பாகவத புராணம்

 1. தோற்றுவாய்: 

ஸ்ரீ சுக முனிவரால் பரீக்ஷித்து மகாராஜனுக்குச் சொல்லப்பட்ட பகவானுடைய சரித்திரம் ஸ்ரீமத் பாகவத புராணம். இது 18,000 ஸ்லோகங்கள் கொண்டது. மக்களின் மனத்திலே பக்தியை வளர்த்து, மன அமைதியையும், சித்த சுத்தியையும் தரவல்லது. பகவானுடைய சொரூபமே பாகவதம். அதைக் கேட்பதினாலும், படிப்பதினாலும் மோக்ஷ சுகத்தை அடையலாம். ஸ்ரீமத் பாகவதத்தை ஸப்தாகமாக ஏழு நாட்களில் சிரத்தையுடன் முறைப்படி கேட்டால் சகல மங்களங்களும் சித்திக்கும்.

ஒரு சமயம் நான்கு மகரிஷிகள் சத்சங்கம் செய்ய ஒன்று கூடினர். அப்போது தற்செயலாக அங்கு நாரத முனிவர் வந்தார். அவர் உற்சாகமின்றி இருப்பதற்கான காரணத்தை அந்த முனிவர்கள் கேட்டனர். நாரதர் சொன்னார், பூலோகத்தில் எங்கு சென்றாலும் கலிமகா புருஷனுடைய ஆதிக்கமே பரவியிருப்பதைக் கண்டேன். கடைசியாக யமுனை ஆற்றங்கரையில் ஓர் இளமங்கை இரண்டு வயோதிகர்களுடன் சோர்வாக அமர்ந்திருந்தாள். அவள் பக்தி தேவி என்றும், அந்த இரண்டு கிழவர்களும் ஞானம், வைராக்கியம் என்ற பெயரை உடையவர்கள் என்றும் அருகிலிருந்த மூன்று பெண்கள் கங்கை, யமுனை முதலிய நதிகளின் தேவதைகள் என்றும் அறிந்தேன்.

அவள் மேலும் அந்தப் புண்ணிய பூமியான பிருந்தாவனத்தை அடைந்த உடனே புத்துயிர் பெற்று, யுவதியாக மாறியதாகவும், ஆனால் அவளுடைய புத்திரர்களான ஞானமும், வைராக்கியமும் பலஹீனர்களாகவே உள்ளனர் என்றும், அதன் காரணம் அறியாமல் அவள் தவிப்பதாகவும் கூறினாள். அப்போது நான் (நாரதர்) அவளிடம் ஸ்ரீ கிருஷ்ண சரணார விந்தங்களைத் தியானம் செய்தால் துக்கம் நீங்கி ÷க்ஷமத்தை அடைவாய் என்று கூறினார். இந்தக் கலியுகத்தில் பக்தியே மோக்ஷசாதனம் என்று அறிவுரை கூறினேன். அடுத்து பக்தி தேவியின் வேண்டுகோளின்படி, ஞானம், வைராக்கியம் இருவரையும் தட்டி எழுப்பி அவர்களுடைய செவிகளில் கீதா வாக்கியங்களையும், உபநிஷத் மந்திரங்களையும் உபதேசித்தேன்.

அப்போது ஓர் அசரீரி என்னிடம் ஒரு சத்கர்மா எப்படி புரிய வேண்டும் என்பதைச் சில சாதுக்கள் கூறுவர் என்று சொல்லியது. நான் பதரீவனத்துக்குச் சென்று தவம் ஆற்றி வருகையில் தாங்கள் என்னைக் கண்டீர்கள் அவர்கள் நாரதரிடம் யோகம், தவம், யக்ஞம் ஆகியவற்றை விடச் சிறந்தது ஞான யக்ஞம். இதுவே சத்கர்மம் ஆகும். பாகவத ஞான யக்ஞ விசேஷத்தால் ஒவ்வொரு வீட்டிலும் பக்தியானவள், ஞான வைராக்கியங்களுடன் பிரேமரசத்தை நிரப்பிக் கொண்டு விளையாடிக் கொண்டு இருப்பாள் என்று கூறினர். அப்போது நாரதர் பக்தி, ஞானம், வைராக்கியம் ஆகியோர்க்கு நன்மை செய்ய ஞான யக்ஞம் செய்கிறேன். அதற்குத் தகுதியான இடம் கங்கா நதிக்கரையில் உள்ள ஆனந்த வனம் என்று அறிந்து, அங்கு சேர்ந்து ஞான யக்ஞத்தைச் செய்தார். எல்லோரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

அப்போது சனத்குமாரர்கள் நாரதரைப் பார்த்து பாகவதத்தின் பெருமையை எடுத்துக் கூறினர். பாகவதச் சிரவணத்தாலே ஸ்ரீவிஷ்ணு நம் உள்ளத்தில் ஆவிர் பாகம் ஆகிறார். புண்ணிய கிரந்தமான பாகவதம் பன்னிரண்டு ஸ்கந்தங்களும், பதினென்ணாயிரம் சுலோகங்களும் கொண்ட உன்னத புராணம். துளசி, துவாதசி, திதி, காமதேனு ஆகியவற்றிற்கும், ஸ்ரீமகா விஷ்ணுவுக்கும், பாகவத புராணத்திற்கும், வாசுதேவரின் மந்திரத்துக்கும் எவ்வித பேதமும் கிடையாது. இதை எவனொருவன் ஆயுளின் கடைசி தறுவாயில் கேட்கின்றானோ, அவனுக்கு கோவிந்தன் பிரீதியோடு வைகுண்ட வாசத்தை அளிக்கின்றான். பாபாத்மாக்களும் இந்தக் கலியுகத்தில் ஸப்தாஹ யக்ஞத்தினாலேயே பரிசுத்தம் அடைந்து விடுகின்றனர். எல்லோரும் ஸ்ரீ ஹரியை ஸ்தோத்திரம் செய்தனர். அவ்வமயம் பக்திதேவி, இளமையும், புஷ்டியும் நிறைந்த தன் குமாரர்களுடன் அங்கு தோன்றி ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தாள்.

2. புராணம்-ஸ்ரீபாகவத புராணம்

சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதான, லீலா வைபவங்கள் நிறைந்த பகவானுடைய அவதாரக் கதைகளைக் கேட்க நாங்கள் மிக்க ஆவலுடன் இருக்கின்றோம். அந்தப் புண்ணியமான திவ்ய சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும். பகவானுடைய லீலா விநோதங்களைக் கேட்பதற்காகவே சத்யோகம் செய்வதைக் காரணமாகக் கொண்டு நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். தர்மத்தின் காவலனான கிருஷ்ண பகவான் தன் திருநாட்டுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு தர்ம தேவதையரைச் சரணமாக அடைந்தது. அந்தத் தர்மமானது யாரால் ரக்ஷிக்கப்பட்டது?  கலியில் தோஷங்களினால் மனத்தூய்மையை இழந்த மனித சமூகத்தை பகவத் கதாம்ருதம் என்ற பாணத்தினால் பரிசுத்தப் படுத்துங்கள் என்று வேண்டிய சனகாதி முனிவர்களுக்குச் சூதமா முனிவர் கூறத் தொடங்கினார்.

சகல மங்களங்களையும் அளிக்கக் கூடியதான, லீலா வைபவங்கள் நிறைந்த பகவானுடைய அவதாரக் கதைகளைக் கேட்க நாங்கள் மிக்க ஆவலுடன் இருக்கின்றோம். அந்தப் புண்ணியமான திவ்ய சரித்திரத்தை எங்களுக்குச் சொல்ல வேண்டும். பகவானுடைய லீலா விநோதங்களைக் கேட்பதற்காகவே சத்யோகம் செய்வதைக் காரணமாகக் கொண்டு நாங்கள் இங்கு தங்கி இருக்கிறோம். தர்மத்தின் காவலனான கிருஷ்ண பகவான் தன் திருநாட்டுக்குப் புறப்பட்டு சென்ற பிறகு தர்ம தேவதையரைச் சரணமாக அடைந்தது. அந்தத் தர்மமானது யாரால் ரக்ஷிக்கப்பட்டது? கலியில் தோஷங்களினால் மனத்தூய்மையை இழந்த மனித சமூகத்தை பகவத் கதாம்ருதம் என்ற பாணத்தினால் பரிசுத்தப்படுத்துங்கள் என்று வேண்டிய சனகாதி முனிவர்களுக்குச் சூதமா முனிவர் கூறத் தொடங்கினார். ஸ்ரீமந் நாராயணனையும், புருஷ ச்ரேஷ்டரரான நரனையும், சரசுவதியையும், ஸ்ரீவியாச பகவானையும் வணங்கி வெற்றியை அளிக்கும் இந்தப் புராணத்தைக் கூறுகிறேன். பகவானுடைய அருட்கடாக்ஷம் உங்களுக்குப் பூரணமாக கிடைக்கட்டும். ஸ்ரீஹரியை ஆராதித்துப் பக்தி செய்வதே மனித குலத்தின் முக்கியமான தர்மமாகும். ஸ்ரீவாசுதேவனிடத்தில் மனதைச் செலுத்தி, பக்தி யோகத்தைச் செய்வதினாலேயே உண்மையான ஞானமும், வைராக்கியமும் ஏற்பட்டு விடும். அதனால் பகவான் மகிழ்ச்சி அடைகிறான்.

அறிவில் சிறந்த பெரியோர்கள் ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் வேறுபாடில்லை என்பதை உணர்ந்து, தமது உள்ளக் கோயிலிலே பரமாத்மாவைக் கண்டு ஆனந்த பரவசம் அடைகின்றனர். சர்வ வியாபியாக விளங்குகின்ற ஸ்ரீஹரியே எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர். முழு கலையுடன் ஒளிர்கின்ற ஸ்ரீகிருஷ்ணாவதாரமே மிகச்சிறந்தது. அவருடைய லீலா வைபவங்களையும், அவதாரக் கதையையும் கேட்கிறவன் இன்ப வெள்ளத்தில் திளைப்பான். அவரை அடைவதற்கு அவரே காரணமாவார். ஸ்ரீகிருஷ்ண பகவானை உபாசிப்பவர்கள் ஸத்வ குணமும், சாந்தியும் அடைந்து ஆனந்தமாக வாழ்கின்றனர் என்று சூதமா முனிவர் கூறினார்.

3. பகவானின் அவதார மகிமைகள்

சூதமா முனிவர் பகவானின் அவதார மகிமைகளை முனிவர்களுக்குக் கூறலானார். ஆதியில் பகவான் உலகைச் சிருஷ்டி செய்ய எண்ணி உடனே பதினாறு கலைகள் கொண்ட புருஷ ரூபத்தைக் கொண்டார். அந்த விராட் புருஷனின் உடலிலிருந்தே தேவர்கள், மனிதர்கள் தோன்றினர். உலகம் விரிவடைந்தது. அவர் சொரூபம் அழிவற்றது. ஸத்வ குணம் நிறைந்தது. மகிமை பொருந்தியது. அவருடைய அமிசத்தினாலேயே தேவதைகள், பசு, பக்ஷிகள், பிராணி வர்க்கங்கள் தோன்றின. அந்த ஆதிநாராயண சொரூபமே சகல அவதாரங்களுக்கும் மூல காரணமாயிற்று. ஸ்ரீஹரி எடுத்த அவதாரங்கள் எண்ணில் அடங்கா. ஆனால் அவற்றுள் இருபத்து நான்கு மிக்க மகிமை பெற்றவை. அசுரர்களால் உலகத்திற்குத் துன்பம் உண்டாகும் போது அவர்களை அடக்கி நன்மக்களைக் காப்பதற்காகவே பகவான் பலவித உருவங்களில் தோன்றுகிறார். தர்மம், ஞானம் ஆகியவற்றுடன் ஸ்ரீகிருஷ்ணன் தனது திவ்யலோகத்துக்குச் சென்ற பிறகு உலகினர் அஞ்ஞானத்தில் சிக்கி ஞான சூனியர்களாய் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் இந்தப் பாகவத புராணம் உதயமாகி ஒளிவீசத் தொடங்கியது. துவாபர யுக முடிவில் வியாசர் பராசர முனிவரின் மகனாக அவதரித்தார். மகாவிஷ்ணுவின் கலாவதாரமாகத் திகழ்ந்த அவர் வேதங்களை வகுத்தார். இதிகாச புராணங்களை இயற்றினார். எனினும், அவருக்கு திருப்தியும், மனஅமைதியும் ஏற்படவில்லை. இத்தகைய சிந்தையுடன் சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்து வருந்திக் கொண்டிருக்கும்போது நாரத முனிவர் வந்தார். அவரிடம் வியாசர் தன் மனக்குறையைக் கூறி அதனை நிவர்த்திக்க வேண்டினார்.

அப்போது நாரதர், உலகத்திற்கு ÷க்ஷமம் தரும் பகவானுடைய புனிதமான குண வைபவங்களை நீர் பாடவில்லை. ஸ்ரீஹரியின் குணங்களை வர்ணிக்கும் நூல்களையே சாதுக்கள் விரும்புவர். அனந்தனின் திவ்ய நாமங்களின் மகிமையைக் கூறும் நூலே மக்கள் பாபங்களைப் போக்கக் கூடியது. ஹரியின் குணங்களைப் பாடி, கேட்பதிலேயே சாதுக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே ஸ்ரீஹரியின் குணங்களைப் பாடுங்கள்; பக்தியின் பெருமையைக் கூறுங்கள். சமாதியில் அமர்ந்து பகவானுடைய லீலைகளைத் தியானித்து எழுதுங்கள்; பரமானந்தம் பெறுவீர். உலக நன்மை ஏற்படும்; பந்தங்களிலிருந்து விடுபட்டு அமைதியைப் பெறுவீர் என்றார் நாரதர். மேலும் எவன் ஒருவன் தனது ஸ்வதர்மத்தையும் விட்டு பகவானுடைய சரணகமலங்களில் பக்தியுடன் சேவித்து வருகிறானோ அவன் அதன் பயனை அடைவதற்கு முன்பே மரணமடைந்தாலும் அவனுக்கு நற்பேறே கிட்டும் என்றார். எடுத்துக்காட்டாக, தனது பூர்வ ஜன்ம வரலாற்றைக் கூறினார். அவர் முற்பிறவியில் வேதவித்துக்களிடம் வேலைக்காரியின் மகனாகத் தோன்றினதாகவும், அவர்களுக்குப் பக்தி சிரத்தையுடன் அவர் பணிவிடை செய்து வந்ததாகவும், அதனால் அவர்களிடம் பிரம்ம வித்தையை உபதேசம் பெற்றதாகவும், தான் எதையும் பகவதார்ப்பணமாகவே செய்து வந்ததாகவும் அதனால் பக்தி, ஞானம் வளர்ந்ததாகவும் கூறினார்.

தாயார் இறந்தபோது அவ்விடம் விட்டு வடக்கே புறப்பட்டுச் செல்ல பசி தாகத்தினால் சோர்வு ஏற்பட்டது. ஆங்குள்ள நதியில் நீராடி நீரருந்தி அரச மரத்தனடியில் அமர்ந்து உபதேச மந்திரத்தை ஜபித்து இதயத்திலே பரமாத்மாவைத் தியானித்து வந்ததாகவும் முனிவர் கூறினார். அப்போது அவர் உள்ளக் கோயிலில் பகவான் ஆவிர்பவித்து, மறைந்துவிட தான் மிகவும் வருத்தமடைந்ததாகவும் அப்போது அசரீரி வாக்கு இப்பிறவியில் தன்னைக் காண தகுதி ஏற்படவில்லை என்றார். ஸ்ரீகிருஷ்ணனிடமே உள்ளத்தை இருத்தி, பற்றின்றி இருந்ததால் சித்த சுத்தி ஏற்பட்டது. பஞ்சபூத சரீரம் விழுந்துவிட புண்ணிய பார்ஷத சரீரம் கிடைத்தது என்றார். பல யுகங்கள் கழிந்த பிறகு உலக சிருஷ்டி ஏற்பட அப்போது பிரம்ம புத்திரனாகப் பிறந்ததாகக் கூறினார். பிறகு நாரதர் சென்று விட்டார். பின்னர் வியாசர் தியானத்தில் ஆழ்ந்து பரமபுருஷனாகிய ஸ்ரீகிருஷ்ணனிடம் இணையற்ற பக்தியைத் தரக்கூடிய பாகவத கிரந்தத்தை இயற்றினார்.

அநீதியின் உருவமாகிய கவுரவர்களும், நீதிக்கு இருப்பிடமாகிய பாண்டவர்களும் வாழ்ந்த கால வரலாறே மகாபாரதம். இதை எழுதியவரும் வியாசரே. பாரதப் போரில் இரு தரப்பினிலும் பலர் போர்க்களத்தில் அடிபட்டு வீர சுவர்க்கம் அடைந்தனர். அப்போது துரோணாச்சாரியாரின் மகன் அசுவத்தாமன் திரவுபதியின் புத்திரர்களை, தூங்கிக் கொண்டிருக்கும் போது குரூரமாகக் கொன்றுவிட்டான். இதைக் கண்டு தாயான திரவுபதி கதறி அழுது பரிதவித்துப் போனாள். அருச்சுனன் கோபம் கொண்டு அசுவத்தாமன் தலையைக் கொண்டு வருவதாகக் கூறி அசுவத்தாமனைப் பின் தொடர்ந்தான். பயந்து ஓடிக்கொண்டிருந்த அசுவத்தாமன் பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தான். அருச்சுனனும் அதையே பிரயோகிக்க இரண்டும் பயங்கரமாக மோதிக் கொண்டன. பிறகு கிருஷ்ணனின் ஆணைப்படி அருச்சுனன் பிரம்ம அஸ்திரத்தை தன்னிடமே இழுத்துக் கொண்டான். பிறகு அசுவத்தாமாவைப் பிடித்துக் கட்டி, யாக பசுவைப் போல் இழுத்து வந்தான். அப்போது கிருஷ்ணன் அருச்சுனனிடம் அவனுக்குத் தயவு காட்டாதே என்றார்.

பிறகு அருச்சுனனும், கிருஷ்ணனும் திரவுபதியிடம் சென்று அசுவத்தாமாவை தண்டிக்கப் போவதாகக் கூற, திரவுபதி மனமிரங்கி குரு புத்திரனான அசுவத்தாமாவை வணங்கி, அருச்சுனனிடம் அவனை விட்டு விடுமாறு வேண்டினாள். அப்போது அருச்சுனன் அசுவத்தாமனுடைய சிகையை அறுத்து, தலையிலுள்ள சிரோரத்தினத்தையும் அபகரித்தான். பின்னர், அவனை கட்டவிழ்த்து விட்டு கூடாரத்திலிருந்து விரட்டி விட்டான். போரில் உற்றார், உறவினர்களை இழந்து வருந்தும் திருதராஷ்டிரன், காந்தாரி, தர்மபுத்திரர் அவரது சகோதரர்களையும் , குந்தி தேவியையும் ஆறுதல் மொழிகளைக் கூறிச் சமாதானம் செய்தார் கிருஷ்ணன். அப்போது கிருஷ்ணா, காப்பாற்று என்று கூவிக் கொண்டே அபிமன்யுவின் மனைவி உத்திரை கிருஷ்ணனிடம் ஓடிவர கிருஷ்ணன் நடந்தது அறிந்து அசுவத்தாமன் ஏவிய அஸ்திரத்திலிருந்து உத்தரையின் சிசுவைக் காப்பாற்றினார்.

4. கண்ணன் கருணை, பீஷ்மர் மறைவு

உறவினர் பலரும் பாரதப் போரில் மடிந்து போனதை எண்ணி மிகவும் மனம் வருந்தினார் யுதிஷ்டிரர் எனப்படும் தருமபுத்திரன். வியாசமுனிவரும் கிருஷ்ண பகவானும் பலவிதமாக ஆறுதல் கூறியும் யுதிஷ்டிரர் மனம் தெளிவடையவில்லை. இவ்வாறு மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க யுதிஷ்டிரர் குரு÷க்ஷத்திரத்தில் விழுந்து கிடந்த பிதாமகர் பீஷ்மரைக் காணச் சென்றார் கிருஷ்ணனுடன். அப்போது பீஷ்மரைக் காண அனைவரும் கூடி இருந்தனர். பீஷ்மர் எல்லோரையும் அன்புடன் வரவேற்றார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை இதய பீடத்தில் அமரச் செய்து பக்தியுடன் வணங்கிப் பூஜித்தார். பிறகு பாண்டவர்களையும், குந்தியையும் நோக்கி சிறு குழந்தைகளான உங்களை வைத்துக் கொண்டு இளவயதுள்ள குந்தி தேவி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து விட்டாள். தர்மன் அறனாகவும், வீரன் பீமனும், வில்லில் சிறந்த விசயனும், உற்ற துணையாக ஸ்ரீகிருஷ்ணனே இருந்தும் வரும் விபத்துக்களைத் தடுக்க இயலாமல் போய் விட்டது. இந்தக் கிருஷ்ணனுடைய எண்ணத்தை யாராலும் அறிய முடியாது. எனவே, யுதிஷ்டிரா! மனம் வருந்தாதே, எல்லாம் தெய்வச் செயல் என எண்ணி, மனதை திடப்படுத்திக் கொண்டு பிரஜைகளை ரக்ஷித்து, ஆட்சி புரிந்து பரதகுல சிரேஷ்டனாக விளங்குவாயாக.

பிறகு எல்லோருக்கும் கிருஷ்ணனைப் பற்றிக் கூறுகிறார் பீஷ்மர். ஸ்ரீகிருஷ்ணன் சாக்ஷõத் பரமாத்மாவே; ஆதிநாராயண மூர்த்தி. இணையற்ற பெருமைகள் கொண்ட இவரை உற்ற நண்பனாக, சாரதியாக, மதிமந்திரியாகக் கொண்டு பழகி வந்தீர்கள். இடையறாத பக்தி பூண்டவர்களிடம், அளவில்லாதக் கருணை உடையவர். உயிரை இழக்கும் தருணத்திலும் எனக்கு திவ்ய தரிசனம் தர இங்கு வந்திருக்கிறார் அவருடைய கிருபையே கிருபை. பகவானுடைய நினைவிலேயே ஆழ்ந்து மரணமடைபவன் சகல பாபங்களிலிருந்தும் விடுபடுகிறான். சிவந்த தாமரை நயனங்களில் கருணை பொங்க, புன் சிரிப்பினால் ஒளிரும், மலர்ந்த முகத்துடன் விளங்கும் தேவதேவனைத் தியானத்திற்கு உகந்த சகல சதுர்புஜங்களுடன் என் எதிரில் தரிசன அளிக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் என்றார் பீஷ்மர். தர்மபுத்திரர் கேட்டுக் கொண்டபடி சகல தரும சாஸ்திரங்களையும் நீதிகளையும் எடுத்துக் கூறினார். பீஷ்மர் எதிர்பார்த்த உத்தராயண புண்ணியகாலம் வந்தது. அவர் மனத்தை பகவானிடம் நிலைநாட்டி கண்களை மூடாமலே தியானம் செய்தார். பீதாம்பர தாரியாய், சதுர்புஜ மூர்த்தியாய் காட்சி அளிக்கும் அந்த ஆதி புருஷனாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை கண்ணிமைக்காமல் தியானம் செய்த வண்ணம் இருந்தார்.

எல்லாக் கஷ்டங்களும் மறைய இந்திரியங்களெல்லாம் வெளிநாட்டமற்று பகவானிடமே லயித்தன. சரீரத்தை விடப்போகின்ற அச்சமயத்தில் அவர் ஸ்ரீகிருஷ்ணனைப் பலவிதமாக துதி செய்யலானார். பிறகு மெல்ல மெல்ல மூச்சை அடக்கி, மவுனமாகி மனதைக் கிருஷ்ணனிடமே ஒன்றுபடச் செய்து கண்களை மூடி பரம்பொருளிடத்திலே ஐக்கியமாகி விட்டார். மறைந்த மகானுக்கு தருமபுத்திரர் உத்தரகிரியைகளைச் செய்தார். கிருஷ்ண பரமாத்மாவுடன் அஸ்தினாபுரம் வந்த யுதிஷ்டிரர் பெரிய தகப்பனாருக்கும் காந்தாரிக்கும் விஷயத்தைத் தெரிவித்து ஆறுதல் கூறினார். திருதராஷ்டிரனிடமும் அனுமதி பெற்றுத் தர்மநீதி தவறாமல் அரசாட்சி செய்து வந்தார். தருமபுத்திரர் ஆட்சியில் எங்கும் அமைதியும், ஆனந்தமும் சுபிக்ஷமும் நிரம்பி இருந்தன.

5. கிருஷ்ணன் விடைபெற்று துவாரகை செல்லுதல்

ஸ்ரீகிருஷ்ணன் சில நாட்கள் அஸ்தினாபுரத்தில் தங்கி சுபத்திரையை அன்புடன் ஆதரித்து சந்தோஷப்படுத்தினார். மற்றவர்கள் சோகத்தை நிவர்த்தி செய்தார். பிறகு அவர் துவாரகைக்குப் புறப்பட்டார். எல்லோரும் அவர் பிரிவைத் தாங்காமல் வருந்தினர். வாத்யங்கள் முழங்க பயணம் தொடங்கிய ஸ்ரீகிருஷ்ணனை விட்டுப் பிரிய மனமின்றி வெகுதூரம் தொடர்ந்து வந்த பாண்டவர்களையும், மற்றவர்களையும் சமாதானம் கூறி விடை கொடுத்தனுப்பினார். பிறகு தேரேறி உத்தவர், சாத்யகி ஆகியோருடன், துவாரகை அடைய அப்போது தனது திவ்யமான சங்கை ஊதினார். துவாரகை மக்கள் திரண்டு காணிக்கைகளுடன் வந்து ஸ்ரீகிருஷ்ணனை உற்சாகத்துடன் வரவேற்றுத் துதித்தனர். கிருஷ்ணர் எல்லோருக்கும் மரியாதை செலுத்தினார். பின்னர் அரண்மனை சென்று, தேவகி முதலான மாதாக்களையும், வாசுதேவரையும் பணிவுடன் நமஸ்கரிக்க, அவர்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஆசீர்வதித்தனர்.

6. விதுரன் திருதராஷ்டிரன் முடிவு

சூத முனிவர் சவுனகாதி முனிவர்களுக்கு மேலும் கூறலானார். தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்த விதுரர் அஸ்தினாபுரம் வரும் வழியில் மைத்ரேயரைச் சந்தித்து ஆத்ம தத்துவத்தைக் கேட்டு அறிந்து சிறந்த ஞானத்தைப் பெற்று ஸ்ரீகிருஷ்ணன் மீது நிர்மலமான பக்தியும், அமைதியும் பெற்றார். நீண்ட நாட்களாய் பிரிந்திருந்த சிறிய தகப்பனார் விதுரரைக் கண்ட யுதிஷ்டிரர் அன்புக் கண்ணீர் பெருக்கினார். பிறகு விதுரருக்குப் போஜனம் செய்வித்து யோக÷க்ஷமங்களை விசாரித்தார். அப்போது விதுரர் தருமனுக்கு எல்லாவற்றையும் கூறினார். ஆனால், யதுகுலத்துக்கு நேர்ந்த கஷ்டத்தை மட்டும் கூறவில்லை. பிறகு தனது தமையனாருக்கு ஞானமார்க்கம் பற்றி எடுத்துக் கூறியவராக காலம் கடத்தி வருகையில் மரணகாலம் நெருங்குவதை அறிந்து தமையனிடம் பின்வருமாறு கூறினார். காலதேவனின் சக்தியை வெல்ல முடியாதல்லவா. விரைவிலேயே வீட்டை விட்டுப் புறப்பட வேண்டும். அதற்காக இந்த வயதில் பிறரை அண்டி வாழ வேண்டும். எவர்களுக்காகப் பல கொடிய செயல்களைச் செய்தீரோ அவர்கள் வீட்டிலேயே வாழலாமா? வீட்டைக் காக்கும் நாய்க்கு சோறிடுவதைப் போல பீமன் உமக்கு அன்னம் இடுகிறான்.

எவ்வளவுதான் உயிர்மீது ஆசை வைத்தாலும் சரீரம் காலக்கிரமத்தில் அழியும். எவன் ஆசைகளை விட்டுப் பற்றின்றி வைராக்கிய மனதுடன், வீட்டை விட்டு வெளியேறி யாரும் அறியாமல் சரீரத்தை விடுகிறானோ அவனே தீரபுருஷன். எவன் ஸ்ரீஹரியின் சரணங்களையே தியானித்து வீட்டை விட்டுத் துறவியாக புறப்பட்டுச் செல்கிறானோ அவனே உத்தமன். எனவே உடனே யாருக்கும் தெரிவிக்காமல் வடக்கு திக்கில் செல்லுங்கள் என்றார். உடனே திருதராஷ்டிரன், காந்தாரி பின் தொடர விதுரர் வழிகாட்ட வீட்டைத் துறந்து, இமயமலைக்குச் சென்று விட்டார். தருமர் வழக்கப்படி பெற்றோர்களை வணங்க வந்தவர், மாளிகையில் யாரும் இல்லாதது பற்றி சஞ்ஜயரைக் கேட்க, அவரும் தன்னை ஏமாற்றிவிட்டு அவர்கள் எங்கு சென்றார்களோ தெரியவில்லை என்றார். அப்போது அங்கே வந்த நாரத முனிவர் வீணாக வருந்த வேண்டாம்; எல்லாம் பகவான் கட்டளைப்படியே நடக்கும். பஞ்சபூத சரீரத்தினால் ஆன எவரையும் காப்பாற்ற முடியாது என்று கூறி திருதராஷ்டிரர் குடும்பத்துடன் இமயமலை சென்றதைக் கூறினார். தருமன் மனம் தெளிந்து சோகத்தை விட்டார்.

