரகணா: அல்லது நமோ தேவ்யை மஹா தேவ்யை என்ற ஸ்துதியைச் செய்யவேண்டும். ஸகாம பக்தன் இதனால் மனதில் கருதியதை யடைவான். நிஷ்காம பக்தன் மோக்ஷத்தை யடைவான். ஸூரத மகாராஜனுக்கு மேதாமஹரிஷி கூறியதாவது : பரமேசுவரியைச் சரணடைவாய், அவளை ஆராதித்தால் அவள் இகலோக இன்பங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பாள். அரசன் தன் அரசாட்சியை மீண்டும் பெற்று இன்ப வாழ்வெய்தி எதிர்காலத்தில் மனுவாக விளங்கப்போகிறான் என்றும் ஸமாதி என்ற வைசியன் ஞானம் பெற்று மோக்ஷமடைந்தான் என்றும் கூறி தேவீ மஹாத்மிய வரலாறு முடிவடைகின்றது.

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதி - மசேஷஜந்தோ:
ஸ்வஸ்தை: ஸ்ம்ருதா மதி - மதீவ சுபாம் ததாஸி
தாரித்ரிய - து:க்க - பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபார - கரணாய ஸதார்த்ர - சித்தா

ஆத்ம ஸமர்ப்பணம்
ஓம்
ஸ்வருப - நிருபண - ஹேதவே
ஸ்ரீ குரவே நம:

ஆத்ம ஸமர்ப்பணம்
ஓம்
ஸ்வருப விளக்கத்திற்குக் காரணமாகிய
ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம்.

ஸர்வமங்கல - மாங்கல்யே
சிவே ஸர்வார்த்த - ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி
நாராயணி நமோஸ்து தே - தேவீ மஹாத்மியம்11.10

பூர்வ பாகம்

1. கவசம்

மார்கண்டேயர் கூறியது: 1. பிரம்மதேவரே ! எது உலகில் மிக்க ரகசியமானதோ, மனிதர்க்கு எல்லா ரøக்ஷயையும் அளிப்பதோ, (இதுவரை) எவர்க்கும் சொல்லப்படாதுளதோ அதை (உலக நன்மைக்காக) எனக்கு உபதேசித்தருளல் வேண்டும்.

பிரம்மா கூறியது: 2. பிராம்மணரே ! உயிர்களனைத்திற்கும் உபகாரமாகியதும் மிக்க ரகசியமாகியதும் புண்ணியமாகியதுமான தேவீ கவசம் உளது. பெருமை மிக்க முனிவரே ! அதைக் கேளும்.

3. முதலாவது பர்வதராஜபுத்திரி, இரண்டாவது பிரம்மசாரிணீ, முன்றாவது சந்திரகண்டா, நான்காவது கூஷ்மாண்டா.

4. ஐந்தாவது ஸ்கந்தமாதா, ஆறாவது காத்யாயனீ, ஏழாவது காலராத்ரீ, எட்டாவது மஹாகௌரீ.

5. ஒன்பதாவது ஸித்திப்ரதா என இவ்வாறு துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் உனக்கு எடுத்துரைக்கப்பட்டன. இந் நாமங்கள் பெருமைமிக்க வேதபுருஷனாலேயே கூறப்பட்டவை.

6.அக்கினியால் எரிக்கப்பட்டவர்களும், யுத்தத்தில் சத்துருவினிடை அகப்பட்டுக்கொண்டவர்களும், கடக்கமுடியாத ஸங்கடத்தில் பயமடைந்தவர்களும், (மேற்கூறிய நாமங்களில் ஒன்றை மனதால் நினைத்து தேவியிடம்) சரண் புகுந்தவர்கள் (ஆயின்):

7.அவர்களுக்கு யுத்த ஸங்கடத்தில் தீங்கு சிறிதும் ஏற்படாது. அவர்களில் ஒருவருக்கும் ஆபத்து வர (நவதுர்க்கைகளும்) பார்த்திருக்கமாட்டார்கள். துர்க்கா தேவியானவள் எல்லாத் துன்பங்களையும் துடைப்பாள்.

8. எவர்களால் பக்தியுடன் தேவியானவள் நினைக்கப்பட்டாளோ அவர்களுக்குச் செல்வப்பெருக்கு நிச்சியம் ஏற்படும். சாமுண்டா தேவியானவள் பிரேதத்தை ஆஸனமாய்க் கொண்டவள்; வாராஹீதேவி எருமையை வாகனமாய்க் கொண்டவள்.

9. இந்திராணீதேவீ ஐராவதம் என்ற யானை வாகனமுடையவள் ; விஷ்ணுசக்தியான மஹாலக்ஷ்மி கருடவாகனமுடையவள் ; மஹேசுவரபத்தினி விருஷப வாகனமுடையவள் ; குமரக்கடவுளின் சக்தி மயில்வாகன முடையவள்.

10. எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பெற்ற பிரம்ம பத்தினி ஹம்ஸ வாகனத்தை யுடையவள். எல்லோருமே பலவகை ஆபரணங்களும் பூண்டு பலவகைபட்ட ரத்னங்களால் பிரகாசிப்பவர்கள்.

11. எல்லா தேவிகளும் கோபத்தால் கலங்குபவர்களாய்த் தேரில் எறி (தேவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு) காட்சியளிக்கின்றனர். சங்கு, சக்ரம்,கதை, கக்தி, கலப்பை, உலக்கை முதலிய ஆயுதங்களும் ;

12. கேடகம், தோமரம், கோடரி, கயிறு, குந்தாயுதம், திரிசூலம் ஒப்புயர்வற்ற சார்ங்கம் எனும் வில் ;

13. ஆகிய ஆயுதங்களை அசுரர்களின் தேகநாசத்திற்கும் பக்தர்களின் பயநாசத்திற்கும் தேவர்களின் நன்மைக்குமாகத் தரிக்கின்றனர்.

14. மஹாபலம் பொருந்தியவளே ! மஹோத்ஸாஹம் பொருந்தியவளே ! கொடிய பயத்தைப் போக்குபவளே ! சத்துருக்களுக்குப் பயத்தை வளர்ப்பவளே ! காட்சிக்கரிய தேவியே ! என்னை காத்தருள்வாய்.

15.கிழக்கில் என்னை இந்திராணீ காப்பாற்றட்டும் ; அக்னி முலையில் அக்னி தேவதையும், தெற்கில் வாராஹியும் நிருருதி மூலையில் கட்கதாரிணியும் காப்பாற்றட்டும்.

16. மேற்கில் வாருணீ சக்தியும், வாயு மூலையில் மிருக வாகினியான வாயுசக்தியும் காப்பாற்றட்டும், வடக்கில் கௌமாரியும் ஈசான முலையில் சூலதாரிணியும் காப்பாற்றட்டும்.

17. பிரஹ்மாணி ! மேலே நீ காத்தருள்வாய் ; விஷ்ணு சக்தியே ! கீழே நீ காத்தருள்வாய். இங்ஙனம் பத்துத் திசைகளையும் சவவாகவமுடைய சாமுண்டாதேவீ காத்தருள வேண்டும்.

18. ஜயா சக்தி என் முன்னிருக்கட்டும்; விஜயாசக்தி பின்னிருக்கட்டும் ; அஜிதா இடது பக்கமும், அபராஜிதா வலது பக்கமும் இருக்கட்டும்.

19. சிகையை உத்யோதினீ சக்தியும், சிரசில் உறையும் உமா சிரசையும், லலாடத்தில் மாலாதாரியும், புருவத்தை யசஸ்வினியும் காத்தருள வேண்டும்.

20. புருவமத்தியில் த்ரிநேத்ரா தேவியும், நாசிகையில் யமகண்டாதேவியும், கண்களின் நடுவில் சங்கினீ சக்தியும், காதுகளில் துவாரவாஸினீ சக்தியும் (ரக்ஷிக்கவேண்டும்).

21. கன்னத்தில் காளிகாதேவியும், கர்ணமூலத்தில் சாங்கரீதேவியும், நாசிகைகளில் ஸூகந்தாதேவியும், மேலுதட்டில் சர்ச்சிகாதேவியும் ரக்ஷிக்கட்டும்.

22. கீழுதட்டில் அம்ருதகலாதேவியும், நாக்கில் ஸரஸ்வதியும் இருந்து காப்பாற்றட்டும். பற்களைக் கௌமாரியும், கழுத்தின் நடுவில் சண்டிகையும் காப்பாற்றட்டும்.

23. உள் நாக்கைச் சித்திரகண்டாதேவியும், தாடைகளை மகாமாயையும் மோவாய்க்கட்டையைக் காமாக்ஷியும், வாக்கை ஸர்வமங்களாதேவியும் காப்பாற்றட்டும்.

24. கழுத்தில் பத்ரகாளியும், முதுகெலும்பில் தனுர்த்தரீதேவியும், கழுத்தின் வெளியில் நீலக்கிரீவாதேவியும், கழுத்தெலும்பை நளகூபரீதேவியும், காப்பாற்றட்டும்.

25. இருதோள்களையும் கட்கதாரிணியும், இருபுஜங்களையும் வஜ்ரதாரிணியும், கைகளை தண்டினியும், விரல்களில் அம்பிகையும் காப்பாற்றட்டும்.

26. நகங்களை சூலேச்வரி ரக்ஷிக்கட்டும். கஷ்கங்களை அனலேசுவரீ ரக்ஷிக்கட்டும். ஸ்தனங்களை மஹாதேவி ரக்ஷிக்கட்டும். மனதை சோகவிநாசினி ரக்ஷிக்கட்டும்.

27. இருயத்தை லலிதாதேவியும், வயிற்றில் சூலதாரிணியும், நாபியைக் காமினீ தேவியும், ரஹஸ்யஸ்தானத்தை குஹ்யேசுவரியும் ரக்ஷிக்கட்டும்.

28. பூதநாதா லிங்கத்தையும், மஹிஷவாஹினி அபானத்துவாரத்தையும், இடுப்பில் பகவதியும், முழங்கால்களை விந்திய வாஸினியும் ரக்ஷிக்கட்டும்.

29. துடைகளை மஹாபலாதேவியும், முழங்கால் நடுவில் விநாயகீதேவியும், கணுக்கால்களில் நாரஸிஹ்மீதேவியும், பின்னங்கால்களில் மிதௌஜஸியும் ரக்ஷிக்கட்டும்.

30-31. கால் விரல்களை ஸ்ரீதரியும், பாத்தின்கீழ் தலவாஸினியும், நகங்களை தம்ஷ்ட்ராகராலியும், கேசங்களை ஊர்த்துவகேசினியும் மயிர்க்கால்களில் கௌபேரியும், தோலை வாகீச்வரியும், இரத்தம், வீரியம், கொழுப்பு, மாம்ஸம், எலும்பு மூளை இவற்றைப் பார்வதியும் ரக்ஷிக்கட்டும்.

32. குடல்களைக் காலராத்திரியும், பித்ததாதுவை முகுடேசுவரியும், ஆதாரக்கமலங்களில் பத்மாவதியும், கபதாதுவில் சூடாமணியும் ரக்ஷிக்கட்டும்.

33. நகங்களின் பிரகாசத்தை ஜ்வாலாமுகியும், எல்லா ஸந்திகளிலும் அபேத்யா தேவியும் ரக்ஷிக்கட்டும். பிரம்மாணி ! எனது சுக்லத்தை ரக்ஷிப்பாய். நிழலைச் சத்ரேச்வரீ ரக்ஷிக்கட்டும்.

34. தர்மசாரிணி ! எனது அஹங்காரத்தையும் மனதையும் புத்தியையும் ரக்ஷிப்பாய். அவ்வாறே பிராணனையும் அபானனையும் வியானனையும் ஸமானனையும் உதானனையும் ரக்ஷிப்பாய்.

35. புகழையும் கீர்த்தியையும் அழகையும் எப்போதும் சக்ரீணீ ரக்ஷிக்கட்டும். இந்திராணி ! எனது கோத்திரத்தை ரக்ஷிப்பாய். சண்டிகே ! எனது பசுக்களை ரக்ஷிப்பாய்.

36. மஹாலக்ஷ்மி புத்திரர்களை ரக்ஷிக்கட்டும். பைரவி மனைவியை ரக்ஷிக்கட்டும். ÷க்ஷமங்கரீ வழியை ரக்ஷிக்கட்டும். விஜயா எல்லாப்புறத்துமிருந்து எங்குங் காக்கட்டும்.

37. தேவியே ! எந்த இடம் கவசமில்லாமல், காக்கப்படாமல் உளதோ, அதை எல்லாம் ஜயந்தீ எனவும் பாபநாசினீ எனவும் பெயர் பெற்ற நீ காத்தருளல் வேண்டும்.

38, 39. தனக்கு உயர்நலனைக் கோருபவன் (தேவியின் ஸ்மரணமாகிற கவசமின்றி) ஒரு அடி கூடச் செல்லக் கூடாது. எப்போதும் கவசம் பூண்டவனாயின், எங்கெங்கு சென்றாலும் அங்கங்கு நாடிய பொருள் கைகூடுதலும் எல்லா எண்ணங்களின் சித்தியும் எய்துவான். எந்தெந்த விருப்பங்களை விரும்புகின்றானோ அவைகளை யெல்லாம் நிச்சயமாய் அடைவான்.

40. அப்புருஷன் இப்புவியில் நிகரற்ற ஐசுவரியத்தை அடைவான். போரில் வெல்லப்படாதவனாகவும் பயமற்றவனாகவும் அம்மனிதன் விளங்குவான்.

41. கவசத்தினால் காக்கப்பட்ட புருஷன் மூவுலகிலும் பூஜிக்கத்தக்கவனாவான். தேவியின் இக்கவசம் தேவர்களாலும் அடைதற்கரிது.

42. தினந்தோறும் முச்சந்தியிலும் நியமத்துடனும் சிரத்தையுடனும் எவன் இதைப் படிக்கின்றானோ அவனுக்கு தைவீஸம்பத்து சித்திக்கும். மூவுலகிலும் அவன் பிறரால் ஜயிக்கப்படாதவனாவான்.

43. அவன் துர்மரண பயமற்றவனாய் நூறாண்டும் அதற்கு மேலும் வாழ்வான். தோலிலும் ரத்தத்திலும் தோன்றும் வியாதிகள் எல்லாம் நாசமடையும்.

44. இப்புவியில் இயற்கையில் ஸ்தாவரங்களிலிருந்தும் ஜங்கமங்களிலிருந்தும் உண்டாகிய விஷமாயினும், செயற்கை விஷமாயினும், மந்திர தந்திரங்களால் செய்யப்பட்ட அபிசாரங்களாயினும் எல்லாம் (நாசமடையும்).

45. பூமியில் சஞ்சரிப்பவர்களும், ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்களும், நீரில் தோன்றுபவர்களும், உபதேச மாத்திரத்தால் தோன்றுபவர்களும், உடலுடன் தோன்றியவர்களும், குலதேவதைகளும், மாலாதேவதைகளும், அவ்வாறே டாகினீ, சாகினீ முதலிய தேவதைகளும் ;

46. கோரவடிவில் அந்தரிக்ஷத்தில் சஞ்சரிப்பவர்களும், மகாபலம் பொருந்திய டாகினிகளும், கிரஹ பூத பிசாசங்களும் யக்ஷ கந்தர்வ ராக்ஷஸர்களும் ;

47. பிரம்மராக்ஷஸர்களும் வேதாளங்களும், கூஷ்மாண்ட பைரவாதி துர்தேவதைகளும், கவசத்தை இருதயத்தில் தரித்த அவனை கண்ட மாத்திரத்தில் ஒடுங்கிப் போகின்றனர்.