தருமர் முதலானோர் வீடு பேறு

சில நாட்கள் கழிந்த பின் தருமர், உற்றார் உறவினர் ÷க்ஷம லாபங்களை அறிந்து வர அருச்சுனனைத் துவாரகைக்கு அனுப்பினார். அஸ்தினாபுரத்தில் பல அபசகுனங்கள் தோன்றின. பல மாதங்களிலும் அருச்சுனன் திரும்பி வராததால் பீமசேனனைத் துவாரகைக்குச் சென்று வருமாறு கூறினார். மேலும் நாரதர் கூறியபடி பகவான் தனது லீலாவதாரமான சரீரத்தை விட்டு விடும் காலம் வந்து விட்டதோ என்று கவலையுற்றான். அவ்வமயம் துவாரகையிலிருந்து திரும்பி வந்த அருச்சுனன் யுதிஷ்டிரரை வணங்கிக் கண்ணீர் மல்க நிற்பது கண்டுபயந்தார். எல்லோரும் நலந்தானே என்று விசாரித்தார். அப்போது அருச்சுனன் நா தழுதழுக்க, ஸ்ரீஹரி உற்ற பந்துவாக இருந்தும் என்னை வஞ்சித்து விட்டார். என்னுடைய தேஜஸ் வீர்யம் எல்லாம் அபகரிக்கப் பட்டு விட்டது. நான் சக்தி அற்றவன் ஆகிவிட்டேன். அவருடன் வாழ்ந்த வாழ்வை நினைக்கும் போது நெஞ்சம் துடிக்கின்றது. துவாரகா நகரமே சூன்யமாகி விட்டது. நமக்குக் கோவிந்தனுடைய நாமஸ்மரணமே தான் துணை. அதுவே நமது துன்பங்களை நீக்கக் கூடியது என்று ஆற்றாமையுடன் கூறினான். பின்னர் கீதோபதேசங்களை நினைவு கூர்ந்து ஞானம் பெற்றான். குணாதீத நிலையைப் பெற்ற அவன் ஜீவன் முக்தனானான். குந்தியும் அவன் சொற்களைக் கேட்டு சம்சார சூழலிலிருந்து விடுபட்டாள்.

சக்கரவர்த்தியாகிய தருமபுத்திரன், குணசாலியும் வணக்கமுடையவனுமாகிய பேரனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து மதுரா நகரில் சூரசேன நாட்டிற்கு வஜ்ரனை அரசனாக்கினார். பின்னர் அகங்கார, மமகாரங்களை விட்டு மோகமின்றி எல்லாப் பந்தங்களையும் துறந்து வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அரண்மனையை விட்டு வெளியேறினார். சகோதரர்களும் மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். திரவுபதியும் வாசுதேவனையே சரணாக அடைந்து, ஏகாந்தபக்தியில் ஈடுபட்டு அவரையே அடைந்தார். இவ்வாறு பகவானுடைய பிரியமான பக்தர்களான பாண்டவர்களுடைய மகா பிரயாணத்தைப் பற்றி பாகவதம் கூறுகிறது.

7. பரீக்ஷித்தின் கதை

உத்தரையின் பிரார்த்தனையை ஏற்று பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவள் கருவை அழிக்க அசுவத்தாமனால் ஏவப்பட்ட பிரம்மாஸ்திரத்தின் உக்கிரத்தை, அங்குஷ்ட பிரமாணமுடன்-சிசுவின் அருகிலே நெருங்கவிடாமல் இருந்து ரட்சித்து வந்தார். பிறகு ஒரு சுபலக்கினத்தில் ஓர் ஆண் குழந்தை உத்தரைக்குப் பிறந்தது. அதுவே பரீக்ஷித்து ஆகும். மகாவிஷ்ணுவால் ரட்சிக்கப்பட்டு பிறந்த அந்தக் குழந்தைக்கு விஷ்ணுராதன் என்று பெயர் வைத்தனர். அக்குழந்தை தாயின் கருவில் கண்ட திவ்ய சொரூபி யார் என்று பரீட்சை செய்துகொண்டு இடைவிடாமல் அப்பகவானையே சிந்தித்ததாலும் விஷ்ணுராதனுக்கு பரீக்ஷித் என்று பெயர் ஏற்பட்டது. பரீக்ஷித், உத்தரன் பெண்ணாகிய இராவதியை மணந்து, தர்மநீதி தவறாமல் ஆண்டு வந்தான். அவனுக்கு ஜனமேஜயன் முதலான நான்கு குமாரர்கள் பிறந்தனர்.

ஒரு சமயம் பரீக்ஷித் திக்விஜயம் செய்து வருகையில் பாண்டவர்களின், ஸ்ரீகிருஷ்ணனின் கீர்த்தி ஆகியவற்றைப் பற்றி மக்கள் சிலாகித்துப் பேசுவதைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றான். இதனால், பரீக்ஷித்தின் உள்ளத்தின் கிருஷ்ணபக்தி பெருக்கெடுத்தது. பக்திப் பரவசமடைந்த அவன் மனம் ஸ்ரீகிருஷ்ணரின் சரணார விந்தங்களையே தியானிக்கத் தொடங்கியது. தேச சஞ்சாரம் செய்து வந்தபோது பரீக்ஷித்து ஒரு பசுவும், ரிஷபமும் மிக்க தீனமாக நிற்பதையும், ஒரு முரட்டு மனிதன் அவற்றை அடித்து இம்சிப்பதையும் கண்டான். அதைக் கண்ட பரீக்ஷித் கோபம் மிக்கவனாக அதட்டி கேட்கலனான். துஷ்டனே நீ யார்? என் ஆட்சியில் இந்தக் கொடுமையான செயலைப் புரிந்த உன்னைத் தண்டிக்கப் போகிறேன். துஷ்டர்களைச் சிக்ஷித்து, சாதுக்களை ரக்ஷிப்பதும் அரசனது கடமையே. பிறகு ரிஷபத்தை நோக்கி, ஒற்றைக் காலில் நிற்கும் நீர் தேவதைகளில் யார்? மற்றப்பாதங்களை வெட்டியது யார்? என்று கேட்க, அது கூறியது: துன்பங்களுக்குக் காரணம் பல வகையாகச் சொல்லப்படுவதால் அறிவில் சிறந்த தாங்களே அதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள் என்றது.

அரசன் சிந்தித்து ரிஷபத்தை நோக்கி, நீர் தருமதேவதை. நீர் சத்தியம், தயை, தவம், ஆச்சாரம் என்னும் நான்கு பாதங்களுடன் கிருதயுகத்தில் சஞ்சரித்து வந்தீர் அல்லவா. கர்வம், மதம், பேராசை ஆகிய அம்சங்களினால் மூன்று கால்களை இழந்துவிட்டீர். சத்தியம் என்னும் ஒரே காலில் இப்போது நிற்கிறீர் அதையும் அசத்தியமே உருவான கலிபுருஷன் வெட்டப்பார்க்கிறான் என்றார். பொறுமையே உருவான பூதேவியே பசுவாக வந்திருக்கிறாள். பகவானுடைய சரண ஸ்பரீசத்தால் மகிழ்ச்சி அடைந்திருந்த அவள் இப்போது கண்ணீர் மல்கி நிற்கின்றாள் என்று கூறி அருகிலுள்ள வேடதாரியைக் கொல்ல உடைவாளைக் கையில் எடுத்தான் பரீக்ஷித்து. அதுகண்ட முரட்டு கலி மனிதன் பரீக்ஷித்தின் காலில் விழுந்து வணங்கினான். அப்போது பரீக்ஷித்து அருச்சுனன் புகழைப் பாதுகாத்து வரும் நான் சரணமடைந்த வரைக் கொல்வதில்லை.

நீ கலகம், பொய், திருட்டு, கபடம் ஆகிய தீயகுணங்கள் நிறைந்தவன். எனவே சத்தியம், தர்மம் நிறைந்த இந்த பிரம்மாவர்த்தத்தில் வசிக்கக்கூடாது என்று ஆணையிட அவன் தான் நிலையாக இருப்பதற்கான இடம் ஒன்று குறிப்பிட வேண்டினான். அதற்கு பரீக்ஷித்து சூதாட்டம், மதுபானம், விபச்சாரம், கொலை முதலிய அதர்மங்கள் நடக்கும் இடத்திற்குச் சென்று வசிக்குமாறு கூறினார். மேலும் சில இடங்களைக் கலி வேண்டிட பரீக்ஷித்து பொய், காமம், மதம், விரோதம், கோபம் ஆகிய ஐந்து இடங்களையும் குறிப்பிட்டார்.

பரீக்ஷித்தின் ஆட்சி

இவ்வாறு கலியை விரட்டிய பிறகு அரசன் தயை, தவம், ஆச்சாரம் ஆகியவற்றை வளர்த்து தர்ம தேவதையாகிய ரிஷபத்தின் மூன்று கால்களையும் வளரச் செய்தார். பூதேவியாகிய பசுவைச் சமாதானம் செய்து புஷ்டியுடன் விளங்கச் செய்தார். இவ்வாறு அபிமன்யுவின் புத்திரரான பரீக்ஷித்து தர்மத்தையும் பூமியையும் நன்றாகப் பாதுகாத்துப் புகழுடன் அஸ்தினாபுரத்தில் அரசாட்சி செய்து வந்தார்.

கலியினால் அனுகூலம்

பாவங்களைச் செய்த பிறகே அதன் பலனை அனுபவிக்க நேரிடுகின்றது. நற்செயல்களையே நினைத்து பாவங்களிலிருந்து விலகி வாழ்வதே நல்லது என்று அறிதல் கலியிலுள்ள சிறந்த அனுகூலம் ஆகும். அவன் தைரியமுள்ளவர்களிடம் நெருங்கமாட்டான்.

8. பரீக்ஷித்து பெற்ற சாபம்

ஒரு சமயம் மன்னன் பரீக்ஷித்து வேட்டையாடச் சென்றான். காட்டில் களைப்புற்ற அவர் அருகிலிருந்த ஆசிரமத்தில் நுழைந்தான். அங்கு மெய்மறந்து தவமியற்றி வந்த சமீக முனிவரைக் கண்டான். அவர் உண்மையில் நிஷ்டையிலிருக்கிறாரா என்று அறிய புறத்தே கிடந்த பாம்பை வில்லால் எடுத்து அவர் கழுத்தில் போட்டுவிட்டு தன் நகரத்தை அடைந்தான். ஆசிரமம் அடைந்த சமீக முனிவரின் புத்திரன் தந்தை நிஷ்டையிலிருப்பதையும், அவர் கழுத்தில் ஓர் உயிரற்ற பாம்பு கிடப்பதையும் கொண்டு கோபம் கொண்ட அவன் கண்கள் சிவக்க கவுசீக நதியில் இறங்கி ஆசமனம் செய்து தந்தையை அவமதித்த அரசன் இன்றையிலிருந்து ஏழாவது நாளில் என்னால் தூண்டப்பட்ட தக்ஷகன் என்ற, கொடிய சர்ப்பம் தீண்டி இறக்கட்டும் எனச் சாபமிட்டான். பிறகு பாம்புடை கழுத்தைக் கண்டு துக்கத்துடன் கதறி அழுதான்.

சப்தம் கேட்டுக் கண் விழித்த சமீக முனிவர் பாம்பை எடுத்து எறிந்துவிட்டு, தனது புத்திரன் மூலம் நிகழ்ந்தவற்றை எல்லாம் அறிந்து புத்திரனைக் கொண்டாடாமல், அரசர் வந்தபோது உபசரியாமல் இருந்ததற்கும், தன் புத்திரன் அவருக்கு இட்ட சாபத்திற்காகவும் மிக்க வருத்தமுற்றார். மன்னனுக்காகப் பச்சாதாபப்பட்டார். அரசன் செய்த தவறை மறந்தும் விட்டார். மன்னன் பரீக்ஷித்து தன் பிழைக்காக வருந்தி, தவறு செய்த அவனுக்கு ஏற்படக்கூடிய விபத்தைப் பற்றியும் அவனது ராஜ்யம், செல்வம் எல்லாம் அழிந்து விடும் என்றும் எண்ணிச் சிந்தித்தான். மேலும் ரிஷி சாபம் தனக்கு அனுகூலமானதே. உலகில் பற்று கொண்டு உழலும் தனக்கு விரக்தி ஏற்பட தக்ஷகன் விஷச்சுவாலை தேவையே. அந்த அக்கினியால் தனது பாபங்கள் தொலையும் என எண்ணி மகிழ்ச்சியுற்றான். பின்னர் இகபரசுகங்கள் அநித்யம். எனவே அவற்றிலிருந்து விடுபட்டு ஸ்ரீகிருஷ்ண சரணங்களைத் தியானித்துக் கொண்டே, கங்கைக் கரையில் பிராயோபவேசம் செய்ய நிச்சயித்தான் பரீக்ஷித்து.

புறப்படும் நேரத்தில் அத்திரி, வசிஷ்டர், ப்ருகு, ஆங்கீரசர், பரத்வாஜர், தேவலர், மைத்ரேயர், நாரதர் ஆகிய ரிஷிகள் அங்கு வந்தனர். அவர்களைத் தக்க வகையில் உபசரித்து கீழ்க்கண்டவாறு கூறினான். தங்கள் தரிசனம் கிடைத்தது என் பாக்கியம். வைராக்கியம் ஏற்படவே பிராம்மண சாபத்தைப் பகவான் அருளினார். தங்களையும் கங்காதேவியையும் வணங்குகிறேன். தக்ஷகன் என்னைக் கடிக்கட்டும். முனிவர்களிடம் ஹரிநாம கீர்த்தனை செய்யுமாறும், தனக்கு எப்பிறவியிலும் கிருஷ்ண பக்தி குறையாமல் இருக்கவும் பிரார்த்தித்தான். அரசை புத்திரன் ஜனமேஜயனிடம் ஒப்படைத்து கங்கையைக் கரையில் வடக்கு நோக்கி தர்ப்பாசனத்தில் அமர்ந்தான். சியாமள வர்ண மேனியுடன், புன்சிரிப்பு தவழ ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் ஒளிரும் சுகப்பிரம்மத்தை எல்லோரும் எழுந்து வரவேற்று ஆசனத்தில் இருக்கச் செய்தனர். பின்னர் பரீக்ஷித் அவரை நோக்கி, ஆத்ம சொரூபியான அவர் அதிதியாக வந்து அனைவரையும் தூய்மையாக்கி விட்டதாகக் கூறினான். மரண சமயத்தில் அவர் தரிசனம் கிடைத்தது கிருஷ்ணன் அருளால்தான் என்றான்.

மேலும் பரீக்ஷித்து அவரைத் தனக்கு குருவாக இருந்து அந்த மரணத்தருவாயில் உபதேசம் செய்ய வேண்டினான். மரணத்தருவாயில் இருப்பவன் எதைச் செய்ய வேண்டும்? எதைக் கேட்க வேண்டும்? எதை ஜபிக்க வேண்டும்? யாரை பஜனை செய்து உபாசனை செய்ய வேண்டும்? என்றும் செய்யத் தகாதவை பற்றியும் கூறி அருளுக சுகப்பிரம்மத்தினிடம் வேண்டிக் கொண்டான். மிக்க மகிழ்ச்சி கொண்ட அவரும் பதில் கூறலானார் என்று சூத பவுரானிகர் சனகாதி ரிஷிகளுக்குக் கூறினார்.

(இத்துடன் முதல் ஸ்கந்தம் முடிவுற இரண்டாவது ஸ்கந்தம் சுகப்பிரம்மத்தின் பதிலுடன் ஆரம்பிக்கிறது.)

9. சுகப்பிரம்மம் கூறிய பதில்

பரீக்ஷித்திற்கு சுகதேவர் மகிழ்ச்சியுடன் பதில் கூறலானார். பரதகுல சிரேஷ்டனே! மோக்ஷத்தை விரும்புகிறவன் ஸ்ரீகிருஷ்ண சரித்திரத்தையே சிரவணம் செய்து, அவரது லீலைகளையே கானம் செய்து, அவரது நினைவிலேயே ஆழ்ந்திருந்தால் மரண காலத்தில் ஸ்ரீமந் நாராயணனுடைய நினைவு கட்டாயம் ஏற்படும். இதுவே பிறவிப்பயன். இது மிக்க இன்பத்தையும் அளிப்பது. ஸ்ரீமத் பாகவத புராணம் வேதத்திற்குச் சமமானது. புரு÷ஷாத்தமனிடத்திலே சிறந்த பக்தியுள்ள உமக்கு நான் இதை அளிக்கிறேன். பகவத் சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர்க்கு வெகு விரைவில் முகுந்தனிடத்தில் இணையற்ற பக்தி ஏற்படும். கர்வாங்கன் என்ற ராஜரிஷி ஒரு முகூர்த்த காலமே ஆயுள் பாக்கி இருந்த நிலையில் ஆசைகளைத் துறந்து, சர்வ சங்க பரித்யாகம் செய்து, ஸ்ரீ ஹரியின் சரணங்களையே தியானித்து அச்சமற்ற நிலையை-சாயுஜ்ய பதவியை அடைந்தான். சுகப்பிரம்மம் மேலும் கூறினார்,

உமக்கோ ஆயுள் இன்னும் ஏழு நாட்கள் உள்ளன. சரீர உறவுகளில் உள்ள பற்றுதலை வைராக்கியம் கொண்டு அகற்றிவிட வேண்டும். பிறகு புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, தூய்மையான ஏகாந்த இடத்தில், ஆசனத்தில் அமர்ந்து பிராணாயாமத்தினால் மனத்தை அடக்கி, புனிதமான பிரணவ மந்திரத்தை இடைவிடாது மானசீகமாக ஜபம் செய்ய வேண்டும். மனதை பகவானுடைய மங்களச் சொரூபத்தில் நிலைபெறச் செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் நிர்மலமான ஆனந்தமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரமபதம். திடமான தாரணையால் ரஜோகுணத்தால் ஏற்படும் மனக்கலக்கம், தபோ குணத்தால் மோகம் உண்டாகும். அவற்றை திடமான தாரணையால் விலக்க வேண்டும் என்றார்.

தாரணையை எங்கு, எப்படிச் செய்ய வேண்டும் என்று பரீக்ஷித்து கேட்டார். சுகமான இருக்கையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, பற்று நீக்கி, சுவாசத்தை ஒழுங்காக்கி, பகவானின் ஸ்தூல வடிவத்தில் மனதைச் செலுத்தித் தாரணை செய்ய வேண்டும். இந்தப் பிரபஞ்சமே பகவானுடைய விராட்ஸ்வரூபம். எல்லாமே அதனுள் அடக்கம். ஏழு ஆவரணங்களை உடைய பிரம்மாண்ட கோசமான இந்தச் சரீரத்திலே விராட் புருஷனாக விளங்குகின்ற பகவானே தாரணைக்கு உரியவர். சத்ய சொரூபியாகவும், ஆனந்த நிதியாகவும் விளங்கும், அந்தப் பரம்பொருளே தியானத்துக்கு உகந்த வஸ்து. அந்தத் திவ்ய வடிவத்தையே பூஜிக்க வேண்டும். மற்ற ஆசைகளை விட்டுவிட வேண்டும்.

ஸ்ரீஹரியையே இடைவிடாமல் பூஜிக்க வேண்டும். அவரே சகல மங்களங்களையும் தரவல்லவர். தமது இதயாகாசத்திலே வசிக்கின்றவரான சங்க, சக்ர, கதா, பத்மபாணியாக விளங்கும் சதுர்புஜ மூர்த்தியாகிய பரம புருஷனையே இடைவிடாமல் தாரணை செய்து தியானிக்கின்றனர். இவ்வாறு சுகமுனிவரால் கூறப்பட்ட பகவானுடைய மகிமைகளைக் கேட்டதும், பரீக்ஷித்து மகாராஜன் அனைத்தையும் துறந்து பகவான் வசுதேவரிடத்திலேயே மனதைச் செலுத்தினார். பின்னர், சுகமுனிவரை நமஸ்கரித்து தன் அஞ்ஞானம் விலகி விட்டதென்று கூறி, பகவான் தனது மாயாசக்தியினால் இப்பிரபஞ்சத்தை எவ்வாறு சிருஷ்டி செய்கிறார் என்பதை அறிய விரும்பி அதைச் சொல்ல வேண்டி முனிவரை வேண்டினான். அப்போது பரீக்ஷித்தை நோக்கி சுகமுனிவர், ஸ்ரீஹரியானவர் ஸ்வயம்புவான பிரம்மதேவருக்கு உபதேசித்ததை அவர் நாரதருக்கு உபதேசித்தார். அவ்வாறு அவர் உபதேசித்தவற்றையே நான் உமக்குக் கூறுகிறேன் என்று சுகமுனிவர் கூற ஆரம்பித்தார்.

நாரத முனிவர் பிரம்ம தேவனிடம் ஆத்ம தத்துவத்தைத் தனக்கு உபதேசித்தருள வேண்டினார். மேலும், அவரே சிருஷ்டி கர்த்தாவாக இருந்தும், அவரைக் காட்டிலும் வேறாக உள்ள ஈசுவரர் யார்? என்று கேட்டார். அதற்கு பிரம்மத்தேவர் என்னைக் காட்டிலும் ஆதாரமாயிருப்பவர் ஒருவர் இருக்கிறார். இவ்வுலகம் முழுவதுமே பரவாசுதேவனுடைய சக்தியினாலேயே விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த அண்ட சராசரங்கள் யாவும் அவருடைய திவ்ய விபூதிகளேயாகும். சக பிரபஞ்ச சிருஷ்டிகளுக்கும் காரண கர்த்தாவாக விளங்குகின்ற ஸ்ரீவாசுதேவரைத் தியானிப்போமாக. அளவற்ற மகிமை வாய்ந்த பகவானின் லீலா விநோதங்களை உனக்குக் கூறுகிறேன் என்று நாரதரிடம் பிரம்மதேவன் கூற ஆரம்பித்தார். அவர் பகவானுடைய அவதாரங்கள் கணக்கிடலங்கா. சில முக்கிய அவதாரங்களைக் கூறுகிறேன் என்றார்.

10. பகவானது அவதாரங்கள்

1. ஆதியில் யக்ஞவராக மூர்த்தியாக அவதரித்து ஹிரண்யாக்ஷனை கூரிய பற்களால் குத்திக் கிழித்து வதம் செய்தார். இது வராக அவதாரம்.
2. ருசி, ஆஹுதி என்ற தம்பதிகளுக்கு கயக்ஞன் என்ற புத்திரனாக அவதரித்து தேவதைகளைத் தோற்றுவித்து அவர்களுடைய துயர்துடைத்து ஹரி என்றழைக்கப்பட்டார். இது யக்ஞாவதாரம்.
3. கபிலராக அவதரித்து, தாயாரான தேவஹூதிக்குப் பிற்காலத்தில் பிரம்ம வித்தையை உபதேசித்து, முக்குண தோஷங்களிலிருந்து விடுவித்து கபிலருடைய உருவத்தில் லயித்து முக்தி அடையச் செய்தார். இது கபிலாவதாரம்.
4. அத்ரி மகரிஷிக்குப் புத்திரனாகத் தோன்றிய தத்தாத்திரேய அவதாரம்.
5. பிரம்மன் பலவகை உலகங்களைச் சிருஷ்டி செய்யத் தவம் செய்தபோது திருப்தி அடைந்த பகவான் ஸனத் குமாரர், ஸனக, ஸந்தன, ஸனத் சுஜாத என்ற பெயருடன் நால்வராகத் தோன்றி மகரிஷிகளுக்கு ஆத்ம வித்தையை மீண்டும் உபதேசித்தார். இது குமாரவதாரம்.
6. தக்ஷகுமாரியான மூர்த்தி என்பவளுக்கு நர, நாராயண சொரூபியாக அவதரித்து, இந்திரியங்களை ஜபிப்பது எப்படி என்பதை எடுத்துக் காட்டினார். இது நரநாராயண அவதாரம்.
7. வேனன் என்ற மன்னன் கீழாக சுதியை அடைந்தபோது ரிஷிகள் வேண்டுகோளுக்கு இணங்கி, அவனுக்குப் புத்திரனாய்ப் பிறந்து அவனை நரகத்திலிருந்து விடுவித்து, பிருகு சக்கரவர்த்தியாக, பூமியைப் பசுவாகச் செய்து சகல வஸ்துக்களையும் கறந்து உலகை ரக்ஷித்தார். இது பிருகு அவதாரம்.
8. நாபி என்ற அரசனுக்கு மகனாகப் பிறந்து, முற்றும் துறந்த முனிவராக, ஆத்ம சொரூபத்திலே ஆழ்ந்து சஞ்சரித்தது ரிஷபாவதாரம்.
9. ஒரு சமயம் நான் செய்த யாகத்தில் பொன்னிறமான மேனியுடன் யக்ஞ சொரூபியாக, வேதமூர்த்தியாக பகவான் விளங்கினார். அவருடைய மூச்சுக்காற்றிலிருந்தே வேதங்களும் தோன்றின. இது ஹயக்ரீவாவதாரம்.
10. பிரளய காலத்தில் மறைந்த வேதங்களை மீட்க பகவான் மீனாகத் தோன்றியது மத்ஸ்யாவதாரம்.
11. தேவாசுரர்கள் அமிருதத்துக்காகப் பாற்கடலைக் கடைந்தபோது மத்தான மந்தரமலையை முதுகிலே தாங்கிட எடுத்ததோர் அவதாரமே கூர்மாவதாரம்.
12. தேவர்களுடைய துன்பத்தை நீக்கவும், பக்த பிரகலாதனைக் காக்கவும் ஹிரண்யகசிபைக் கொல்லத் தூணிலிருந்து தோன்றியது நரசிம்மாவதாரம்.
13. அதிதி தேவிக்குப் புத்திரனாகப் பிறந்து மகாபலிச் சக்கரவர்த்திக்கு அனுக்கிரகம் செய்ய வாமனனாகத் தோன்றி மூன்றடி மண்ணை யாசித்தது வாமன அவதாரம்.
14. பகவான் மக்களின் நோய்களைத் தீர்க்க ஆயுர்வேதமென்னும் வைத்திய சாஸ்திரத்தை அளித்தது தன்வந்திரி அவதாரம்.
15. ஜமத்கினி முனிவரின் திருமகனாய்த் தோன்றி, பரசுவைக் கையிலேந்தி பிராம்மணத் வேஷிகளான அரசர்களை அழித்த அவதாரம் பரசுராமாவதாரம்.
16. இஷ்வாகு குலத்தில் தசரத குமாரனாகத் தோன்றி இராவணாதியரை அழித்ததோர் அவதாரம் ராமாவதாரம்.
17. கம்சன், சிசுபாலன், ஜராசந்தன் போன்ற அசுர அரக்கர்களைக் கொன்று பூமியை ரக்ஷித்த அவதாரம் பலராம, கிருஷ்ணாவதாரம்.
18. கல்கியாக அவதரித்து கலியை அடக்குவார். அந்த அவதாரம் கல்கி அவதாரம்.
19. துருவனுக்குத் துருவபதம் அளித்தது, கஜேந்திரனுக்கு மோக்ஷம் தந்தது போன்ற அற்புதங்களை நிகழ்த்தியவர் மகாவிஷ்ணு.

இவ்வாறு பகவானால் பிரம்மாவுக்கு உபதேசித்ததும், அவர் நாரதர்க்கு உபதேசம் செய்ததுமான பாகவத புராணத்தை முனிவர் பரீக்ஷித்துக்குக் கூறி அருளினார்.
அப்போது பரீக்ஷித்து மிக்க பாக்கியம் உள்ளவரே! நான் உயிரை விடும்போது எனது மனம் சர்வாத்மாவாகிய ஸ்ரீகிருஷ்ணனிடத்திலேயே ஒன்றி இருக்குமாறு உபதேசியுங்கள் என்று பரீக்ஷித்து சூதமுனிவரிடம் பிரார்த்தித்தான்.
(இரண்டாவது ஸ்கந்தம் முடிவு பெற்றது.)

11. விதுரரும் உத்தவரும்

பாண்டவர் தூதராகச் சென்ற கிருஷ்ணன், துரியோதனன் மாளிகையை அடையாமல், அழையாதபோதும் விதுரர் இல்லம் சென்றார். அந்தப் புனித கிரகத்தை விட்டு விட்டு விதுரர் கானம் செல்ல வழியில் மைத்ரேயரைச் சந்தித்து ஆத்மஞானம் பெற்றார். கண்ணுடன் அறிவும் குருடாக இருந்த திருதராஷ்டிரன் பாண்டவர்களை அரக்கு மாளிகையில் இட்டு அக்னி ஊட்டியது. திரவுபதியை நடுச்சபையில் துகில் உரித்து அவமானம் செய்தது. பிறகு, பாண்டவர்களில் தருமராஜன் சூதாட்டத்தில் அனைத்தையும் இழக்க, அவர்கள் பன்னிரண்டு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாத வாசமும் செய்ய நேரிட்டது. பின்னரும் தூது சென்ற கிருஷ்ணனை அவமதித்து ராஜ்யபாகம் கண்டு நீதிகளை எடுத்துரைத்தார். அவையே விதுர நீதி என்று விளங்குவது. இந்த நீதி உரைகள் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் ஆயிற்று. மேலும், இதனால் கோபம் கொண்ட துரியோதனாதியர் ஆத்திரம் கொண்டு அவரைத் துரத்துமாறு கூச்சலிட, அவர் மிகவும் நிதானமாக, தன் கை வில்லையும், அம்பையும் அரண்மனை வாசலிலே வைத்துவிட்டுத் தீர்த்தயாத்திரை சென்றார்.

பல திவ்ய ÷க்ஷத்திரங்களைத் தரிசித்து, ஸ்ரீவிஷ்ணுவுக்குப் பிரீதியான விரதங்களை அனுஷ்டித்து சஞ்சரித்துக் கொண்டிருந்த அவர் கடைசியில் பிரபாச தீர்த்தக்கரையை அடைந்தபோது குரு÷க்ஷத்திரப் போரில் கவுரவர் குலநாசம், பாண்டவர் வெற்றி கேட்டு வருந்தினார். பின்னர், மேலும் பல இடங்களுக்குச் சென்று யமுனை நதிக்கரையை அடைந்த அவர் அங்கு சிறந்த உத்தவ முனிவரைச் சந்தித்து யாதவர்கள் நலம் பற்றி விசாரித்தார். உடனே கிருஷ்ணபக்தியில் திளைத்து இருந்த அவர், அந்த ஆனந்த நிலையிலிருந்து மனித உலகிற்கு வந்து கண்ணீர் விட்டுக் கதறினார். கிருஷ்ணன் மறைவையும், வெற்றி பெற்றும் பாண்டவர் உற்சாகமற்றிருப்பதையும் எடுத்துரைத்தார். யாதவர்கள் பகவானின் மகிமைகளை அறியவில்லை. தரிசனம் செய்தது போதும் என்று திருப்தி அடையாமல் இருக்கும் போதே நம்மைப் பிரிந்து போய் விட்டார். அவருடைய லீலைகளை நினைத்தால் உள்ளம் உருகுகின்றது. சிசுபாலன், கம்சன் போன்றோரை விளையாட்டாகத் தண்டித்தார்.

அந்த பகவான் சாந்தீபினி முனிவரிடம் குருகுலத்தில் கற்றார். குரு தக்ஷிணையாக மரணம் அடைந்த குருபுத்திரனை உயிர் பெறச் செய்து சமர்ப்பித்த மாயாஜாலம் எவ்வளவு சிறந்தது. தேவி ருக்மிணியை மணந்தது, நரகாசுரனை வதைத்தது, எட்டு பட்ட மகிஷிகளை மணந்து வர்ணாசிரம தருமங்களைத் தவறாமல் அனுஷ்டித்தது ஆகியவற்றை எண்ணி பிரமித்தார். குரு÷க்ஷத்திரப் போரில் அருச்சுனனுக்குச் சாரதியாக கீதோபதேசம் செய்த கபடநாடக சூத்திரதாரியை நினைவு கூர்ந்தார். பூபாரத்தைக் குறைக்க யாதவ குலமே அழியவேண்டுமெனத் தீர்மானித்தார். ஒரு சமயம் துவாரகையில் யதுகுமாரர்களும், போஜர்களும் விளையாடிக் கொண்டிருந்த உற்சாகத்தில் பிராமணர்களைக் கேலி செய்து அவமதிக்க அவர்கள் சபித்தனர். அதன் காரணமாக யாதவர்கள் மதுவினால் அறிவிழந்து, பரஸ்பர துவேஷத்தாலும், கலகத்தாலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு இறந்தனர். அதே சமயம் பகவானும் சரஸ்வதி நதி தீரத்தில் ஆசமனம் செய்து ஒரு அரச மரத்தினடியில் தனியாக அமர்ந்திருந்து மாயாசக்தியால் யாதவர் அழிவை அறிந்தும் மவுனமாக இருந்தவர் என்னை பதரிகாசிரமம் செல்லுமாறு பணித்தார். தனியே அவரை விட்டுச் செல்ல மனமில்லாமல் அங்கேயே நின்றேன்.

அப்போது இடது தொடை மேலே, வலது பாதத்தை வைத்துச் சாய்ந்தபடியே, அன்னபானம் துறந்து, புன்னகை வதனத்துடன் ஆனந்த சொரூபியாகக் காட்சி அளித்தார். அது கண்டு மெய் மறந்த நிலையில் நான் இருக்கையில், மைத்ரேயர் அங்கு வந்தார். இருவரையும் பகவான் அனுக்கிரகித்து பின்வருமாறு கூறினார்: உத்தவ, உன் எண்ணத்தை நான் அறிவேன். உன் ஆசைப்படி இவ்வுலகத்தை விட்டுச் செல்லுகின்ற என்னை ஏகாந்தத்தில் தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றாய். முன் கல்பத்தில் பிரம்மனுக்கு எனது மகிமைகளை எடுத்துக் கூறினேன். அதுவே பாகவதம். அதனை எனக்கு உபதேசம் செய்தார். அப்போது கண்ணீருடன் உத்தவர், கிருஷ்ணனின் பாதகமலங்களைத் தொட்டு, கண்ணா! உமது சரணார விந்தங்களைப் பூஜிப்பவர்களுக்குக் கிடைக்காதது எது? எனக்கு புருஷார்த்தங்களில் ஆசை இல்லை. உமது சரண சேவையே போதுமானது, என்றும், ஆத்ம ஞானநீதியைப் பெற்று வந்திருப்பதாகக் கூறினேன். அவர் கட்டளைப்படி பதரிகா சிரமம் சென்று கொண்டிருப்பதாக உத்தவர் கூறினார். அப்போது விதுரர், பகவான் அருளிய ஆத்ம தத்துவ ரகசியத்தை உபதேசிக்க வேண்டிட, அதனை உமக்கு சொல்லும்படியாக மைத்ரேயரிடம் பகவான் கூறியுள்ளார். எனவே அவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறி உத்தவர் பதரிகாசிரமம் நோக்கி புறப்பட்டார்.

12. யக்ஞவராக மூர்த்தி

சிறந்த ஞானியும், பகவத் குணங்களிலேயே ஆழந்திருப்பவருமான மைத்ரேயரை, விதுரர் கங்கத் துவாரத்திற்குச் சென்று வணங்கினார். அவரிடம் விதுரர், எதைச் செய்வதால் சாந்தியும், அகமும் உண்டாகுமோ அதைக் கூறியருளுமாறு வேண்டினார். புண்ணியகீர்த்தி வாய்ந்த ஸ்ரீஹரியினுடைய திவ்ய சரிதாம்ருத ஸாரத்தை வழங்குங்கள் என்றார். அப்போது மைத்ரேயர் விதுரரைப் புண்ணியவான் என்றும் பகவான் அருளைப் பெற்றவர் என்றும், அதனாலேயே உமக்கு ஞானோபதேசம் செய்யும்படி பகவான் எனக்கு ஆணையிட்டுள்ளார் என்றும் கூறினார். பகவானுடைய யோக மாயா சக்தியினால், உண்டாகிய விராட் சிருஷ்டியின் ரகசியங்களையும் பிரம்ம தேவரின் உற்பத்தியையும் அவரால் செய்யப்பட்ட சிருஷ்டி விசேஷங்களையும் கால சொரூபியாகிய பகவானின் மகிமைகளையும், காலத்தின் பிரிவுகளையும் ஸ்வாயம்பு மனுவின் பிறப்பையும் விரிவாக உரைத்தார்.

ஸ்ரீகிருஷ்ண பகவானின் அருட்கடாட்சத்தினாலும், இடைவிடாத பத்தி யோகத்தினாலும் துயரங்கள் மெள்ள மெள்ள விலகிவிடுகின்றன. பின்னர் மைத்ரேயர் விதுரர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பிரம்ம புத்திரர் ஸ்வாயம்பு மனுவின் சரித்திரத்தைக் கூறுகிறார்: ஸ்வாயம்பு மனு, தன் மனைவியாகிய சமரூபையுடன் பிரம்ம தேவரை வணங்கி என்ன செய்ய வேண்டுமென்று கேட்க, அவர் தர்மநீதி தவறாமல் மக்களைப் பாதுகாத்து வருவாயாக. இது தனக்குச் செய்யும் பணிவிடை. மேலும் யக்ஞங்களால் ஸ்ரீஹரியை ஆராதிப்பதால் பகவான் ஹிருஷிகேசர் சந்தோஷமடைகிறார் என்றார். அப்போது ஸ்வாயம்புமனு, தனக்கும் பிரஜைகளுக்கும் தங்குவதற்கு இடம் இல்லை. பூமி கடலில் மூழ்கிக் கிடக்கிறது. அதனை உயரக் கொண்டு வருவது எப்படி என்று கேட்டார். அதுகேட்ட பிரம்மன் பகவானைத் தியானிக்க அவருடைய மூக்குத் துவாரத்திலிருந்து கட்டை விரல் அளவு பன்றிக்குட்டி தோன்றி குதித்து, அடுத்த கனமே யானை அளவு வளர்ந்து விட்டது. இது என்ன அதிசயப் பிராணி என்று பிரம்மன் யோசிக்க, மலை போன்ற சரீரத்துடன் வராக வடிவில் பகவான் கர்ஜிக்க ரிஷிகள் மகிழ்ந்தனர். உடனே அந்த வராக ரூபி கடலில் குதித்து, பாதாளம் வரை சென்று, அங்கே மறைந்து கிடந்த பூமியைத் தன்னிரு கொம்புகளால் தூக்கி எடுத்துக் கொண்டு வெளிக்கிளம்பினார். அதைக் கண்ட திதியின் மகன் ஹிரண்யாக்ஷன் கதாயுதத்துடன் பகவானை நோக்கி ஓடிவந்தான். அந்த அசுரனை வராக ரூபியான விஷ்ணு விளையாட்டாகவே கொன்றார். அப்போது ரிஷிகளால் துதி செய்யப்பட்ட பகவான் பூமியை நீரில் மிதக்கச் செய்துவிட்டு மறைந்தார். (இது வராக அவதாரம்)

13. ஜயவிஜயர்கள் பெற்ற சாபம்

மேலும், விதுரர்க்கு மைத்ரேயர் கூறினார்: பிரம்ம குமாரர்கள் சனகாதி முனிவர்கள் நால்வரும் பகவானைத் தரிசிக்க வைகுண்டம் சென்றனர். பகவானுடைய குண வைபவங்களையே ஆனந்தமாக கானம் செய்கின்ற மகான்களே அங்கு செல்ல முடியும். முனிவர் நால்வரும் வைகுண்டத்தில் கிரீட குண்டலங்களையும், பலவகை ஆபரணங்களையும், வனமாலையும் அணிந்து, கதாயுதத்தைக் கையிலேந்தி நின்கின்ற இரு துவாரபாலகர்களைக் கண்டனர். அவர்கள் முனிவர்களைக் கைப்பிரம்பினால் தடுத்து நிறுத்தினார். அவ்வாறு தடுத்தவர்கள் மீது கோபம் கொண்டு, பாபிகளான காமம், குரோதம், லோபம் என்ற மூன்று சத்துருக்களாலும் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பூலோகத்திற்குச் செல்லக் கடவீர் எனச் சபித்தனர். உடனே, துவார பாலகர்கள் முனிவர்களின் பாதங்களில் விழுந்து மன்னிக்க வேண்டினர். அவ்வமயம் அங்கு பகவான் ஸ்ரீதேவியுடன் சனகாதி முனிவர்களுக்குக் காட்சி அளித்தார்.

முனிவர்கள் பரமானந்தம் அடைந்து எம்பெருமானைத் தரிசித்தனர். மற்றும் துவாரபாலகர்களாகிய ஜய விஜயர்களைச் சபித்ததற்காக மன்னிப்பு வேண்டினர். அப்போது பெருமான் ஜயவிஜயர்கள் எனது பார்ஷதர்களே என்றாலும் தண்டனைக்கு உரியவர்களே. உங்களை அவமதித்ததை நான் பொறுக்கமாட்டேன். எனவே, அவர்கள் தண்டனையை அனுபவிக்கட்டும் என்றார். அப்போது பகவான், இந்த சாபம் தன்னாலேயே ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் அசுரப் பிறவியை அடைந்து, என்னைத் துவேஷித்து, விரோத பாவத்தால் என்னையே நினைப்பதாகின்ற யோகத்தைச் செய்து மறுபடியும் என்னையே வந்தடைவர் என்றார்.

பின்னர் சனத்குமாரர்கள் பகவானை வலம் வந்து வணங்கி, விடைபெற்று ஸ்ரீஹரியின் குணகீர்த்தனங்களை ஸ்மரணம் செய்து கொண்டே சென்றனர். பகவான் ஜயவிஜயர்களை நோக்கி, முனிவர்களை அவமதித்ததின் பலனை அனுபவித்து, மறுபிறவியில் துவேஷ புத்தியால் என்னையே நினைத்து சீக்கிரமாகவே என்னை வந்து அடைவீர்கள் என்று கூறினார். ஜயவிஜயர்கள் காசியபர், திதி தம்பதியருக்கு ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று பிறந்து பகவானால் முறையே வராக அவதாரம், நரசிம்ம அவதாரங்களில் கொல்லப்பட்டு வைகுண்டம் அடைந்தனர்.

14. கர்த்தமர், ஸ்வாயம்பு மனு

ஸ்வாயம்பு மனுவுக்கு சதரூபை என்பவளிடம் பிரியவிரதன், உத்தானபாதன் என்ற இரண்டு புதல்வர்களும், ஆஹுதி, தேவஹுதி, பிரசூதி என்ற மூன்று பெண்களும் தோன்றினர். ஆஹுதி ருசியையும், தேவஹுதி கர்த்தம பிரஜாபதியையும், பிரசூதியை தக்ஷரும் மணந்தனர். பிரம்ம தேவன் கர்த்தமரைப் பார்த்து, பிரஜைகளைச் சிருஷ்டி செய் என்று ஆணையிட்டார். கர்த்தமர் சரசுவதி நதிக்கரையில் ஸ்ரீமந் நாராயணரைக் குறித்து நெடுங்காலம் தவம் செய்ய, ஸ்ரீஹரி காட்சி அளிக்க, கர்த்தமர் அவரைச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். அப்போது பகவான் கர்த்தமரை அனுக்கிரகித்துக் கூறினார். ஸ்வாயம்பு மனு, மனைவியுடன் இங்கு வருவார். அவர் மகள் தேஹுதியை மணந்து தரும பத்தினியான அவளுடன் இல்லற தர்மத்தை நடத்தி தூய உள்ளத்துடன் எல்லாவற்றையும் எனக்கே சமர்ப்பணம் செய்து முடிவில் என்னை வந்து அடைவாய் என்றார்.

மேலும் தேவஹுதியிடம், நானே அம்சாவதாரமான கபிலராக அவதரித்து தத்துவ ஸாங்கியத்தை உபதேசிக்கப் போகிறேன் என்று கூறி பகவான் மறைந்து விட்டார். அவ்வாறே மனுவும், சதரூபையும் தேவஹுதியுடன் வந்து மகரிஷியிடம் செய்தி கூற, முனிவர் இவளுக்குச் சந்தானம் ஏற்படும் வரையில் இல்லறத்தில் இருப்பதாகவும், பின்னர் பரமஹம்ச சந்நியாச தர்மத்தை அனுஷ்டிக்க விரும்புவதாகவும் கூறினார். மனு தனது நகரத்துக்குச் சென்று தருமநெறியில் சுகங்கள் அனுபவித்து ஆட்சி செய்து வந்தார். ஸ்ரீவாசுதேவருடைய நினைவிலேயே வாழ்நாட்களை ஆனந்தமாகவும், சாரமுள்ளதாகவும் கழித்து வந்தார். பகவான் நினைவிலேயே ஒன்றிக் கிடந்த அவருக்கு, மூவகையான தாபங்களும் நீங்கி விட்டன. இதுவே அரச சிரேஷ்டராகிய ஸ்வாயம்பு மனுவின் வரலாறு. அடுத்து தேவஹுதியின் குணநலங்கள், வரலாறு ஆகியவற்றை மைத்ரேயர் கூறலானார்:

கர்த்தமரும், அவர் மனைவி தேவஹுதியும்

தேவஹுதி தன் கொழுநனான கர்த்தமரின் மனமறிந்து மகரிஷி சிரத்தையுடன் பணிவிடை செய்து வந்தாள். ஒருநாள் கர்த்தமர் மனைவியிடம் அவளது பக்தியையும் தொண்டையும் கண்டு மனமகிழ்ச்சி அடைந்ததாகவும், அவள் மீது அவர் தயை கொண்டதாகவும் உரைத்தார். அவர் தான் அடைந்த பகவத் பிரசாதத்தை அவளும் பெற்றிருப்பதாகவும், அந்த திவ்ய சக்திகளைக் கண்டு மகிழ ஞானக்கண் தருவதாகவும் கூறி, அவள் விரும்பினால் திவ்ய போகங்களை அனுபவிக்கலாம் என்றார். பிறகு, யோக சித்தராகிய கர்த்த மகரிஷி ஒரு விசித்திர விமானத்தைச் சிருஷ்டி செய்தார். மனைவியை அருகிலுள்ள நதியில் நீராடி வருமாறு கூறினார். நதியில் மூழ்கிய தேவஹுதி ஆங்கோர் அழகிய அரண்மனையைக் கண்டாள். பணிப்பெண்கள் அவளுக்கு சேவை செய்து அவர் சிரமத்தைப் போக்கினர். கர்த்தமர் மனைவியுடன் விமானத்தில் ஏறிட இருவரும் உல்லாசமாகச் சஞ்சரித்தனர். இந்தத் தம்பதிகளுக்குப் பல ஆண்டுகள் கழித்து ஒன்பது பெண்கள் பிறந்தனர்.

கர்த்தமர் தன் பிரதிக்ஞைப்படி வீட்டை விட்டுப் புறப்பட்டார். அப்போது அவர் மனைவி, அவர் வனம் சென்ற பிறகு தனக்கு ஆறுதல் அளிக்க யாருளர்? என்றும், தமது பெண்களுக்குத் தகுந்த கணவனைத் தேடி யார் விவாகம் செய்து வைப்பர் என்றும் வருத்தத்துடன் கேட்டாள். அப்போது பகவான் கூறின மொழிகள் கர்த்தமருக்கு நினைவுக்கு வர, அவர் மனைவியிடம் கவலைப்பட வேண்டாம். உன் ஸ்ரீஹரி அருளால் அவளுக்கு சர்வ மங்களங்கள் உண்டாகும் என்று கூறினார். பிறகு தேவஹுதி மனஅமைதியுடன் பகவானை பஜனை செய்து கொண்டிருந்தாள். பல நாட்களுக்குப் பிறகு அத்தம்பதிகளுக்கு பகவான் மதுசூதனர் புத்திரனாகத் தோன்றினார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

பகவானுடைய அவதாரத்தைக் காண பிரம்மதேவரும், மரீசி முதலான ரிஷிகளும் கர்த்தமர் ஆசிரமம் வந்தனர். கர்த்தமரைப் புகழ்ந்தனர். தேவ ஹுதியிடம், அவள் பாக்கியசாலி என்றும், பகவான் கபிலர் என்ற பெயருடன் கீர்த்தியைப் பரவச் செய்வார் என்றும் கூறிச் சென்றனர். கர்த்தமர் பிரம்மாவின் ஆணைப்படி தனது ஒன்பது புத்திரிகளையும் மரீசி, அத்திரி, ஆங்கீரசர், புலத்தியர், புலகர், கிரது, பிருகு, வசிஷ்டர், அதர்வா என்ற ஒன்பது மகரிஷிகளுக்கு விவாகம் செய்து கொடுத்தார்.

15. கபிலர்

சிலகாலம் சென்றபின் கர்த்தமர் தனது புத்திரனாகிய கபிலரை இரகசியமாகச் சந்தித்து வணங்கிக் கூறலானார், இந்த எளியவன் கிரகத்தில் எங்கள் பாக்கியவசத்தால் அவதரித்தீர். தத்துவ சொரூபியும், காலச் சொரூபியுமாகிய தங்களை வணங்குகிறேன். ஒரு வேண்டுகோள். எனக்கு எல்லா ஆசைகளும் பூர்த்தியாகி விட்டன. இனிமேல் நான் சந்நியாச ஆசிரமத்தை மேற்கொண்டு, இதயத்தில் தங்களையே தியானித்துக் கொண்டு சோகமின்றி சஞ்சரிக்க வேண்டுகிறேன். அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது கபிலர் கர்த்தமரிடம், ஆத்மஞான மார்க்கத்தின் உண்மை தத்துவத்தை உலகில் பரப்பவே தான் அவதரித்திருப்பதாகவும், கர்த்தமருக்க அனுமதி தருவதாகவும் கூறினார். மேலும் எல்லாச் செயல்களையும் அவருக்கே அர்ப்பணம் செய்து, சம்சார தாபங்களை வென்று மோட்சம் அடைய அவரையே உபாசித்துப் பஜனம் செய்யுமாறும் அறிவுரை கூறினார்.

பின்பும் சகல கர்மபந்தங்களையும் நிவர்த்தி செய்யும் அத்யாத்ம வித்தையை தாயாருக்கு உபதேசம் செய்யப்போவதாகவும், அதனால் அவள் சம்சார தாபங்களிலிருந்து விடுபட்டு அபயத்தை அடைவாள் என்றும் கூறினார். கர்த்தம ரிஷி ஸ்ரீஹரியிடமே மனத்தைச் செலுத்தி சாந்தமாக இருந்தார். அவர் எல்லா ஜீவராசிகளிடமும் பகவானையே கண்டார். விருப்பு, வெறுப்பு நீக்கி சமச்சித்தராகி பகவத் பக்தியினால் ஸ்ரீஹரியினுடைய பரமபதத்தை அடைந்தார்.

தாய்க்குக் கபிலர் தத்துவோபதேசம்

கபிலதேவர், தாயாரைத் திருப்தி செய்வதற்காக பிந்து ஸரஸ்ஸிலேயே தங்கி இருந்தார். ஒருநாள் தாயான தேவஹுதி, குமாரனை நோக்கி, அஞ்ஞான இருளில் சிக்கி அல்லல்படும் எனக்கு ஞானமார்க்கத்தைக் காட்டியருள வேண்டும். பிரகிருதி, புருஷ விவேகத்தை உபதேசித்து மோட்சத்தை அருளுக. உம்மையே சரணடைந்தேன் என்றாள். கபிலர் மகிழ்ச்சி கொண்டு கூறலானார்: அன்னையே, சுகதுக்கங்களிலிருந்து விடுபட அத்யாத்ம மார்க்கமே சிறந்தது. மனித சமூகத்துக்கு அதுவே சாந்தியும், ÷க்ஷமமும் உண்டாக்கும். மனமே ஆசை கொண்டு பந்தத்தில் சிக்க வைக்கிறது. எனவே, ஆசையை அகற்றி பகவானை அணுகி வாழும் மனதில் மோக்ஷ விருப்பம் உண்டாகிறது. ஆத்ம விடுதலை கிடைக்கின்றது.

நான், எனது என்பது நீங்கிட சித்த சுத்தி ஏற்படுகின்றது. சுக துக்கங்களைச் சமமாக எண்ணும் சமநிலை ஏற்பட பக்தி யோகமே சிறந்த உபாயமாகும். சாது சங்கமே மோக்ஷசாதனம். பிராணிகளிடம் அன்பும், கருணை உள்ளமும் கொண்டு என் மீது நிலையான பக்தி கொண்டு, எனது சரிதத்தைக் கேட்டு, படித்து, சொல்லுவதில் சாதுக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே, சாது சங்கத்தில் இருங்கள். அதனால் பக்தி சிரத்தையும், மோக்ஷ விருப்பமும் உண்டாகும். சாதுக்கள் மக்கள் உள்ளங்களில், விடுதலையில் விருப்பத்தையும், பகவானிடம் பிரேம பக்தியையும் ஏற்படச் செய்கின்றனர். சாதுக்கள் புலன்களை அடக்கி, பிரகிருதியிலிருந்து விடுபட்டவராய், ஆசை நீக்கி வைராக்கியத்தால் வளர்ந்த ஞானத்தாலும், யோகமுயற்சியாலும், பக்தியாலும், முதல் கர்த்தாவாகிய என்னை இச்சரீரத்திலேயே அடைந்து விடுகின்றர் என்றார்.

அப்போது தேவஹுதி, அவளைப் போன்ற பெண்டிர் செய்யக்கூடிய மார்க்கம் எத்தன்மையது? என்று கேட்டாள். அதற்கு கபிலர் ஆத்ம சொரூப தத்துவங்களாகிய ஞான யோகம், பக்தி யோகம் பற்றிக் கூறலானார். தூய உள்ளம் பெற்றவரின் கர்மேந்திரிய, ஞானேந்திரியங்கள் ஸ்ரீஹரியிடமே ஒன்றிக்கிடத்தலே சிறந்த பக்தி யோகம். கோரிக்கையற்ற பக்தி முக்தியை விட சிறந்தது. இடைவிடாமல் எனது பாத சேவையில் ஈடுபட்டு, என்னைப் பற்றியே பேசிக் கொண்டு மகிழ்ச்சி கொள்வோர் அந்தப் பிரேமையினால் மோக்ஷத்தைக் கூட விரும்புவதில்லை. அப்படி அவர்கள் மோக்ஷத்தை விரும்பாவிட்டாலும் கூட அவர்களுடைய பக்தி அவர்களைப் பரமபதத்திற்கு அழைத்துச் செல்கிறது. எல்லாமாய் என்னை எண்ணி வழிபடும் பக்தர்கள் கெடுவதில்லை. காலக்கிரமத்தாலும் துன்பப்படுவதில்லை. பற்றற்று என்னைப் பூஜிக்கின்றவன் சம்சார தாபத்திலிருந்து காப்பாற்றப்படுகிறான். திடமான பக்தி யோகத்தினாலேயே மக்கள் ÷க்ஷமம் அடைகின்றனர் என்று தத்துவோபதேசம் செய்தார் கபிலர். கபிலர் தாயார்க்கு மேலும் ஆத்மத் தத்துவங்களின் லக்ஷணங்களைத் தனித்தனியே பிரித்துக் கூறலானார். ஆத்ம ஸ்வரூப தரிசன ஞானமே ஜீவனுக்கு மோக்ஷ பிரதான காரணமாகும்.

எங்கும் நிறைந்து, நிர்க்குண, நிராதரமாய், பிரகிருதிக்கு அப்பாற்பட்டு, உயிர்களனைத்திலும் அந்தராத்மாவாக ஒளிர்பவராய் தானே ஜோதி ஸ்வரூபனாய், ஆதி அந்தமற்ற ஆத்மாவே புருஷன். புருஷன் பிரகிருதியின் சுக துக்கங்களில் சம்பந்தப்படுவதில்லை. எனவே, மனதை தீவிரபக்தி, வைராக்கியம் யம நியமாதி யோக மார்க்கங்களால் ஒருமுகப்படுத்தி சிரத்தையாக என்னையே நினைத்து சத்திய நெறியில் சம பாவத்துடன் ஜீவராசிகள் இருக்க வேண்டும். நான், என்னுடையது என்பதை மறந்து, கிடைத்ததைத் திருப்தியுடன் புசித்து, அனைவரிடமும் நட்பு, தயவு கொண்டு பிரகிருதி புருஷ விவேகத்தை அடைய வேண்டும். இப்படி நிர்மல மனதுடன், பயனேதும் எதிர்பாராமல் ஞான வைராக்கியத்துடன் தபோமயமான வாழ்வை நடத்தும் புருஷனது அஞ்ஞானம் தானாகவே நசிந்து மறைந்து விடும். திட மனதுடன் பூசிக்கும் பக்தர்கள், எனது அருள் சக்தியினால் தத்துவ ஞானம் பெறுவர். அவர்களின் சந்தேகங்கள் விலகி முடிவில் எனது திவ்ய பதத்தை அடைந்து இணையற்ற ஆனந்தத்தைப் பெறுகிறார்கள். அஷ்டமா சித்திகளில் பற்றற்றவன் எனது பதத்தை அடைவான்.

அடுத்து கபில மகரிஷி யோக லக்ஷணங்களை எடுத்துக் கூறலானார். யோக விதிகளை அனுஷ்டிப்பதால் மனம் தெளிந்து சன்மார்க்கத்தில் சென்றும், சுய தர்மத்தை அனுஷ்டித்து, உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியுற்று, ஆத்மஞானிகளின் சரணங்களைப் பூஜித்து அஹிம்சையைப் பின்பற்றித் தனியாக வசித்து வரவேண்டும். இந்திரியங்களை வென்று, மவுன விரதத்துடன் பகவானை ஆராதித்து வரவேண்டும். ஆதார ஸ்தானங்களில் ஓரிடத்தில் மனதையும், பிராணனையும் நிலைக்கச் செய்து பகவானுடைய லீலைகளைத் தியானிக்க வேண்டும். பிராணாயாமத்தினால் வாத, பித்தங்களையும், தாரணையினால் பாபங்களையும், பிரத்தியாகாரத்தினால் உலக சம்பந்தங்களையும், தியானத்தினால் தீயகுணங்களையும் விலக்கி, தூய நிலைபெற்ற மனதுடன் பகவானுடைய திவ்ய சவுந்தர்ய வடிவத்தைத் தியானம் செய்ய வேண்டும்.

பகவான் பீதாம்பரம் அணிந்து, ஸ்ரீவத்ச மார்பில் கவுஸ்துப மணி ஒளி, கிரீடம், கங்கணம், நூபுரம், தோள் வளைகள் ஆகியவற்றுடன் மனோகரமான அழகுடன், காண்போர் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சாந்தம், இளமை உடைய கண்ணனை அன்புடன் தியானிக்க வேண்டும். இவ்வாறு மனம் ஒன்றுபடும் வரை நன்றாகத் தியானிக்க வேண்டும். எல்லா அங்கங்களிலும் மனம் ஒன்றிவிட்ட பிறகு அவற்றைத் தனித்தனியாகத் தியானித்துப் பழக வேண்டும். பகவானுடைய கருணாகடாக்ஷம் மூவகை தாபங்களையும் போக்கி விடும். பகவானின் புன்சிரிப்பு மகரிஷிகளையும் மோகிக்கச் செய்வதால் அதுவே தியானத்திற்கு உகந்ததாகும். தியான யோக அப்யாசத்தினால் மனம் கனிந்த சாதகன் பக்திப் பெருக்கினால் உள்ளம் உருகி மகிழ்ச்சியினால் மெய்சிலிர்த்து, ஆனந்தக் கண்ணீரில் மூழ்கி, இரண்டற்ற நிலையைப் பெருகிறான். அண்ணலின் அருட்சக்தியினாலே மாயையை வென்று, உண்மை சொரூபத்தில் ஒன்றி பிரம்ம சாக்ஷõதிகாரத்தைப் பெற்று ஆனந்தமடைகிறான் என்றார். பின்னர் தேவஹுதி பக்திமார்க்கம் பற்றிக் கூறிட வேண்டினாள். அதற்கு கபிலர் கூறியதாவது:

பக்தி மார்க்கம் பலவகைப்படும்.

1. முன்கோபம், பொறாமை, ஆடம்பரம், பேத புத்தி, இம்சை உடையவன் என்னை வழிபட்டால் அவன் தாமச பக்தன் ஆவான்.
2. உலக சுகங்கள் கோரி ஆராதிப்பவன் ராஜச பக்தன் ஆவான்.
3. பகவானை ஆராதிப்பதே கடமை என்று கருதி எல்லாம் அர்ப்பணம் செய்து பூஜிப்பவன் சாத்வீக பக்தனாவான்.
4. எனது குண வைபவங்களைக் கேட்டு, என் மீது பயன் கருதாமல் கொள்ளும் பிரேமை, எல்லாவற்றிலும் வசிக்கும் என்னிடம் மனதைச் செலுத்துவது நிர்க்குண பக்தி ஆகும். இதுவே சிறந்த பக்தி யோகம். இதைச் செய்பவன் முக்குணங்களையும் கடந்து எனது பதம் அடைகின்றான்.