48. அரசனிடமிருந்து வெகுமதியின் உயர்வும், சிறந்த திறமையின் ஏற்றமும் உண்டாகும். புவியெங்கும் கீர்த்தி பரவப் பெற்று அவன் புகழ் ஒங்கப் பெறுவான்.

49, 50. (ஸாதகன்) முதலில் கவசத்தை (ஜபம்) செய்து கொண்டு, பிறகு எழுநூறு மந்திரங் கொண்ட சண்டி ஸ்தோத்திரத்தை ஜபிக்கவேண்டும். மலைகளும் வனங்களும் காடுகளும் கொண்ட இப் பூமண்டலம் உள்ளவரை இவ்வுலகில் அவனுடைய புத்திர பௌத்திர ஸந்ததி நீடித்து நிலைபெறும். உடல் வாழ்க்கையின் முடிவில் தேவர்களுமடைதற்கரிய உயர்ந்த அழியாப்பதவியை மாஹமாயையின் பிரஸாதத்தால் எய்துவான்.

இங்ஙனம் ஸ்ரீவாராஹ புராணத்தில் பிரம்ம விஷ்ணு மகேசுவரர்களால் அருளப்பெற்ற தேவியின் கவசம் முற்றிற்று.

2. அர்க்கலா ஸ்தோத்ரம் மார்கண்டேயர் கூறியது

1. ஜயந்தீ, மங்கலா, காளீ, பத்ரகாளீ, கபாலினீ, துர்க்கா, க்ஷமா, சிவா, தாத்ரீ, ஸ்வாஹா, ஸ்வதா எனப் பெயர் பெற்ற உனக்கு நமஸ்காரம்.

2. மதுகைடபர்களை நாசஞ் செய்தவளே ! பிரம்மாவிற்கருள் புரிந்தவளே ! (உனக்கு) நமஸ்காரம். (எனக்கு) ரூபத்தையளிப்பாய், ஜயத்தை அளிப்பாய், கீர்த்தியை அளிப்பாய், (என்) சத்துருக்களை அழிப்பாய்.

3. மஹிஷாசுர நாசத்தை செய்து காத்தவளே ! (பிரம்மாவிற்கு) வரமளித்தவளே ! உனக்கு நமஸ்காரம்.

4. (உலகனைத்தாலும்) வணங்கப்பெற்ற பாதங்களையுடையவளே ! தேவர்களுக்கு (சத்ருஜயம் எனும்) ஸெளபாக்கியத்தை யளிப்பவளே !

5. ரக்த பீஜனை வதைத்த தேவியே ! சண்டமுண்டர்களை நாசஞ்செய்தவளே !.

6. எண்ணுதற்கரிய ரூபமும் சரித்திரமும் படைத்தவளே ! எல்லா சத்துருக்களையும் நாசம் செய்பவளே !...

7. (பரப்ரஹ்மஸ்வருபிணியான) சண்டிகே ! எப்போதும் பக்தியுடன் வணங்குவோர்க்கும், உன்னை நமஸ்கரிக்கும் எனக்கும் ருபத்தையளிப்பாய், ஜயத்தையளிப்பாய், கீர்த்தியையளிப்பாய், (என்) சத்துருக்களை அழிப்பாய்.

8. சண்டிகே ! வியாதியை நாசம் செய்பவளே ! பக்தியை முன்னிட்டு உன்னைத் துதிப்போர்க்கு ரூபத்தை யளிப்பாய், ஜயத்தை யளிப்பாய்

9. சண்டிகே ! எவர்கள் எப்போதும் உன்னை பக்தியுடன் அர்ச்சிக்கின்றார்களோ அவர்களுக்கு ரூபத்தை யளிப்பாய், ஜயத்தை யளிப்பாய்

10. தேவி ! ஸெளபாக்கியம் ஆரேக்கியமும் அளிப்பாய். (பிரம்மானந்தமாகிய) பரமசுகத்தையுமளிப்பாய்.....

11. சத்துருக்களின் நாசத்தையளிப்பாய். நிரதிசயமான பலத்தையு மளிப்பாய்

12. தேவி ! மங்களத்தை யளிப்பாய். பரந்த செல்வத்தையளிப்பாய்..

13. கல்விமானாகவும், புகழ்பெற்றவனாகவும், செல்வம் படைத்தவனாகவும், இம்மனிதனைச் செய்வாய்..

14. பிரபலமான தைத்தியர்களின் கர்வத்தை யழித்தவளே ! சண்டிகே ! உன்னை வணங்கும் எனக்கு ரூபத்தையளிப்பாய், ஜயத்தை யளிப்பாய்

15. நான்கு கைகளையுடையவளே ! நான்முகப்பிரம்மாவால் துதிக்கப்பெற்றவளே ! பரமேசுவரி !...

16. தேவி ! அம்பிகே ! இடைவிடாது பக்தியடன் கிருஷ்ணனால் துதிக்கப்பெற்றவளே !

17. பார்வதீநாதனால் பூஜிக்கப்பட்டவளே ! பரமேசுவரி !...

18. தேவர்களும் அசுரர்களும் தங்கள் முடியிலுள்ள ரத்னங்களால் தொட்டு வணங்கும் சரணங்களை யுடையவளே ! அம்பிகே !

19. இந்திராணியின் பதியால் உள்ளன்புடன் பூஜிக்கபெற்றவளே ! பரமேசுவரி !...

20. தேவி ! கொடிய தோள்வலி படைத்த தைத்தியர்களின் கர்வத்தை நாசம் செய்தவளே !.....

21. தேவி ! பந்தங்களற்ற பக்தர்களுக்கு பரமானந்த மூலமான முக்தியை யளிப்பவளே ! அம்பிகே !

22. மனதுக்கினியவளாயும், மனதில் போக்கை அறிந்து நடப்பபவளாயும், கடத்தற்கரிய ஸம்ஸாரஸாகரத்தைக் கடத்தற்கு உதவிபுரிபவளாயும், நற்குலத்துதித்தவளாயு முள்ள மனைவியை யளிப்பாய்.

23. இந்த ஸ்தோத்திரத்தைப் படித்துவிட்டு மஹாஸ்தோத்திரமாகிய தேவீ மஹாத்மியத்தை ஸாதகனாகிய மனிதன் படிக்கவேண்டும். அது ஸப்தசதீபாராயணக் கணக்கில் அடங்கியது. அதனால் சிறந்த பலன் கைகூடும். ஸகல ஸம்பத்துக்களையும் அடைவான்.

இங்ஙனம் மார்கண்டேய புராணத்தில் அர்க்கலா ஸ்தோத்ரம் முற்றிற்று.

3. கீலகம்

1. விசுத்தஞானமே சரீரமாயும், முன்று வேதங்களே தெய்வீகக் கண்ணயும் கொண்டு உயர் நலத்தை கூட்டுவித்தற்குக் காரணரூபியாய்ப் பாதிச் சந்திரனைத் தலையிலணிந்து விளங்கும் பரமசிவனுக்கு நமஸ்காரம்.

2. எல்லா மந்திரங்களுக்கும் இதை (ஸப்தசதீ பாராயணத்தை) அபிகீலகம் என அறிய வேண்டும். (எந்த மந்திரத்தையும்) இடைவிடாது ஒருமனத்தினனாய் ஜபிக்கும் ஒருவன் ÷க்ஷமத்தையடைகின்றான்,

3. (அங்ஙனம் ஜபிப்பவனுக்கு) உச்சாடனம் முதலியவை ஸித்திக்கின்றன. (கிடைத்தற்கரிய)எல்லாப் பொருள்களும் கிடைக்கின்றன. (ஆனால் மந்திர ஜபமில்லாமல் தேவீ மஹாத்மியமாகிய) இதனால் துதிப்பவர்க்கும் ஸ்தோத்திரமாத்திரத்தாலேயே தேவி சித்தி யளிக்கின்றாள்.

4. அப்புருஷனுக்கு (காரியசித்திக்கு) மந்திரமோ முலிகையோ வேறு எதுவோ வேண்டியதில்லை. ஜபமில்லாமலேயே உச்சாடனம் முதலிய எல்லாம் சித்திக்கும்.

5. இது பரிபூர்ண பலனை யளிப்பது. (பலமந்திரங்களில் எது சிறந்தது என்று) உலகில் ஏற்படும் சந்தேகமாகிய இதைக்கருதியே பரமசிவன் இதுவே எல்லா நன்மைகளையுமளிப்பதாக இருக்கட்டுமென்று (இவ்வுலகிற்கு இதை) அழைத்தருளினார்.

6. சண்டிகையின் ஸ்தோத்திரமாகிய இதை ரகசிமாய்ப் போற்றத்தக்கதாய் அவர் செய்தருளினார், அதனால் உண்டாகும் புண்ணியத்திற்கு முடிவே இல்லை என்ற அந்த நிர்ணயத்தை உள்ளபடி உணர்தல் வேண்டும்.

7,8. (வேறு மந்திர ஜபம் செய்பவனும் தேவீ மஹாத்மியத்தை பாராயணம் செய்பவனாயின்) அவனும் எல்லா நன்மைகளையும் சந்தேகமின்றி அடைவான். கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியிலோ அஷ்டமியிலோ ஒருமைப்பட்ட மனத்துடன் எந்த ஸாதகன் (நியாய வழியில் சம்பாதித்த தன் பொருளை தேவியிடம்) ஸமர்ப்பிக்கின்றானோ, (பின்பு உலக வாழ்க்கையின் பொருட்டு அவசியமானதை தேவியளித்ததென) மீண்டும் பெற்றுக்கொள்ளுகின்றானோ அவனிடமே தேவி ஸந்தோஷமடைகின்றாள். அவளை மகிழ்விக்க வேறு வழியில்லை. இந்த மாதிரிப் பூட்டினால் (சித்திமார்க்கம்) மகாதேவரால் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

9. (மேற்கூறிய முறையில்) எவன் தடையை நீக்கிவிட்டு (ஸப்தசதீ ஸ்தோத்ரமாகிய) இதை நாள்தோறும் தெளிவுபட ஜபம் செய்கின்றானோ அவன் சித்தனாகவும், தேவியின் அடியார் கூட்டத்திற் சேர்ந்வனாகவும், கந்தர்வனாகவும், பிறரைக் காக்கவல்லவனாகவும் ஆவான்.

10. அவன் எங்கும் சஞ்சரிப்பவனாயினும், எங்கிருந்தும் அவனுக்கு பயம் உண்டாகாது ; அற்பாயுளில் மரணமடையமாட்டான் ; மரணத்துக்குப்பின் மோக்ஷத்தை யடைவான்.

11. (நிஷ்கீலக முறையை) அறிந்து கொண்டு (ஸப்தசதீ பாடத்தை) ஆரம்பிக்கவேண்டும். அதை அனுஷ்டிக்காதவன் வீணனாவான். ஆகையால் இதை அறிந்த பின்னரே குறைவற்ற இந்த ஸ்தோத்ர பாடம் புத்திமானால் ஆரம்பிக்கப்படவேண்டும்.

12. ஸ்திரிகளிடம் ஸெளபாக்கியம் முதலிய எதெது காணப்படுகிறதோ அது எல்லாம் தேவியின் அருளாலேயே ஏற்படுவதாகையாலும் பரம மங்களரமான இந்த ஸ்தோத்திரம் ஜபித்தற்குரியது.

13. மெதுவாக ஜபம் செய்தாலும் பயன் உண்டு எனினும் உரக்கப் பாராயணம் செய்வதாலேயே பரிபூர்ண பலன் ஏற்படுமாதலால் அங்ஙனமே அது ஆரம்பித்து அனுஷ்டிக்கப்படவேண்டும்.

14. ஐசுவரியம், ஸெளபாக்கியம், ஆரோக்கியம், ஸ்ம்பத்து, சத்துரு ஜயம், உயர்ந்த மோக்ஷம் எல்லாம் எந்தப் பரதேவதையின் அருளால் கிட்டுகின்றனவோ அவள் ஏன் மக்களால் துதிக்கப்படுவதில்லை ?

இங்ஙனம் கீலக ஸ்தோத்திரம் முற்றிற்று

4. ராத்ரி - ஸூக்தம்

1. ஓம். ராத்திரி தேவியானவள் எழுந்தருளுகின்றாள். இந்திரிய சக்திகளால் எல்லா இடங்களிலுமுள்ள எல்லாப் பெருமைகளையும் எல்லாச் செயல்களையும் பார்க்கின்றாள். எல்லாப் பெருமைகளையும் தரிக்கின்றாள்.

2. அழிவற்ற அந்த தேவியானவள் முதலில் எங்கும், கீழும் மேலும், இருட்டைப் பரப்புகிறாள். (வானுலகில்) ஒளியால் அவளே இருட்டைப் போக்கவும் செய்கின்றாள்.

3. ராத்திரி தேவியானவள் எழுந்தருளுகின்றாள். தனது சகோதரியான விடியற்காலையைப் பிரகாசிப்பிக்கின்றாள். அதனால் இருள் தானே மறைகின்றது.

4. (ராத்திரி தேவதையாகிய) அவள் இப்போதே நமக்கு பிரசன்னமாகவேண்டும். அவள் பிரஸன்னமானால் நாம் (கிருஹங்களில்) இன்புற்று வாழ்வோம். (இரவில்) பக்ஷிகள் மரங்களில் கூடுகளில் எங்ஙனம் சுகமாய் வசிக்கின்றனவோ அங்ஙனம் வசிப்போம்.

5. கிராமத்தில் வசிக்கும் ஜனங்களுள் அனைவரும் (சிச்சக்தி வடிவான) இரவு வந்ததும் அவளிடம் இன்புற்று ஒடுங்குகின்றன. பக்ஷிகள் ஒடுங்குகின்றன. பருந்துகள் ஒடுங்குகின்றன. காரியார்த்தமாய்ப் பிரயாணம் ஒடுங்குகின்றனர்.

6. ராத்திரி ரூபியான சிச்சக்தியே ! (துர்வாஸனை வடிவான) பெண் ஓநாயையும், (பாவச்செயல் வடிவான) ஆண் ஓநாயையும் எங்களை யணுகாமல் விரட்டிவிடு. (சித்தவித்தத்தை அபஹரிக்கும் காமமாகிய) திருடனையும் விரட்டிவிடு. பின்னர் எங்களுக்கு மோக்ஷஇன்பத்தை யருள்பவளாய் (நீ) விளங்க வேண்டும்.

7. உஷா தேவியே ! எல்லாப் பொருள்களையும் கௌவியுள்ள (அஞ்ஞானமாகிய) காரிருளை அறவே என்னை யணுகாமலகற்றிவிடு. செல்வத்தை யளித்து கடன் கட்டிலிருந்து விடுவிப்பது போல ஞானத்தை யளித்து எல்லா (அஞ்ஞானக்) கட்டுகளின்றும் விடுவித்தருள்வாய்.

8. சூரியபுத்திரியே ! நீ (பால்சுரக்கும்) பசுவைப்போலவாய். நான் உன்னை அணுகி ஸ்துதியால் வரவேற்கிறேன். ராத்ரி தேவியே ! காமாதி சத்துருக்களை உனது கிருபையால் ஜயித்துள்ள எனது ஸ்தோத்ரவடிவான இந்த ஹவிஸ்ஸை அங்கீகரித்தருள வேண்டும்.

இங்ஙனம் ராத்ரி ஸூக்தம் முற்றிற்று.