பக்தன் வைராக்கிய சீலனாக வாழ வேண்டும். பக்தியில் ஆடம்பரம் கூடாது. பிறரை வெறுப்பவன் என்னையும் வெறுப்பவன் ஆவான். அவன் பலவித திரவியங்களாலும் என்னைப் பூஜித்தாலும் நான் திருப்தி அடையேன். உயிர் கூட்டங்களில் உள்ள என்னை மானசீகமாக வணங்கி வரவேண்டும். இவ்வாறு கர்மபலன்களைச் சமர்ப்பித்து தூயமனதுடன், சமதிருஷ்டியுடன் என்னை உபாசிப்பவன் சிறந்தவன். இவையே ஞானயோக, பக்தியோக லக்ஷணங்கள். இவற்றில் ஒன்றை அனுஷ்டித்தாலும் பரம புருஷனை அடையலாம் என்று கூறினார். ஞான சொரூபியாகிய கபிலருடைய இந்த சிறப்பான உபதேசங்களைக் கேட்ட தேவஹுதி ஞான ஒளியைப் பெற்று கபிலரைப் பக்தியுடன் வணங்கிப் பலவாறு துதி செய்தாள்.

கபிலர் தாயாரிடம் விடைபெற்று வடகிழக்கில் சென்றார். அப்போது சித்த, சாரண, கந்தர்வர்கள் எல்லாரும் அவரை வணங்கித் துதித்தனர். புத்திரனின் பிரிவாற்றாமையால் மனம் கலங்கிய தேவஹுதி யோக மார்க்கத்தை மிக்க கவனத்துடன் அனுஷ்டித்துக் கடுமையான தவத்தில் ஈடுபட்டாள். திட வைராக்கியம், தக்க கர்மானுஷ்டானங்கள், தீவிர பக்தி யோகத்தினால் மனத்தூய்மை பெற்ற அவள் பிரம்ம சாக்ஷõத்தார ஞானத்தை அடைந்து, ஆத்ம சொரூபத்திலே நிலைத்த மனத்தை உடையவளாகப் பரமானந்த சுகத்தில் ஆழந்திருந்த அவளுடைய சரீரத்தை ஆசிரமவாசிகளே போஷித்து வந்தனர். கபிலரால் உபதேசிக்கப்பட்ட யோக மார்க்கத்தை அனுஷ்டித்து வெகு சீக்கிரத்திலேயே பகவானுடைய திவ்ய பதத்தை அடைந்தாள். அவள் சித்தி பெற்ற இடம் சித்தி பதம் என்று போற்றப்படுகிறது.


16. நான்காவது ஸ்கந்தம் : துருவன் கதை

(இது விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டு உள்ளது)

துருவன் நற்பதம் பெற்றிட உதவிய நாரதர் உத்தானபாதரிடம் சென்று அவன் முகவாட்டத்தின் காரணம் பற்றி வினவ, மன்னன் துருவனை விரட்டியது பற்றி வருந்திட, நாரதர் பகவான் அருள் பெற்ற துருவனைப் பற்றிக் கூறித் தேற்றினார். அப்போது காட்டிலிருந்து திரும்பி வந்த துருவன் தந்தையையும் தாய்மார்கள் இருவரையும் வணங்கினான். உத்தானபாதன் துருவனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து அரசனாக்கி வைராக்கியம் மேற்கொண்டு வனத்திற்குச் சென்றான். துருவனும், அவனது தாயாரும் இறுதியில் திவ்ய பதத்தை அடைந்தனர். துருவனுடைய மகிமையை நாரத முனிவர் பிரசேதர்களுடைய யாகத்திலே புகழ்ந்து பாடினார். உண்மை தத்துவத்தை அறியாத மக்களுக்கு, பகவத் விஷயமான ஞானாம்ருதத்தைப் புகட்டுபவனுக்குத் தேவர்கள் அருள்புரிவார்கள் என்று விதுரருக்கு மைத்ரேயர் கூறினார். அடுத்து மைத்ரேயர் விதுரருக்குப் பிரசேதசர்களைப் பற்றிக் கூறினார்.

17. புரஞ்ஜனன் சரிதம்

ஒருநாள் ஆத்ம தத்துவத்தை அறிந்த நாரத முனிவர் கர்ம மார்க்கத்திலே ஈடுபட்டிருந்த ப்ராசீன பர்ஹிஷதரைப் பார்க்க வந்தார். அவர் அரசனிடம் அழியாத இன்பத்தைப் பெற மோக்ஷ மார்க்கமே சிறந்தது என்றும் கர்மாக்களால் மோக்ஷ சுகம் கிடைப்பது இல்லை என்றும் கூறினார். அதற்கு மன்னன் நாரத முனிவரிடம் தனக்கு மோக்ஷ மார்க்கத்தை உபதேசிக்குமாறு கேட்டுக் கொண்டான். அப்போது மன்னன் புரஞ்ஜனன் கதையைக் கூறினார் : முன்பு புரஞ்ஜனன் என்றொரு மன்னன் இருந்தான். அவன் பெயர் அவிஞ்ஞாதன்.

ஒருநாள் புரஞ்ஜனன் இமயமலைச் சாரலில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, தெற்குத் தாழ்வரையில் ஒன்பது கோட்டை வாசல்களுடன் கூடிய நகரத்தைக் கண்டான். அதிலே உலாவிக் கொண்டிருக்கும் போது ஓர் அழகிய பெண்மணியைக் கண்டான். அவளுடன் பலப் பெண்மணிகளும், பத்து வேலைக்காரர்களும் இருந்தனர். ஐந்து தலை நாக சர்ப்பம் ஒன்றும் அவளுடன் இருந்து அந்த நகரத்தைக் காத்து வந்தது. அவளைக் கண்டு மயங்கிய மன்னன், அவளுடைய விவரங்களைக் கேட்டான். ஆனால் அவள் அவளைப் படைத்தவரையோ, அந்நகரை அமைத்தவரைப் பற்றியோ அறியாமல் அங்கு வாழ்ந்து வந்தாள். மேலும், அவள் மன்னனிடம் அவன் விரும்பினால் அவளை மணம் புரியலாம் என்றும் கூறினாள்.

அவள் அழகில் மயங்கிய மன்னன், அவளை மணந்து அவள் மோகத்தில் தன் வயது இழந்து, அறிவை இழந்து, அவளுடன் வாழ்ந்து பல மக்களைப் பெற்று, அவர்களுக்கு மணம் செய்வித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தான். ஆண்டுகள் செல்லச் செல்ல மெல்ல இளமை மறைந்து முதுமையும் வந்தது. அச்சமயத்தில் கால கன்னிகை, ப்ரஜ்வாரன் ஆகிய மிருத்யுவின் சேனா வீரர்கள் அந்நகரை முற்றுகையிட்டுத் தாக்கினர். அதனால் சுகபோகம், செல்வம் அனைத்தையும் இழந்தான் அவன். அப்போது ப்ரஜ்வாரன் என்ற விரோதி அந்நகரத்தை எரிக்க, அதைக் காத்து வந்த சர்ப்பம் ஓடிவிட்டது. நகரமும் அழிந்தது. மரண சமயத்தில் புரஞ்ஜனன் தன் மனைவியின் நினைவிலேயே இருந்ததால் மறுபிறவியில் விதர்ப்ப நாட்டரசனின் மகளாகப் பிறந்தான். அவளை மலயத்வஜ பாண்டியன் வீர கப்பமாகப் பெற்று மணம் செய்து கொள்ள அத்தம்பதியருக்கு ஒரு பெண்ணும், ஏழு புத்திரர்களும் பிறந்தனர். அவர்களே திராவிட நாட்டு மன்னர்களாக இருந்தனர். அந்தப் பெண்ணை அகஸ்தியர் மணந்தார்.

பிறகு மலயத்வஜன் அரசை குமாரர்களிடம் ஒப்படைத்துவிட்டு குலாசலம் என்ற மலைச்சாரலில் சென்று ஸ்ரீ வாசுதேவரை ஆராதித்து வந்தார். அவள் மனைவியும் அவனைப் பின் தொடர்ந்தாள். ஒருநாள் தியானத்தில் மூழ்கியிருந்த மன்னனின் மனைவி அவன் பாதங்களைப் பூசிக்க ஆரம்பித்தாள். மன்னன் மகா சமாதியில் ஆழ்ந்து விட்டான். பாதங்கள் சில்லிட்டன. கணவனுடன் சகமனத்துக்கு முற்பட்டு தீயை வலம் வருகையில் அங்கொரு அந்தண சிரேஷ்டர் தோன்றினார். அவர் முற்பிறவியில் புரஞ்ஜனனின் நண்பனாக இருந்த அவிஞ்ஞாதன். அவன், தாமிருவரும் இணைபிரியாத நண்பர்களாய் அன்னப் பறவைகளாக மானசரோவரத்தில் வசித்ததை நினைவூட்டினான். மேலும் அவர்கள் இருவருமே சுத்த சொரூபிகள் என்றும் அவன் வைதர்ப்பி என்பதும் மாயையே ஆகும் என்றும் கூறினான்.

இவ்வாறு சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டுப் பெண்ணாகிய முற்பிறவி புரஞ்ஜனன் முன் நினைவு பெற்று தன் உண்மை சொரூப ஞானத்திலே நிலைத்தவனாக ஆனந்தத்தை அடைந்தான். இந்தக் கதையைத் தொடர்ந்து நாரதர், பர்ஹிஷித்ரிடம், ஆத்ம நலனில் ஆசையுள்ள புருஷன் பகவான் வாசுதேவரையே பூசிக்க வேண்டும். அவரது சரித்திரத்தைக் கேட்க வேண்டும். திவ்ய நாமங்களை உச்சரிக்க வேண்டும். அதனால் பக்தி யோகம் நிலைபெற்று ஞானமும், வைராக்கியமும் விருத்தியாகும். அப்படிப்பட்டவர்களுக்குப் பகவான் அனுக்கிரகம் செய்கிறான். ஸ்ரீஹரி சரணங்களையே சரண் அடைந்தவர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கும் என்றார். பிறகு நாரதர் ஜீவாத்மா, பரமாத்மா சொரூபத்தைத் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டு அவனிடம் விடைபெற்று சித்தலோகம் சென்றார்.

18. பிரியவிரதர் வரலாறு

பிரியவிரதர், மனுவின் மற்றொரு புத்திரர். அவர் ஒரு சமயம் நாரத முனிவரைச் சேவித்து ஆத்ம சொரூப ஞானத்தை சுலபமாக அறிந்து, அதனால் பிரம்ம தியானம் என்ற பிரம்ம ஸத்ரயாகத்தைச் செய்ய விரும்பினார். ஆனால், அவருடைய பிதா ஸ்வயம்புவர் அவரைப் பூமியைப் பரிபாலித்து வரும்படி உத்தரவிட்டார். எனினும், தந்தையின் ஆணையை மறுத்துவிட்டு தவம் செய்யப் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த பிரம்மதேவர், பிரிய விரத! நீ பத்மநாப சரணாரவிந்தக் கோட்டைக்குள் வசிப்பவன். ஆறு பகைவர்களையும் வெற்றி கண்டவன். ஆகவே, பகவத் கிருபையால் கிடைத்துள்ள சுகபோகங்களை அனுபவித்து இல்லறத்தை நல்லறமாக்கிப் பிறகு ஆசைகளைத் துறந்து, ஆத்ம நிஷ்டையின் ஆனந்தத்தைப் பெறுவாயாக என்று கூறினார். பின்னர், பிரிய விரதர் அவ்விதமாகவே செய்வதாகக் கூறினார். பிரம்மதேவரும் தமது திவ்ய லோகத்துக்குச் சென்றார். மனு மிக்க மகிழ்ச்சியுடன், நாரதர் அனுமதி பெற்று பிரியவிரதருக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார். விசுவகர்மாவின் புத்திரி பர்ஹித்மதியை விவாகம் செய்வித்தார். பிரியவிரதருக்கு பத்து புத்திரர்களும், ஊர்ஜஸ்வதி என்ற ஒரு புத்திரியும் பிறந்தனர். அவர்களுள் கவி, மகாவீரன், வைனன் என்ற மூன்று குமாரர்களும் சிறுவயது முதலே ஆத்ம வித்தையில் ஆவலுடையவர்களாகிப் பரமஹம்ஸா சிரமத்தை அடைந்தனர்.

பிரியவிரதர் ஏழு சமுத்திரங்களையும், ஏழு தீவுகளையும் வகுத்து அவற்றில் தனது ஏழு குமாரர்களையும் மன்னர்களாக முடி சூட்டினார். மகள் ஊர்ஜஸ்வதியை அசுரகுரு சுக்கிராச்சாரியருக்கு மணம் செய்து கொடுத்தார். பிரியவிரதருக்கு நாளடைவில் இல்லறத்தில் வெறுப்பு ஏற்பட ஒருநாள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வைராக்கியத்துடன் ஸ்ரீஹரியின் லீலா வைபவங்களைப் பாடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்து நாரத முனிவரால் உபதேசிக்கப்பட்ட வழியைப் பின்பற்றிச் சென்றார். ஆசிரதரர் பிதாவினால் அளிக்கப்பட்ட ஜம்பூத்வீபத்தை நீதியுடன் ஆண்டு வந்தார். பூர்வசித்தியை மணந்து ஒன்பது புத்திரர்களைப் பெற்று நாட்டை ஒன்பது கண்டங்களாகப் பிரித்து புத்திரர்களிடம் ஒப்படைத்து பூர்வசித்தியுடன் பிரம்மலோகம் சென்றார்.

19. நாபிக்காக மகரிஷிகள் பெற்ற வரம்

அக்ஸிதருடைய மூத்த குமாரன் நாபி என்பவன் மேரு தேவியை மணந்தான். வெகுநாட்கள் புத்திர பாக்கியமின்றி ஸ்ரீமந் நாராயணரை யாகத்தில் ஆராதித்து வழிபட்டு வந்தான். அவன் பக்தி சிரத்தையால் செய்யப்பட்ட பூஜையினால் திருப்தி அடைந்த பகவான், நாபியின் விருப்பத்தை நிறைவேற்ற அவனுக்குத் தரிசனம் தந்தருளினார். அந்த திவ்ய சொரூபத்தைக் கண்ட நாபியும், மற்ற சபையோர்களும் ருத்விக்குகளும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். ருத்விக்குகள் பகவானைத் துதி செய்தனர். நன்மையைத் தரக்கூடியது எது என்று அறியாத எங்களுக்கு குணநிதியாக விளங்குகின்ற தாங்கள் கருணை கூர்ந்து அனுக்கிரகித்தருள வேண்டும். வரமளிப்பதில் சிறந்தவராகிய தாங்கள், இந்த ராஜரிஷியின் யாகசாலையில் வந்து தரிசனமளித்ததே ஒரு சிறந்த வரம். எனினும், ஒரே ஒரு வரத்தை மட்டும் யாசிக்கிறோம். அனுக்கிரகிக்க வேண்டும்.

பரிசுத்தமாகிய தங்கள் திவ்ய நாமங்கள் எங்கள் நினைவிலே, நாவிலே, எப்போதும் நிலைத்து நிற்க, மரணத்திலும் கூட உன் அருள் தர வேண்டும். உமது லீலா வைபவங்களைக் கூறுகின்ற அந்த திவ்ய நாமங்கள் தானாகவே எங்கள் வாக்கிலே வரவேண்டும். இதோ இந்த ராஜரிஷியானவர் தங்களுக்கொப்பான புத்திரனைப் பெற விரும்புகிறார். நாங்கள் மிக்க அவிவேவிகள். அல்பமான ஆசையை நிறைவேற்றிக் கொள்ள தங்களை இங்கு வரச்செய்து சிரமம் அளித்துவிட்டோம். மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தனர். அப்போது பகவான் அவர்களைப் பார்த்து, எனக்குச் சமமானவன் நானே தான். உங்கள் வாக்கு பொய்யாமல் இருக்க இந்த நாபியினுடைய புத்திரனாக, எனது அம்சாவதாரமாக அவதரிக்கப் போகிறேன் என்று அருள்பாலித்து மறைந்தார்.

நாபிச் சக்கரவர்த்தியினாலும், மகரிஷிகளாலும் நன்கு ஆராதித்துப் பூஜிக்கப்பட்ட பகவான் மேருதேவியிடம் சுத்த சத்வமான சரீரத்துடன் அவதரித்தார். தன் விருப்பப்படியே பெற்ற குழந்தைக்கு ரிஷப தேவர் என்று பெயரிட்டு நாபிச் சக்கரவர்த்தி சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தார். மாயையின் காரணமாக சக்கரவர்த்தி பகவானே குழந்தையாகி வந்ததை மறந்து அதனை அன்புடன் வளர்த்து வந்தார். பகவான் ரிஷபதேவரும், குருகுலவாசம் செய்து குருவுக்குத் தக்ஷணை கொடுத்து, அவர் அனுமதி பெற்று இந்திரனால் அளிக்கப்பட்ட ஜயந்தியை மணந்து கிரகஸ்த தர்மங்களை நன்கு அனுஷ்டித்து வந்தார். அவருக்கு மக்கள் நூறு பேர் பிறந்தனர். அவர்களில் மூத்த மகன் பரதன் நல்லாட்சி செய்த காலத்தில் தான் இந்நாடு பாரத தேசம் எனப்பட்டது.

ஒரு சமயம் பிரம்மாவர்த்தம் என்ற திருத்தலத்தில் பிரம்ம ரிஷிகள் கூடியிருக்க, அங்கு ரிஷபதேவர் புத்திரர்களுடன் சென்றார். அப்போது ரிஷபதேவர் அவர்களுக்கு சில அறிவுரைகளைக் கூறினார். அழிவற்ற ஆத்ம சுகத்தையும், சித்த சுத்தியையும் அளிக்கின்ற தபோ மயமான வாழ்விலே ஈடுபட வேண்டும். சாது சங்கமும், சாதுக்களின் சேவையுமே சாலச் சிறந்தது. ஆத்ம சொரூபத்தை அறிந்தவனுக்குக் கர்மபந்தம் ஏற்படுவதில்லை. அஞ்ஞானமே ஆத்ம சொரூபத்தை மறைக்கின்றது. பகவான் ஸ்ரீ வாசுதேவனிடத்தில் தூய பக்தி உடையவர்க்கு சரீர பந்தம் அற்றுவிடும். மனத்திலே திடமான வைராக்கியம் ஏற்படும்போது அகங்காரம் நீங்கி, சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டு, பரமனைத் தியானித்து பரமபதத்தை அடைகிறான். யோக சாதனைகளாலும், தவ வாழ்வினாலுமே புருஷன் எங்கும் பகவத் சொரூபத்தைக் காண்கின்றான். ஆத்ம ஞானம் பெறகிறான்.

சம்சார பந்தத்தில் உழன்று, துன்பப்படுகிறவனுக்குப் பக்தி மார்க்கத்தை உபதேசித்து, அவனைப் பிறவிப் பிணியிலிருந்து காத்து ரக்ஷிக்க வேண்டும். அப்படிச் செய்யாதவன் குருவுமல்ல; தந்தையுமல்ல; தாயுமல்ல; பதியுமல்ல, தெய்வமுமல்ல; உற்ற பந்துவுமல்ல. உங்கள் சகோதரன் பரதனை அன்புடன் அனுசரித்துப் பொறாமையின்றி, பிரஜைகளை ரக்ஷியுங்கள். அதுவே எனக்குச் செய்யும் பூஜையாகும் என்று ரிஷபதேவர் கூறினார். கருணையுள்ள அவர் மக்களுக்கு ஆத்ம வித்தையையும், பயமுற்ற நிலையையும் உபதேசித்தார். முடிவில் காட்டில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கையில் காட்டுத் தீயினால் எரிக்கப்பட்டு தனது பூத உடலை நீத்தார்.

20. ஜடபரதர் சரித்திரம்

(ஜடபரதர் சரித்திரம், ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் காண்க)

அஜாமிளன் சரித்திரம்

கன்யாகுப்ஜம் என்ற நகரில் அஜாமிளன் என்றொரு ஒழுக்கம் கெட்ட பிராமணன் இருந்தான். அவன் தீயவன். அவனுக்குப் பத்து புத்திரர்கள் பிறந்தனர். அவர்களை சீராட்டிப் பாராட்டி மகிழ்ச்சியோடு காலம் கழிய அவன் மிக்க முதுமையை அடைந்தான். அவனுக்குக் கடைசி மகன் நாராயணனிடம் அன்பு, பாசம், நாளுக்கு நாள் அதிகம் ஆக அக்குழந்தையைச் சிறிது நேரம் கூட பிரியாமல் இருந்தான். அவன் மரண படுக்கையில் படுத்தான். அவன் உயிரை எடுக்க மூன்று யமகிங்கரர்கள் வந்தனர். அவர்களைக் கண்டு பயந்து அவன் நாராயணா! நாராயணா! எங்கே இருக்கிறாய்! ஓடிவா எனக் கூவி அழைத்தான். இவ்வாறு மரணகாலத்தில் ஸ்ரீஹரி நாமத்தை உச்சரித்தால் விஷ்ணு பாதர்கள் அங்கே வந்து யமதூதர்களைத் தடுத்தனர். அவ்வாறு தடுத்து அவர்களிடம் எந்தச் செயலைச் செய்தவர்கள் யமதண்டனைக்கு உரியவர்கள் என்று விஷ்ணு பாதர்கள் கேட்டனர்.

சாக்ஷõத் ஸ்ரீஹரியே வேதம். வேதம் கூறுவதே தர்மம். எல்லாமே சரீரம் படைத்த ஜீவன்கள். அவை குணங்களின் சேர்க்கையால் நல்ல (அ) தீய செயல்களைச் செய்கின்றன. பிரகிருதியின் தொடர்பினால் இழிவான நிலை ஏற்படுகிறது. பகவானிடம் பற்றுதல்களால் அவை மறைந்து விடும். இந்தப் பிராமணன் காமவசனாகி தர்மத்திலிருந்து நழுவினான். ஒரு வேசியுடன் கூடி பிள்ளைகளைப் பெற்றான். எல்லோரிடமும் நிந்தனை பெற்ற இவனை யமதர்மராஜனிடம் அழைத்துச் செல்லப் போகிறோம் என்றனர் யமகிங்கரர்கள். நாராயணர் என்ற பகவான் நாமத்தைக் கடைசி காலத்தில் கூறுபவனிடம் உள்ள சகல பாபங்களும் நீங்கிவிடுகின்றன. இவன் மரணகாலத்தில் பகவன் நாமத்தை நன்கு உச்சரித்ததால் சகல பாப பரிகாரங்களும் செய்தவனாகிறான். எனவே, இவனை நீங்கள் கொண்டு போக வேண்டாம் என்றனர் விஷ்ணுபாதர்கள். மேலும் இவன் மந்திரத்தின் மகிமையை அறியாமலே சொன்னாலும் அதன் நற்பயனை அடைகிறான். எனவே இவன் பாபமற்றவன் என்றனர்.

இவ்வாறு அஜாமீளன் யமபாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டான். அவன் விஷ்ணு தூதர்களை வணங்கி ஏதோ சொல்ல நினைக்க அவர்கள் மறைந்து விட்டனர். பின்னர் அவன் தான் செய்த அதர்மங்களை எண்ணி மிகவும் பச்சாதாபப்பட்டான். ஏதோ சிறிதளவு புண்ணியவசத்தால் தேவசிரேஷ்டர்கள் தரிசனம் கிடைத்தது. இனி பகவானின் நாம ஸங்கீர்த்தனத்தில் உள்ளத்தை தூய்மையாக்கி, இதயத்தைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்று எல்லா ஆசைகளையும் துறந்து, கங்காத் துவாரத்துக்குச் சென்றான். அங்கே இந்திரியங்களை அடக்கி யோகத்தை அனுஷ்டித்து, மனதைப் பரமபுருஷனிடமே செலுத்தினான். ஒருநாள் அஜாமிளனுக்கு விஷ்ணு பார்ஷதர்கள் கண்முன் தோன்ற அவர்களைப் பூஜித்து வணங்கி, தன்னுடலை கங்கையில் அர்ப்பணித்து பார்ஷத சரீரத்தைப் பெற்றான். உடனே விஷ்ணு தூதர்களுடன் அவன் பொன் மயமான விமானத்தில் ஏறி, வைகுண்டத்தை அடைந்தான். அகஸ்திய பகவானிடம் இக்கதையைக் கேட்ட சுகப்பிரம்மம் பரீக்ஷித்துக்குக் கூறினார்.

21. சித்திரகேது சரிதம்

சூரசேன தேசத்தரசன் சித்திரகேது. அவன் ஆட்சியில் எங்கும் சுபிக்ஷம் நிலவியது. அவனுக்குப் பல மனைவியர் இருந்தும் புத்திர பாக்கியம் இல்லை. ஒருநாள் அவன் அரண்மனைக்கு ஆங்கிரச முனிவர் வந்தார். அவரை வரவேற்று, அதிதி பூசை செய்து உபசரித்த மன்னன் தனக்குப் புத்திர பாக்கியம் இல்லாத குறையைக் கூறி, அப்பேறு பெற அருள்புரியுமாறு வேண்டினான். அப்போது ஆங்கீரச முனிவர் ஒரு யாகம் செய்து, அந்த யக்ஞ பிரசாதத்தை அவன் பட்டமகிஷியான கிருதத்யுதிக்கு கொடுக்கச் சொன்னார். சில காலம் கழித்து ஒரு புத்திரன் பிறந்தான். சித்திரகேதுவின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஆனால், கொடியவர்களான மற்ற பத்தினிகள் பொறாமையின் காரணமாக அக்குழந்தைக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டனர். அந்தத் துக்கத்தைத் தாங்கமுடியாமல் அரசனும், கிருதத்யுதியும் அழுது புலம்பினர். அவ்வமயம் அங்கு வந்த நாரதரும், ஆங்கீரஸ முனிவரும் அரசனிடம், காலவெள்ளத்தில் உயிர்கள் ஒன்று சேர்ந்து பின்னர் பிரிந்து விடுகின்றன. சரீரம் நிலையற்றது. ஜீவன் மட்டுமே அழிவற்றது. எனவே அஞ்ஞானம் அகற்றி பரமாத்மாவிடம் மனதைச் செலுத்தி ஆறுதல் கொள்க என்று கூறினர்.

சோகத்தினால் நிறைந்த அவன், அவர்களை யார் என்று வினவ, புத்திரனுக்காக யாகம் செய்துவித்த ஆங்கீரச முனிவரேதான் என்றும், அடுத்தவர் நாரதர் என்றும் அரசனுக்கு ஞானம் புகட்டவே வந்ததாகவும் கூறினார். மேலும் சூரசேனன் அவரது உண்மை நிலையை அறிந்து, அமைதி பெற்று பரம புருஷரான வாசுதேவரையே தியானம் செய்து பெருமை அடையுமாறு உபதேசம் செய்தனர். நாரதர் ஒரு மந்திரத்தை உபதேசம் செய்து, இதைச் சிரத்தையாக ஜபித்தால் ஏழு நாட்களில் பகவான் சங்கர்ஷருடைய தரிசனம் கிட்டும். அவர் அனுக்கிரகத்தினால் சோக, மோகங்கள் நீங்கி சாந்தி அடைந்து, ஆனந்தம் கொள்ளலாம் என்றார். பின்னர் அவர் தனது யோக சக்தியினால் மரணமடைந்த அரசகுமாரனை பிழைக்கச் செய்து ஓ! ஜீவாத்மாவே, உனது பெற்றோர் உனது மரணத்தினால் மிக்கத் துயரத்தில் உள்ளனர். நீ மறுபடியும் இந்த உடலிலேயே பிரவேசித்து அரசைப் பெற்று மகிழ்வாயாக என்றார்.

அதற்கு அந்த ஜீவன், பிறவியைப் பெற்ற ஜீவன் நித்தியமானவன். அகங்காரமற்றவன். பெற்றோரிடம் காணப்படும் வரையில்தான் அவர்களுடன் உறவு, ஜீவன் தனது மாயா குணங்களாலேயே தன்னைப் படைத்துக் கொள்கிறான். அவன் எப்போதும் சுதந்தரன். ஆகவே எனக்கும், உங்களுக்கும் எவ்வித உறவும் இல்லை என்று கூறி மறைந்து விட்டது. பின்னர், விவேகம் பெற்ற அரசனுக்கு நாரதர் மந்திர உபதேசம் செய்தார். (ஓம் நமோ பகவதே மஹாபுருஷாய மஹானுபாவாய மஹாவிபூதி பதயே சகல-சத்ய பரிவ்ருட-நிகர-கரகமல-குட்மலோப லாலித சரணார விந்த யுகள பரம, பரமேஷ்டிந்-நமஸ்தே)

சித்திரகேது மந்திரத்தை ஏழுநாட்கள் தண்ணீர் மட்டும் அருந்தி, மிக்க சிரத்தையுடன் ஜபித்து வந்தான். முடிவில் ஜப மகிமையினால் வித்யாதரர்களுக்கு அரசனாகிச் சில நாட்களில் பகவான் ஆதிசேஷருடைய தரிசனம் பெற்றான். அப்போது பகவான் புத்திசாலியான புருஷன் என்னிடத்திலேயே மனதைச் செலுத்திப் பக்தியோகத்தைச் செய்ய வேண்டும். சகல பிரபஞ்சமும், ஆத்மாவும், பரமாத்மாவும் ஒன்றே என்று அறிய வேண்டும். அதுவே ஜீவனுக்கு ÷க்ஷமத்தையும், பிறவிப் பயனையும் அளிக்கக் கூடியது பகவான் அருளி மறைந்து விட்டார். இவ்வாறு சித்திர கேதுவின் வரலாற்றை சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறி முடித்தார்.

22. பிரகலாதன் சரித்திரம்

(விஷ்ணு புராணத்தில் காண்க)

23. கஜேந்திர மோக்ஷம்

நாரதர் யுதிஷ்டிரருக்குக் கூறியதை சுகர் பரீக்ஷித்துக்குக் கூறினார் என்று சூத பவுராணிகர் கூறி முனிவர்களுக்கு கூறினார். தாமஸ (நான்காவது) மந்வந்திரத்திலே பகவான் ஹரிமேதஸ் என்பவருக்குப் புத்திரனாகப் பிறந்து, ஹரி என்ற பெயருடன் விளங்கி முதலையால் பிடிக்கப்பட்ட கஜேந்திரனைக் காத்து அருளினார். கஜேந்திரன் முற்பிறவியில் இந்திரத்யும்னன் என்ற பெயரில் பாண்டிய மன்னனாக இருந்தவன். சிறந்த விஷ்ணு பக்தன். ஒரு சமயம் அவன் பர்வதச் சாரலில் ஆசிரமம் அமைத்து அச்சுதனை ஆராதித்து வந்தான். ஒருநாள் அவ்விடம் வந்த அகஸ்திய முனிவரைக் கண்மூடி மவுனியாக இருந்த மன்னன் வரவேற்றுப் பூசிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் அவனை யானையாகச் சாபம் கொடுத்தார். முற்பிறவியில் ஹு, ஹு என்ற கந்தர்வன். தேவரிஷியின் சாபத்தால் முதலைப் பிறவியை அடைந்தான்.

திரிகூட மலையினருகே இருந்த அடர்ந்த காட்டில் கஜேந்திரன், தனது யானைக் கூட்டங்களுடன் வசித்து வருகையில் ஒரு சமயம் தண்ணீருக்காக பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியில் மலையடிவாரத்திலுள்ள குளத்தை அடைந்து, நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருக்கையில் அந்தக் குளத்திலிருந்து பலசாலியான முதலை யானையின் காலை கவ்விப் பிடித்துக் கொண்டது. பின்னர் கஜேந்திரன் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் தவித்தது. முதலையைக் கரைக்கு இழுக்க, முதலை யானையை நீரில் இழுக்க இவ்வாறு பல ஆண்டுகள் கடந்தன. தன் பலம் முழுவதும் இழந்து சோர்ந்த நிலையில் கஜேந்திரன், முற்பிறவியின் பயனாக ஸர்வலோக சரண்யனாகிய ஸ்ரீவிஷ்ணுவைத் தியானித்து துதி செய்தது.

பக்தனாகிய கஜேந்திரனின் துயரைக் கண்ட பகவான், கருடாரூபராய் சக்கராயுதத்துடன் தோன்றினார். கஜேந்திரன் தாமரை மலருடன் கூடிய துதிக்கையைத் தூக்கி நாராயணா, ஆதிமூலமே, பகவானே என்று நமஸ்கரித்தார். உடனே பகவான் சக்கராயுதத்தால் முதலையைக் கொன்று கஜேந்திரனைக் காத்தருளினார். முதலையும் திவ்ய சரீரம் பெற்று பகவானை வணங்கித் துதி செய்தது. கஜேந்திரனும் பகவத் சொரூபத்தைப் பெற்று விஷ்ணு பார்ஷதனாயிற்று. அப்போது பகவான், உதய காலத்தில், தூய மனதுடன் கஜேந்திரன் செய்த துதிகளைப் பாடி ஆராதிக்கிறவர்களுக்கு மரண சமயத்தில் நல்லறிவைத் தருகிறேன் எனக்கூறி மறைந்தார்.

24. அம்ருத மதனம், தேவாசுர யுத்தம்

ஐந்தாவது மனு ரைவதரின் மன்வந்தரத்திலே பகவான் வைகுண்டன் என்ற நாமத்தோடு அம்சாவதாரமாகத் தோன்றினார். சாக்ஷúஷர் என்பவர் ஆறாவது மனுவாக இருந்தபோது மகாவிஷ்ணு அஜுதர் என்ற பெயரில் அவதரித்துப் பாற்கடலைக் கடைந்த தேவர்களுக்கு அம்ருதத்தை வழங்கினார்.

கூர்மாவதாரம் : துர்வாசருடைய சாபத்தால் இந்திரன் செயலற்று இருந்தபோது, தேவர்கள் அசுரர்களால் தாக்கப்பட்டுத் தோல்வி அடைந்து உயிரற்றவர்களாக விழுந்தனர். இதனால் மனம் கலங்கிய தேவர்கள் பிரம்மாவுடன் சென்று ஸ்ரீஹரியிடம் சரணடைந்தனர். அப்போது பகவான், உடனே தாமதமின்றி பாற்கடலைக் கடைந்து அம்ருதத்தை அடைய முயற்சி செய்யுங்கள். அந்த அம்ருதத்தைப் பருகியவன் மரணமற்ற அமர நிலையைப் பெறுவான். சகல ஓஷதிகளையும் பாற்கடலில் இட்டு, மந்திர மலையை மத்தாக வைத்து, வாசுகியைக் கயிறாகக் கொண்டு கடையுங்கள் நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் என்று திருமால் மலர்ந்தருளினார். பின்னர், அசுரராஜனைச் சந்தித்து, நயமாகப் பேசி, சம்மதிக்கச் செய்து, அவன் இஷ்டப்படி ஒப்புக்கொண்டு செயல் புரியுங்கள். மற்றும் அம்ருத மதனத்தின் போது தோன்றும் பொருள்களின் மீது ஆசை கொள்ளாதீர். முதலில் ஆலகால விஷமே தோன்றும் அஞ்சவேண்டாம் என்றார்.

பகவான் கூறியபடியே மகேந்திரன், அசுர அரசன் பலிச்சக்கரவர்த்தியுடன் சிநேகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். பலனில் பங்கு தருவதாகக் கூறி, வாசுகியை நாணாகக் கொண்டு, மந்திர மலையை மத்தாக்கி, பாற்கடலைக் கடைந்தனர். தேவர்களும், ஸ்ரீஹரியும் வால்பக்கமும், அசுரர்கள் முன்பக்கமும் பிடித்துக் கொண்டு கடைந்த போது, மலை கடலில் மூழ்கிவிட அனைவரும் உற்சாகமின்றி இருப்பதைக் கண்ட பகவான் ஓர் ஆமை வடிவில் மந்திரமலையை மேலே தூக்கி நிறுத்தினார். இதுவே கூர்மாவதாரம். கடலிலிருந்து மிகக் கொடிய ஆலகால விஷம் தோன்றிட, அதனை ஜகத்ரக்ஷகராகிய சதாசிவன் உட்கொண்டு அனைவரையும் ரக்ஷித்தார். இதனால் அவர் கழுத்து நீலமாகி நீலகண்டன் என்ற பெயர் பெற்றார். அடுத்து காமதேனு தோன்ற யாகங்களுக்கு உதவியாக இருக்கும் என்று காமதேனுவை ஏற்றுக் கொண்டனர். அடுத்து தோன்றியவை உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற யானை, பாரிஜாதம் என்ற கற்பக விருக்ஷம், பின்னர் தோன்றிய சாக்ஷõத் லக்ஷ்மி தேவி, வனமாலையைக் கையிலேந்தி பகவான் முகுந்தரையே தனது பதியாக வரித்தாள். அவளை ஸ்ரீஹரி தனது மார்பிலே ஏற்றுக் கொண்டனர்.

ஸ்ரீதேவியின் அருளைப் பெற்ற தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஸ்ரீலக்ஷ்மியை அலட்சியம் செய்த அசுரர்கள் சக்தி இழந்தனர். முயற்சி குறைந்தனர். அதிக ஆசையால் வெட்கமடைந்தனர். பிறகு வாருணி என்ற கன்னிகை தோன்றினாள். அவளை அசுரர்கள் ஏற்றனர். மேலும் கடையும்போது ஸ்ரீமகாவிஷ்ணுவின் அம்சமான ஓர் அழகன் அம்ருத கலசத்தை ஏந்தி வந்தார். அவர் யஜ்ஞ பாகத்திற்குரியவர். ஆயுர்வேதத்தை நன்கு அறிந்தவர். அவரே தன்வந்திரி எனப்படுபவர். அசுரர்கள் அவரிடமிருந்து அம்ருத கலசத்தையும் அபகரித்துக் கொண்டனர். தேவர்கள் மனமுடைந்து ஸ்ரீஹரியைச் சரணமடைய, அவர் கலக்கம் வேண்டாம். அம்ருதம் உங்களுக்குக் கிடைக்கும் எனக் கூறி மறைந்தார். அப்போது அம்ருதத்திற்காக அசுரர்கள் தமக்குள்ளேயே போட்டிபோட, அங்கே ஓரழகி தோன்றி இங்குமங்கும் சஞ்சரிக்க, அவளைக் கண்டு அசுரர்கள் பிரமித்து நின்றனர்.

அந்த அழகி மகாவிஷ்ணு கொண்ட மோகினி அவதாரம். அவளைக் கண்டு மோகித்த அசுரர்கள் அம்ருதத்தைத் தங்களுக்குப் பங்கிட்டுத் தருமாறு அந்த மோகினியிடம் அமிர்த கலசத்தைக் கொடுத்து விட்டனர். அப்போது அவள் அசுரர்களிடம் தன் செயலுக்குத் தடை செய்யக்கூடாது என்று புன்சிரிப்புடன் கூற, அவர்கள் சம்மதத்தை ஒரே வாக்காகக் கூறினர். பின்னர் மோகினி தன் செயல்களால் அசுரர்களை மயக்கி, ஏமாற்றி அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கே பங்கிட்டாள். தேவர்கள் எல்லோர்க்கும் அமிர்தம் கிடைத்தபோது மோகினி திடீரென்று மறைந்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட அசுரர்கள் கொதித்தெழுந்திட தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கரப் போர் நடந்தது. அது தேவாசுர யுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

அப்போது பிரம்ம தேவர் நாரத முனிவர்களைத் தேவர்களிடம் அனுப்ப, அவர் தேவர்களிடம் அமிருதபானம் செய்த அவர்கள் இனி பெருமையுடன் வாழப் போவதால் யுத்தத்தை நிறுத்துமாறு சொல்ல யுத்தம் நின்றது. அசுரர்களும் நாரதருடைய சொற்கேட்டு தமது அரசனான பலி மகாராஜனை அழைத்துக் கொண்டு, அஸ்தாசலமென்ற மலைக்குச் செல்ல, அங்கு அவர்கள் குரு சுக்கராச்சாரியால் ஸஞ்ஜீவினி என்ற மந்திரத்தினால் பலியையும், அவயங்களை இழந்த அசுரர்களையும் பிழைக்கச் செய்தார். தன்னை சரணடைந்த தேவர்களுக்கு அம்ருதத்தை அளித்தவரும், அசுரர்களை மோகிக்கச் செய்தவரும், துஷ்டர்களால் அடையக் கூடியவருமாகிய ஸ்ரீஹரியை நமஸ்கரிக்கின்றேன் என்று கூறி வசுதேவர் வணங்கினார்.

25. வாமனாவதாரம்

சிரார்த்த தேவன் ஏழாவது மனுவாக இருந்த மந்வந்தரத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு கச்யபருடைய கடைசி புத்திரராக அவதரித்தார். அனைத்தையும் இழந்த பலிச்சக்கரவர்த்தி குருவினுடைய மந்திர சக்தியினால் உயிர் பிழைத்தான். அவன் தன் குருவையும், பிராமண சிரேஷ்டர்களையும், பக்தி சிரத்தையுடன் சேவித்து வந்தான். அதனால் மகிழ்ச்சி பெற்ற பிருகு குல அந்தணர்கள் பலிக்கு மகாபிஷேகம் செய்து வைத்து விஸ்வஜித் என்ற மஹாயஜ்ஞத்தையும் செய்து வைத்தனர். அந்த யாகத்திலிருந்து ஒரு தங்கமய ரதம், வெண்ணிறக் குதிரை, சிம்மக்கொடி, வில், அக்ஷயதூணீரம். அழகான கலசம் ஆகியவை பலிக்குக் கிடைத்தன. இவ்வாறு பிராமணர்களின் அனுக்கிரகத்தால் கிடைத்த, போருக்கு உபயோகமான பொருள்களைக் கண்டு மகிழ்ச்சியுற்ற பலி, குருவை வணங்கி தேவர்கள் மீது போருக்குப் புறப்பட்டான். இந்திரனின் தலைநகர் அமராவதியை முற்றுகை இட்டான். இதைக் கேட்ட இந்திரன் குருவை வணங்கிட, அவர் கூறிய ஆலோசனைப்படி ஸ்ரீஹரியே இவனை வெல்ல வல்லவர். மேலும் சிலகால மிருந்துப் பின் பலி பிராமணர்களை அவமதித்து, அதன் காரணமாய் நாசமாவான் என்றார்.

தேவர்களின் நிலைக்கு வருந்திய தேவமாதா அதிதி, ஸமாதி கலைந்து தன் ஆசிரமத்துக்கு வந்த காசியபரை வணங்கி தமது புத்திரர்களாகிய தேவர்கள் சுவர்க்க சுகம் பெற்று புகழுடன் வாழ அனுக்கிரகிக்குமாறு வேண்டிக்கொண்டாள். அப்போது காசியபர் அதிதியிடம் தீனரக்ஷகரான பகவான் ஸ்ரீஹரியே உனது ஆசையைப் பூர்த்தி செய்வார். ஆகவே, ஜனார்த்தனரை ஆராதிப்பாயாக. அதற்காக பயோவிரத மென்ற சிறந்த விரதத்தை அனுஷ்டித்து பகவானை ஆராதிப்பாயாக என்று கூறி அதற்கான விதிமுறைகளையும் அறிவித்தார். அதிதி தேவியும் கணவன் உபதேசித்தபடி மிகச் சிரத்தையாக பயோ விரதத்தை அனுஷ்டிக்க, பகவான் அவளுக்குத் தரிசனம் தந்தார். அப்போது அவரை அதிதி அன்புடன் பலவாறு துதி செய்தாள். அப்போது பகவான் தானே அதிதியின் புத்திரனாக அவதரித்துத் தேவர்களைக் காப்பதாக வாக்களித்து மறைந்து, விட்டார். அதன்படி பகவான் ஆவணி மாதம், சுக்ல பக்ஷம், துவாதசித்தி, சிரவண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில், அபிஜித் முகூர்த்தத்தில் அதிதி தேவியின் கிரகத்தில் அவதரித்தார். அந்த நாளை விஜய துவாதசி என்பர். இந்த அவதாரமே வாமன அவதாரம் எனப்படுகின்றது.

அந்தக் குழந்தைக்கு உகந்த வயதில் உபநயன மகோத்சவம் சிறப்பாக நடைபெற்றது. சின்னஞ்சிறு பாலகனான வாமன பிரம்மச்சாரி மிக்க ஒளியுடன் விளங்கினார். அதே சமயத்தில் பலிச்சக்கரவர்த்தி, நர்மதா ஆற்றங்கரையில் பிறகுமுச்சம் என்ற ÷க்ஷத்திரத்தில் பெரியதொரு அசுவமேத யாகத்தைச் செய்து கொண்டிருந்தான். வாமன மூர்த்தியாகிய பகவான் அந்த யாகசாலைக்குச் சென்றார். அவரைக் கண்ட அனைவரும் எழுந்திருந்து, அவரை எதிர்கொண்டு வரவேற்று உபசரித்தனர். மகாபலிச் சக்கரவர்த்தியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருக்கு ஓர் உயர்ந்த ஆசனம் அளித்து, பூசித்து, அன்புடன் நல்வரவு கூறினான். மேலும், அவருக்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். தவமே உருவான அவர் வரவால் பித்ருக்கள் திருப்தி அடைந்தனர் என்றும், அந்த யாகமும், அவர்கள் குலமும் சபலமடைந்தன என்றும் கூறினான் பலி. அவர் எதை வேண்டினும் அதனைக் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறினான் பலி. அப்போது வாமன மூர்த்தி அவனிடம் வரம் தருவதில் சிறந்த தங்களிடம் எதுவும் அதிகமாகக் கேட்கவில்லை. எனது பாதத்தால் மூன்றடி மண்மையே யாசிக்கிறேன் என்று கூறினார். மேலும் கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடையும் பிராமணனுக்கு தபோசக்தி பெருகும் என்று சொல்லித் தனக்கு மூன்றடி மண்ணே போதுமானது என்றார்.

வாமனர் விரும்பியவாரே மூன்றடி மண் தர மகாபலி வெகு மகிழ்ச்சியுடன் தானமளிக்க, தீர்த்த பாத்திரத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். அப்போது குலகுரு சுக்கிராச்சாரியார், வந்திருப்பவர் மகாவிஷ்ணு. தேவர்களுக்கு உதவவே வந்துள்ளார் என்று கூறி பலிக்கு எச்சரிக்கை செய்தார். அதுகேட்ட மகாபலி குருவை வணங்கி, தான் சத்தியம் தவறுவதில்லை என்றும், தானம் தருவதாகக் கூறி பிராம்மணர்களை ஏமாற்றுவதால் வரும் அபகீர்த்திக்கே தான் பயப்படுவதாகவும், சிறந்த தான பாத்திரமாகிய பிரம்மச்சாரியின் இஷ்டத்தைப் பூர்த்தி செய்யப் போவதாகவும் கூறினான். மேலும் மகாவிஷ்ணுவே வாமனராக வந்திருப்பது உண்மையாயின் அது ஒரு நல்ல சந்தர்ப்பம், அதிருஷ்டம் ஆகும் என்றான். இதனால் கோபம் கொண்ட குரு பலியைச் செல்வம் அனைத்தும் இழப்பாய் என்று கூறிச் சாபம் இட்டார். எனினும் மகாபலி, மனைவி விந்தியாவளி, அருகிலே தீர்த்தம் தர பகவானுடைய சரணங்களைக் கழுவி, அந்நீரைத் தலையிலே தெளித்துக் கொண்டான். அவ்வமயம் வாமன மூர்த்தி ஓங்கி உலகளக்கும் உத்தமனாக வளர்ந்தார். பலியினுடைய பூமியை ஓரடியாலும், இரண்டாவது அடியால் மேலுலகையும் அளந்து, மூன்றாவது அடியை வைக்க இடமின்றி பலியிடம் கேட்க பலிச்சக்கரவர்த்தி தனது சிரசிலே வாமனின் மூன்றாவது அடியை வைக்குமாறு கூறிட பகவான் அவ்வாறே செய்து அவனை ரக்ஷித்தார்.

அவ்வமயம் அங்கு வந்த பக்தன் பிரகலாதன் பகவானிடம் பலிக்கு இந்திர பதவியை அளித்த அவரே அதனைப் பறித்துக் கொண்டு, அதுவே அவன் ஆத்மாவை அறியத் தடையாக இருந்ததெனக் கூறி பகவானுடைய உபசாரத்தைப் புகழ்ந்து ஆனந்தக் கண்ணீர் பெருக, பூமியில் விழுந்து வணங்கினார். அப்போது அங்கே வந்த பிரமனும், பலி தூய உள்ளத்துடன் தானம் செய்திருப்பதால் தண்டிக்கத்தக்கவனல்ல என்று கூறினார். அவ்வமயம் பகவான் ஐஸ்வர்யம் பெற்ற ஒருவன் தெய்வத்தை அவமதிக்கிறான். மற்றவர்களையும் அலக்ஷியம் செய்கிறான். எனவே நான் அருள எண்ணும் ஒருவனுடைய செல்வங்களை அபகரித்துக் கொள்கிறேன் என்று கூறினான். செல்வங்கள் இருப்பினும் என்னிடம் பக்தியுள்ளவனுக்கு அவற்றின் மீது மோகம் உண்டாவதில்லை. பலி மாயையைக் கடந்தவன். துன்பம் கண்டு கலங்காதவன். தர்ம நெறியில் நிற்பவன். எனவே எட்டாவது மன்வந்திரத்தில் இந்திரனாக இருக்கப் போகிறவன். அதுவரையில் ஸுதல லோகத்தில் சுகமாக வசிக்கட்டும் என்று கூறிட பலி ஆனந்தமாக பகவானை வணங்கி ஸுதல லோகம் சென்றான்.

இவ்வாறு வாமனர் இந்திரனுக்கு மீண்டும் சுவர்க்கத்தை அளித்து அதிதி தேவியின் ஆசையைப் பூர்த்தி செய்தார். இந்திரன் மகிழ்ச்சியோடு பயமின்றி சுகபோகங்களை அனுபவித்து வந்தான். இந்த வாமனாவதாரக் கதையைச் சிரத்தையுடன் கேட்பவன், படிப்பவன், சொல்கிறவன் உன்னத பதவியை அடைவான் என்று சுகமுனிவர் பரீக்ஷித்திடம் கூறினார்.

மதஸ்யாவதாரம்

சென்ற கல்பத்தின் முடிவில் நைமித்திக பிரளயம் ஏற்பட்டபோது வேதங்கள் பிரம்மாவினிடமிருந்து நழுவிட அதனை ஹயக்ரீவன் என்ற அசுரன் அபகரித்துச் சென்றான். விஷ்ணு பக்தனான ஸத்ய விரதன், விவஸ்புவானுவின் குமாரனாய் சிரார்த்த தேவனாகப் பிறந்து, பகவானால் மனுவாக நியமிக்கப்பட்டு வைவஸ்வத மனு என்ற பெயருடன் விளங்கினார். ஸத்ய விரதன், கிருத மாலா நதியில் நீராடி ஜலதர்ப்பணம் செய்யும்போது அவருடைய அஞ்ஜலியில் காணப்பட்ட சிறு மீனை அரசன் நீரில் விட்டான். அப்போது அது ஜலஜந்துக்களிடம் பயந்து கையில் வந்த தன்னை மறுபடியும் நீரில் விடலாமா என்று கேட்க, அவரும் அம்மீனை தனது கமண்டலத்தில் உள்ள நீரில் போட, அது அந்த இரவில் பெரிதாகி கமண்டலத்தில் இருக்கமுடியாமல் தவிக்க, அதனை ஒரு பெரிய குளத்தில் விட்டார் அரசன். விரைவிலேயே அது வளர்ந்து விட அதனை மடுவிலும் இறுதியில் சமுத்திரத்திலும் விட்டார் அவர். கடலில் மகரம் விழுங்கிவிடுமே என்று சொல்ல, அரசர் வியப்புற்று அதனை நோக்கி, இவ்வாறு வளரும் நீர் ஸ்ரீமந் நாராயணரே என்று கூறி உலகைப் படைத்து, காத்து, அழிப்பவரே நமஸ்காரம். இந்த வடிவம் ஏன்? என்று வினவினார்.

அப்போது பகவான் கூறினார். இன்று முதல் ஏழாவது நாள் முடிந்ததும் பிரளயத்தில் மூவுலகும் மூழ்கி விடும். அச்சமயம் வரும் பெரிய படகில் ஓஷதிகள் அனைத்தையும், எல்லாப் பிராணிகளையும், சப்தரிஷிகளையும் ஏற்றி நீயும் அதில் அமர்ந்து சஞ்சரிப்பாய். அச்சமயம் எனது அனுக்கிரகத்தால் பரப்பிரம்ம சொரூபம் உனது உள்ளத்தில் விளங்கும் என்று கூறி மறைந்துவிட அரசன் அக்காலத்தை எதிர்பார்த்திருந்தான். அதே மாதிரி தக்க சமயத்தில் ஓடம் வருவதைக் கண்ட அரசன் பகவானைத் தியானித்த வண்ணம் அதில் ஏறினான். ஆதி மூர்த்தியாகிய பகவான் லக்ஷம் யோஜனை பரப்புள்ள பொன் மீனாகக் காட்சி அளித்தார். பகவான் மத்ஸ்ய ரூபத்தில் விளையாடிக் கொண்டே கர்ம யோகம், சாங்க்ய யோகம், ஆகியவற்றைக் கூறும் புராணத்தை, ஆத்ம ரகசியத்தை உபதேசம் செய்தார். அதுவே மச்ச புராணம் ஆகும். ஸத்யவிரதன் ஓடத்திலிருந்தவாறே உபதேசத்தைப் பக்தி சிரத்தையுடன் சிரவணம் செய்து பிரம்ம சொரூபத்தை அறிந்தார். பகவான் ஹயக்ரீவனைக் கொன்று வேதங்களை பிரம்மனிடம் ஒப்படைத்தார்.

26. பக்த அம்பரீஷன்

சாஸ்திர ஞானியும், சத்திய சீலருமான நாபாகனின் புத்திரன் அம்பரீஷன். அம்பரீஷன் பூமண்டலாதிபதியாக இருந்த பாக்கியசாலி. அவன் பற்றற்றவனாக வைராக்கிய சீலனாக இருந்து பகவான் ஸ்ரீவாசுதேவரிடமும், அவருடைய பக்தர்களிடமும் அன்பு, பக்தி கொண்டு நீதியொடு நாட்டை ஆண்டு வந்தான். அவர் திரிகரணத் தூய்மையுடன் ஸ்ரீஹரியையே தியானித்து, ஸ்ரீசரண துளசியை முகர்ந்து, ஹ்ருஷிகேசருடைய பாதங்களில் வணங்கி, பகவானுக்கு நைவேத்தியம் செய்த அன்னத்தையே புசித்தார். இவ்வாறு அம்பரீஷனின் பக்தியால் பக்தி அடைந்த பகவான் பக்தர்களைக் காக்கும் சக்கராயுதத்தை அவருக்கு அளித்தார். ஒரு சமயம் அம்பரீஷன் கார்த்திகை துவாதசியன்று மதுவனம் சென்று யமுனையில் நீராடி, மூன்று நாள் உபவாசம் இருந்து, சிரத்தையுடன் ஸ்ரீஹரியைப் பூசித்தார். ஸ்ரீகேசவ பக்தர்களை உபசரித்து வணங்கி, அறுசுவை அன்னமிட்டு பசுக்களைத் தானமாக வழங்கினார்.

பிறகு அவர் பாரணை செய்ய முற்பட்டபோது துர்வாச மகரிஷி அங்கு அதிதியாக வந்தார். அம்பரீஷனும் அவரை வரவேற்று, உபசரித்து போஜனத்திற்கு அழைக்க அவர் நித்யகர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வருவதாகக் கூறி யமுனா நதிக்குச் சென்றார். நேரம் கடந்து கொண்டிருக்க அவன் அதிதியை விட்டுப் போஜனம் செய்யக் கூடாதென்றும், பாரணை வேளையை மீறுவதும் சரியல்ல என்பதால் பிரமாணர்களின் ஆலோசனைப்படி சுத்த தீர்த்தத்தை அருந்தி பாரணையை முடித்துக் கொண்டு, முனிவர் வரவை எதிர்நோக்கி இருந்தார். திரும்பி வந்த துர்வாச முனிவர் அம்பரீஷன் செயலை அறிந்து மிக்கக் கோபம் கொண்டு தனது தொடையிலிருந்து ஒரு துர்த்தேவதையை உண்டாக்கி அரசன் மீது ஏவினார். அரசனோ எவ்வித அச்சமின்றி ஹரி பஜனையில் ஆழ்ந்து விட்டார். பக்தர்களைக் காக்கும் சக்கராயுதம் அப்பிசாசைப் பொசுக்கி துர்வாசரையும் துரத்தியது. இதனால் பயந்த முனிவர் பிரம்மா, சிவபெருமான், ஸ்ரீமந்நாராயணன் ஆகியோரிடம் சரண் புகுந்து காத்தருள வேண்டினார். அப்போது விஷ்ணு தான் பக்த பராதீனன் என்றும், பக்தர்களுக்கு அடிமையென்றும் கூறி, முனிவரிடம் பகவத் பக்தனான அம்பரீஷனிடமே சென்று மன்னிப்பு கேட்டு, சாந்தி பெறுமாறு அறிவுரை வழங்கினார்.

பகவானுடைய சொற்களைக் கேட்ட துர்வாச முனிவர் வேறு வழியின்றி அம்பரீஷனிடமே சென்று சரணடைய, மன்னன் முனிவரைக் காப்பாற்றுமாறு சுதர்சனிடம் பிரார்த்தித்தார். சக்கராயுதமும் அம்பரீஷன் பிரார்த்தனையை ஏற்று சாந்தமடைந்தது. முனிவர் வியந்து அம்பரீஷனைப் புகழ்ந்து கொண்டாடினார். பிறகு அரசன் முனிவரை வணங்கி போஜனமளித்து அவர் அனுமதியுடன் பாரணையை முடித்தார். அப்போது முனிவர் தான் திருப்தி அடைந்ததாகவும் மன்னனின் கீர்த்தியைத் தேவர்களும், மனிதர்களும் கானம் செய்வர் என்றும் கூறி ஆசிர்வதித்து பிரம்மலோகம் சென்றார். அம்பரீஷன் தனது அரசரைப் புத்திரர்களிடம் ஒப்புவித்து, சம்சாரச் சுழலிலிருந்து விடுபட்டு, கானகம் சேர்ந்து பகவான் வாசுதேவரிடமே மனதைச் செலுத்தி தியானித்து நற்பேறு பெற்றான்.

27. ஸ்ரீராம சரிதம்

அடுத்து சுகமுனிவர் பரீஷித்துக்கு பகவானின் இராமாவதார வரலாற்றினை உரைக்கலானார். இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய தசரதனுக்கு பல மனைவியர்களும், மூன்று பட்ட மகிஷிகளும் இருந்தனர். ஆனால் புத்திரப் பேறில்லை. எனவே தசரதன் கலைக்கோட்டு மாமுனிவரைக் கொண்டு புத்தர காமேஷ்டியாகம் செய்ய, யாக அக்கினியிலிருந்து தோன்றிய புருஷன் ஒரு பாயசக் கலசத்தைக் கொடுக்க தசரதன் அதிலிருந்த பாயசத்தைத் தன் மனைவியர் மூவர்க்கும் கொடுக்க கோசலை ராமனையும், கைகேயி பரதனையும், சுமித்திரை இலட்சுமணன், சத்ருக்னன் என்ற இருவரையும் பெற்றெடுத்தனர். குருகுலத்தில் வித்தைகள் கற்று முடித்தனர் நால்வரும். ஒருநாள் விசுவாமித்திரர் தசரதனிடம் வந்து தன் யாக சம்ரக்ஷணார்த்தம் ராம லக்ஷ்மணர்களை அனுப்புமாறு கேட்க, குலகுரு வசிஷ்டர் அறிவுரையை ஏற்று மக்கள் இருவரையும் அனுப்பி வைத்தார் தசரதன்.