5. நவாக்ஷரீ விளக்கம்

ஸ்ரீ நவாக்ஷரீ மஹாமந்திரமாகிய இதற்கு மார்கண்டேயர் ரிஷி ; ஜகதீச்சந்தம் ; துர்க்கா - லக்ஷ்மீ - ஸரஸ்வதீ தேவதை.

ஹ்ராம் என்று பீஜத்தை நாபியிலும், ஹ்ரீம் என்று சக்தியைக் கருக்குழியிலும், ஹ்ரும் என்று கீலகத்தைப் பாதங்களிலும் நியாஸம் செய்க.

துர்க்கா - லக்ஷ்மீ - ஸரஸ்வதியின் திருவருள் ஸித்திக்கும் பொருட்டு ஜபத்தில் இதற்குப்பயன் என்று எல்லா அங்கங்களையும் தொடுக.

பின்னர் கரநியாஸமும் அங்கநியாஸமும் செய்து பூர்ப்புவஸ்ஸுவரோம் என்று தீமைகள் அணுகாவண்ணம் திக்பந்தம் செய்க.

தியானம் - தாயே ! மதுகைடபர்களை வதம் செய்தவளே ! மஹிஷாஸுரனுடைய பிராணனைப்போக்கியவளே ! விளையாட்டாக தூம்ரலோசனனை வதைத்தவளே ! சண்டமுண்டர்களையழித்தவளே ! ரக்தபீஜாசுரனை நிர்முலமாக்கியவளே ! சும்பனையும் நிசும்பனையும் ஒழித்தவளே ! நித்திமானவளே ! துர்க்காம்பிகையே ! உன்னை நமஸ்கரிக்கின்றேன். விரைவில் எனது பாவத்தைப் போக்கியருள்வாய்.

லம் என்ற பிருதிவி பீஜத்தால் பிருதிவி வடிவான உனக்கு கந்தம் ஸமர்ப்பிக்கின்றேன்.

ஹம் என்ற ஆகாச பீஜத்தால் பிருதிவி வடிவான உனக்கு புஷ்பங்களால் பூஜிக்கின்றேன்.

யம் என்ற வாயு பீஜத்தால் வாயு வடிவினளான உனக்கு தூபம் காட்டுகின்றேன்.

ரம் என்ற அக்னி பீஜத்தால் அக்னி வடிவினளான உனக்கு தீபம் காட்டுகின்றேன்.

வம் என்ற அமிருத பீஜத்தால் அமிருத வடிவினளான உனக்கு அமிருத மஹா நைவேத்தியத்தைத் தெரிவிக்கின்றேன்.

ஸம் என்ற ஸர்வாத்ம பீஜத்தால் ஸர்வாத்ம வடிவினளான உன்னை எல்லா உபசாரங்களாலும் பூஜிக்கின்றேன்.

மந்த்ரம். ஜம்-சித்தஸ்வரூபிணியான மஹாஸரஸ்வதி ! ஹ்ரீம்-சிதாத்மஸ்வரூபிணியான மஹாலக்ஷ்மி ! க்லீம்- ஆநந்தரூபிணியான மஹாகாளி ! எல்லாத்தீமைகளையும் சமனம் செய்யும் நிர்விகல்பரூபிணியான உன்னை இருதய கமலத்தில் தியானிக்கிறேன்.

பூர்ப்புவஸ்ஸுவரோம் என்று திக்விமோசனமும் தியானமும். லம் முதலியவற்றில் பஞ்ச பூஜை.

ஸமர்ப்பணம் - இரகசியத்துள்ளும் இரகசியமானதைக் காப்பவள் நீ. என்னால் செய்யப்பட்ட ஜபத்தை ஏற்றுக்கொள்வாய். என்னிடம் உனது அருளால் எனக்கு நிலையான ஸித்தி உண்டாக வேண்டும்.

இங்ஙனம் நவாக்ஷரீ விளக்கம் முற்றிற்று.

அத ப்ரதம - சரித்ரம்

மஹாகாளீ-த்யானம்

பகவான் விஷ்ணு யோக நித்திரையிலிருக்கும்போது தோன்றிய மதுகைடப அசுரர்களை ஸம்ஹரிக்கும் பொருட்டு தாமைரப்பூவிலுதித்த பிரம்மதேவர் ஏந்த தேவியை ஸ்துதித்ததாரோ, அந்த மஹா காளியைச் சேவிக்கின்றேன். அவள் தனது பத்துக் கைகளில் வாள், சக்ரம், கதை, பாணம், வில், பரிகம், சூலம், புசுண்டி, தலை, சங்கம் இவற்றைத்தரித்து, ஸர்வாங்சு பூஷிதையாய், நீலமணிக் கொப்பான காந்தியுடனும், மூன்று கண்களுடனும், பத்து முகங்களுடனும், பத்துக் கால்களுடனும் விளங்குகின்றாள்.

முதல் அத்தியாயம்

மதுகைடப வதம்

ஓம் நமச்சண்டிகாயை

(ஒம் - ஐம்) மார்கண்டேயர் கூறியது -

1,2. எவர் சூரியபுத்திரனோ, ஸாவர்ணி எனப் பெயர் பெற்றவரோ, எட்டாவது மனுவாகக் கூறப்படுகிறாரோ அவருடைய வரலாற்றை விரிவாகக் கூறப்புகும் என்னிடம் கேட்பாய்.

3. சூரிய குமாரனும் மகாபாக்கியசாலியும் ஸாவர்ணி எனப் பெயர்பெற்றவருமான அவர் மகாமாயையின் அனுக்கிரகத்தால் எங்ஙனம் மன்வந்தராதிபராக ஆனார் (என்பதைக் கூறுகிறேன்).

4. முன்னொரு காலத்தில் ஸ்வாரோசிஷ மன்வந்திர முடிவில் சைத்ரவம்சத்தில் உதித்தவனாயும் ஸுரதன் எனப் பெயர் பெற்றவனாயும் பூமண்டலம் முழுதுமாண்ட ஒரு அரசன் இருந்தான்.

5. தன் வயிற்றிற் பிறந்த புத்திரர்களைப்போல் நன்றாகத்தன் பிரஜைகளைப் பரிபாலித்து வந்த அவனுக்கு அப்போது கோலாவித்வம்ஸிகள் எனப் பிரபலமான அரசர்கள் பகைவர்களாயினர்.

6. பராக்கிரமம் மிக்க சேனைகளுடைய அவனுக்கு அவ்வெதிரிகளுடன் (அவர்கள் நாட்டில்) போர் முண்டது. அவர்கள் பலங் குறைந்தவர்களாயினும் அந்தப் போரில் கோலாவித்வம்ஸிகளால் அவன் ஜயிக்கப்பட்டான்.

7. பிரபலமான அந்த எதிரிகளால் தோற்கடிக்கப்பட்ட அப்புண்ணியவான் அதன் பிறகு தனது நகருக்குத் திரும்பித் தன்னுடைய தேசத்திற்கு மட்டும் தலைவனாயிருந்தான்

8. பின்னர் சொந்தத் தலைநகராகிய அங்கும் துஷ்டர்களும் கெட்ட எண்ணமுடையவர்களும், பலசாலிகளுமான அவனுடைய மந்திரிகளால் பலங்குறைந்த அவனுடைய பொக்கிஷமும் சைனியமும் அபகரிக்கப்பட்டன.

9. பிறகு ஆட்சியை யிழந்த அவ்வரசன் ஒருவனாகவே குதிரையின் மீதேறி வேட்டையாடப் போவதாயச் சாக்குக் காட்டி வழி தெரியாத வனத்துட் புகுந்தான்.

10. அங்கு மேதஸ் என்னும் துவிஜ சிரேஷ்டருடைய ஆசிரமத்தை கண்டான். அது அம்முனிவராலும் அவரது சிஷ்யர்களாலும் பிரகாசிப்பதாயும், இம்சையை மறந்து சாந்தமாய்விட்ட துஷ்ட மிருகங்கள் சூழ்ந்ததாயுமிருந்து.

11. அவன் (அரசன்) அம் முனிவரால் உபசரிக்கப்பெற்று முனிசிரேஷ்டருடைய அவ்வாசிரமத்தில் இங்குமங்கும் சஞ்சரித்துக்கொண்டு சிறிது காலமிருந்தான்.

12. மமதை குடிகொண்ட உள்ளத்தினனாகிய அவன் அப்போது அங்கிருந்து கொண்டு பின்வருமாறு சிந்திக்கலானான். என் முன்னோர்களால் முன்பு பரிபாலிக்கப்பட்ட ராஜதானியானது என்னால் இழக்கப்பட்டதல்லவா ?

13-16. நடத்தை கெட்டவர்களான எனது வேலையாட்களாகிய அவர்களால் (ராஜ்யம்) தருமவழியில் பாலிக்கப்படுகிறதோ இல்லையோ ? எப்போதும் மதங்கொண்டதும் பராக்கிரமம் மிகுந்ததுமாகிய எனது பிரதாமான அந்த யானை எனது எதிரிகளின் வசமாகி என்ன அனுபவங்களை அடையப்போகிறதோ அறியேன். எவர்கள் எப்போதும் பிரீதியாலும் தனத்தாலும் உண்டியாலும் எனக்கு வசப்பட்டவர்களாயிருந்தார்களோ அவர்கள் நிச்சயமாக அன்னிய அரசர்களுக்கு இப்போது சேவை செய்கிறார்கள். ஆலோசியாமல் செலவிடும் சீலமுடையவர்களும் எப்போதும் அழிவையே செய்பவர்களுமாகிய அவர்களால் மிகவும் கஷ்ட்டப்பட்டு (நான்) சேர்த்து வைத்த அந்தப் பொக்கிஷம் நாசமாகப்போகிறது. இதையும் மற்ற விஷயங்களையும் அவ்வரசன் இடைவிடாது சிந்திக்கலானான்.

17. வேதியருடைய ஆசிரமத்தருகில் அங்கு ஒரு வைசியனை அவன் சந்தித்தான். அவனால் அவ்வைசியன் ஐயனே ! நீர் யார் ? இங்கு வருவதற்கு காரணம் என்ன ? என்று வினவப்பட்டான்.

18,19. சோகம் பிடித்தவர் போலும் மனதுடைந்தவர் போலும் நீர் காணப்படுவது ஏன் ? அன்புடன் கூறிய அரசனுடைய இவ்வார்த்தயைக் கேட்டு அவ்வைசியன் அவ்வரசனிடம் வணக்க ஒடுக்கத்துடன் பின்வருமாறு பதிலளித்தான்.

வைசியன் கூறியது: 20,21. நான் தனிகர் குலத்துதித்த வைசியன், ஸமாதி எனப் பெயர்.

22 - 24. பணப் பேராசையால் ஒழுக்கங்கெட்ட புத்திரர்களாலும் மனைவியாலும் கைவிடப்பட்டவனாய் தனத்தையும் தாரத்தையும் புத்திரர்களையும் இழந்து, என்னுடைய தனத்தை அபகரித்துக் கொண்ட நண்பர்களாலும் பந்துக்களாலும் விலக்கப்பட்டுத் துன்புற்று வனத்தையடைந்துள்ளேன். அப்படிப்பட்ட நான் புத்திரர்கள், பந்துக்கள், மனைவி இவர்களுடைய மேல் போக்கு நல்லதோ கெட்டதோ இங்கிருந்து கொண்டு அறிய முடியவில்லை. இப்பொழுது அவர்களுக்கு வீட்டில் இன்பம் ஏற்பட்டுளதா ? துன்பம் ஏற்ப்பட்டுள்ளதா ?

25. என் புத்திரர்கள் எப்படி இருக்கிறார்களோ நல்ல வழியில் செல்லுகிறர்களோ, கெட்ட வழியில் செல்லுகிறார்களோ !

அரசன் கூறியது: 26-28. பேராசைபிடித்த எந்தப்புத்திரர்களாலும் மனைவியாலும் தனத்திலிருந்து நீங்கள் விலக்கித் தள்ளப்பட்டீர்களோ அவர்களிடம் ஏன் உமது மனம் சிநேக பாசத்தால் கட்டுப்பட வேண்டும் ?

வைசியன் கூறியது: 29-32. என்னைப்பற்றிய வார்த்தை நீங்கள் எப்படிக் கூறினீர்களோ அது அப்படித் தானிருக்கிறது. என் மனம் கடினமாகிக் கட்டுப்பட்டு நிற்கவில்லையே, என்ன செய்வேன் ?பணத்தில் பேராசை கொண்ட எவர்களால் பிதா என்ற சிநேகமும் பதி என்ற பிரீதியும் பந்து என்ற ப்ரீதியும் விடப்பட்டு நான் விலக்கப்பட்டேனோ அவர்களிடத்தில் என் மனம் இன்னும் பிரீதியுடனேயே இருக்கிறது. மஹாமதி வாய்ந்தவரே ! (இது) தெரிந்துங்கூட ஏன் இப்படி என்று தெரியவில்லை.

33. எந்த குணமற்ற பந்துக்களிடம் என் மனமானது பிரேமையால் பிணிக்கப்பட்டுளதோ அவர்களைக் குறித்து எனக்குப் பெருமூச்சும் மனக்கலக்கமும் உண்டாகிறது.

34. பிரீதியற்ற அவர்களிடம் என் மனம் கடினமாகவில்லையே, அதற்கு நான் என்ன செய்வேன் ?

மார்கண்டேயர் கூறியது : 35-38. வேதியரே ! பிறகு இந்த ஸமாதி என்ற வைசியனும் அந்த அரச சிரேஷ்டனும், இருவருங்கூடி அம்முனிவரை அணுகினார்கள். முறைப்படி மரியாதையுடன் வைசியனும் அரசனுமாகிய இருவரும் அவருடன் ஸம்பாஷித்து அவரருகில் வீற்றிருந்த சில வரலாறுகளை பேசினார்கள்.

அரசன் கூறியது: 39,40. ஐயனே ! உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன் அதைச் சொல்ல வேண்டும்.

41-43. என்னுடைய சித்தத்திற்கு அடக்கமில்லாமல் என் மனதிற்கு ஏற்படும் துக்கத்திற்கு எது காரணமோ (அதைச் சொல்லவேண்டும்). முனி சிரேஷ்டரே ! அரசை இழந்துவிட்ட எனக்கு, அறிவுள்ளவனாயினும் அறியாதவனைப் போல், அரசாங்கங்களில் மமதை உளதோ அது ஏன் ? இவனும் (இவ் வைசியனும்) புத்திரர்களாலும், தாரத்தாலும், வேலைக்காரர்களாலும் அவ்வாறே ஒதுக்கப்பட்டவன். சொந்த ஜனங்களாலும் தள்ளப்பட்டவன். அப்படியிருந்தும் அவர்களிடம் (இன்னும்) மிகவும் பிரீதியுடையவனாயிருக்கிறான். நானும் அப்படித்தான். இருவரும் மிகவும் துக்கத்திலாழ்ந்து உள்ளோம்.

44, 45. குற்றங்காணப்பட்ட பின்னும் விஷயத்தில் (மனைவி, மக்கள், பொருள், அரசு முதலியவற்றில்) மமதையால் கவரப்பட்ட மனத்தினராயிருக்கின்றோம். பெருமை வாய்ந்தவரே ! ஞானிகளுக்கும் மோஹம் ஏற்படுகிறதே அது ஏன் ? ஞானக்கண்ணில்லாதவர்க்கன்றோ மூடத்தன்மை ஏற்படும். அது எனக்கும் இவனுக்கும் ஏற்பட்டுள்ளது.