ராம லக்ஷ்மணர் வழியில் கண்ட தாடகி என்னும் அரக்கியைக் கொன்று யாக சாலையில் இடையூறு செய்த சுபாஹு, மாரீசன் இருவர்களின் மீதும் பாணம் தொடுக்க சுபாகு கொல்லப்பட்டான். மாரீசன் ஓடி ஒளிந்து கொண்டான். ராம லக்ஷ்மணர்களுடன் விசுவாமித்திரர் மிதிலைக்குப் பயணமாக வழியில் சாபத்தால் கல்லாகி இருந்த அகலிகைக்கு ராமன் சாபவிமோசனம் அளித்து அவளை அவள் கணவராகிய கவுத முனிவரிடம் ஒப்படைத்து, மிதிலையை அடைந்தனர். அங்கு சிவதனுசை முறித்து ராமன் சீதையை மணம் புரிந்தான். பின்னர் மூன்று தம்பிமார்களுக்கும் திருமணம் நடைபெற அனைவரும் அயோத்திக்குப் பயணமாக வழியில் பரசுராமரின் கர்வத்தை அடக்கி வெற்றி கொண்டார் ஸ்ரீராமர். நாடு திரும்பிய பின் தசரதர் ஸ்ரீராமனுக்கு முடிசூட்ட விழைகையில் கைகேயி முன்பு கணவன் தனக்களித்த வரங்களில் ஒன்றின் மூலம் ராமன் வனவாசம் செய்யவும், இரண்டாவது வரத்தின் மூலம் பரதனுக்கு நாடாளவும் பெற்றாள்.

இராமன் வனவாசம் புறப்படுகையில், லக்ஷ்மணர், சீதை இருவரும் பின் தொடர காடடைந்து, குகனின் தோழமையால் கங்கையைக் கடந்து, பஞ்சவடியில் தங்கியிருந்த போது சூர்ப்பணகையை லக்ஷ்மணன் அங்கபங்கம் செய்தான். அவளுக்கு உதவியாக வந்த கரதூஷணாதியரைப் போரில் வதம் செய்தார் ராமன். ஒரு நாள் தப்பி ஓடிய மாரீசன் பொன் மான் வடிவில் அங்கு வர, அம்மானை வேண்டிய சீதைக்காக அதைப் பிடிக்கச் சென்றான் இராமன். அதைப் பிடிக்க முடியாமல் அதன் மீது பாணம் எய்ய அது ராமா! லக்ஷ்மணா! என்று கத்தி உயிர்விட்டது. இது கேட்டு லக்ஷ்மணனை ராமரிடம் சீதை அனுப்ப அந்நேரத்தில் இராவணன் மாயத்துறவி வேடத்தில் வந்து அவளை இலங்கைக்குத் தூக்கிச் சென்றான். ராம லக்ஷ்மணன் சீதையைக் காணாமல் அவளைத் தேடி வருகையில் ஹனுமார், சுக்கிரீவர் ஆகியோரைக் கண்டு சுக்ரீவனுக்கு மகுடம் சூட்டிட அவன் தோழமையில் சீதையைத் தேட வானரர்கள் நாலா திசைகளிலும் அனுப்பப்பட்டனர்.

அனுமாருடன் தென்திசை கிளம்பியோரில் அனுமான் மட்டும் கடலைத் தாண்டி, இலங்கையை அடைந்து, சீதையைக் கண்டு இராமர் கொடுத்த கணையாழியைத் தந்து, அவள் தந்த சூடாமணியைப் பெற்று ராமரிடம் திரும்பி வந்து செய்தி அறிவிக்க இராம-இராவணப் போர் நடந்து இறுதியில் இராவணன் கொல்லப்பட்டான்.

(இது இராமாயணச் சுருக்கம்)

28. சுபத்திரை திருமணம்

தீர்த்தயாத்திரை செய்யச் சென்ற அருச்சுனன் துறவி வேடத்தில் ரைவத மலையை அடைந்தான். பலராமன், தங்கை சுபத்திரையை துரியோதனனுக்கு மணம் முடித்து வைக்க எண்ணியிருந்தான். ஆனால், கிருஷ்ணனோ தங்கை சுபத்திரையை அருச்சுனனுக்குத் திருமணம் செய்து வைக்க விழைந்தான். இந்நிலையில் சுபத்திரையை விவாகம் கொள்ள, அருச்சுனன் உபாயம் என்ன என்று சிந்தித்து கிருஷ்ணன் ஆலோசனையின்படி சந்நியாசி வடிவில் வந்தடைந்தான் துவாரகையை. தவ வேடத்தில் இருந்த அருச்சுனனைக் கிருஷ்ணன் சுற்றத்தாருடன் சென்று வணங்கினான். பலராமனும் வணங்கி உபசரித்தான். சில மாத காலம் தங்கி இருந்து தமது உபசாரங்களை ஏற்க வேண்டினர். தன்னை உபசரிக்க வந்தவர்களிலே வந்திருந்த சுபத்திரையை அருச்சுனன் கண்டான். அருச்சுனனைக் கண்ட சுபத்திரையும் காமபாணத்துக்குக் குறியானாள். அருச்சுனனும் அவளைக் கண்டது முதல் காமநோயுற்றான். இவ்வாறிருந்த வேளையில் கிருஷ்ணனின் குறிப்பறிந்து கொண்ட அருச்சுனன் சுபத்திரையைத் தேரில் ஏற்றிக்கொண்டு போனான். அப்போது எதிர்த்து வந்த மல்லர்களை வென்றான் அருச்சுனன். நிகழ்ந்ததையெல்லாம் அறிந்த பலராமன் மிகக் கோபம் கொண்டான். துரியோதனனுக்குத் திருமணம் செய்விக்க இருந்த சுபத்திரையை இவ்வாறு அருச்சுனன் கொண்டு சென்றதால் பலராமன் பெருமளவில் கோபம் கொண்டான்.

அருச்சுனனால் கைப்பற்றப்பட்ட சுபத்திரையை வேறு எவர்க்கு? எப்படி? மணம் செய்து தரமுடியும் என்று அண்ணனாகிய பலராமனிடம் கூறி அவனது கோபத்தை அடக்கி மகிழ்ந்தான் அந்த மாயக்கண்ணன். அடுத்து கிருஷ்ண, பலராமர்கள் சுபத்திரையுடன் அருச்சுனனுக்குச் செய்ய வேண்டிய சீர்களை எல்லாம் செய்து திருமணம் முடித்து வைத்தனர்.

விருகாசுரன்

விருகாசுரன் என்னும் அரக்கன் கொடிய தவம் செய்து சிவபெருமானிடம், யார் தலை மீது கை வைப்பினும் அவர் சாகும்படி வரம் வேண்டிப் பெற்று, உடனே சிவபெருமான் தலை மீதே கை வைக்க முயல, ஈசன் பயந்து ஓட, கிருஷ்ணன் காரணம் கேட்டறிந்து, அரக்கனிடம் ஈசன் சொன்னதன் உண்மையை அரக்கன் தன் தலைமீது வைத்துப் பார்க்கலாம் என்று சொல்ல, அவன் அவ்வாறே தன் தலை மீதே தன் கையை வைக்க அந்த அவுணன் மாண்டான்.

29. பிருகு முனிவர் கண்ட முடிவு

ஒரு சமயம் முனிவர்களும், தேவர்களும் அயன், அரன், அரி என்ற மூவரில் மேலானவர் யார்? என்று பிருகு முனிவரைக் கேட்டனர். திரிமூர்த்திகளில் சத்துவகுணமுடைய பரம்பொருள் யார்? என்றறிய பிருகு முதலில் சத்தியலோகம் சென்று பிரம்மனைக் கண்டார். ஆனால் அவரை வணங்கவில்லை. அது கண்ட பிரம்மன் முனிவர் மீது மகா கோபம் கொண்டார். அப்போது முனிவர் பிரம்மனுக்குக் கோயில் இல்லை என்று சபித்தார். அடுத்து கைலைவாசனைக் காண கைலைமலை சென்றடைந்தார் பிருகு முனிவர். சிவனும், பார்வதியும் ஏகாந்தமாய் இருந்தனர் முனிவர் சென்றபோது. அப்போது அரன் கோபம் கொள்ள பிருகு முனிவர் சிவபார்வதிகளின் இருகுறிகளும் பேர்ந்து விழுமாறு சபித்து விட்டார். அப்போது சிவனும் கோபம் கொண்டு நெற்றிக்கண் விழிக்க முனிவர் கோபம் கொண்டு நெற்றிக்கண் விழிக்க முனிவர் அதை அழித்து, அரனை பிராம்மணிய தெய்வமாதலை ஒழிக என்று சபித்தார். அடுத்து நாராயணனிடம் சென்றார் பிருகு முனிவர். அப்போது திருமால், இலக்குமியின் மடிமீது தலை வைத்துப்படுத்திருந்தார். அப்போது அங்கு சென்ற முனிவர் திருமாலின் மார்பில் உதைத்தார். அப்போது பகவான் பிருகு முனிவர் வந்ததை அறியவில்லை என்றும், தான் இருந்த நிலைக்கு வருந்தி பேசலுற்றார்.

மேலும் திருமால் அஞ்சலித்த கையனாய் நல்ல மனம் படைத்த முனித்தலைவ. பொற்றாமரை போன்ற உமது திருவடி என் மார்பில் பட்டதால், அங்கு திருநிலை பெற்றது என்று கூறி வணங்கினார். பிறகு பிருகு முனிவர் திரும்பி வந்து தேவர்கள், முனிவர்களிடம் நிகழ்ந்தவற்றை எல்லாம் விவரித்துக் கூறினார். இறுதியாக தானறிந்த உண்மையை விளம்பினார். ஒண் திறள் ஆழியானே உயர்நலம் உடையன் என்றார். அதாவது மும்மூர்த்திகளில் சக்கராயுதம் ஏந்திய விஷ்ணுவே சத்துவகுணம் உடையவர் என்று கூறி முடித்தார்.

30. நவயோகியர் ஓதிய நல்லறம்

அடுத்து நாரதர் நிமிச் சக்கரவர்த்திக்கும், ரிஷப தேவருடைய குமாரனுக்கும் நடந்த சம்வாதரூபமான கதையைக் கூறினார். ஸ்வாயம்பு மனுவின் வம்சத்தில் தோன்றிய ரிஷப தேவர் பகவானுடைய அம்சம். அவனுடைய நூறு புத்திரர்களில் ஒன்பது பேர் (கவி முதல் நரபாஜனர் வரை) மட்டும் இந்தப் பிரபஞ்சத்தை பகவத் சொரூபமாகவும், ஆத்ம சொரூபமாகவும் கண்டனர். ஒரு சமயம் அஜநயம் என்ற இடத்தில் நிமி சக்கரவர்த்தி சத்ரயாகம் செய்தார். அப்போது அங்கு தற்செயலாக வந்த மேற்படி ஒன்பது முனிவர்களையும் சக்கரவர்த்தி எதிர்கொண்டழைத்து, உபசரித்து விதிப்படிப் பூசித்துப் பணிவுடன் வணங்கிக் கேட்டார். அப்போது அம்முனிவர்கள், இப்பிரபஞ்சம் முழுவதுமே பகவத் சொரூபம் என்று நினைத்தால் பயம் நீங்கிவிடும். அஞ்ஞானியும் தன்னைச் சுலபமாக அடைய பகவானால் கூறப்பட்ட உபாயங்களே பாகவத தர்மங்கள். மனம், வாக்கு, சரீரம், புத்தி, இந்திரியங்கள், அகங்காரம் இவற்றை அனுசரித்துச் செய்கின்ற எல்லாச் செயல்களையும், பரம புருஷராகிய ஸ்ரீமந் நாராயணர்க்குச் சமர்ப்பணம் செய்வதே பாகவத தர்மம்.

பகவானை அடைய மிகச் சுகமான வழி ஒன்று இருக்கிறது. பகவானின் மங்களகரமான அவதார மகிமைகளைக் கூறும் திவ்ய சரிதங்களைச் சிரவணம் செய்து கொண்டும், நாமங்களை எப்போதும் பாடிக் கொண்டும் பற்றற்றவராய் இவ்வுலகில் சஞ்சரிப்பதே பாகவத தர்மம் கூறும் வழி. பகவானைப் பூஜிப்பவனுக்குப் பக்தியும், வைராக்கியமும், பகவத் சொரூப அனுபவமும் ஒரே சமயத்தில் ஏற்படுகின்றது. இடைவிடாமல் அவனுடைய திவ்ய சரணங்களைத் தியானிப்பவனுக்கு பக்தி, வைராக்கியம், ஈச்வர அனுபவ போதம் இம்மூன்றும் உறுதிப்படுகின்றன. அதன் பிறகு அந்த பாகவதன் பரம சாந்தியை அடைகிறான். நிமிச்சக்கரவர்த்தி பாகவதனுக்கான அடையாளங்கள் யாவை? என்று கேட்க, ஹரி என்பவர் பதில் உரைக்கிறார். எவன் சகல ஜீவராசிகளிடத்தும் பகவானுடைய நித்ய விபூதியைக் காண்கிறானோ, சகல பிராணிகளும் பகவானிடமே உறைகின்றன என்ற பாவனையுடன் இருக்கின்றானோ அவனே பாகவதர்களில் உத்தமன். ஸ்ரீவாசுதேவருடைய சரணங்களைச் சரணமாக அடைந்த அவன் காமம், கர்மம், வாசனாபலம் ஆகியவற்றை வென்று ஸ்ரீஹரியின் நினைவிலேயே ஈடுபட்டு இவ்வுலகத் துன்பங்களைப் போக்கி விடுகிறான். சாதி, குலம், பிறப்பு போன்றவற்றால் ஏற்படும் அகங்காரம் இல்லாதவன் மகாவிஷ்ணுவுக்குப் பிரியமானவன். அவன் அபேத புத்தியுடன், சமசித்தனாக, சபிந்த சீவனாக இருப்பான். அவனே பாகவதர்களில் மிகச் சிறந்தவன்.

பகவான் எவனுடைய இதயத்தாமரையிலே பிரேம பக்தி என்ற கயிற்றினால் கட்டப்பட்டு, அவ்விடத்திலேயே அகலாமல் இருக்கின்றாரோ அவனே உத்தமமான பாகவதன் என்றார். அடுத்து அந்தரிக்ஷர் என்பவர் விஷ்ணு மாயையைப் பற்றி கூறினார். பின்னர், பிரபுத்தர் என்பவர் கர்ம பலன்களில் இச்சை வைத்தவனுக்கு அச்சமே மிஞ்சும். சாந்தி ஏற்படாது. அற்புத செயல்களை உடைய ஹரியின் குணங்களைக் கேட்பது, உச்சரிப்பது, தியானிப்பது, பகவத் சேவை செய்வது, எங்கும் பகவத் சொரூபமாகக் காண்பது, மவுனத்தால் நாவடக்கம், பிராணாயாமத்தில் புலனடக்கம், பயன் கருதாமல் செய்யும் கர்மா, சத்தியம் ஆகியவை பாகவத தர்மங்களாகும். ஸ்ரீஹரியே சரணம் என்று, பாகவத தர்மங்களைப் பழகி வந்தால் மாயையைச் சுலபமாகக் கடந்து விடலாம் என்றார். அதன்பின் பிப்பலாயர் என்பவர் பிரம்ம சொரூபத்தை விளக்கிக் கூறுகிறார். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் முதலியவற்றிற்குக் காரணம் எவரோ அவர் பரமாத்மா. ஜாக்ரைம், ஸுக்ஷúப்தி, சொப்பனம் ஆகியவற்றிலும், அதற்கப்பாலும் பரந்துள்ளது பரதத்துவம். எவருடைய அருட்சக்தியினால் இந்திரியங்கள், பிராணன், மனம் இயங்குகின்றனவோ அதுவே பரப்பிரம்மம். ஸ்தூல, ஸூக்ஷ்ம பிரபஞ்சம் முழுவதும் ப்ரம்ம ஸ்வரூபம். ஆத்மாவுக்கு பிறப்பு, அழிவு, வளர்ச்சி, தேய்வு எதுவும் கிடையாது. சித்தமான உள்ளத்தில் ஞானஒளி பிரகாசிக்கின்றது.

ஆவிர்ஹோதிரர் என்பவர் அரசனிடம், வேத விதிப்படி கர்மாக்களைச் செய்து, அதன் பலனில் ஆசை வைக்காமல் எல்லாவற்றையும் பகவானுக்குச் சமர்ப்பணம் செய்து விட வேண்டும். நிஷ்காம்ய கர்மத்தினாலேயே ஞானம் சித்திக்கின்றது. பகவானை முறைப்படி பூசித்து உபாசனை செய்து வந்தால் ஆத்ம ஞானம் ஏற்பட்டு மோக்ஷ சுகம் கிட்டும். குருவின் அருளைப் பெற்று, பூஜா விதிகளை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தன் மனதிற்குகந்த இஷ்ட தெய்வத்தின் வடிவத்தில் பரமபுருஷனை ஆராதிக்க வேண்டும். இவ்வாறு சிரத்தையாக ஆத்ம சொரூபமாகிய ஈச்வரனைப் பூஜிப்பவன் விரைவில் முக்தி அடைவான் என்றார். பிறகு திரமீளர் பகவான் பல அவதாரங்களை எடுத்து, நிகழ்த்திய அற்புதச் செயல்கள் குறித்து விரிவாகக் கூறினார். சமரசர் என்பவர் பக்தியற்றவர்களின் பரிதாப நிலையை விளக்கி, அவர்களுக்குச் சாதுக்களே தயைபுரிந்து நல்வழிகாட்ட வேண்டும் என்றார். அதன்பின் காமாஜனர் என்பவர் நான்கு யுகங்களிலும் பகவான் எந்த உருவில் இருந்தார்? எவ்வாறு பூஜிக்கப்பட்டார் என்று கூறினார்.

கிருதயுகத்தில் வெண்மை நிறத்துடன், சதுர்புஜ மூர்த்தியாக, ஜடா மகுடத்துடன், மரவுரி தரித்து தண்டம், கமண்டலம், அக்ஷமாலைகளுடன் விளக்குகிறார். மக்கள் தவம், மனஅடக்கம், புலனடக்கத்துடன் சமபாவத்துடன் பகவானைப் பூசித்தனர். திரேதாயுகத்தில் சிவப்பு வண்ணமொடு தங்கநிற கேசம், சதுர்ப்புஜம் கொண்டு வேத சொரூபியாக விளங்குகின்றார். மக்கள் தேவதேவனான ஸ்ரீஹரியை வேதத்தில் கூறியுள்ள கர்மானுஷ்டானங்களால் பூசிக்கின்றனர். துவாபர யுகத்தில் பகவான் சியாமள நிறமேனியுடன், பீதாம்பரம் தரித்து ஸ்ரீவத்ச மறு, சங்கு சக்கர, கதாயுதங்களுடன் விளங்குகின்றார். மக்கள் பரமாத்வை அறியும் ஆவலுடன், வேதத்தில் கூறப்பட்டுள்ள ஆகம விதிமுறைப்படி பூசிக்கின்றனர். கலியுகத்தில் ஒளிவீசும் கருநிறத் திருமேனியுடன் அங்க, உபாயங்களுடன், அஸ்த்ரங்களுடன் பார்ஷதர்கள் புடைசூழ விளங்குகின்றார். மக்கள் நாம சங்கீர்த்தனம் செய்து கிருஷ்ணனைப் பூஜித்து ஆராதனை செய்கிறார்கள். பகவானுடைய திவ்ய நாமங்களை உச்சரிப்பதனாலேயே சகல விதமான புருஷார்த்தங்களும் கிடைப்பதால் இதுவே மேலானதென்பர்.

இவ்வாறு நவயோகிகளால் உபதேசிக்கப்பட்ட பாகவத தர்மங்களைக் கேட்ட நிமி சக்கரவர்த்தி எல்லையில்லா ஆனந்தம் கொண்டார். பின்னர் ஆசாரியர்களை முன்னிட்டுக் கொண்டு நவயோகிகளை முறைப்படி பூசை செய்து பலவித உபசாரங்களையும் செய்தார். அந்த சித்த புருஷர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே மறைந்து விட்டனர். நிமி சக்கரவர்த்தி இந்த பாகவத தர்மங்களை அனுஷ்டித்து உத்தம கதியை அடைந்தார். வசுதேவரே, நீரும் இந்த தருமங்களை ஆசரித்து உத்தமமான பரமபதத்தை அடைவீராக என்று நாரதர் கூறியதைக் கேட்டு தேவகி, வசுதேவர் மோகம் நீங்கி ஞானம் பெற்றனர். நவயோகிகள் பற்றிச் சிந்திப்பவன் மோகம் நீங்கி பிரம்ம சொரூபத்தை அடையும் தகுதி பெறுவான் என்று சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறினார். தேவர்கள், ரிஷிகள், அயன், அரன் ஆகியோர் புனித கீர்த்தியை உடைய ஸ்ரீகிருஷ்ணனின் மனோகர வடிவைக் காண ஆவலுடன் வந்தனர். அவர்கள் அனைவரும் ஸ்ரீகிருஷ்ணனைத் தேவலோக மலர்களால் அர்ச்சித்து மணமுள்ள மலர் மாலைகளை அணிவித்துப் பணிவுடன் வணங்கித் துதித்தனர். அப்போது பிரம்மதேவர், எங்கள் பிரார்த்தனைக்கிணங்கி இந்த பூபாரத்தைக் குறைப்பதற்காக யது குலத்தில் அவதரித்து, உலக நலனுக்காகவே அற்புதமான லீலைகளைச் செய்தீர். தேவ காரியங்கள் முடிந்து விட்டன. பிராம்மண சாபத்தால் யதுவம்சம் பெரிதளவு அழிந்து விட்டது. தங்களுக்கு விருப்பமிருந்தால் உத்தமமான உமது ஸ்தானத்திற்கு எழுந்தருளி லோக பாலகர்களான இந்த சேவர்களை ரக்ஷித்தருள வேண்டுகின்றோம் என்றார்.

அப்போது கிருஷ்ணன், நீர் கூறியது உண்மையே. யாதவ குலம் மிக்க கர்வம் கொண்டு இவ்வுலகையே அழிக்கும் சக்தி வாய்ந்தது. அவர்களை அழித்த பிறகே நான் வைகுண்டம் வரமுடியும் என்று கூற, பிரம்மாதி தேவர்கள் பகவானை வணங்கி தமதிருப்பிடம் சென்றனர். சில நாட்களில் துவாரகாபுரியில் பல அபசகுனங்கள் தோன்றின. அப்போது பகவான் யாதவகுலப் பெரியோர்களைப் பார்த்து, பிராம்மண சாபத்திலிருந்து இனி தப்ப முடியாது. எனவே யாவரும் உடனே புறப்பட்டுப் புண்ணியத் தலமான பிரபாசத் தீர்த்தத்துக்குப் புறப்படுவோம் என்றார். புறப்படும்போது உத்தவர் பகவானைத் தனியாகச் சந்தித்து வணங்கிப் பிரார்த்தித்தார். யோகேச்வரா, பிராம்மண சாபத்தைத் தாங்கள் தடுக்கப் போவதில்லை. தாங்கள் தங்கள் திவ்ய பதத்திற்கு எழுந்தருளப் போகிறீர். தங்கள் சரண சேவையின்றி அரைகணமும் என்னால் இருக்கமுடியாது. எனவே என்னையும் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். அப்போது பகவான் உத்தவரிடம், பிரம்மாதி தேவர்கள் அனைவரும் என் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். பிராம்மண சாபத்தால் யாதவ குலம் எரிக்கப்பட்டு பரஸ்பர விரோதத்தால் நாசமடையும். துவாரகையும் நீரில் மூழ்கி மறைந்து விடும். நான் மறைந்ததும் உலகில் மங்களங்கள் குறையும். கலிபுருஷன் வந்திட மக்கள் அதர்மத்தை விரும்புவர்.

எனவே நீ எல்லாவற்றையும் துறந்து, என்னையே ஸ்மரித்து, மனோமயம் மாயாமயம் என அறிந்து, சஞ்சரிப்பாய். மேலும் இந்திரிய ஐயத்துடன், இப்பிரபஞ்சத்தைத் தனது ஆத்மாவாகவும், பிரம்ம சொரூபமாகவும் சர்வாத்ம சொரூபியாகிய என்னைத் தவிர அவை வேறானவை அல்ல என்று உணர்ந்து கொள்வாயாக. அவ்வாறு எல்லாம் என் வடிவெனக் காண்பவர்க்கு மறுபிறவி கிடையாது.

31. யது மகாராஜன், அவதூதர் சம்பாஷணை

அப்போது உத்தவர் கேட்டார், மகாயோகியே! எனது நன்மையின் பொருட்டு சந்நியாசி லக்ஷணமாகிய தியானத்தை உபதேசித்தருளினீர், நான், எனது (மமகாரம்) என்ற அபிமானத்தை ஒழிப்பது எப்படி? என்று கேட்டார். அதற்குப் பகவான், உலக தத்துவ பரிசீலனை செய்கின்றவர்கள் தாமே, தமது ஆத்மா (அ) மனதைப் பற்றற்ற தாக்கிக் கொள்கின்றனர். அவரவர்க்கு அவரவர் ஆத்மாவே குருவாகிறது. மனிதப் பிறவியில் ஞானம் (சிரவண மனனம்), யோகம் (நித்தியாசனம்) ஆகிய திறமையுள்ள விவேகர்கள் என்னைச் சர்வ சக்தியுள்ளவன் என்று அறிந்து கொள்கின்றனர். இனி இவ்விஷயமாக யது மகாராஜனுக்கும், அவதூதருக்கும் நடந்த சம்பாஷணையைப் பற்றிக் கூறுகிறேன் கேளும். முன்பொரு சமயம் யது மகாராஜன் எங்கும் அச்சமின்றித் திரியும் ஓர் அவதூத பிராம்மணரிடம், உலக சுகபோகங்களில் ஈடுபாடு இல்லாத உமக்கு உள்ளத்தில் பரிபூர்ண மகிழ்ச்சி நிரம்பி இருக்கிறதே எதனால்? என்று கேட்டார். அதற்கு அவதூதன் கூறலானான், நான் பலரை எனது குருவாகக் கொண்டு அவர்களிடமிருந்து பல செய்திகளை அறிந்து கொண்டேன். தான் இருபத்து நான்கு ஆச்சாரியர்களை ஆச்ரயித்து தெரிந்து கொண்டவை பல.

1. பூமியிலுள்ள அனைத்தும் எப்படிப் பிறருக்குப் பயன்படுகிறதோ அவ்வாறு சாதுக்கள் தான் பிறருக்கு உரியவன் என்று உணர வேண்டும்.
2. காற்று போல யோகியானவன் குண தோஷங்களால் கறைபடாதவனாக அதாவது பற்றற்றவனாக இருக்க வேண்டும்.
3. ஆகாயம் போல் ஆத்மா பிரபஞ்சமெல்லாம் பரவி இருந்தாலும் எதிலும் ஒட்டாமல், தாமரை இலை நீர் போல இருக்க வேண்டும்.
4. நீரைப் போல் யோகி தூயவனாய், குணமுற்றவனாய், மிருதுவான இதயம், மக்களிடம் இனிமையாகப் பழகுதல் வேண்டும். பார்ப்பது, பேசுவது, தொடுப்பது ஆகியவற்றால் அண்டினவர்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.
5. அக்கினியைப் போல் அழுக்கற்றவனாய் ஒளியுடன் விளங்க வேண்டும்.
6. சந்திரனில் தேய்தல், வளர்ச்சி இருப்பினும் சந்திர மண்டலத்திற்கு மாறுதல் இல்லாததுபோல் ஆத்மாவிற்கு ஜனனம், மரணம் கிடையாது.
7. சூரியன், கடல் நீரைக் கிரகித்து மழையாகப் பொழிவதைப் போல் யோகி இந்திரியங்களால் விஷயங்களைக் கிரகித்து அதைத் தகுதி உள்ளவன் கிடைக்கும் போது அவனிடம் கொடுத்து, கொடுத்ததை மறந்துவிட வேண்டும்.
8. மாடப்புறா பாசத்தின் காரணமாக குடும்பத்துடன் மாண்டது போல் குடும்பப் பற்றுள்ளவன் ஆபத்தில் அகப்பட்டுக் கொள்ளுவான்.
9. மலைப்பாம்பு போல் தன் முயற்சி இன்றி கிடைத்ததைப் புசித்து உதாசீனனாய் இருக்க வேண்டும்.
10. கடலைப் போல், பகவானிடம் மனதைச் செலுத்தி ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும், இல்லாத போது துயரமில்லாமலும் இருத்தல் நல்லது.
11. விட்டில் போல் அழியாமல் இந்திரியங்களை வென்றிருக்க வேண்டும்.
12. தேனீயைப் போல் முனிவன் கிரகஸ்தர்களைச் சிரமப்படுத்தாமல் தேவையான அளவே பெற்று உண்ண வேண்டும். அடுத்த வேளைக்கு என்று சேர்த்து வைத்தால்  கூட்டில் தேன் போல் அழிவு ஏற்படும். மேலும் சாஸ்திரங்களுடன் சாரத்தை மட்டும் அறிந்து வாழ வேண்டும்.
13. பிடியின் (பெண் யானை) காரணமாக ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் ஆண் யானை போல் ஸ்திரீ பந்தத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது.
14. இனிய கானம் கேட்டு மயங்கிய மான் வேடனால் பிடிபட்டு அவதியுறுவதுபோல் பகவத் குணங்களை மட்டுமே கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவதியுற்று அழிய நேரக்கூடும்.
15. தூண்டில் மீன் உணவை விரும்பி முள்ளில் சிக்கிக் கொள்வதுபோல் நாவடக்கம் (சுவையின் மீது ஆசை) இல்லாதவன் புலனடக்கம் இல்லாதவனே.
16. பிங்களை என்ற வேசி தன் தொழிலில் வெறுப்புற்று அன்புடன் ஆராதிப்பவருக்குத் தனது ஆத்மாவையே அளிக்கும் அச்சுதனை நாடி அடையாமல், அந்திய புருஷனைத் தேடி ஓடுகிறேனே? என்று ஞானம் பெற்றவளாய் பகவானையே சரணமாக அடைந்து மேன்மை அடைந்தாள். எனவே ஆசையே துன்பம்; நிராசையே பரமசுகம் என்று அறிதல் வேண்டும்.
17. மாமிசத்தைக் கொத்திச் சென்ற மீன்குத்தி மற்ற பறவைகளால் துன்புறுத்தப்படும். அது மாமிசத்தைக் கீழே போட்டவுடன் அப்பறவை நலம் பெற்று விடும்.
18. தனக்குத் தானே விளையாடிக் கொண்டு மகிழ்ச்சி அடையும் குழந்தை போல் தன்னில் தானாகவே ஆத்மாவில் ரமித்து ஆனந்தமாக சஞ்சரிக்கின்றேன்.
19. ஒரே ஒரு வளையலைக் கையில் கொண்ட பெண்ணைப் போல், துறவி ஆனவன் தனிமையாகவே இருக்க வேண்டும்.
20. அம்பு தொடுக்கும் வில்லாளி இலக்கின் மீது கவனமாக இருப்பது போல், ஆத்ம சொரூபத்திலே ஒன்றி விட்டவன், வெளியிலே தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றையும், உள்ளே நடப்பவற்றையும் கூட அறிய மாட்டான். ஆகவே யோகியானவன் சுகாசனத்தில் அமர்ந்து சுவாசத்தை அடக்கி, வைராக்கியத்தாலும் பகவத் தியானத்தாலும் வெற்றி பெறுவான்.

பரீக்ஷித்துக்கு மரணபயம் நீங்கியது

சுகப்பிரம்ம பகவான் தன் சோதிக்கு எழுந்தருளிய பிறகு பூவுலக நிலை, கலிபுருஷன், கலி தோஷங்கள் என்பன பற்றி எல்லாம் பரீக்ஷித்துக்கு உரைக்கலானார். பின்னர் கலி தோஷங்களை நிவர்த்தி செய்ய என்ன உபாயம் என்று அரசன் கேட்க முனிவர் கூறலானார். அப்போது முனிவர் கலிதோஷங்கள் அதிகமாகும்போது தர்மத்தையும் சாதுக்களையும் ரக்ஷிக்க, பகவான் ஸத்வ குணத்துடன் சம்பன கிராமத்தில், விஷ்ணு யசஸ் என்ற அந்தணருடைய வீட்டில் கல்கி என்ற பெயருடன் தோன்றுவார். துரிதமாகச் செல்லும் குதிரை மீதேறி பூமண்டலம் முழுவதும் சஞ்சரித்து அரச வேஷதாரிகளான, துஷ்டர்களை வதம் செய்வார். (மேல் விவரம்-கல்கி (அ) பவிஷ்யத் புராணம் காண்க)

கல்கி அவதரித்த உடனே மக்களின் மனம் தெளிவுபடும். அவர்களுக்கு ஞானத்திலும் தவத்திலும் விருப்பம் உண்டாகும். கலிதோஷங்களைப் போக்கக்கூடியது புரு÷ஷாத்தமருடைய தியானம், சிரவணம், மனனம், சங்கீர்த்தனம், தியானம், பூஜை இவற்றினால் பகவான், ஸ்ரீஹரி மக்களின் இதயத்தில் நிலையாகத் தங்கி, அவர்களின் பல பிறவிகளில் ஏற்பட்ட தீமைகளையெல்லாம் நீக்கி அருள்புரிவார். பகவத் தியானத்தால் சித்தம் தூய்மைப்படும். கிருத யுகத்தில் தியானத்தினாலும், திரேதா யுகத்தில் கர்மானுஷ்டானங்களாலும் (யாகம் முதலியன) துவாபர யுகத்தில் பகவத் சேவையினாலும் உண்டாகும் பலனைக் கலியுகத்தில் ஹரிநாம சங்கீர்த்தனத்தால் அடையலாம்.

அரசே மரணமடையப் போகிறேன் என்ற எண்ணம் வேண்டாம். நீர் பிறக்கவுமில்லை, அழியவுமில்லை. ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. ஆத்மாவை அறிந்து கொண்டால் தக்ஷகன் உம்மை எரிக்க மாட்டான். நானே பிரம்மம் என்பதை அறிந்து நிஷ்கள பிரம்ம சொரூபத்தில் ஒன்றிவிட்டபோது தக்ஷகனையோ, அவனுடைய கடியையோ அறியமாட்டீர் என்றார் முனிவர். அப்போது பரீக்ஷித்து சுகரிடம், ஸ்ரீஹரியின் குண வைபவங்களைக் கூறி, என்னைக் கிருதார்த்தனாக்கி; அனுக்கிரகித்த தங்களுக்கு நமஸ்காரம். பகவானுடைய திவ்ய சரிதங்களை விவரிக்கின்ற இந்தப் புராணத்தைக் கேட்டது என் பாக்கியமாகும். எனக்கு தக்ஷனிடமும் அச்சமில்லை. மரண பயமும் இல்லை. நான் பிரம்ம நிர்வாணத்தில் ஒன்றிவிட்டேன் எனக்கு அனுமதி அளியுங்கள் என்று கூறி நன்றியுடன் வணங்கினார்.

32. ஜனமேஜயன், சர்ப்ப யாகம்

பரீக்ஷித்தின் மரணம்:  பரீக்ஷித் மூச்சை அடக்கி, மனதை ஆத்மாவில் லயிக்கச் செய்து, அசைவற்றிருந்து பரமாத்ம அசொரூபத்தையே தியானிக்கலானார். அதே சயம் தக்ஷகன், அந்தண வடிவத்துடன் அரசனை அணுகி தனது விஷப்பற்களால் கடித்தான். மறுகணம் பிரம்ம நிலையைப் பெற்ற மன்னன் உடல் விஷாக்கினியால் எரிந்து சாம்பலாகியது.

சர்ப்ப யாகம்

தக்ஷகனால் பரீக்ஷித்துக் கொல்லப்பட்டதைக் கண்ட அவரது மகன் ஜனமே ஜயன் மிக்க கோபம் கொண்டு, பிராம்மணர்களைக் கொண்டு சர்ப்பயாகம் செய்தான். அப்போது எல்லாச் சர்ப்பங்களும்-தக்ஷகனைத் தவிர-ஈர்க்கப்பட்டு அக்னியில் விழுந்து பொசுக்கப்பட்டன. தக்ஷகன் இந்திரனைச் சரணமடைந்தான். உடனே மேலும் கோபம் கொண்ட ஜனமேஜயன் இந்திரனையும் சேர்த்து தக்ஷகனை அக்கினியில் தள்ளுமாறு கூறிட தக்ஷகனுடன் இந்திரனும் யாக அக்னிக்கு ஈர்க்கப்பட்டான். அப்போது பிரகஸ்பதி ஜனமேஜயனிடம் தக்ஷகன் அம்ருதபானம் செய்தவன். எனவே அவனைக் கொல்ல முடியாது. ஒருவன் மரணம் ஜீவனின் பிரார்த்த கர்ம பலனைச் சார்ந்தது. சாந்தம் அடைந்து அபிசார யாகத்தை நிறுத்துங்கள். இது யாவும் முன் வினைப்பயன் என்று அறிவுரை கூறி யாகத்தை நிறுத்தச் செய்தார். ஜனமே ஜயன் யாகத்தை நிறுத்தி பிரகஸ்பதியைப் பணிவுடன் வணங்கினான்.

முடிவு

சவுனகரிடம் சூதர், ஆசையற்றவர்களாக, ஆத்மசுகத்தில் ஈடுபட்டு ஒருமையுடன் இருப்பவர்களே மாயையைக் கடந்ததான விஷ்ணு பாதத்தை அடைந்து ஆனந்தம் பெறுகிறார்கள். ஆபத்துக்காலத்தில் தன் வசமின்றியே ஹரயே நம என்று கூறுபவன் சகல பாதகங்களில் இருந்தும் விடுபடுகிறான் என்றார். பகவத் குணங்களை வர்ணிக்கின்ற கதையே சத்யமானது, புண்யமானது; நதிகளில் கங்கையும், தேவதைகளில் அச்சுதரும், விஷ்ணு பக்தர்களில் பரமசிவனும் எப்படிச் சிறப்பானவர்களோ, அவ்விதமே புராணங்களில் ஸ்ரீ பாகவத புராணம் மிகவும் சிறந்தது.

ஸ்ரீ கிருஷ்ண சரணம் நம:

ஸ்ரீ கிருஷ்ண பகவான் யதுகுலத்தில் அவதரித்து, நிகழ்த்திய அற்புத லீலைகளையும் அவரது தெய்வ குணங்களையும், சிரவணம் செய்பவர்களுக்கு கர்ம பந்தங்கள் விலகி விடுகின்றன. ஸ்ரீகிருஷ்ண கானாம்ருதத்தைச் செவிகளால் பானம் செய்கின்றவன் சம்சாரக் கடலைச் சுலபமாகக் கடந்து விஷ்ணு பதத்தை அடைகிறான். முகுந்தருடைய திவ்ய சரிதத்தைக் கேட்க வேண்டும். அவரது அற்புத லீலைகளைப் பாடவேண்டும் என்ற ஆர்வத்துடன் ஒவ்வொரு வினாடியும் எவன் சிந்திக்கின்றானோ அவன் உன்னதமான பரமபதத்தை அடைகின்றான் என்று சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறினரை சூத மாமுனிவர் சவுனகர் முதலான மகரிஷிகளுக்குக் கூறினார். ஸ்ரீகோவிந்தா, ஹே கிருஷ்ணா உமது வஸ்து உமக்கே சமர்ப்பணம் செய்யப்படுகின்றது. உமது திவ்ய சரண கமலங்களில் நீங்காத, இடையறாத பக்தியை எனக்கு அளிப்பாயாக.

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து!


ஸ்ரீ கிருஷ்ணாவதாரம்

1. தோற்றுவாய்

(இது ஸ்ரீவிஷ்ணு புராணம் ஐந்தாவது அமிசத்திலும், ஸ்ரீமத் பாகவத புராணத்தில் பத்தாவது ஸ்கந்தத்திலும், ஸ்ரீபிரம்ம வைவர்த்த புராணம் ஸ்ரீகிருஷ்ண காண்டத்திலும் விரிவாக கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுவான ஸ்ரீகிருஷ்ண அவதாரம் பற்றி இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.)

(கலி தோஷங்களைப் போக்கக் கூடிய கிருஷ்ண சரிதத்தைச் சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறத் தொடங்கினார் என்று சூத முனிவர் சவுனகாதி ரிஷிகளுக்குக் கூறினார்.)

தேவகி, வசுதேவர்

1. வடமதுரையைத் தலைநகராகக் கொண்டு சூரசேனன் ஆட்சி செய்து வந்தான். அந்நகரில் தேவகி வசுதேவர்க்குத் திருமணம் நடந்தது. மணமக்களைத் தேரில் ஏற்றிக் கொண்டு, உக்கிரசேனரின் குமாரன் கம்சன் தானே தேரை ஓட்டிச் செல்கையில் ஓர் அசரீரியின் குரல் விண்ணில் எழுந்தது. அது நீ யாரை அன்புடன் அழைத்துச் செல்கின்றாயோ அந்தத் தேவகியின் எட்டாவது குழந்தை உன்னைக் கொல்லும் என்றது. உடனே கம்சன் கத்தியை உருவி தன் தங்கை தேவகியைக் கொல்ல முற்படுகையில் வசுதேவர் அவனைத் தடுத்து, தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகளை அவனிடம், ஒப்படைத்து விடுவதாகவும் மணக்கோலத்தில் உள்ள அவளைப் பிணக்கோலமாக்க வேண்டாம் என்றும் உரைத்தார்.

முதல் குழந்தை பிறந்தவுடன் உடனே அதனைக் கம்சனிடம் கொடுக்க, அவன் மனம் மாறி குழந்தையுடன் வசுதேவரைத் திருப்பி அனுப்பி விட்டான். ஆனால் அவன் அவைக்கு வந்த நாரதர், உன்னைக் கொல்ல பகவான் தேவகிக்குக் குழந்தையாய் அவதரிப்பார் என்று கூறிச் சென்றுவிட்டார். அது கேட்ட கம்சன் தேவகியையும் வசுதேவரையும் விலங்கிட்டு சிறையில் அடைத்தான். தேவகியின் ஆறு குழந்தைகளைக் கம்சன் கொன்றுவிட்டான். அவள் ஆதிசேஷனைக் கருவுற்றிருந்தாள். அப்போது ஸ்ரீஹரி யோகமாயையை அழைத்து, தேவகியின் கருவிலுள்ள தேஜஸ்ஸை ஆயர்பாடியிலுள்ள ரோகிணியின் கருவில் சேர்த்துவிடு. பிறகு நான் தேவகியின் மகனாக அவதரிப்பேன். நீ நந்தன் பத்தினி யசோதையின் புத்திரியாக அவதரித்து உலக மக்களைக் காத்திடுவாயாக. உனது சக்தியினால் ஆகர்ஷனம் செய்யப்படும். ரோகிணி குமாரன் சங்கர்ஷணன் என்றும், மக்களை மகிழ்விப்பதால் ராமன் என்றும், பலசாலி ஆனதால் பலராமன் என்றும் அவனை அழைப்பர் என்று கூறினார்.

2. கண்ணன் பிறந்தான்

பிறகு பகவான் தனது பூர்ண கலையுடன் தேவகி உள்ளத்தில் ஆவிர்பவித்து அவளுக்கும், வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக சிறைச்சாலையில் பிறந்தார். வசுதேவர் பகவானின் ஆணைப்படி அக்குழந்தையை எடுத்துச் சென்று கோகுலத்தில் யசோதையிடம் சேர்ப்பித்து, அங்கு பிறந்திருந்த நந்தகோபனின் புத்திரியை எடுத்து வந்தார். பகவான் கிருபையால் விலங்குகள் நீங்கி, கதவுகள் திறந்திட, வழியில் யமுனை வழிவிட கோகுலம் சென்று எவ்வித இடையூறும் இன்றித் திரும்பி வந்தார். சிறைக்கதவுகள் மூடிக் கொண்டன. விலங்குகள் வசுதேவரை அலங்கரித்தன. இவ்வாறு யசோதையின் பெண்குழந்தை தேவகியின் அருகில் படுக்க வைத்தவுடன் அக்குழந்தை அழத் தொடங்கியது. காவலாளிகள் மூலம் செய்தி அறிந்த கம்சன் தேவகியிடமிருந்து அக்குழந்தையைப் பிடுங்கிக் கொண்டு அதன் இருபாதங்களையும் பிடித்துத் தூக்கி ஒரு பாறையின் மீது ஓங்கி அடிக்க குழந்தை கை நழுவி விண்ணில் நின்று தன்னை அவனால் கொல்ல முடியாது என்றும், அவனது சத்துரு வேறிடத்தில் பிறந்து வளர்கிறான் என்றும் கூறி மறைந்தது. கம்சன் தேவகி-வசுதேவர் இருவரையும் விடுதலை செய்தான்.

கோகுலத்தில் நந்தகோபன் யசோதைக்கு ஆண்குழந்தை பிறந்ததை முன்னிட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான். குழந்தைக்கு புண்யாக வசனம், ஜாதகர்மம் முதலியன செய்து தேவ, பித்ருக்களைப் பக்தியுடன் பூசித்தான். சிலநாட்களுக்குப் பின் நந்தகோபர் கம்சனுக்குக் கப்பம் கட்டுவதற்காக மதுரைக்கு வந்தான். வசுதேவரைச் சந்தித்து மகன் பற்றிக் கூறி மகிழ்ந்திட, வசுதேவர் நந்தகோபரிடம் குழந்தைகளுக்கு ஆபத்து என எச்சரித்து உடனே அனுப்பி வைத்தார்.

3. கிருஷ்ணனது லீலைகள்

கம்சனால் அனுப்பப்பட்ட பூதகி என்னும் அரக்கி, ஓர் அழகிய வடிவில் நந்தகோபர் வீட்டில் சேர்ந்து, அனைவரையும் மயக்கி குழுந்தையை ஆசையுடன் எடுத்து, மார்போடு அணைத்துக் கொண்டு விஷம் நிறைந்த பாலை ஊட்ட, பகவான் கிருஷ்ணன் அவள் மார்பகத்தைப் பற்றிக் கொண்டு பாலைக் குடிப்பது போல் அவள் உயிரையே குடித்துவிட்டார். அவளும் சுயஉருவில் சாய்ந்து இறந்தாள். யசோதையும், ரோகிணியும் ஓடிவந்து குழந்தையை எடுத்து அதற்குத் திருஷ்டி கழித்து பாலூட்டி ஒரு வண்டியின் கீழுள்ள தொட்டிலில் கிடத்தினர். அப்போது குழந்தை அழுதது. கால்களை உதைத்துக் கொள்ள கால்கள் பட்டதும் வண்டி உடைந்து விழ அரக்கன் சகடாசுரன் சுயவடிவில் இறந்தான். அடுத்து காற்று வடிவில் குழந்தையை தூக்கிச் சென்ற அரக்கன் திருணாவர்த்தனையும் கண்ணன் கொன்றுவிட்டான். கர்க்க முனிவர் நந்தகோபன் விருப்பப்படி மங்கல காரியங்களைச் செய்து ரோகிணி புத்திரனுக்குப் பலராமன் என்றும் யசோதை மகனுக்கு கிருஷ்ணன் என்றும் நாமகரணம் செய்து வைத்தார்.

பாலகிருஷ்ணன், ராமன் சேஷ்டைகள், லீலைகள்

இருவரும், தம் தோழர்களுடன் கோபியர்களின் இல்லங்களுக்குச் சென்று தயிர், பால், வெண்ணெய் திருடி உண்டனர். இவர்கள் குறும்புத் தனங்களைத் தடுக்க முடியாமல் யசோதை கண்ணனை உரலுடன் கட்டிப் போட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்கச் சென்றாள். கண்ணன் அவ்வுரலுடன் அங்கிருந்த இரண்டு மருத மரங்களுக்கு இடையே செல்ல, அவை முறிந்து விழுந்தன. அவை நாரதர் சாபத்தினால் மரங்களான குபேர குமாரர்கள் நளகூபரனும், மணிக்கிரீவனும் ஆவர். அவர்கள் பகவானை வலம் வந்து வணங்கி தம் இடம் சென்றனர். ஒருநாள் பலராமன் யசோதையிடம் வந்து கண்ணன் மண்ணைத் தின்றான் என்று கூற, அவன் கண்ணனைச் சினந்து மண்ணைத் தின்றாயா? வாயைத் திறந்து காட்டு என, கண்ணன் வாயைத் திறந்தான். அப்போது யசோதை அண்ட சராசரங்களையும், கடல், நதி, மலை, தீவு, சூரிய, சந்திரன் என்று அனைத்தையும் கண்டு திகைப்புற்றாள். பின்னர் அவன் வாயை மூட அவள் கொஞ்சினாள்.

ஒரு சமயம் கண்ணன் கை நிறைய தானியங்களை ஒரு பழக்காரியிடம் கொடுத்து பழங்கள் கேட்க, அவள் அவன் கை நிறைய பழங்கள் தர, அவள் பழக்கூடையில் நவரத்தினங்கள் நிறைந்தன. ஒருநாள் வயதில் முதிர்ந்த உபநந்தர் என்பவர் கோகுலத்தில் ஆபத்துக்கள் தோன்றுகின்றன. எனவே, வேறிடம் செல்லலாம் என்று கூற எல்லோரும் பசுக்களுக்கும், ஆயர்குல மக்களுக்கும் வசிக்கத் தகுதியான இடமான பிருந்தாவனம் சேர்ந்தனர். சிலநாட்கள் செல்ல கண்ணன் தோழர்களுடன் கன்றுகளை மேய்த்து வரலானான். ஒருநாள் கம்சனால் ஏவப்பட்ட வத்சாசுரன் என்னும் அரக்கன் மாயக்கன்றாகி கன்றுகளுடன் திரிந்தான். இதை அறிந்த கிருஷ்ணன் அக்கன்றின் பின்கால்களைப் பற்றி தூக்கி அருகிருந்த விளாமரத்தின் மீது மோதிட அசுரன் உயிரிழந்தான். மற்றொரு சமயம் பகாசுரன் என்னும் அரக்கன் கொக்கு வடிவில் வந்து கண்ணனை விழுங்க முயல அவன் அதன் அலகுகளைப் பற்றிச் சிறு புல்லைக் கிழிப்பது போல் கிழித்துக் கொன்றான்.

4. மலரவன் செய்த மாயம்

மற்றொரு நாள் அகாசுரன் என்ற அசுரன் ஒரு பெரிய மலைப் பாம்பின் வடிவில் சிறுவர்கள் வரும் வழியில் வாயை மிகவும் பெரியதாகத் திறந்து கொண்டு படுத்திருந்தான். தோழர்கள் இதை அறியாமல் அதன் வாயில் நுழைந்து சென்றனர். உடனே கண்ணனும் அவர்கள்பின் சென்று தனது சரீரத்தை மிகப் பெரிதாய் ஆக்கிட, அசுரன் மூச்சுத் திணறி கண்விழி பிதுங்கி உயிர்நீத்தான். கண்ண பகவான் தனது அருட்பார்வையால் அனைவரையும், கன்றுகளையும் உயிர்பிழைக்கச் செய்தார்.
மற்றொரு சமயம் கண்ணன் தோழர்களுடன் வனபோஜனம் செய்து கொண்டிருந்தபோது சிறுவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோதே கன்றுகள் காணாமல் போயின. அது பிரம்மதேவனின் செயலென அறிந்த பகவான் தானே கன்றுகளாகவும், சிறுவர்களாகவும் கோகுலத்தில் நுழைந்தார். ஆனால் இது பற்றி பலராமன் ஞானக்கண் கொண்டு அறிந்து கொண்டார்.

பிரம்ம தேவர் இது எவ்வாறு சாத்தியம் என்று பார்க்க கிருஷ்ணன் குழலூதிக் கொண்டு சிறுவர்களாகவும், கன்றுகளாகவும் காட்சி அளிக்க பிரம்மதேவன் கிருஷ்ணனின் சரண கமலங்களில் தலைவணங்கி, பலவகையாகத் துதி செய்து கிருஷ்ணனை வலம் வந்து தன் இருப்பிடம் சென்றார். புனிதமான பிருந்தாவனத்தில் கிருஷ்ணன் தோழர்களுடன் விளையாடிக் கொண்டே அருகில் உள்ள பனங்காட்டுக்குச் சென்றார். அங்கிருந்த தேனுகன் என்ற அசுரன் கழுதை வடிவில் ஓடிவர, பலராமன் அதன் கால்களைச் சேர்த்துப் பிடித்துத் தூக்கிச் சுழற்றிப் பனைமரத்தில் மோதிட அசுரன் உயிரிழந்து கீழே விழுந்தான். சிறுவர்கள் உதிர்ந்த பனம் பழங்களை உண்டனர்.

அரவின் மேல் ஆடிய கிருஷ்ணன்

ஒருநாள் கிருஷ்ணன், பலராமன் இன்றித் தோழர்களுடன் யமுனைக்குச் சென்றார். அன்று வெய்யில் கடுமையாக இருந்ததால் சிறுவர்கள் அந்நதி நீரைப் பருக உயிரை இழந்தனர். அந்நதியில் ஒரு மடுவில் வசித்து வரும் காளீயன் என்னும் சர்ப்பத்தின் கொடிய விஷத்தால் நீர் விஷமாகி இருந்தது. இவ்வாறு உயிர்கொலைக்குக் காரணமான காளீயனை அடக்க கிருஷ்ணன் அருகிருந்த கதம்ப மரத்தின் மீதேறி நீரில் குதித்தார். காளீயன் கோபம் கொண்டு சீறி எழுந்து கண்ணனைக் கடித்தது. அதுகண்டு அனைவரும் மயங்கி விழுந்தனர். செய்தி அறிந்த நந்தகோபர், யசோதை, ரோகிணி ஆகியோரும் ஓடி வந்தனர். கிருஷ்ணன் தன் உடலைப் பெரிதாக்கி, காளீயன் தலைமீது ஏறி நடனமாடி, அதனை அடக்கிட, காளீயன் ரத்தம் கக்கி, தனது பத்தினிகளுடன் கைகூப்பி நின்று கிருஷ்ணனைத் துதி செய்தான். உடனே கிருஷ்ணன் கீழே குதித்து சர்ப்பராஜனாகிய காளியனுக்கு கீழ்க்கண்டவாறு ஆணையிட்டார்.

காளீயனே, உனது குடும்பத்தினருடன் இனி சமுத்திரத்திற்குச் சென்றுவிட வேண்டும். என்னை இரண்டு சந்தியா காலங்களிலும் நினைப்பவனுக்குச் சர்ப்ப பயம் உண்டாகாது. இம்மடுவில் நீராடி என்னைப் பூஜிப்பவனது பாவங்களெல்லாம் நீங்கிவிடும் என்று கூறினார்.

5. பிரலம்பாசுரன் வதம்

ஒரு சமயம் ராம கிருஷ்ணர்கள் பிருந்தாவனத்தில் சஞ்சரித்தபோது பிரலம்பன் என்ற அசுரன் கோபன் வேஷத்தில் அவர்களுடன் இருந்தான். கிருஷ்ணன் சிறுவர்களிடம் எல்லோரும் இரு கட்சியாகி ஒரு கட்சித் தன் தலைமையிலும், மற்றொன்று பலராமனைத் தலைவனாகக் கொண்டும் ஆடவேண்டும் என்று கூற அவ்வாறே விளையாடத் தொடங்கினர். விளையாட்டில் தோற்றவர், வென்றவரைத் தோளில் தூக்கிக் கொண்டு ஓட வேண்டும் என்றபடி தோல்வி அடைந்த பிரலம்பன் பலராமனைச் சுமந்து செல்ல நேர்ந்தது. உண்மையை அறிந்த பலராமன் அசுரன் தலையில் தனது முஷ்டியால் குத்த அந்த அடியைத் தாங்க முடியாமல் அவன் ரத்தம் கக்கி கீழே விழுந்து உயிரை விட்டான்.

காட்டுத் தீ

மற்றொரு நாள் பசுக்கள் புல்லை மேய்ந்து கொண்டிருக்க, சிறுவர்கள் விளையாட்டில் கவனமாக இருந்தனர். அப்போது திடீரென்று காட்டில் தீ ஏற்பட்டு எங்கும் பரவிட, செய்தி அறிந்த கண்ணன், அவர்கள் துயர் துடைக்க எல்லோரையும் கண்ணை மூடிக் கொள்ளும்படி கூறினார். பகவான் அத்தீயைத் தானே விழுங்கி விட்டார்.

கோபிகா ஸ்த்ரீகள்

பிருந்தாவன சஞ்சாரியான கிருஷ்ண பரமாத்மாவைக் கோபிகா ஸ்த்ரீகள், மனதால் தியானித்து அவனது திவ்யலீலா வைபவங்களை வர்ணித்து, அவனுடைய இணையில்லா வடிவழகை அகக்கண்களால் கண்டு ஆனந்தக்கடலில் மூழ்கித் திளைத்தனர். கிருஷ்ணன் மீது கொண்ட பிரேமபக்தியில் திளைத்துக் கிடந்த அந்த ஆயர்குலப் பெண்டிர் பகவானின் வேணுகான அனுபவத்திலே ஆழ்ந்து கிருஷ்ணமயமாகினர். அதாவது தன் மயமாகவே ஆகிவிட்டனர்.

6. ரிஷி பத்தினிகள் அளித்த போஜனம்

ஒருநாள் கண்ணன், தன் தோழர்களுடன் இயற்கை எழில் கொஞ்சும் காட்டில் வெகுதூரம் பசுக்களுடன் சென்றான். அங்கே நீர் நிலையில் பசுக்களுக்கு நீர் காட்டிவிட்டு எல்லோரும் அமர்ந்தனர். அப்பொழுது நண்பர்கள் பசியினால் வருந்த கண்ணன் அவர்களிடம் அதோ அந்தணர்கள் சொர்க்கம் வேண்டுமென ஆங்கிரஸ யாகம் செய்கின்றனர். அங்கு சென்று கேளுங்கள்? அன்னம் கொடுப்பார்கள். தவறாமல் என் பெயரையும் என் அண்ணா பெயரையும் சொல்லிக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் பெருத்த ஏமாற்றம். அவர்கள் பரப்பிரம்மமாகிய கண்ணனைச் சாதாரண மானிடனாகவே எண்ணி அந்தச் சிறுவர்களை மதிக்கவேயில்லை. இல்லை, உண்டு என்றுகூட கூறவில்லை. சிறுவர்கள் வெறுப்புடன் திரும்பி வந்து நிகழ்ந்ததை கூற பகவான் சிரித்துக் கொண்டே நீங்கள் யாகசாலைக்குச் செல்லாமல் ரிஷி பத்தினிகளிடம் சென்று கூறுங்கள். அவர்கள் நிறைய அன்னம் அளிப்பர் என்றார்.

கிருஷ்ண தியானமாகவே இருக்கும் அந்த ரிஷிபத்தினிகள் சகல விதமான போஜன பதார்த்தங்களையும் தனித்தனியே பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு சிறுவர்களுடன் உலாவும் கிருஷ்ணனையும், பலராமனையும் கண்டு மயங்கி நின்றனர். அவர்களைக் கணவர்கள் தடுத்தும் பயனில்லை. கிருஷ்ணன் அந்தப் பெண்மணிகளை வரவேற்று இனிமையாகப் பேசினான். மனைவி, மக்கள், உறவினர், சரீரம், பிராணன், மனம், புத்தி எல்லாம் பிரியமுள்ளதாக இருப்பதற்குக் காரணம் ஆத்ம சம்பந்தமாகும். ஸர்வம் ஆத்மாவாக விளங்குகிறது. என்னை விட பிரியமான வஸ்து வேறென்ன உள்ளது. நீங்கள் என்னை நாடி வந்தது மிக்க சிறப்புடைய செயலாகும். இனி சென்று யாக காரியங்களைக் கவனியுங்கள் என்றார்.

உற்ற வஸ்துக்களை விட்டு விட்டுத் தங்களையே சரணடைந்த சரணதாசிகளான எங்களை அங்கீகரித்து வேதவாக்கியங்களை உண்மையாக்குங்கள் என்று வேண்டினர் அந்த ஸ்திரீகள். அதற்குக் கிருஷ்ணன், இடைவிடாமல் என்னை நினைப்பவர்கள் என்னையே வந்தடைவர். நீங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள். என்னையே தியானித்து பஜனம் செய்யுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். பகவானும், சிறுவர்களும் போஜனம் செய்து மகிழ்ந்தனர். நடந்ததை அறிந்து மகரிஷிகள் கர்ம வழியில் ஈடுபட்டு மயக்கமடைந்த தங்களை மன்னிக்கும்படி பகவானை மனதால் தியானித்து வணங்கினர்.