ரிஷி கூறியது: 46-48. பெருமை வாய்ந்தவனே ! எல்லாப் பிராணிகளுக்கும் இந்திரியங்கள் சஞ்சரிக்கும் விஷயங்களில் அறிவுண்டு. விஷயமும் அவ்வாறே வெவ்வேறாக இருக்கிறது. சில பிராணிகள் பகல் குருடு ; வேறு சில இரவில் குருடு.

49,50. மற்றும் சில பிராணிகள் பகலிலும் அவ்வாறே இரவிலும் ஸமமான பார்வையுடையவை. (நீர் சொல்லுகிறபடி) மனிதர்கள் உண்மையில் அறிவு படைத்தவர்கள்தான், ஆனால் அவர்கள் மட்டுந்தான் (அங்ஙனம் அறிவுபடைத்தவர்கள்) என்பதில்லை, ஏனெனில் பசு, பக்ஷி, மிருகம் முதலிய எல்லாம் அங்ஙனம் அறிவு படைத்தவையே. எது அந்த மிருகங்களுக்கும் பக்ஷிகளுக்கும் இருக்கிறதோ அந்த அறிவுதான் (பொதுவாக) மனிதர்களுக்கும் இருக்கிறது.

51,52. மனிதருக்குள்ளது எதுவோ அது பிராணிகளுக்கும் இருக்கிறது. மற்ற வியாபாரங்களும் இருசாரார்க்கும் சமம். அறிவிருந்தாலும் தாம் பசியினால் பீடிக்கப்பட்டிருந்தாலும், மோஹத்தினால் தம் குஞ்சுகளின் அலகில் இறையைப் போடுவதில் ஆதரவு கொண்டுள்ள இப்பக்ஷிகளைப் பார்ப்பாய். மானிட சிரேஷ்டனே ! மனிதர்கள் (அவ்வாறே) புத்திரர்களிடம் மிகுந்த அபிமானம் உடையவர்கள்தான்.

53. இவர்கள் (செய்யும் உபகாரத்திற்கு) பிரத்தியுபகாரம் கிடைக்கும் என்ற பேராசையாலல்லவா (இங்ஙனம் செய்கிறார்கள்). அதை நீ காணவில்லையா ? அதனால்தான் மமதை என்னும் சுழலுடன் கூடிய மோஹமடுவில் இவர்கள் வீழ்த்தப்பட்டவர்களாகின்றனர்.

54-56. பிரபஞ்சத்தின் இருப்பிற்குக் காரணமாக மஹாமாயையின் மகிமையால் அது (நிகழ்கின்றது). அதில் ஆச்சரியப்படவேண்டியதில்லை.இந்த மஹாமாயை உலக நாயகனாகிய ஹரியினுடைய யோக நித்திரையாகின்றாள். அவளால் உலகம் மயக்கப்படுகின்றது. ஞானிகளுடைய சித்தங்களையும் அந்த மஹாமாயா தேவியான பகவதி வலுவில் கவர்ந்து மோஹத்தில் செலுத்துகிறாள். அவளாலேதான் அசைவதும் அசையாததுமான இவ்வுலகெல்லாம் சிருஷ்டிக்கப்படுகின்றது.

57. அவள் மகிழ்ந்தால் மானிடர்க்கு முக்திக்கு வரமளிப்பவளாகின்றாள். அவளே வித்தை, உயர்வற உயர்ந்தவள், முக்திக்கும் வித்தாகியவள், என்றுமுள்ளவள்.

58. ஈசுவரர்களுக்கெல்லாம் ஈசுவரியாகிய அவளே தான் ஸம்ஸாரத்தளைகளுக்கும் காரணமாயிருப்பவள்.

அரசன் கூறியது : 59-62. ஐயனே ! எவளைத் தாங்கள் மஹாமாயை என்று கூறுகிறீர்களோ அந்த தேவி யார் ? அவள் எங்ஙனம் தோன்றினாள் ? வேதியரே ! அவளுடைய செயல் என்ன ? அந்த தேவி என்ன மகிமை உடையவள், என்ன ஸ்வருபம் உடையவள், எங்கிருந்து உண்டாகியவள் ? பிரம்மஞானிகளில் சிரேஷ்டரே ! உம்மிடம் அதையெல்லாம் கேட்க விரும்புகிறேன்.

ரிஷி கூறியது: 63,64. உலகே உருக்கொண்ட அவள் என்றுமுள்ளவள். அவளாலேயே அது எல்லாம் வியாபிக்கப்பட்டுள்ளது.

65-67. அப்படியிருந்தபோதிலும் அவளுடைய உற்பத்தி (பக்தர்களின் பொருட்டு) பலவிதம். என்னிடமிருந்து அதைக் கேட்பாய். தேவர்களின் காரியசித்திக்காக அவள் எப்போதும் ஆவிர்ப்பவிக்கின்றாளோ அப்போது நித்யையாயினும் அவள் உலகில் உற்பவித்ததாகச் சொல்லப்படுகின்றாள். கல்பத்தின் முடிவில் பிரபஞ்சம் ஒரே ஜலமயமாகிவிட்டபோது பிரபுவும் பகவானுமான விஷ்ணு ஆதிசேஷனைப் படுக்கையாய்க் கொண்டு எப்போதும் யோகநித்திரையில் ஆழ்ந்தாரோ அப்போது பயங்கரமானவர்களும், மதுகைடபர்கள் என்று பெயர் பெற்றவர்களுமான இரண்டு அசுரர்கள் (தோன்றினார்கள்).

68-71. விஷ்ணுவின் காதினுள்ளழுக்கினின்று தோன்றிய அவர்கள் பிரம்மாவைக் கொல்வதற்கு முயற்சித்தார்கள். பிரஜைகளுக்கு நாயகனும் பிரபுவுமான பிரம்மா, விஷ்ணுவின் நாபிகமலத்தில் இருந்து கொண்டு, தூங்கும் ஜனார்த்தனரையும் (தன்னை எதிர்க்கும்) உக்கிரவடிவான அவ்வசுரர்களையும் பார்த்து ஏகாக்கிர சித்தத்துடன் உலக நாயகியும், உலகின் தாயும் உலகைக் காப்பவளும் அழிப்பவளும், தேஜோ மூர்த்தியான விஷ்ணுவின் நித்திரை வடிவினளும், ஒப்பற்றவளுமான அந்த யோக நித்திராதேவியைத் துதிக்கலானார்.

பிரம்மா கூறியது : 73, 74. அழிவற்றவளே ! நித்தியமானவளே ! நீயே ஸ்வாஹா, நீயே ஸ்வதா, நீயே வஷட்காரம் ; நீயே ஸ்வரருபிணீ ; அம்ருத ஸ்வருபிணீ ; ப்ரணவஸ்வருபிணீ . அரை மாத்திரை வடிவனளாய் இருப்பவளும், என்றுமுள்ளவளும் நீயே ; திரை வடிவனளாய் இருப்பவளும், என்றுமுள்ளவளும் நீயே ; எந்த தேவி விசேஷமாய்க் கூற முடியாதவளோ அவளும் நீயே.

75. தேவி, நீயே ஸந்தியை, நீயே ஸாவித்ரி ; ஒப்புயர்வற்ற அன்னையும் (நீயே). இவ்வுலகமானது உன்னாலேயே தாங்கப்படுகிறது ; உன்னாலேயே ஆக்கப்படுகிறது.

76. தேவி ! இது உன்னாலேயே பாலிக்கப்படுகிறது. முடிவில் எப்போதும் நீயே (இதை) உண்டுவிடுகிறாய். சிருஷ்டியில் உத்பத்திவடிவாகவும், பாலனத்தில் ஸ்திதிவடிவாகவும் உள்ளவள் (நீயே). உலக வடிவானவளே !

77. அவ்வாறே முடிவில் (பிரளயத்தில்) இவ்வுலகிற்கு ஸம்ஹார வடிவாக உள்ளவளும் (நீயே). மஹாவித்தையும், மஹாமாயையும், மஹாபுத்தியும், மஹாஸ்மிருதியும் (நீயே).

78. நீயே மஹாமோஹ வடிவினளாயும், மஹா தேவசக்தியாயும், மஹா அசுர சக்தியாயும் இருக்கின்றாய். நீயே அனைத்திற்கும் மூலகாரணமாகவும், முக்குணங்களையும் இயக்குவிப்பவளாகவும் இருக்கின்றாய்.

79. (மரண) காலராத்ரியாகவும், (பிரளயகால) மஹாராத்ரியாகவும், மோஹராத்ரியாகவும், பயங்கரவடிவினளாகவும் இருக்கின்றாய். நீயே ஸ்ரீ, நீயே ஈசுவரி, நீயே ஹரி, நீயே நிச்சயவடிவான புத்தி.

80. நாணமும் புஷ்டியும் அவ்வாறே ஸந்தோஷமும் அமைதியும் பொறுமையும் நீயே. வாளும் சூலமும் கதையும் சக்கரமும் ஏந்தி கோர வடிவினளாயுள்ளவளும் நீயே.

81. சங்கமும் வில்லும் பாணமும் புசுண்டியும் பரிகாயுதமும் தாங்கியவளும் (நீயே). மங்களகரமானவளும் மங்களம் மிக்கவளும் அழகு மிக்கவளும் (நீயே).

82-85. அகிலவடிவினளே ! பரத்திற்க்கும் அபரத்திற்க்கும் மேலான பரமேசுவரி நீயே. ஸத்தாகவோ அஸத்தாகவோ எவ்விடத்திலாயினும் எக்காலத்திலாயினும் எந்த வஸ்து உண்டோ அது அனைத்திற்கும் சக்தியாய் விளங்குபவள் எவளோ அப்படிப்பட்ட நீ அப்போது துதிக்கப்படுவதெங்ஙனம் ? உலகை உண்டாக்கியவனும், உலகை காப்பவனும் உலகை உண்பவனும் எவனோ அவனுங்கூட உன்னால் நித்திரையின் வசமாக்கப்பட்டிருக்க எவன்தான் உன்னைத்துதிக்கும் வல்லமையுடையவனாவான் ? விஷ்ணுவும் நானும் ஈசானனும் எவளால் உடல் தாங்கும்படி செய்விக்கப்பட்டோமோ அப்படிப்பட்ட உன்னைத்துதித்த எவன்தான் சக்தியுடையவனாவான் ? தேவியே ! அப்படிப்பட்ட நீ இவ்வாறான உன்னுடைய உதாரமான பெருமைகளாலேயே நன்கு துதிக்கப்பெற்றவளாக விளங்குகின்றாய்.

86. வெல்லுதற்கரிய அசுரர்களாகிய இம் மதுகைடபர்களை மயக்குவிக்கவேண்டும். உலகநாயகனாகிய அச்சுதன் விரைவில் விழித்துக்கொள்ளவும் செய்யவேண்டும்.

87. இக் கொடிய அசுரர்களைக்கொல்லும் பொருட்டு அவருக்கு எண்ணத்தையும் தோற்றுவிக்கவேண்டும்.

ரிஷி கூறியது : 88-91. இங்ஙனம் பிரம்மாவால் துதிக்கப்பெற்ற தாமஸிதேவி அங்கு அப்போது மதுகைடபர்களை ஒழிக்க விஷ்ணுவை எழுப்பும்பொருட்டு வெளிப்படையாய்த் தோன்றாத அவருடைய கண், வாய், மூக்கு, புஜம், இருதயம், மார்பு முதலிய ஸ்தானங்களினின்று வெளிப்போந்து பிரம்மாவின் கண்ணெதிரில் தோன்றினாள். அப்போது உலகநாயகராகிய ஜனார்த்தனர் நித்தரை நீங்கியவராய் எழுந்தார்.

92. ஒரே நீர்ப்பரப்பின் மேல் பாம்புப் படுக்கையிலிருந்து எழுந்த அவர் அப்போது வீரியமும் பராக்கிரமமும் மிகுந்தவர்களும் துஷ்டர்களுமான அம்மதுகைடபர்களை கண்ணுற்றார்.

93. பின்னர் பகவான் ஹரியானவர் எழுந்து, கோபத்தால் கண் சிவந்தவர்களாய் பிரம்மாவைப் புசிப்பதற்கு ஆவேசம் பிறந்தவர்களாய் நின்ற அவர்களுடன் போர் புரியலானார்.

94,95. ஐயாயிரம் ஆண்டுகள் பகவான் அவர்களுடன் புஜங்களே ஆயுதங்களாய்க்கொண்டு போர் புரிந்தார். பலத்தால் பித்துப்பிடித்தவர்களுமான அவர்கள் கேசவனை நோக்கி, எங்களிடமிருந்து வேண்டிய வரத்தை கேட்கலாம் என்று கூறினர்.

ஸ்ரீ பகவான் கூறியது : 96,98. எனக்குப் பிரீதிசெய்ய விருப்பமுள்ளவர்களாயின் நீங்கள் இருவரும் இப்போதே என்னால் கொல்லப்படுவர்களாக வேண்டும். இங்கு வேறு வரத்தால் ஆவதென்ன ? இவ்வளவே என் வரம்.

ரிஷி கூறியது : 99-101. வஞ்சிக்கப்பட்டோம் என்றுணர்ந்து அவர்கள் அப்போது உலகமெங்கும் ஒரே ஜலமயமாயிருக்கக் கண்டு கமலக்கண்ணனாகிய பகவானை நோக்கி, எங்கு பூமி (மறைவான இடம்) ஜலத்தில் முழுகாமல் இருக்கிறதோ அங்கு எங்களைக் கொல்லலாம் என்று கூறினர்.

102, 103. அங்ஙனமே யாகுக ! என்று சங்கு சக்ர கதாதாரியான பகவான், அவர்களுடைய தலைகளைத் தனது துடைமறைவிலிருத்திக்கொண்டு சக்கரத்தால் சேதித்தார்.

104. பிரம்மாவல் துதிக்கப்பெற்ற இப்பரதேவதை இங்ஙனம் தானாகவே தன்னைத் தோற்றுவித்தாள். இந்த தேவியினுடைய பெருமையை உமக்கு மேலுங் கூறுகிறேன் கேளும். (ஐம், ஒம்).

ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீ மஹாத்மியத்தில் முதல் அத்தியாயம் முற்றிற்று

மஹாலக்ஷ்மீ த்யானம்

ஓம். அக்ஷமாலை, பரசு, கதை, பாணம், குலிசம், தாமரைப் பூ, வில், குண்டிகை, தண்டம், சக்தி, வாள், சர்மம், சங்கம், மணி, மதுபாத்திரம், சூலம், பாசம், சக்கரம் முதலிய ஆயுதங்களை கைகளிலேந்தியவளும், கமலாஸனத்திலிருப்பவளும் பிரஸன்னமான முகத்தினளும், மஹிஷாசுரனை வதைத்தவளும் ஆகிய மகாலக்ஷ்மியை இங்கு சேவிக்கின்றேன்.

இரண்டாவது அத்தியாயம்

மஹிஷாஸுர-ஸைன்ய வதம்

ஒம் ஹ்ரீம்) ரிஷி கூறியது : 1,2. முன்னொரு காலத்தில் மஹிஷாசுரன் அசுரர்க்கரசனையும், இந்திரன் தேவர்களுக்கு அரசனையும் இருக்கையில் நூறு வருஷகாலம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு யுத்தம் நிகழ்ந்தது.

3. அப்போது மகாவீரியம் படைத்த அசுரர்களால் தேவசைன்னியம் தோற்கடிக்கப்பட்டது. எல்லா தேவர்களையும் ஜயித்து, மஹிஷாசுரன் இந்திரப்பதவி யெய்தினான்.

4. பின்னர், தோல்வியுற்ற தேவர்கள் பிரம்மாவை முன்னிட்டுக்கொண்டு பரமசிவனும் மகாவிஷ்ணுவும் எங்கு கூடியிருந்தனரோ அங்கு சென்றனர்.

5. மஹிஷாசுரனுடைய சேஷ்டையையும் தேவர்களுக்கேற்ப்பட்ட அவமானத்தையும் நடந்தது நடந்த பிரகாரம் விரிவாகத் தேவர்கள் அவர்களிடம் கூறினர்.

6,7. சூரியன், இந்திரன், அக்கினி, வாயு, சந்திரன், யமன், வருணன், இன்னும் மற்ற எல்லா தேவதைகளுடைய அதிகாரங்களை நடத்திக்கொண்டு அவன் ஒருவனே வீற்றிருக்கிறான். அந்த துராத்மாவான மஹிஷனால் சொர்க்கத்திலிருந்து துரத்தப்பட்டு தேவகணங்களெல்லாம் மனிதர்களைப்போல் பூலோகத்தில் அலைந்து திரிகின்றனர்.

8. தேவசத்துருவின் சேஷ்ட்டையாகிய இது எல்லாம் உங்களிடம் விஞ்ஞாபனம் செய்து கொண்டோம். எங்களுக்கு புகலிடம் நீங்கள். நாங்கள் சரணாகதர்கள். அவனுடைய வதத்திற்குரிய வழியைச் சிந்தித்தருள வேண்டும்.

9. தேவர்களுடைய இவ்வார்த்தைகளைக் கேட்டு விஷ்ணுவும் சம்புவும் புருவங்கள் நெரிந்து முகங்களில் கடுகடுப்புத் தோன்றக் கோபங் கொண்டார்.

10. அப்போது கடுங்கோபம் நிறைந்த சக்ரபாணியின் முகத்தினின்றும், பிரம்மாவின் முகத்தினின்றும் சங்கரர் முகத்தினின்றும் அவ்வாறே வெளிக்கிளம்பிய அந்த மகத்தான ஒளி யொன்று வெளிப்போந்து.

11. இந்திரன் முதலிய மற்ற தேவர்களுடைய சரீரங்களினின்றும் அவ்வாறே வெளிக்கிளம்பிய அந்த ஒளியெல்லாம் ஒன்றாகச் சேர்ந்தது.

12. அந்தப் பேரொளியின் பிழம்பு மலைப்போல் ஜ்வலிக்கவும் திக்கு திசைளெல்லாம் அதன் ஜ்வாலைகள் வியாபிக்கவும் தேவர்கள் கண்டனர்.

13. எல்லா தேவ சரீரங்களினின்றும் அங்கு தோன்றிய அவ்வொளி உவமையற்றதாய் விளங்கிற்று. ஒன்று சேர்ந்த அது முவ்வுலகையும் தன் காந்தியால் வியாபிக்கும் ஒரு பெண்ணுருக் கொண்டது,

14. சம்புவினிடமிருந்து வந்த ஒளி எதுவோ அதனால் அவளுடைய முகம் தோன்றிற்று. யமனுடையதால் கேசமும் விஷ்ணுவின் ஒளியால் புஜங்களும் தோன்றின.

15. சந்திரனுடைய காந்தியால் இரண்டு ஸ்தனங்களும், இந்திரனுடைய காந்தியால் இடையும் தோன்றின. வருணனுடையதால் துடைகளும் முழங்கல்களும், பூமியின் காந்தியால் பிருஷ்டபாகமும் தோன்றின.

16. பிரம்மாவின் ஒளியால் இருபாதங்களும் சூரிய ஒளியால் கால் விரல்களும், வசுக்களின் ஒளியால் கைவிரல்களும், குபேரன் ஒளியால் மூக்கும் தோன்றின.

17. பிரஜாபதியின் ஒளியால் அவளுடைய பல்வரிசைகள் உண்டாயின. அவ்வாறே அக்கினியின் ஒளியால் மூன்று கண்கள் உண்டாயின.

18. ஸந்தியைகளின் ஒளியால் இரு புருவங்களும், வாயுவின் ஒளியால் இருகாதுகளும் உண்டாயின. இவ்வாறாக மற்ற தேவர்களுடைய ஒளியாலும் மங்களவடிவான தேவியின் ஆவிர்ப்பாவம் ஏற்பட்டது.

19. எல்லா தேவர்களுடைய தேஜஸ்ஸும் ஒருங்கே சேர்ந்து தோன்றிய அவளைக் காணப்பெற்ற அப்போது மஹிஷனிடம் துன்புற்ற தேவர்கள் ஆனந்தமடைந்தனர்.

20. பிநாகபாணியான பரமசிவன் தனது சூலத்தினின்று ஒரு சூலத்தைத் தோற்றுவித்து அதை அவளுக்குக் கொடுத்தார். கரியதிருமால் தன் சக்கரத்தினின்று ஒரு சக்கரத்தை உண்டாக்கி யளித்தார்.

21. வருணன் சங்கத்தையும், அக்கினி சக்தி ஆயுத்ததையும் அவளுக்குக் கொடுத்தனர். வாயு பகவான் வில்லையும் பாணங்கள் நிறைந்த இரண்டு அம்புறாத்தூணிகளையும் அளித்தார்.

22. ஆயிரங் கண்களையுடையவனும் தேவராஜனுமாகிய இந்திரன் தனது குலிசத்தினின்று தோற்றுவித்த வஜ்ராயுதத்தையும், தனது யானையாகிய ஐராவதத்தினின்று தோற்றுவித்த மணியையும் கொடுத்தான்.

23. யமன் காலதண்டத்தினின்று தண்டத்தையும், வருணன் பாசத்தையும் அளித்தனர். பிரஜாபதியாகிய பிரம்மா அக்ஷமாலையையும் கமண்டலுவையும் கொடுத்தார்.

24. அவளுடைய மயிர்க்கால்களில் பிரகாசிக்கும்படி சூரியன் தனது கிரணங்களைக் கொடுத்தான். காலன் கத்தியையும் நிர்மலமான கேடயத்தையும் கொடுத்தான்.

25-29. பாற்கடலரசன் நிர்மலமான ஹாரத்தையும் என்றும் புதிதாயிருக்கும் இரு வஸ்திரங்களையும் கொடுத்தான். அவ்வாறே சூடாமணி, பிரகாசம் பொருந்திய குண்டலங்கள், கடகங்கள், வெண்மையான அர்த்தசந்திரப்பிரபை, எல்லாத் தோள்களுக்கும் தோள்வளைகள், நிர்மலமான நூபுரங்கள், ஒப்புயர்வற்ற அட்டிகைகள், எல்லா விரல்களுக்கும் ரத்தின மிழைத்த மோதிரங்கள் முதலிய எல்லா ஆபரணங்களையும் பிரகாசம் பொருந்திய பரசுவையும் அநேக விதமான அஸ்த்திரங்களையும், பிளக்கமுடியாத கவசத்தையும் விசுவகர்மா அவளுக்குக் கொடுத்தான். வாடாத தாமரை மாலையைச்சிரத்திலணியும் மிகவும் சோபையுள்ள மற்றென்றை மார்பிலணியவும் கடலரசன் அளித்தான். ஹிமவான் சிம்ம வாகனத்தையும் பலவித ரத்தினங்களையுமளித்தான்.

30, 31. குறையாத மது பாத்திரத்தைக் குபேரன் கொடுத்தான். இந்த பூமியைத் தாங்குபவனும் நாகங்களுக்கெல்லாம் அதிபனுமாகிய ஆதிசேஷன் மகாமணிகளால் அலங்கரிக்கப்பெற்ற நாகஹாரத்தை கொடுத்தான். மற்றுமுள்ள தேவர்களாலும் அவ்வாறே ஆயுதங்களும் ஆபரணங்களும் அளிக்கப்பெற்றாள்.

32. அங்ஙனம் பூஜித்துப் போற்றப்பட்ட தேவியானவள் (தேவர்களுக்கு உற்சாகமூட்டுபவளாய்) உரக்க அடிக்கடி அட்டஹாஸம் செய்தாள். அந்த பயங்கரமான சப்தத்தால் ஆகாயவெளி யெங்கும் நிறைந்தது.

33. அளவிடமுடியாத பெரிய எதிரொலியுங் கிளம்பிற்று. எல்லா உலகங்களும் கலங்கின ; ஸமுத்திரங்கள் கரைபுரண்டன.

34. பூமி அசைந்தது. மலைகள் நடுங்கின. சிங்கவாஹனத்திöழுந்தருளிய தேவியை தேவர்கள் ஸந்தோஷத்துடன் ஜய ஜய என்று போற்றினர்.

35-37. பக்தியின் பணிவே உருக்கொண்டவர்களான முனிவர்கள் இவளைத் துதித்தனர். முவ்வுலகம் நடுக்குற்றதைக் கண்ட தேவ சத்துருக்கள் சேனைகளைத் திரட்டிக்öõண்டு ஆயுதபாணிகளாய்க் கிளம்பினார்கள். ஆஹா ! இது என்ன ! என்று கோபத்தால் கூவிக்கொண்டு மஹிஷாசுரன் அசுரர்கள் சூழச் சப்தம் எழுந்த திக்கை நோக்கி விரைந்தான். தன் காந்தியால் மூவுலகையும் வியாபித்து நின்ற தேவியை அவன் கண்ணுற்றான்.

38-39. பாதங்களின் பாரத்தால் பூமி சலிக்கவும், கிரீடம் வானத்தின் முகட்டைத் தொடவும், வில்லின் நாணொலியால் பாதாளம் உட்பட எல்லாம் நடுங்கவும், ஆயிரம் புஜங்களும் திக்கெங்கும் வியாபிக்கவும் நின்ற தேவியை (அவன் கண்ணுற்றான்). பின்னர் அந்த தேவியுடன் அசுரர்களின் போர் தொடங்கிற்று.

40-42. வெகுவாக விடப்பட்ட சஸ்திரங்களாலும் அஸ்திரங்களாலும் திசைகள் ஜ்வலித்தன. சிக்ஷúரன் என்ற கொடிய அசுரன் மஹிஷாசுரனுடைய சேனாதிபதியாக இருந்தான். அவனும், வேறு சதுரங்க பலங்களுடன் சாமரனும், ஆறாயிரம் தேர்களுடன் உதக்ரன் எனும் மகாசுரனும், கோடித் தேர்களுடன் மஹாஹனுவும், ஐந்துகோடித் தேர்களுடன் அஸிலோமா எனும் மகாசுரனும் ;

43-48. ஆறுலக்ஷம் தேர்களுடன் பாஷ்கலனும் போர்களத்தில் யுத்தம் செய்தனர். ஆயிக்கணக்கான யானைப்படைகளும் குதிரைப்படைகளும் கோடித் தேர்களும் சூழ்ந்தவனாய்ப் பரிவாரிதன் என்ற அசுரனும் யுத்தம் செய்தான். ஐம்பது கோடி ரதங்களால் சூழப்பெற்ற பிடாலன் எனும் அசுரனும் அந்தப் போரில் யுத்தம் செய்தான். மற்ற கணக்கற்ற மகாசுரர்களும் கணக்கற்ற தேர், யானை, குதிரைகள் சூழ, தேவியுடன் அந்தப் போரில் யுத்தம் செய்யலாயினர். ஆயிரம் கோடி கோடித்தேர் யானை, குதிரைகள் சூழ அங்கு யுத்தத்தில் மஹிஷாசுரன் தோன்றினான். தோமரம், பிந்தபாலம், சக்திமுஸலம், கத்தி, பரசு, பட்டிசம் முதலிய ஆயுதங்கøள்க் கொண்டு அந்தப் போரில் தேவியுடன் அவன் யுத்தம் செய்தான். சில அசுரர்கள் சக்தி ஆயுதங்களையும், மற்றும் சிலர் பாசங்களையும், பிரயோகத்தினர்.

49-53. வாளை வீசிக் கொண்டு அவர்கள் அந்த தேவியைக் கொல்ல முயன்றனர். அந்தச் சண்டிகா தேவி அப்போது அவ்வஸ்திர சஸ்திரங்களைத் தனது அஸ்திர சஸ்திரங்களைப் பொழிந்து விளையாட்டாகப் பரிஹரித்தாள். தேவர்களும் ரிஷிகளும் துதிக்க மீண்டும் தேவியாகிய பரமேசுவரி சற்றும் ஆயாசமின்றி அசுரர்களுடலில் சஸ்திரங்களையும் அஸ்திரங்களையும் விடுத்தாள். தேவியின் வாகனமாகிய அந்தச் சிங்கமும் கோபங்கொண்டு பிடரியை உதறிக்கொண்டு அசுரசேனைகளிடை காட்டுத்தீ போல் பாய்ந்தது. ரணகளத்தில் யுத்தம் செய்ய அம்பிகை விட்ட பெருமுச்சு எதுவோ அதுவே நூறாயிரக் கணக்கில் அப்போதே சேனாபலமாக ஆயிற்று. பரசு, பிந்திபாலம், கத்தி, பட்டிசம் முதலிய ஆயுதங்களுடன் அவர்கள் போர் புரிந்தனர்
54. தேவியின் சக்தியால் பூரித்த அச்சேனைகள் அசுரக்கூட்டங்களை அழிப்பவர்களாய்த் தம்பட்டங்களைக் கொட்டினார்கள். மற்றும் சிலர் சங்குகளை முழங்கினார்கள்.

55, 56. அவ்வாறே அந்த யுத்த மஹோத்ஸவத்தில் இன்னும் சிலர் மிருதங்கங்களை வாசித்தார்கள். அதன்மேல் தேவி திரிசூலம், கதை, சக்தி, வாள் முதலிய ஆயுதங்களைப் பொழிந்து கொடிய அசுரர்களை நூற்றுக்கணக்கில் வீழ்த்தினாள். தனது மணியின் ஒசையாலேயே மதியிழக்கச் செய்து சிலரை வீழ்த்தினாள்.

57. பாசத்தால் கட்டிச் சில அசுரர்களைப் பூமியில் இழுத்தாள் வேறு சிலர் கூரிய வாள் வீச்சால் இரண்டு துண்டாக்கி வீழ்த்தப்பட்டனர்.

58. கதையால் தாக்குண்டு சிலர் பூமியில் வீழ்ந்தனர். முஸலத்தால் நையப்புøக்கப்பட்டு சிலர் ரத்தத்தைக்கக்கினர்.

59, 60. சூலத்தால் மார்பு பிளவுண்டு சிலர் பூமியில் சாய்ந்தனர். சில தேவசத்துருக்கள் அம்புக் கூட்டங்களால் உடலெங்கும் தைக்கப்பெற்று அம்பு மயமாய் (முள்ளம் பன்றிகளைப் போல்) காணப்படுபவர்களாய்ப் பிராணனை விட்டனர். சிலருடைய தோள்கள் வெட்டுண்டன. பிறர் கழுத்து வெட்டுண்டவராயினர்.

61. சிலருடைய தலைகள் உருண்டன ; சிலர் இடுப்பில் வெட்டுண்டனர் ; கால்கள் வெட்டுண்டும் துடைகள் வெட்டுண்டும் சில கொடிய அசுரர்கள் வீழ்ந்தனர்.

62, 63. ஒற்றைத் தோளும் ஒற்றைக் கண்ணும் ஒற்றைக் காலும் உடைய சிலர் தேவியால் இரண்டாக வெட்டப்பட்டனர். சிலர் தலை வெட்டுண்டு வீழ்ந்த பின்னருங்கூட, அவர்களுடைய தலையற்ற உடல்கள் மீண்டும் எழுந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தேவியுடன் யுத்தம் செய்தன. மற்றும் சில கபந்தங்கள் யுத்தகளத்தில் முரசு முதலிய வாத்தியங்களின் ஒலிக்சைவாகக் கூத்தாடின.

64. சில மகாசுரர்கள் தலையிழந்தபின்னரும், கத்தியும் ஈட்டியும் கையிலேந்திக்கொண்டு தேவியை நோக்கி நில் நில் என்று கூவினர்.

65. கொடிய யுத்தம் நடந்த இடத்தில் தேர்களும் யானைகளும் குதிரைகளும் அசுரர்களும் வீழ்ந்து கிடந்தமையால் பூமி கால் வைக்க இடமில்லாமலிருந்து.

66. அங்கு அசுரர்களிமிருந்தும் யானைகளிடமிருந்தும் குதிரைகளிடமிருந்தும் பாய்ந்த ரத்த வெள்ளம் பெரிய ஆறுகளைப் போல் அசுரர் சேனையின் நடுவில் பெருக்கெடுத்தது,

67. விறகும் புல்லும் பெரிய குவியலாயிருந்தால் எப்படி நெருப்பு எரிக்குமோ அப்படி அம்பிகையானவள் ஒருகணத்தில் அந்தப் பெரிய சேனையை நாசமாக்கினாள்.

68. (அவளுடைய வாகனமாகிய) அந்த சிங்கமும் உறக்க கர்ஜனை செய்துகொண்டும் பிடரிமயிரைச் சிலிர்த்துக் கொண்டும் தேவசத்ருக்களின் உடல்களில் உறையும் உயிர்களைத் தேடுவது போல் காணப்பட்டது.

69. தேவியின் கணங்களால் அசுரர்களுடன் செய்யப்பட்ட யுத்தம் எங்ஙனமிருந்ததெனின், தேவர்கள் வானிலிருந்து புஷ்பமாரி பெய்து துதிக்கும்படி இருந்தது.

ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீ மஹாத்மியத்தில் இரண்டாம் அத்தியாயம் முற்றிற்று

மூன்றாவது அத்தியாயம்

மஹிஷாஸுர வதம்

(ஒம்) ரிஷி கூறியது: 1, 2. மகாசுரனும் சேனாதிபதியுமான சிக்ஷúரன் அந்த அசுரசைனியம் கொல்லப்படுவதைக் கண்ணுற்றுக் கோபமுண்டு அம்பிகையை எதிர்த்துப் போர்புரிய முற்பட்டான்.

3. மேருமலையின் உச்சியில் மேகமானது மழை பொழிவது போல் அவ்வசுரன் அப்போரில் தேவியின் மேல் சரமாரி பெய்தான்.

4. அவனுடைய அம்புக்கூட்டங்களை விளையாட்டாக வெட்டித் தள்ளிவிட்டு தேவியானவள் அவனுடைய குதிரைகளையும் குதிரைகளை யோட்டுபவனையும் பாணங்களால் கொன்று வீழ்த்தினாள்.

5. உடனே அவனுடைய வில்லையும் உயர்ந்து நின்ற கொடியையும் வெட்டினாள். வில்லையிழந்த அவனுடைய உடலை விரைந்து பாயும் பாணங்களால் துளைத்தாள்.

6. வில்லொடித்து, தேரிழந்து, குதிரையிழந்து, ஸாரதியுமிழந்து நின்ற அவ்வரசன் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டு அந்த தேவியை எதிர்த்துப் பாய்ந்தான்.

7.கூரிய முனையுள்ள வாளால் சிங்கத்தைத் தலையில் தாக்கிவிட்டு மிகுந்த வேகத்துடன் அவன் தேவியையும் இடது புஜத்தில் படும்படி அடித்தான்.

8. அரசரே ! அவளுடைய புஜத்தில் பட்டதும் அவ்வாள் பொடியாயிற்று. கோபத்தால் கண்சிவந்து அவ்வசுரன் அப்போது சூலத்தை எடுத்துக்கொண்டான்.

9. அம்மகாசுரன் பின்னர் பத்திரகாளியை நோக்கி ஒளியால் ஜ்வாலித்துக்கொண்டு ஆகாயத்திலிருந்த சூரிய பிம்பமே பாய்ந்தாற்போல் தோன்றுமாறு அதை எய்தினான்.

10. பாயும் அச்சூலத்தை நோக்கித் தேவியானவள் தனது சூலத்தை விடுத்தாள். அசுரனுடைய அச்சூலம் அதனால் நூறு சுக்கலாகி அசுரனும் மடிந்தான்.

11. மஹிஷாசுரனுடைய சேனாதிபதியும் மகாவீரியம் பொருந்தியவனுமான அவன் மடிந்ததும் தேவர்களைத் துன்புறுத்தும் சாமரன் யானைமேல் ஆரோகணித்து வந்தான்.

12. அவன் தேவியின் மேல் சக்தியை விடுத்தான். அதை அம்பிகை விரைவில் ஹுங்காரத்தால் வீரியமற்றதாக்கித் தரையில் வீழ்த்தினாள்.

13. சக்தி ஒடிந்து வீழ்ந்ததைகக்ண்டு கோபமுண்டு சாமரன் சூலத்தை எறிந்தான். அவன் பாணங்களால் அதை வெட்டினாள்.

14. பின்னர் சிங்கமானது யானையின் மஸ்தகத்தின் மேலேறி வீற்றுக்கொண்டு அந்த தேவசத்துருவுடன் உக்கிரமான கைப்போர் செய்தது.

15. அங்ஙனம் போர்புரிந்து கொண்டே யானை மீதிருந்து இருவரும் தரைக்கு வந்து இன்னும் அதிகமான ஆவேசத்துடன் கடுமையாயத் தாக்கிக்கொண்டு யுத்தம் செய்தனர்.

16. பின்னர் ஆகாயத்தில் கிளம்பிக் கீழே குதித்தபோது சிங்த்தின் அறையால் சாமரனுடைய தலை துண்டிக்கப்பட்டது.

17. மரங்களைக்கொண்டும் கற்களைக்கொண்டும் யுத்தத்தில் தேவியால் உதக்ரன் கொல்லப்பட்டான் ; இவற்றாலும் கைவாளின் தந்தப்பிடியின் அடியாலும் கராளன் வீழ்த்தப்பட்டான்.

18. தேவியானவள் கோபித்து உத்தனைக் கதையாலடித்து பொடியாக்கினாள் ; பாஷ்கலனை பிந்திபாலத்தாலும், தாமிரனையும், அந்தகனையும் அம்புகளாலும் கொன்றாள்.

19. அவ்வாறே உக்ராஸ்யனையும், உக்ரவீர்யனையும், மஹாஹனுவையும், முக்கண் படைத்த பரமேசுவரி திரிசூலத்தால் வதைத்தாள்.

20. கத்தியால் பிடாலனுடைய தலையை உடலினின்று வீழ்த்தினாள். துர்த்தரனையும், துர்முகனையும் அம்புகளால் யமாலயத்திற் கனுப்பினாள்.

21. தனது சேனை இவ்வாறு நாசமடையக்கண்டு மஹிஷாசுரன் எருமை உருவில் தேவியின் கணங்களைப் பயமுறுத்தினாள்.

22,23. முகவாய்க் கட்டையால் தாக்கிச் சிலரையும், குளம்பால் மிதித்துப் பிறரையும், வாலால் அடித்தும் கொம்பால் கிழித்தும் மற்றவர்களையும், இன்னும் சிலரை வேகத்தாலும், சப்தத்தாலும், சூழற்சியாலும், மூச்சுக்காற்றாலும் பூமியில் வீழ்த்தினான்.

24. மஹாதேவியின் பிரமத கணங்களை வீழ்த்திவிட்டு அவ்வசுரன் சிங்கத்தை கொல்வதற்காகப் பாய்ந்தான். அப்போது அம்பிகை கோபங்கொண்டாள்.

25. மகாவீரியம் பொருந்திய அசுரனும் பூமியைக் குளம்பால் பிளப்பவனாகவும், கொம்புகளால் உயர்ந்த மலைகளைத்தூக்கி யெறிபவனாகவும் கோபத்துடன் கர்ஜித்தான்.

26. அவனுடைய வேகமான சுழற்ச்சியால் மிதிபட்ட பூமி பொடியாயிற்று ; வாளால் அடிக்கப்பட்ட கடல் எங்கும் கரைபுரண்டது.

27. அவன் கொம்பால் இடிபட்ட மேகங்கள் சிதறடிக்கப்பட்டன. மூச்சுக்காற்றால் தள்ளப்பட்டு மலைகள் வானவெளியில் பறந்தன.

28. இவ்வாறு கோபாவேசத்துடன் தன்மேல் பாயும் மகாசுரனைக்கண்டு சண்டிகாதேவி அவனைக் கொல்வத்ற்குக் கோபங்கொண்டாள்.

29. அவ்வசுரன்மேல் பாசத்தை வீசி அவனைக் கட்டினாள். கடும்பேரில் கட்டுண்ட அவன் எருமை வடிவை விடுத்தான்.

30. அப்போதே சிங்க வடிவுகொண்டான். அம்பிகை அவன் தலையை வெட்டியபோது அவன் வாளேந்திய புருஷவடிவில் காணப்பட்டான்.

31. உடனே தேவி தனது அம்புகளால் அப்புருஷனை அவன் வாளுடனும் கவசத்துடனும் சேதித்தாள். அப்போது அவன் பெரிய யானையானான்.

32. (யானை வடிவில்) அவன் துதிக்கையால் (தேவியின்) பெருமைமிக்க சிங்கத்தை பிடித்திழுத்து கர்ஜித்தான். இழுக்கும்போது தேவியானவள் துதிக்கையை வாளால் துண்டித்தாள்.

33. பின்னர் அக்கொடிய அசுரன் மீண்டும் எருமை யுருக்கொண்டு சராசரங்களுடன் மூவுலகையும் நடுங்கச்செய்தான்.

34. அதன்மேல் ஜகன்மாதா சண்டிகை சிறந்த பானத்தை மீண்டும் மீண்டும் பருகிக் கண்சிவந்து அட்டஹாஸம் செய்தாள்.

35. அவ்வரசனும் பலத்தாலும் வீரியத்தாலும் கொழுப்புடன் கர்ஜித்தான். கொம்புகளால் மலைகளைத் தூக்கிச் சண்டிகையின் மேல் எய்தினான்.

36. அவளும் அவனால் எறியப்பட்டவற்றைத் தனது சரங்களைப் பொழிந்து பொடியாக்கினாள். மதுபானத்தால் முகஞ் சிவந்து வார்த்தை தழதழக்கப் பின்வருமாறு அவனை நோக்கிக் கூறலானாள்.

தேவி கூறியது: 37, 38. - மூடா ! நான் மதுபானம் செய்யும் வரை ஒரு கணம் கர்ஜிப்பாய், கர்ஜிப்பாய். என்னால் நீ கொல்லப்பட்ட பின் இங்கேயே தேவதைகள் கர்ஜிக்கப் போகின்றார்கள்.

ரிஷி கூறியது : 39, 40. இங்ஙனம் கூறிவிட்டு, அவள் அக்கொடிய அசுரன்மேல் பாய்ந்து அவனை வீழ்த்தி அவன் கழுத்தில் காலால் மிதித்து நின்று கொண்டு சூலத்தால் அவனைத் தாக்கினாள்.

41. காலின் கீழொடுக்கப்பட்ட அவனும் அப்போது (தன் சுய எருமை உருவுடன்) தன் வாயினின்று வெளிவர முயன்றானெனினும் தேவியின் வீரியத்தால் ஒடுக்கப்பட்டு அரைவாசிதான் வெளிவர முடிந்தது.

42. அரைவாசி தான் வெளிவந்தவனாயினும்கூடப் போரை நிகழ்த்திய அம்மகாசுரன் தேவியின் வாளால் தலை வெட்டுண்டு வீழ்த்தப்பட்டான்.

43. அதன் மேல் ஐயோ ! ஐயோ ! என்று அலறிக்கொண்டு அசுரச்சேனை யெல்லாம் மடிந்தது. தேவகணங்களெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை யடைந்தார்கள்.

44. தேவர்கள் தேவலோகத்து மகரிஷிகளுடன் தேவியைத் துதித்தார்கள். கந்தர்வபதிகள் பாடினார்கள். அப்ஸரகணங்கள் ஆடினார்கள்.

ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீ மஹாத்மியத்தில் முன்றாவது அத்தியாயம் முற்றிற்று

நான்காவது அத்தியாயம்

தேவி ஸ்துதி

(ஒம்) ரிஷி கூறியது: 1, 2. வீரியம் மிக்கவனாயினும் துராத்மாவாகிய அம்மஹிஷாசுரனும் அவ்வசுரச்சேனையும் தேவியால் அழிக்கப்பட்ட பின் தேவேந்திரனும் தேவகணங்களும் வணக்கத்தால் வளைந்தகழுத்தும் தோளும் மகிழ்ச்சியால் புளகாங்கித மடைந்து அழகிய உடல்களுமுடையவர்களாய் அந்த தேவியைச் சொற்கொண்டு போற்றினார்கள்.

3. எந்த தேவி தனது சக்தியால் இவ்வுலகை யெல்லாம் வியாபிக்கின்றாளோ, எல்லா தேவகணங்களின் சக்தியும் எவளுடையவடிவில் ஒன்று கூடுகின்றனவோ, எல்லா தேவர்களாலும் மகரிஷிகளாலும் பூஜிக்கப்பட்டவள் எவளோ அந்த அம்பிகையை நாங்கள் பக்தியுடன் வணங்குகின்றோம். அவள் நமக்கு நலன்களை அருளவேண்டும்.

4. எவளுடைய ஒப்புயர்வற்ற பெருமையையும் பலத்தையும் மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் சிவனும் கூட வர்ணிக்க இயலாதோ அந்தச் சண்டிகை அசுபத்தினாலேற்படும் பயத்தைப் போக்கி அகில உலகையும் பரிபாலிக்கத் திருவுளங்கொள்ள வேண்டும்.

5. புண்ணியவான்களுடைய வீடுகளில் ஸ்ரீதேவியாகவும், பாவிகளுடைய வீடுகளில் மூதேவியாகவும், திருந்திய மதியுடையவர்களின் உள்ளத்தில் புத்தியாகவும், நல்லோர்களிடம் சிரத்தையாகவும், நற்குலத்துதித்தோரிடம் வெட்கமாகவும் எவள் தானே விளங்குகின்றாளோ அவளேயாகிய உன்னை வணங்குகின்றோம். தேவியே, உலகனைத்தையும் காத்தருள வேண்டும்.

6. தேவியே ! உனது நினைத்தற்கரிய வடிவையோ, அசுரர்களை அழிக்கும் அளவு கடந்த வீரியத்தையோ, எல்லா தேவகணங்களிடையும் அசுர கணங்களிடையும் நிகழ்ந்த போரில் உனது அற்புதச் செயல்களையோ எங்ஙனம் வர்ணிப்போம் ?

7. உலகனைத்திற்கும் காரணம் நீ ; நீ முக்குண வடிவினளாயினும் குண தோஷங்களுடன் காணப்படுபவளல்ல. ஹரிஹராதியர்க்கும் எட்டாதவள் ; எல்லோர்க்கும் புகலிடம் ; இவ்வுலகெல்லாம் உன்னுடைய ஒரு அம்சத்தில் தோன்றியுளது ; முதன்மையானதும் மாறுபடாததும் உயர்ந்ததுமான மூலப்பிரகிருதி நீ.

8. தேவி ! எல்லா யாகங்களிலும் எந்த உச்சாரணத்தால் தேவர்களனைவரும் திருப்தியடைகின்றார்களோ அந்த ஸ்வாஹா வடிவினளாய் நீயே விளங்குகின்றாய். பித்ருகணங்களின் திருப்திக்கும் காரணம் நீயே ; ஆனதுபற்றியே ஜனங்களால் ஸ்வதா எனவும் உச்சரிக்கப் பெறுகின்றாய்.

9. தேவி ! நீ பகவதி. முக்திக்கு வித்தானதும் நினைத்தற்கரியதுமான மகாவிரதமும், பரவித்தையும் எதுவோ அதுவும் நீ. இந்திரியங்களை யடக்கியவர்களும் தத்துவத்தின் ஸாரத்தைக் கைக்கொண்டவர்களும், மோஷத்தில் நாட்டமுள்ளவர்களும் முழுவதும் மாசற்றவர்களுமான முனிவர்களால் (அப்பியாசம் செய்யப்படுகின்றனை) இடையறாது நாடப்படுகின்றனை

10. நீ சப்தவடிவினள் ; பரிசுத்தமான ரிக் வேதத்திற்கும் யஜுர் வேதத்திற்கும் பாடுதற்கினிய பதங்களுடன் கூடிய உத்கீதத்தால் அழகுபெற்ற ஸாமவேதத்திற்கும் உறைவிடம் நீயே. மூன்று வேத வடிவான தேவி நீ ; நீயே உலகைப் போக்ஷிக்கும் ஜீவனம் ; உலகனைத்தின் துன்பத்தைப் போக்கும் பரதேவதை.

11. தேவி ! சாஸ்திரங்களனைத்தின் ஸாரத்தை யுணரும் புத்தி வடிவினள் நீ. கடத்தற்கரிய பிறவிக்கடலைக் கடத்துவிக்கும் பற்றின்மை எனும் படகாகிய துர்க்காதேவி நீ. விஷ்ணுவின் இருதயத்தைக் தனியிடமாகக் கொண்டு விளங்கும் ஸ்ரீதேவி நீ. சந்திரமௌலியிடம் பிரியா - துறையும் கௌரியும் நீயே.

12. பரிசுத்தமான புன்முறுவலுடன் பரிபூரண சந்திரபிம்பம் போலும் மாசற்ற பொன்போலும் ஒளி வீசிய உனது திருமுகம் காணப்பட்டபோது கோபத்தின் வசமான மஹிஷாசுரனால் விரைவில் அது தாக்கப்பட்டது வெகு ஆச்சரியம் !

13. தேவி ! உதயத்தில் சிவந்த சந்திரன் போலவும் கோபத்தால் புருவம் நெரிந்து கடுமையாகவும் விளங்கிய உனது முகத்தைக் கண்டதும் மஹிஷாசுரன் உடனே பிராணனை இழக்காததும் மிக்க விசித்திரமே. கோபங்கொண்ட யமனைக் கண்ட பின்னும் எவரால் ஜீவிக்க முடியும் ?

14. தேவி ! அருள் புரிய வேண்டும். உன்னை மீறியவர் எவருமில்லை. நீ கோபங்கொண்டால் (உலகின்) நன்மைக்காக (அசுரர்) குலங்களை அப்போதே அழிக்கின்றாய். மஹிஷாசுரனுடைய பரந்தசேனை நாசமாக்கப்பட்டபோதே அது நன்கு உணரப்பட்டதாயிற்று.

15. எப்போதும் உயர்வற உயர் நலமளிக்கும் நீ எவர்களிடம் பிரீதியடைகின்றாயோ அவர்களே ஜன ஸமுகத்தில் ஸம்மானம் பெறுகின்றார்கள். அவர்களுக்கே செல்வமும், அவர்களுக்கே புகழும் (உரித்தாகின்றன). அவர்களுடைய தர்மவர்க்கம் குறைவு படுவதில்லை. மனைவிமாரும் மக்களும் பணியாட்களும் நிறைந்து அவர்கள் செல்வவான்களாய் விளங்குவர்.

16. தேவி ! உனதருளால் நல்வாழ்க்கை எய்தியவன் மிகுந்த ஆதரவுடன் நாள்தோறும் இடைவிடாது தருமகாரியங்களை யெல்லாம் செய்கிறான், பிறகு சுவர்க்கத்தையடைகிறான். ஆகையால் முவ்வுலகிலும் பயனையளிப்பவள் நீயே அன்றோ ?

17. கடத்தற்க்கரிய கஷ்டத்தில் நினைக்கப்பட்டால் நீ எல்லா ஜீவர்களுடைய பயத்தையும் போக்குகிறாய். இன்பத்தில் நினைக்கப்பட்டால் நலன் மிக்க மதியை அளிக்கின்றாய். ஏழ்மையையும், துன்பத்தையும், பயத்தையும் போக்குபவளே ! எல்லோருக்கும் உபகாரம் செய்ய எப்போதும் உருகும் நெஞ்சுடையவர் உன்னைத் தவிர யார் உளர் ?

18. தேவி ! (கொடியோராகிய) இவர்கள் கொல்லப்பட்டதால் உலகம் இன்பம் எய்துகின்றது. நரகத்தில் நித்தியவாசம் செய்யக்கூடிய பிரபலமான பாவத்தை இவர்கள் செய்தாலும் செய்யட்டும் ! அதனால் போரில் (என்னிடம்) உயிர் துறந்து தேவலோகம் செல்லட்டும் ! என்று எண்ணியே நிச்சயமாக நீ எதிரிகளைக் கொல்கின்றாய் போலும்.

19. அசுரர்களை யெல்லாம் பார்த்த மாத்திரத்திலேயே நீ பஸ்மமாக்க முடியாதா ? எனினும் எதிரிகள்மேல் ஆயுதங்களைப் பிரயோகிப்பதால் இவர்கள் சத்துருக்களாயினும் (எனது) ஆயுதங்களால் புனிதமாகி நல்லுலகங்களை அடையட்டும் என்பதே அவர்களிடமும் மிகுந்த கருணைவாய்ந்த உனது எண்ணமாயிருக்க வேண்டும்.

20. உனது வாளினின்று போந்த ஒளிக்கற்றையின் மின்னலாலும், சூலத்தின் முனையின்றும் போந்த காந்தியின் பெருக்காலும் அசுரர்களின் கிரணங்களுடன் கூடிய சந்திரபிம்பம் போன்ற உனது திருமுகமண்டலத்தைக் காணப்பெற்றதால் தான்.

21. தேவி ! கெட்டவர்களின் போக்கை அடக்குவது உனது இயற்கை. உனது உவமையற்ற இவ்வடிவழகு பிறரால் சிந்தித்தற்கரிது. தேவர்களின் பராக்கிரமத்தை யபகரித்தவர்களை யழிப்பது உனது வீரியம். இதனால் (இப்போரால்) சத்துருக்களிடமும் உனது தயை பிரகடனம் செய்யப்பட்டது.

22. இந்த உனது பராக்கிரமத்திற்கு எதை உவமை கூற இயலும் ? (அடியார்களை) வசீகரிப்பதாயினும் சத்துருக்கள் மனத்தில் பயத்தை யுண்டாக்கும் இந்த வடிவழகு எங்குண்டு ? வரமளிக்கும் தேவி ! சித்தத்தில் (இப்பேர்க்கொத்த) கிருபையும் யுத்தத்தில் கண்டிப்பும் முவ்வுலகிலும் உன்னிடமே காணப்பட்டது.

23. சத்துரு நாசத்தால் இம் முவுலகு முழுவதும் உன்னால் காக்கப்பட்டது. போர் முனையில் அச்சத்துருகணங்கள் கொல்லப்பட்டு வானுலக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மதம் பிடித்த தேவசத்துருக்களிடமிருந்து தோன்றிய எங்கள் பயமும் போக்கப்பட்டது. உனக்கு நமஸ்க்காரம்.

24. தேவி ! சூலத்தால் எங்களைக் காப்பாற்று. அம்பிகே ! வாளாலும் காப்பாற்று. மணி யோசையாலும் எங்களைக் காப்பாற்று. வில்லின் நாணொலியாலும் காப்பாற்று.

25. சண்டிகையே ! கிழக்கிலும் காப்பாய், மேற்கிலும் காப்பாய். ஈசுவரி ! அங்ஙனமே உனது சூலத்தைச் சுழற்றித் தெற்கிலும் வடக்கிலும் காப்பாய்.

26. முவ்வுலகிலும் சஞ்சரிக்கும் உனது அழகிய வடிவங்கள் அவற்றாலும், அளவு கடந்த கோரமான வடிவங்கள் எவையோ அவற்றாலும் இப்பூவுலகையும் எங்களையும் காத்தருள்வாய்.

27. அம்பிகே ! வாள், சூலம், கதை முதலிய ஆயுதங்கள் எவை உனது தளிர் போன்ற கரங்களில் ஏந்தப் பெறுகின்றனவோ அவற்றால் எத்திக்கிலும் எங்களைக் காப்பாய்.

ரிஷி கூறியது: 28-30. இங்ஙனம் தேவர்களால் துதிக்கப்பெற்றும், தேவலோக நந்தவனத்தில் புஷ்பித்த மலர்களால் அர்ச்சிக்கப் பெற்றும், வாசனைத் திரவியங்களால் பூசப்பெற்றும், திவ்ய தூபங்களால் தேவர்களனைவராலும் ஆராதிக்கப்பெற்றும், அருள்சுரந்த ஜகத்தாத்ரி தன்னை வணங்கி நின்ற தேவர்களனைவரையும் நோக்கிப் பின்வருமாறு கூறினாள்.

தேவி கூறியது: 31-32. தேவ கணங்களே ! உங்களுக்கு எது விருப்பமோ அதை வரமாக என்னிடம் கேட்கலாம்.

தேவர்கள் கூறியது: 33-35. எங்கள் சத்துருவான மஹிஷாசுரன் கொல்லப்பட்டதால் வேண்டிய தெல்லாம் பகவதியால் செய்தாகிவிட்டது; இனி வேண்டுவதொன்றுமில்லை. இன்னும் உன்னால் எங்களுக்கு கொடுக்கத்தக்க வரம் உண்டெனில் (அது இதுவே).

36-37. நாங்கள் நினைக்குந்தோறும் எங்களுக்கேற்படும் பெரிய விபத்துக்களை நீ நாசம் செய்தல் வேண்டும். மாசற்ற வதனம் படைத்தவளே! எந்த மனிதனாயினும் இந்த ஸ்தோத்திரங்களால் உன்னைத் துதித்தால், அம்பிகே! எங்களிடம் அருள் சுரந்த நீ அவனுக்கும் எப்போதும் குறைவற்ற செல்வமும், பெருமையும்,கோதனம் முதலியனவும், நல்ல ஸ்திரீகளும், ஸம்பத்தும் வளர அருள் புரியவேண்டும்.

ரிஷி கூறியது: 38-39.அரசே ! இங்ஙனம் தங்கள் நன்மைக்காகவும் உலகின் நன்மைக்காவும் தேவர்களால் போற்றப்பட்ட பத்ரகாளி அங்ஙனமே ஆகுக ! என்று கூறி மறைந்தருளினாள்.

40. அரசே! மூவுலகிற்கும் நன்மை செய்ய விரும்பிய தேவியானவள் புராதன காலத்தில் எங்ஙனம் தேவ சரீரங்களினின்று தோன்றினாளோ அவ்வரலாறு இங்ஙனம் உனக்கு கூறப்பட்டது.

41-42. மீண்டும் தேவர்களுக்கு உபகாரம் செய்யவும், உலகங்களை ரக்ஷிக்கவும் அவ்வாறே சும்ப நிசும்பர்களையும் துஷ்ட தைத்தியர்களையும் வதைக்கவும் கௌரியின் தேகத்தினின்று அவள் உற்பத்தியான வரலாற்றை நான் சொல்லக்கேட்பாய்.நிகழ்ந்தது நிகழ்ந்த வண்ணம் உனக்குக் கூறுகிறேன்.

ஒம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீ மாஹாத்மியத்தில் நான்காவது அத்தியாயம் முற்றிற்று.

அத உத்தம-சரித்ரம்

மஹாசரஸ்வதி தியானம்
 
மணி, சூலம், கலப்பை, சங்கம், உலக்கை, சக்கரம், வில், அம்பு ஆகியவற்றைத் தனது தாமரைக் கைகளில் தரிப்பவர்ளும்,மேகத்திடை விளங்கும் குளிர்ந்த சந்திரனைப் போன்ற பிரபையுடன் பிரகாசிப்பவர்களும்,கௌரியின் தேகத்திலுதித்தவளும், மூவுலகிற்கும் ஆதாரமாகியவளும், அபூர்வ வடிவினளும், சும்பன் முதலிய அசுரர்களே நாசஞ்செய்தவளும் ஆகிய மஹா சரஸ்வதியைத் தியானிக்கின்றேன்.

ஐந்தாவது அத்தியாயம்

தேவி தூத ஸம்வாதம்

(ஓம்-க்லீம்) ரிஷி கூறியது: 1-2. முன்னொருகாலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அசுரர்களால் இந்திரனுடைய மூவுலக ஆட்சியும் யஜ்ஞபாகங்களும் பலத்தாலும் கொழுப்பாலும் அபகரிக்கப்பட்டன.

3. சூரியன், சந்திரன், குபேரன், யமன், வருணன் முதலியோருடைய அதிகாரங்களை அவ்விருவரே செலுத்தலாயினர்.
 
 4. வாயுவினுடைய அதிகாரத்தையும் அக்கினியின் தொழிலையும் அவ்விருவரே நடத்தலாயினர். தோல்வியுற்று இராஜ்யத்தை இழந்து நின்ற தேவர்கள் துரத்தப்பட்டனர்.

5. கொடி அசுரர்களால் அங்ஙனம் அதிகாரம் அபகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட தேவர்கள் எல்லோரும் எவராலும் வெல்ல முடியாத அந்த தேவியை நினைத்தனர்.

6-7. ஆபத்தில் நினைக்கப்பட்டால் உங்களுடைய பெரிய ஆபத்துக்களையும் அக்கணமே போக்குவேன் என்று அவளால் நமக்கு வரமளிக்கப்பட்டுள்ளது என உள்ளத்தில் கொண்டு தேவர்கள் மலையரசாகிய இமயத்தை அடைந்து அங்கு விஷ்ணுமாயையாகிய தேவியை நன்கு துதித்தனர்.

தேவர்கள் கூறியது: 8-9. தேவிக்கு நமஸ்காரம்; மஹாதேவிக்கு நமஸ்காரம். சுப வடிவினளுக்கு என்றென்றும் நமஸ்காரம், பிரகிருதிக்கு நமஸ்காரம். அந்த மங்கள ஸ்வருபிணியை நாங்கள் வணக்க ஒடுக்கத்துடன் வழிபடுகிறோம்.

10. பயங்கர வடிவினளாகிய அவளுக்கு நமஸ்காரம்.நித்தியமானவளுக்கு நமஸ்காரம். கௌரியும் உலகைத் தாங்குபவளுமாகிய அவளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஒளி வடிவினளும், சந்திரபிரபை போன்றவளும், இன்பவடிவினளுமாகியவளுக்கு என்றென்றும் நமஸ்காரம்.

11. சரணடைந்தோர்க்கு எல்லா நலன்களும் தானே ஆகியவளுக்கும், வளர்ச்சியும் வெற்றியும் ஆகியவளுக்கும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம். அரசர்க்கு அலக்ஷ்மியும் லக்ஷ்மியும் ஆகும் சிவபத்தினிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

12. கஷ்டங்களைக் கடத்துவிக்கும் துர்க்கையாகவும் அனைத்தின் ஸாரமாகவும்,அனைத்தையும் ஆக்குபவளாகவும்,கியாதி வடிவினளாகவும் கரிய வடிவினளாகவும், புகை வடிவினளாகவும் உள்ளவளுக்கும் என்றென்றும் நமஸ்காரம்.

13. இனிய வடிவினளாகவும் பயங்கர வடிவினளாகவும் உள்ள அவளுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம். ஜகத்தின் ஆதாரமாயும் இயக்கமாயும் உள்ள தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

14-16. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி விஷ்ணு மாயை எனக் கூறப்பட்டுள்ளாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

17-19. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சைதன்ய வடிவினள் எனக்கூறப்பட்டுள்ளாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

20-22. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி புத்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

23-25. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி நித்திரை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

26-28. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பசி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

29-31. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பிரதிபிம்ப வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

32-34. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சக்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

35-37. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி வேட்கை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

38-40. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பொறுமை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

41-43. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ஜாதி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

44-46. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி வெட்க வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

47-49. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சாந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

50-52. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி சிரத்தை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

53-55. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி காந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

56-58. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி செல்வ வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

59.61. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ஜீவனோபாய வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

62-64. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி ஞாபக வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

65-67. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி தயை வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

68-70. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி திருப்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

71-73. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி தாய் வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

74-76. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி பிராந்தி வடிவில் உறைகின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

77. எல்லா உயிர்களிடத்தும் எந்த தேவி இந்திரியங்களை ஆள்பவளாய் எங்கும் எல்லாப்பொருள்களிடத்தும் வியாபித்து நிற்கின்றாளோ அந்த தேவிக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.

78-80. இவ்வுலகனைத்திலும் எவள் சைதன்ய வடிவில் வியாபித்து நிற்கின்றாளோ அவளுக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.

81. பூர்வத்தில் தங்கள் மனோரதம் பூர்த்தியாவதற்காக தேவர்களால் துதிக்கப்பட்டவளும் அங்ஙனமே நாள் தோறும் தேவேந்திரனால் சேவிக்கப்பட்டவளுமான அந்த ஈசுவரி நமக்கு சுபகாரணத்தையும் சுபகாரியத்தையும் நற்பயனையும் கூட்டுவிப்பவளாகவும் ஆபத்துக்களைப் போக்குவிப்பவளாகவும் ஆகவேண்டும்.

82. இப்போது கையோங்கிய அசுரர்களால் பீடிக்கப் பெற்ற தேவர்களாகிய நம்மால் எவள் வணங்கப்படுகின்றாளோ, எவளோ பக்தியால் வணங்கிய தேகத்துடன் நினைத்த மாத்திரத்தில் அக்கணமே நம்முடைய எல்லா ஆபத்துக்களையும் போக்குவாளோ அவளே நம்மையாளும் ஈசுவரி.

83,84. அரசே ! இங்ஙனம் துதி முதலிய பணிகளில் தேவர்கள் ஈடுபட்டிருக்கையில் அங்கு கங்கையில் நீராடப் பார்வதீ தேவீ வந்தாள்.

85. புருவமழகிய அவள் தேவர்களை நோக்கி இங்கு யாரைத் துதிக்கின்றீர்கள்? எனக் கேட்டாள். அப்போது அவளுடைய சரீர கோசத்தினின்று ஒரு மங்கள வடிவினள் வெளிப்போந்து பதிலளித்தாள்.

86. யுத்தத்தில் சும்பனால் ஒடுக்கப்படும் நிசும்பனால் ஜயிக்கப்படும் இங்கு வந்து கூடியிருக்கும் தேவர்களால் இந்த ஸ்துதி என்னைக் குறித்துச் செய்யப்படுகிறது.

87. பார்வதியின் சரீர கோசத்தினின்று தோன்றியதால் அவ்வம்பிகை எல்லா உலகங்களிலும் கௌசிகீ எனப் போற்றப்படுகின்றாள்.

88. அவள் வெளியில் போந்த பின்னர் ஹிமாசலவாஸினியான அப்பார்வதியும் கரிய வடிவினளாகிக் காளிகை எனப் போற்றப்படுபவளானாள்.

 89. மனதைக் கவரும் சிறந்த வடிவு தாங்கிய அம்பிகையை (கௌசிகீ தேவியை) சும்ப நிசும்பர்களின் பணியாட்களாகிய சண்டனும் முண்டனும் காணப்பெற்றனர்.

90. அவர்களால் சும்பனிடம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டது. அரசர் பெருமானே ! ஒரு ஸ்திரீ இருக்கின்றாள். இமயமலையையே பிரகாசிப்பிக்கின்றாள். அளவு கடந்த அழகுடையவள்.

91. அசுரர் பெருமானே ! அது போன்ற உத்தமமான வடிவம் எவராலும் எங்கும் காணப்பட்டதில்லை. அந்த தேவி யாரென்று தங்களால் அறியப்பட வேண்டும். அடையப்படவும் வேண்டும்.

92. அசுரர்களின் அரசே ! அவள் ஸ்திரீ ரத்னம். அழகிற் சிறந்த அங்கங்கள் படைத்தவள். தனது காந்தியால் திசைகளைப் பிரகாசிப்பித்துக் கொண்டு நிற்கின்றாள். தாங்கள் அவளைக் காணத்தகும்.

93. மூவுலகிலும் யானை குதிரை முதலியவைகளோ, வயிரம் முதலிய விலை உயர்ந்த கற்களோ அந்தந்த வகையில் இரத்தினம் எனக் கருதப்படுபவை எவையோ அவையெல்லாம் தற்போது தங்கள் கிருகத்தில் பிரகாசிக்கின்றன.

94. இந்திரனிடமிருந்து கஜரத்தினமான ஐராவதம் கொண்டுவரப்பட்டது; உச்சைசிரவஸ் எனும் குதிரையும், அவ்வாறே இந்த பாரிஜாத விருக்ஷமும் (கொண்டுவரப்பட்டன).

95. இங்கு உமது முற்றத்தில் ஹம்ஸத்துடன் கூடிய இவ்விமானம் விளங்குகின்றது. அற்புதமான இது முன் பிரம்மாவிடமிருந்து ரத்னமானது பற்றி இங்கு கொண்டுவரப்பட்டது.

96. மஹாபத்மம் எனும் இந்த நிதி குபேரனிடமிருந்து கொண்டு வரப்பட்டது. சிஞ்ஜல்கிஸீ என்னும் வாடாத தாமரை மாலையை சமுத்திரராஜன் தங்களுக்குக் கொடுத்தான்.

97. பொன்னொளி வீசும் வருணனுடைய குடை உமது கிருகத்தில் இருக்கின்றது. அவ்வாறே முன் பிரஜாபதியினிடம் எந்தச் சிறந்த தேர் இருந்ததோ அதுவும் (இருக்கின்றது).

98. பிரபுவே ! உத்கிராந்திதா எனப் பிரசித்தி பெற்ற யமனுடைய சத்தி ஆயுதம் உம்மால் கொண்டுவரப்பட்டது. வருணராஜனுடைய பாசம் உமது சகோதரனுடைய உடைமையாயிருக்கின்றது.

99. சமுத்திரத்தில் விளையும் எல்லாவகை ரத்னங்களும் நிசும்ப மகாராஜனுடையவையாயிருக்கின்றன. நெருப்பால் பாவனமாக்கப்பட்ட இரண்டு வஸ்திரங்களை உமக்கு அக்கினியும் கொடுத்துள்ளான்.

100. அசுரர் அரசே ! இவ்வாறாகக் கொண்டுவரப்பட்ட எல்லா ரத்னங்களும் உம்முடையதாய் விளங்குகின்றன. மங்கள வடிவினளான இந்த ஸ்திரீரத்னம் ஏன் உம்மால் கிரகிக்கப்படவில்லை?

ரிஷி கூறியது: 101,102. சண்டமுண்டர்களுடைய இவ்வார்த்தையைக் கேட்டுச் சும்பன் அதன்மேல் அசுரசிரேஷ்டனாகிய சுக்ரீவனைத் தூதாக தேவியிடம் அனுப்பினான்.

103. என்னுடைய வார்த்தைகள் அவளிடம் இப்படி இப்படிச் சொல்லப்பட வேண்டும். எப்படிச் சொன்னால் மிகுந்த பிரீதியுடன் அவள் வந்து சேருவாளோ, எப்படிக் காரியத்தை எளிதில் முடிக்கலாமோ அப்படி உன்னால் செய்யப்படவேண்டும்.

104. மலைமேல் அழகுமிக்க எந்த இடத்தில் அந்த தேவி இருந்தாளோ அங்கு சென்று, பின்னர் அவன் அவளிடம் மெதுவும் இனியதுமான சொற்களால் பேசலானான்.

105,106. தேவி ! அசுரர்களே ஆள்பவனாகிய சும்பன் மூவுலகிற்கும் மேலாகிய ஈசுவரன். அவனால் அனுப்பப்பட்டு நான் தூதனாக உன்னிடம் இங்கு வந்துள்ளேன்.

107. தேவர்களாய்ப் பிறந்த அனைவரிடமும் எவனுடைய கட்டளை தடையின்றிச் செல்லுகின்றதோ,எவன் எல்லா அசுரப் பகைவரையும் வென்றவனோ அவன் கூறியது எதுவோ அதைக் கேட்பாய்.

108. மூவுலகு முழுவதும் என்னுடையது; தேவர்கள் என் வசமாய் நடப்பவர்கள்; தனித்தனியே எல்லா யஜ்ஞபாகங்களையும் நானே அனுபவிக்கிறேன்.

109. மூவுலகிலுள்ள சிறந்த ரத்னங்கள் குறைவின்றி என் வசத்திலுள்ளன. அவ்வாறே தேவேந்திர வாகனமாகிய (ஐராவத) கஜரத்னம் கொண்டுவரப்பட்டு என் வசத்திலிருக்கிறது.

110. பாற்கடல் கடைந்ததிலுண்டானதும் உச்சைசிரவஸ் எனப் பெயர் பெற்றதுமான அந்த அசுவரத்னம் தேவர்களால் எனக்கு வணக்கத்துடன் ஸமர்ப்பிக்கப்பட்டது.

111. சுபவடிவினளே ! தேவர்களிடமோ, கந்தர்வர்களிடமோ, நாகர்களிடமோ வேறு தலைசிறந்த பொருள்கள் எவை உண்டோ அவை என்னிடமே இருக்கின்றன.

112. தேவி ! உன்னை உலகில் ஸ்திரீ ரத்னமாய் விளங்குபவள் என நாம் கருதுகிறோம்.அப்படிப்பட்ட நீ நம்மை வந்தடைய வேண்டும். நாம் ரத்னங்களை எல்லாம் அடைந்தனுபவிப்பராகின்றோம்.

113. என்னையாவது, பராக்கிரமம் மிக்க என் தம்பி நிசும்பனையாவது நீ அடையலாம். சலிக்கும் கண்களை உடையவளே! நீ ரத்னமல்லையா?

114. என்னை ஏற்றுக் கொண்டால் சிறந்ததும் நிகரற்றதுமான ஐசுவரியத்தை அடைவாய். இதை உன் புத்தியைக் கொண்டு நன்கு ஆலோசித்துப் பத்தினியாக என்னை வந்து அடை. 

ரிஷி கூறியது: 115,116. எவளால் இவ்வுலகு தாங்கப்படுகிறதோ அந்த மங்கள வடிவினளான பகவதீ துர்க்காதேவி இங்ஙனம் கூறியதைக் கேட்டுத் தனக்குள்ளே சிரித்துக்கொண்டு கம்பீரமாகப் பின்வருமாறு கூறினாள்.

தேவி கூறியது: 117,118. உன்னால் கூறப்பட்டது உண்மை. உன்னால் சொல்லப்பட்ட இதில் சிறிதும் பொய்யன்று. சும்பன் மூவுலகுக்கும் நாயகன். நிசும்பனும் அப்படிப்பட்டவனே.

119. ஆனால் இவ்விஷயத்தில் ஏற்கனவே (நான்) செய்துள்ள பிரதிஜ்ஞை யாதொன்றுண்டோ அதைப் பொய்யாக்குவ தெங்ஙனம் ? அல்ப புத்தியால் நான் செய்து விட்ட பிரதிஜ்ஞை எதுவோ அதைச் சொல்லுகிறேன், கேள்.

120. என்னைப் போரில் வெல்பவர் எவரோ என் கருவத்தையடக்குபவர் எவரோ,எனக்கு நிகரான பலமுடையவரெவரோ அவரே இவ்வுலகில் எனக்கு பர்த்தா ஆவார் (என்பதுதான் பிரதிஜ்ஞை).

121. ஆகையால் சும்பனோ அல்லது மகா அசுரனாகிய நிசும்பனோ இங்கு வரட்டும். என்னை ஜயித்து, எளிதில் என் கையைப் பிடிக்கலாம். தாமதிப்பதேன் ?

தூதன் கூறியது: 122,123. தேவி ! நீ கருவம் பிடித்தவள். என் முன் நீ இவ்வாறு பேசாதே. மூவுலகிலும் சும்ப நிசும்பர்களின் எதிரில் எந்தப் புருஷன் நிற்பான்?

124. (அவர்களைச் சார்ந்த) மற்ற அசுரர்கள் எதிரிலும் போரில் எல்லா தேவர்களுங் கூடினாலும் நிற்கமுடியாது. அப்படியிருக்க நீ ஸ்திரீ, ஒருத்தி, எம்மாத்திரம் ?

125. இந்திரன் முதலான தேவர்களனைவரும் எவர் முன் போரில் எதிர்த்து நிற்க முடியவில்லையோ அந்தச் சும்பன் முதலியவர்களின் எதிரில் ஸ்திரீயாகிய நீ எப்படிச் செல்வாய் ?

126. அந்நிலையிலுள்ள நீ நான் சொல்வதைக் கேட்பவளாய்ச் சும்ப நிசும்பர்களுடைய பக்கத்தில் சேர்ந்துவிடு, (அப்போது) கூந்தல் பற்றியிழுக்கப்படும் மானக்கேட்டை அடையமாட்டாய்.

127,128. ஆம் அது அப்படியேதான். சும்பன் பலசாலி; நிசும்பன் வீரியம் மிக்கவன்.ஆனால் நான் என்ன செய்வது? முன்னாலேயே ஆலோசிக்காமல் என்னால் பிரதிஜ்ஞை செய்யப்பட்டுவிட்டது.

129. ஆகையால் நீ திரும்பிப்போ. என்னால் உன்னிடம் சொல்லப்பட்டதை யெல்லாம் ஆதரவுடன் அசுரராஜனுக்கு எடுத்துக் கூறு. அவர் எது உசிதமோ அதைச் செய்யட்டும்.

ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீமஹாத்மியத்தின் ஐந்தாவது அத்தியாயம் முற்றிற்று.
To Top