7. கோவர்த்தனகிரி பூஜை

ஒரு சமயம் நந்தகோபர் இந்திர யாகம் செய்ய ஏற்பாடு செய்தார். அப்போது அது பற்றிய விவரம் கேட்ட கண்ணனை நந்தகோபர் அன்புடன் அணைத்துக் கொண்டு, மழையினால் பயிர்கள் செழிக்கின்றன. மழைக்கு அதிபதியாகிய இந்திரனை பூஜிப்பது பரம்பரை வழக்கம். எனவே இப்போது பலவித தானியங்களாலும் இந்திரனைப் பூஜிக்கிறோம். இதுவே இந்திர யாகம் என்றார். அப்போது கிருஷ்ணன், இயற்கையின் நியதிப்படி உலகம் எல்லாம் நடைபெறுகின்றன. ரஜோகுண சம்பந்தத்தாலேயே மேகம் மழையைப் பொழிய பயிர்கள் செழிக்கின்றன. எனவே காடு, மலை, பசுக்களை நாம் பூஜிக்க வேண்டும். யாகப் பொருள்களைக் கொண்டு வேதியர்களை பூஜிப்போம். பசுக்களுக்கு புல்லை அளித்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இயற்கையைப் பூஜிப்பதே தக்கது என்று கூறினார். நந்தகோபரும் அதை ஏற்றிட, பகவான் எண்ணியபடி யாவும் நடந்தன. கிரிவலம் வந்தனர். எல்லோரும் குறிப்பாக கோபியர்கள் ஸ்ரீகிருஷ்ண மகிமைகளை ஆனந்தமாகப் பாடிக் கொண்டே பின் தொடர்ந்தனர். அப்போது கண்ணன் அழகிய பேருருவுடன் தோன்றி தானே மலையின் முக்கிய தேவதை என்றிட, கிருஷ்ணனும் அப்பாவி போல் நின்று அத்தேவதையை பணிவுடன் வணங்கினார். கோகுலவாசிகளும் நந்தகோபரும் பக்தியுடன் வணங்கிப் பூசித்து மகிழ்ந்தனர்.

இஃதறிந்த இந்திரன் மிக்க கோபம் கொண்டு கருமேகங்களை ஏவி பெருமழைப் பெய்யச் செய்தான். செய்வதறியாத ஆயர்குல மக்கள் கிருஷ்ணனைச் சரணடைய, அவர் சரணமடைந்தவரைக் காப்பது தன் கடமை என்று கோவர்த்தனகிரியையே தூக்கிக் குடையாகப் பிடித்து எல்லோரையும் அதனடியில் வந்து சுகமாகத் தங்கி இருக்குமாறு கூறினார். இவ்வாறு ஏழு நாட்கள் கழிய இந்திரன் பகவானின் யோக மகிமையை உணர்ந்தான். அவன் கர்வம் அடங்கியது. மழை நின்றது. இத்தகைய கண்ணனின் அதிமானுஷ்யச் செயலை தேவலோகத்திலிருந்து கண்ட காமதேனுவும், இந்திரனும் பூலோகம் வந்து ரகசியமாக பகவானைத் தரிசித்து வணங்கினர். அப்போது இந்திரனிடம் பகவான், நீ ஆடம்பரத்தையும், கர்வத்தையும் விட்டு பதவியில் கவனமாய் இரு. என் உத்தரவுபடி நட. ÷க்ஷமம் உண்டாகும். உன் இருப்பிடம் செல்க என்று விடை கொடுத்து அனுப்பினார். காமதேனுவும் தனது பாலைப் பொழிந்து பகவானுக்கு அபிஷேகம் செய்தது. தேவர்களும், தூப, தீப, நைவேத்தியங்களுடன் பகவானுக்கு கோவிந்தன் என்று பெயரிட்டுப் பட்டாபிஷேகம் செய்வித்தனர்.

8. குழலிசை மயக்கம்-ராஜஸ் கிரீடை

ஒரு சமயம் பூர்ணசந்திரன் பால் நிலவில் கண்ணன் யோகமாயா தேவியின் உதவியுடன் ஓர் அதிசய விளையாட்டை நிகழ்த்தினான். பகவான் ஓர் இனிய குழலூதி எல்லோரையும் தன் வயப்படுத்தினான். அவன் இனிய கீதத்தில் மயங்கி கோபியர்கள் அனைவரும் தன் இருப்பிடம் விட்டு கண்ணனிடம், வந்து சேர்ந்தனர். கிருஷ்ண பிரேமையில் ஆழ்ந்த அவர்களும், வரமுடியாமல் வீட்டிலே தங்கியவர்களும் கூட கண்ணன் தியானத்தில் ஒன்றிய உள்ளம் கொண்டவர்களாய் மெய்மறந்து சொக்கி நின்றனர். அந்த மங்கையர்களைக் கண்ட கண்ணன் வசீகரப் புன்னகையுடன் இனிமையாகப் பேசினார், என்னிடம் அன்பு கொண்டு வந்தது சரியே. எனினும்  அவரவர்க்குரிய தர்மங்களைச் செய்யாமல் வரலாமா. திரும்பி செல்லுங்கள். என் அருகில் இருப்பதைவிட என்னை உள் அன்புடன் தியானிப்பது, என் சரிதம் கேட்பது, என் நாமகீர்த்தனம் ஆகியவற்றால் என் மீது பக்தி அதிகமாகிறது என்று கூற, அப்பெண்மணிகள், சரணமே கதி என்று வந்த எங்களைக் கைவிடாமல் ரக்ஷித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.

மேலும் எங்களைச் சரண தாசிகளாக ஏற்றுக் கொண்டு அனுக்கிரகம் செய்யுங்கள். தங்கள் கர கமலங்களை எங்கள் சிரசின் மீது வைத்து அருள்புரியுங்கள் என்று வேண்டினர். அப்போது கண்ணன் தனது இனிய புன்னகையால் அவர்களை மகிழ்வித்தார். அந்தக் கபடமற்றப் பெண்களுடன் பிருந்தாவனத்தில் ஆனந்தமாக ஆடிப் பாடினார். கோபியர்களும் ஆனந்தமாக கண்ணன் புகழைப் பாடிக் கொண்டே உல்லாசமாக சஞ்சரித்தனர். இவ்வாறு யமுனை ஆற்றங்கரையில் பிருந்தாவனத்தில் கோபியருடன் கண்ணன் ஆனந்தமாக இருக்கையில் அவர்கள் ஒவ்வொருவரும் கண்ணன் தன்னை மட்டுமே நேசிக்கிறான் என்ற எண்ணத்துடன் பெருமிதம் கொண்டனர். இஃதறிந்த கண்ணன் மெல்லச் சிரித்துக் கொண்டே திடீரென்று மறைந்து விட்டான். கோபியர்கள் தங்கள் உள்ளத்தையே கண்ணனிடம் ஒப்படைத்து, கிருஷ்ண தியானமாகவே இருந்தனர். எல்லோரும் சேர்ந்து கானம் பாடினர். அதுவே கோபிகா கீதம்.

9. அரிஷ்டாசுரன், வியோமாசுரன் ஆகியோர் வதம்

ஒருநாள் அரிஷ்டன் என்ற அசுரன் மலை போன்ற ரிஷப வடிவில் உறுமிக் கொண்டு கோகுலத்தில் நுழைந்தான். அவன் இடைச்சேரியில் அட்டகாசம் செய்து கொண்டு அச்சுறுத்தி வந்தான். கூர்மையான கொம்புகள் கொண்ட அது தன் குளம்புகளால் பூமியைப் பிளப்பது போல் இடித்தது. பசுக்கள் நடுங்க பாய்ந்து வந்தது. அக்கொடிய காளையைக் கண்ட மக்கள் கிருஷ்ணா, கிருஷ்ணா என்று கூறிக்கொண்டே கிருஷ்ணனிடம் சரண் புகுந்தனர். உடனே அவன் காளையின் கொம்புகளைப் பற்றி, கீழே தள்ளி மிதித்து அதன் உடலை முறுக்கிப் பிழிந்து கொன்று வீழ்த்தினார். மற்றொரு நாள் வியோமாசுரன் என்பவன் கோபியர் குமாரர்களை மலைக்குகையில் அடைத்து வைக்க, கிருஷ்ணன் அவ்வசுரனைக் கொன்று கோபியர் குமாரர்களை விடுவித்தார்.

ஒருசமயம் கண்ணன் சுதரிசனன் என்ற பாம்பைக் காலினால் மிதித்துக் கொன்றான். மற்றொரு சமயம் பிரகஸ்பதி முனிவரைச் சுதரிசனம் என்ற வித்தியாதரன் இகழ்ந்ததால், அவர் அவனைப் பாம்பாகும் படிச் சபித்தார். சாப விமோசனத்தை அந்தப் பாம்பு இவ்வாறு கண்ணனால் பெற்றது.

10. கோபியர் துகில் உரிந்தான்

சில கோபியர் கண்ணனே தனக்குக் கணவனாக வேண்டுமென பாவை நோன்பு நோற்றனர். அவர்கள் பனிவரைக் கன்னியைத் தொழுதனர். துர்க்கை உருவை வரைந்து நோன்பு நோற்றனர். இதனையே கார்த்தியாயினி விரதம் என்றும் கூறுவர். விரதம் அனுஷ்டிக்க முற்பட்ட பெண்டிர் நீராடச் சென்றனர். சென்ற இடத்தில் தங்களுடைய உடைகளையும், நகைகளையும் கரையிலேயே வைத்து விட்டு நீரில் மூழ்கி நீராடினர். அப்படி அவர்கள் நீராடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்குக் கண்ணனின் புல்லாங்குழல் ஓசை கேட்டது. உடனே அவர்கள் வெளிவர எண்ணிக் கரையில் தமது துணிகளைக் காண அங்கே அவை காணப்படவில்லை. ஸ்ரீகிருஷ்ணனே புடவைகளைக் குறும்புத்தனமாக மறைத்திருப்பான் என்று நினைத்து, வேணுகானம் வந்த திசையை நோக்கித் தேடினர். அங்கேயே கரையில் இருந்த ஒரு மரத்தின் கிளைகளிலே அவர்களுடைய உடைகளையும், அவற்றை அபகரித்த கள்ளன் கண்ணனையும் கண்டனர். அவர்கள் தங்கள் கைகளால் மார்பை மூடிக் கொண்டு நீருக்குள் சென்று கழுத்தளவு நீரில் நின்று கண்ணனிடம் வேண்டினர்.

கிருஷ்ணா, உன்னையே நம்பி உள்ளவர்கள் நாங்கள். உங்களைத் தவிர வேறு யாரையும் எண்ணிக்கூட பார்ப்பது இல்லை. உங்களையே சரணமடைந்த எங்களை இப்படி நடத்தலாமா? தயவு செய்து எங்கள் சேலைகளைப் போடு என்று வேண்டினர். கார்த்தியாயினி விரதம் அனுஷ்டிக்க எண்ணிய நீங்கள் ஆடை ஏதுமின்றி நீரில் இறங்கி நீராடலாமா? நீங்கள் என்னையே நம்பி இருப்பதாகவும், நானே உங்கள் நாதன் என்று உரைத்தீர்கள். அது உண்மையானால் நீங்கள் என்னிடம் அப்படியே நேரில் வந்து உங்கள் சேலைகளைப் பெற்றுக் கொள்ளலாமே என்றான் கண்ணன். ஆடையின்றி எப்படி வருவது? எங்களுக்கு வெட்கமில்லையா? என்று கோபிகைகள் கூற கண்ணன், என்னை விட உங்களுக்கு உங்கள் உடல் வெட்கமே முக்கியம் போலும். இத்தகைய தேகாபிமானம் அதாவது உடல் மீது பற்றுள்ள உங்களுக்குக் கார்தியாயினி எப்படி கருணை காட்டுவாள்? உங்களுடைய பற்று உங்களுக்கு மோக்ஷம் கிடைக்காமலிருக்கத் தடையாகும் என உபதேசித்தான் மாயக்கண்ணன்.

அப்போது அவர்கள் பகவானின் அறிவுரை கேட்டு மனத் தெளிவு பெற்றனர். கிருஷ்ண பிரேமையில் மூழ்கி அவனையே கணவனாக அடைய விரும்பிய அவர்கள் வெட்கத்தையும், தேகாபிமானத்தையும் பற்றையும் விட்டு இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கி மெய்மறந்து துதி செய்தனர். அப்போது மாயக்கண்ணன் அவர்களுடைய சேலைகளை அவர்களுக்கு அளித்து மறைந்துவிட்டான். கோபியர்க்குப் பற்றற்ற நிலையை உணர்த்தவும், தன்னையே சரணடைந்தாரைக் காக்கும் தன் இயல்பையும், தனது பக்தர்களுக்கு எந்நிலையிலும் இழுக்கு நேராவண்ணம் உதவவும் வாத்சல்ய குணத்தையும் உணர்த்தவே இந்த கோபிகா வஸ்திராபரணம் நடத்தினான் மாயக்கண்ணன் என்று முடித்தார் சுகப்பிரம்மம்.

11. கேசி வதம்

கம்சனால் ஏவப்பட்ட கேசி என்னும் அசுரன் ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்லும் எண்ணத்துடன் குதிரை வடிவத்தில் வந்து குளம்புகளால் பூமியை இடித்தும் பிடரி மயிர்களால் மேகங்களைக் குத்தியும், குதித்தோடும் வேகத்தால் சந்திர, சூரிய வழிகளில் தாவிக்கொண்டும் பெரும் கனைப்புடன் அங்கிருந்த ஆயர்களைத் துரத்தினான். இது கண்டு அச்சமுற்ற ஆயர்களும், ஆய்ச்சியரும் ஸ்ரீகிருஷ்ணனைச் சரணடைந்து காத்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தனர். அப்போது கண்ணன் புன்சிரிப்புடன் அவர்களைப் பயப்பட வேண்டாம் என்றும், அற்ப பலம் கொண்டது அது என்றும் கூறினான். மேலும் அவன் பலமற்றவன் சும்மா குதித்து ஆட்டம் காட்டுகிறான் என்றும் கூறி அவர்களை அமைதியாக இருக்கப் பணித்தான்.

கேசியை நோக்கி வா என அழைத்து அதன் பற்களை உதிர்த்து விடுவதாகக் கூறினான் கண்ணன். அப்போது அக்குதிரை வாயைத் திறந்து கொண்டு கண்ணன் மீது பாய்ந்தது. உடனே கண்ணன் தன் கையை அதன் வாயிலே புகுத்தி, மிகப்பெரிதாக்கினார் கையை. அவன் பற்கள் யாவும் உடைபட்டன. வாய் இரண்டாகக் கிழக்கப்பட்டது. இதைக் கண்ட ஆயர்கள் மட்டுமின்றி, தேவர்களும் மகிழ்ச்சி உற்றனர். கேசியின் வதத்தை விண்ணிலிருந்து மறைந்து பார்த்த நாரதர் வெளிப்பட்டுக் கண்ணனைத் துதி செய்தார். பகவானுக்கு இதன் காரணமாக கேசவன் என்ற திருப்பெயர் விளங்கட்டும் என்றும் அடுத்து நடத்த இருக்கும் கம்ச யுத்தத்திற்கு வருவதாகவும் கூறிச் சென்றார் முனிவர்.

12. அக்ரூரர் கோகுலம் செல்லுதல்

கிருஷ்ண பலராமர்கள் அரக்கர்களைக் கொன்றது, கோவர்த்தன மலையைத் தூக்கியது, தேவகியின் மகனாகப் பிறந்து யசோதையினிடம் வளர்தல் போன்ற செய்திகள் அனைத்தையும் நாரதர் கம்சனுக்குக் கூறிட, அவன் வெகுண்டெழுந்தான். பின்பு சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களுடன் ஆலோசித்து கிருஷ்ணனையும், பலராமனையும் கொல்லுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். பிறகு, விருஷ்ணிகுல நண்பர் அக்ரூரரிடம் கோகுலம் சென்று, மதுரா நகரில் நடத்த உள்ள தனுர் யாகத்திற்கு, ராமகிருஷ்ணர்களையும், நந்தகோபரையும் அழைத்து வரும்படியும், அவர்களை உடனே கொல்ல வேண்டும் என அறிவித்து தேரையும் கொடுத்து அவரை அனுப்பினான்.

அக்ரூரர் ஸ்ரீகிருஷ்ண சரணங்களைக் கண்டு வணங்கிச் செல்வதற்கான வாய்ப்பாகக் கருதி உடனே புறப்பட்டார். கம்சன் தன்னைக் காத்துக் கொள்ள செய்வதனைத்தையும் அறிந்த அக்ரூரர் இம்முயற்சியில் கம்சன் தோல்வி அடையப் போவதையும் அறிந்திருந்தார். அக்ரூரன் வழிநெடுக கிருஷ்ண தியானமாகவே இருந்து கோகுலத்தை அடைந்து ராமகிருஷ்ணர்களிருக்கும் இடத்திற்குச் சென்றார். சென்றவர் அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி தான் வந்த காரணத்தையும், கம்சன் ஏற்பாடுகளையும் விளக்கினார்.

கோகுலத்தில் அக்ரூரர்

செய்தி அறிந்த நந்தகோபர் தனுர் யாகம் காண மதுரை செல்ல ஆயத்தமானார். ஆனால், கண்ணன் பிரிந்து செல்வதை ஏற்காத கோபியர்கள் அவரைத் தடுத்து நிறுத்த முயன்றனர். தேர் கிளம்பியது கண்டு அதனைப் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது கண்ணன் தான் வெகுவிரைவில் திரும்பி வருவதாக அன்புடன் கூறி அவர்களைச் சமாதானப்படுத்தினார்.

யமுனையில் அதிசயம் காணல்

பகவானுடைய தேர் யமுனைக் கரையில் சிறிது நேரம் நின்றது. அக்ரூரர் யமுனையில் இறங்கி நீராடச் சென்றார். அவர் நீரில் மூழ்கிய போது எதிரில் தேரில் அமர்ந்திருக்கும் இராமலக்ஷ்மணர்களைக் கண்டு வியந்தார். மறுபடியும் மூழ்கிட அப்போது அங்கு ஆதிசேஷ பகவானையும், சங்கு சக்கரதாரியையும் கண்டு பரமானந்தம் கொண்டு துதி செய்தவண்ணம் மெய்மறந்து நின்றார். அவருக்குத் தோற்றமளித்த பகவான் மறைந்துவிட அக்ரூரர் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ரதத்தின் அருகில் வந்து சேர்ந்தார். அப்போது கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே அக்ரூரரை நோக்கி என்ன அதிசயம் கண்டவர் போல் இருக்கிறீரே, என்ன விஷயம்? என்று கேட்டார். அதற்கு அக்ரூரர் ஜகத் சொரூபியாகிய அவரையே பார்க்கின்ற தனக்கு வேறென்ன அதிசயம் வேண்டும் என்று கூறிக்கொண்டே தேரேறி குதிரைகளை ஓட்டினார். அந்தி சாயும் நேரம் மதுரையை அடைந்தனர். கிருஷ்ண பலராமர்கள், நந்தகோபர் மற்ற ஆயர்பாடி மக்களுடன் தங்கியிருக்கும் உபவனத்திலேயே தங்கிவிட்டு காலையில் நகரத்துக்கு வருவதாகக் கூறி அக்ரூரருக்கு விடை கொடுத்து அனுப்பினர்.

13. மதுரையில் ராம கிருஷ்ணர்கள்

மறுநாள் நகரைச் சுற்றிப் பார்த்து வருகையில் வழியில் சுதர்மதன் என்ற வண்ணான் எதிர்ப்பட அவனிடமிருந்த வஸ்திரங்களைத் தருமாறு கேட்க, அவன் மறுக்க அவனை வதம் செய்து வஸ்திரங்களைக் கோபர்களுக்குக் கொடுத்தார். பின்னர் ஒரு வியாபாரி அவரைப் பணிந்து ஆடை, அணிகளால் அவரை அலங்கரித்து மகிழ, அவனுக்கு சகல சவுபாக்கியங்களையும் அருளினார் பகவான். பிறகு சுதர்மர் என்ற பூக்காரர் வீட்டுக்குச் சென்று அவனுக்கு அனுக்கிரகம் செய்தார். வழியில் சந்தன கிண்ணத்துடன் ஒரு வக்கிரமான பெண்ணைக் கண்டவர் அவளைப் பற்றி விசாரித்து சந்தனத்தைத் தனக்குத் தருமாறு கேட்டார். அவள் தன் பெயர் திரிவக்கிரா என்றும், கம்சனின் வேலைக்காரி என்றும், சந்தனத்தைக் கம்சனுக்கு எடுத்துச் செல்வதாகக் கூறிய அவள் அதைப் பூசிகொள்ளும் தகுதியுள்ளவர் கிருஷ்ணனே என்று கூறி அவரிடம் கொடுத்துவிட்டாள். இதனால் மகிழ்ச்சி அடைந்த பகவான் அவளைச் சுந்தர சொரூபியாக்கி விட்டார்.

தனுர் யாகம்

பின்னர் தனுர் யாகம் நடக்கும் இடத்தை அடைய, அங்கு இருந்த பெரிய தனுசைக் கையிலெடுத்து நாணேற்றி ஒடித்திட அனைவரும் கிருஷ்ணனின் அழகையும், வீரச்செயலையும் கண்டு பிரமித்து நின்றனர். இவ்வாறு கிருஷ்ணன் அங்கே சேர்ந்து வில்லை ஒடித்த செய்தி அறிந்த கம்சன் மல்யுத்த ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டான். மக்கள் கூடினர். வாத்தியங்கள் முழங்கின. கம்சன் மந்திரி, பிரதானிகளுடன் நண்பர்கள் புடைசூழ சிம்மாசனத்தில் வீற்றிருந்தான். நந்தகோபரும், கோபாலர்களும் கம்சனுக்குக் காணிக்கை செலுத்திவிட்டு அருகில் அமர்ந்தனர். மல்யுத்த வீரர்கள் சாணூரன், முஷ்டிகன், சலன் ஆகியோர் மேடையை அடைந்தனர்.

குவலயா பீடம்

ராமகிருஷ்ணர்கள் நீராடி, அலங்கரித்துக் கொண்டு சபைக்கு வந்தனர். வாயிலில் நின்ற காவல்காரன் கம்சனின் ஆணைப்படி குவலயாபீடம் என்ற யானையை அவர்கள் மீது ஏவிட, அது ராமகிருஷ்ணர்களைக் கொல்ல ஆயத்தமாக, பகவான் அதன் தந்தங்களை ஒடித்து அவற்றாலேயே யானையையும், யானைப் பாகனையும் கொன்று வீழ்த்தினார். பின்னர் அந்தத் தந்தங்களையே ஆயுதங்களாகக் கொண்டு மல்யுத்த அரங்கில் நுழைந்தனர். மற்போர் வீரர்கள் ராமகிருஷ்ணர்களைப் போருக்கு அறைகூவி அழைத்தனர். அப்போரில் பகவான் சாணூரனையும், பலராமன் முஷ்டிகளையும் வெற்றி கொண்டு வதம் செய்தனர். மக்கள் ஆனந்தக் கூச்சலிட்டுக் கண்ணனைக் கொண்டாடினார்கள். மல்லர்களை வீழ்த்திய மாதவனையும், அவன் சோதரனையும் கண்டு கொதித்து எழுந்தான் மதுரை மன்னன் கம்சன். அவன் அவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் உக்கிரசேனன், நந்தகோபர் ஆகியோரையும் உடனே கொல்லுமாறு உத்தரவிட்டான்.

அதைக் கேட்ட பகவான் கிருஷ்ணன் கடுங்கோபம் கொண்டு கம்சனை எதிர்த்துப் போரிட்டு கடைசியில் அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளி அவன் மார்பின் மீது அமர பாரம் தாங்காமல் கம்சன் உயிர் நீத்தான். ஆனால், அவன் தன் மரண பயத்தினால் சதாசர்வ காலமும் கிருஷ்ண உருவத்தையே கண்டு நடுங்கிய படியால் அவனுக்கு பகவானின் சாரூப்யம் கிடைத்தது. கம்சனுடைய மனைவிகளைச் சமாதானம் செய்து கம்சனுக்கு உத்திரக்கிரியைகளை முறைப்படிச் செய்வித்தார். பிறகு, ராமகிருஷ்ணர்கள் பெற்றோர்களையும், பாட்டனார் உக்கிரசேனனையும் சிறை மீட்டு வணங்கினர். பெற்றோர்களும் மக்களை அன்புடன் கட்டித் தழுவி முத்தமிட்டு உச்சி முகர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பகவான் உக்கிரசேனரை யாதவர்களுக்கு அரசனாக்கினார். பிறகு நந்தகோபரிடம் சில காலம் மதுரையிலேயே தங்கிவிட்டு வருவதாகக் கூறி பல காணிக்கைகளை அளித்து அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் கோகுலம் அனுப்பி வைத்தனர்.

குருகுலவாசம்

வசுதேவர், தேவகி குழந்தைகளுக்கு உபநயனம் செய்து வைத்து, சாந்தீபனி முனிவரிடம் வித்தை கற்க சேர்த்திட ராமகிருஷ்ணர்கள் நன்கு குருகுலவாசம் செய்து சகல வித்தைகளையும் கற்று, இறுதியில் குருவுக்கு அவர் விரும்பும் தக்ஷிணை அளிக்க வேண்டி நின்றனர். பிறகு குரு வேண்டியபடியே பிரபாச ÷க்ஷத்திரத்தில் மூழ்கி இறந்து போன குரு புத்திரனை உயிருடன் கொண்டு வந்து குருவினிடம் ஒப்புவித்து குருதக்ஷிணையாக அளித்து வணங்கினார் பகவான் கிருஷ்ணன். குருகுலத்திலிருந்து திரும்பி வந்த ராமகிருஷ்ணர்களை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பகவான் சில காலம் அங்கேயே தங்கி இருந்தார்.

14. உத்தவன் தூது

பின்னர் கிருஷ்ணன் விருஷ்ணிகுல சிரேஷ்டரான உத்தவ ஸ்வாமியை அணுகி, அவரைக் கோகுலம் சென்று வர வேண்டினான். அவர், கோபியர்கள் அவர்களது உள்ளம், உயிர் எனக்கே அர்ப்பணம் செய்து இகலோக, பரலோக சுகங்களையும் விட்டு என்னையே சரணம் அடைந்துள்ளனர்; அவர்களிடம் நான் விரைவில் வந்து சந்திப்பதாகக் கூறுமாறு பணித்தார். மாலையில் கோகுலம் வந்தடைந்த உத்தவரை நந்தகோபர் வரவேற்று, உபசரித்து, ÷க்ஷமலாபங்கள் பற்றி விசாரித்தார். மேலும், கண்ணன் தனக்குப் பிரியமான பிருந்தாவனத்தையும், கோகுலத்தையும் கோவர்த்தனகிரியையும் நினைத்துக் கொள்ளுகிறாரோ என்று கேட்டார். மற்றும் கிருஷ்ணனின் லீலைகளை நினைந்து நினைந்து பரவசத்தில் திளைத்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். அருகிலிருந்த யசோதையும் அவ்வாறே மெய்மறந்து நின்றாள். அவர்களின் இணையற்ற பிரேம பக்தியைக் கண்ட உத்தவர் வியப்பினால் திகைத்து நின்றார். நந்தகோபரைப் பார்த்து, ஸ்ரீஹரியிடம் பிரேம பக்தி உடைய நீங்கள் பிறவிப் பயனை அடைந்து விட்டீர்கள். சீக்கிரத்திலேயே கிருஷ்ண தரிசனம் கிடைக்கும் என்று இயம்பி, அதனைத் தெரிவிக்கவே பகவான் தன்னை அனுப்பியதாகவும் கூறினார்.

மறுநாள் சூர்யோதயத்தில் நந்தகோபர் வீட்டின் முன் ரதத்தைக் கண்டு கோபியர்கள் பிரமித்தார்கள். அப்போது நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்துக் கொண்டு உத்தவர் அங்கு வந்தார். அவரை கோபியர் தனியாக அழைத்துச் சென்று, வணங்கி உபசரித்து கண்ணனைப் பற்றிக் கேட்டனர். கிருஷ்ண தரிசனத்துக்காக ஆவலுடன் துடிக்கும் அவர்களின் பிரேமாதி சயத்தைக் கண்ட உத்தவர் திகைப்புற்றார். அவர்களின் ஈடில்லா அன்பைக் கண்டு வியந்தார். பிறகு கிருஷ்ணன் சொன்ன செய்திகளை அவர்களுக்குத் தெரிவித்தார். செய்தி கேட்டு கோபியர்கள் மிகவும் மயங்கினர். அந்தக் கிருஷ்ணனிடம் கொண்ட ஆசையை மறக்க முடியவில்லை. அவனது நடையழகு, அற்புத லீலைகள், கருணா கடாட்சத்தை எங்களால் மறக்க முடியவில்லை. துன்பங்களைத் துடைக்கும் அந்த கோவிந்தன் எங்களைத் துயரக் கடலிலிருந்து மீட்டுக் காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டனர். அந்த ஆயர்குல மங்கையரின் ஈடுஇணையற்ற கிருஷ்ண பக்தியை கண்ட உத்தவர் கிருஷ்ணன் மீது அன்பை, பிரேமையைக் கொண்ட கோபியர் வணங்கத் தக்கவர்கள். அவர்கள் சகல தர்மங்களையும், உற்றார் உறவினர்களையும் துறந்து சுருதிகளும் தேடுகின்ற பகவத் சரணங்களை நாடி ஓடி வந்துள்ளனர்.

இவ்வாறு கோகுலத்தில் சில நாட்கள் செலவழித்த பின்னர் உத்தவர் நந்தகோபர், கோபியர் மற்றும் கோகுலவாசிகளிடம் விடைபெற்று, மதுராபுரிக்குச் செல்ல புறப்படுகையில் நந்தகோபர் அவரை அன்புடன் தழுவிக் கொண்டு எங்கள் மனம் ஸ்ரீகிருஷ்ண சரணாரவிந்தங்களிலே நிலைத்து இருக்கட்டும். எங்கள் வாக்கில் அவன் நாமமே நிற்கட்டும். எங்கள் உள்ளத்தில் கிருஷ்ண பக்தி பெருகி வளரட்டும் என்று கூறி காணிக்கைகள் அளித்து விடை அளித்தார். உத்தவர் மதுரையை அடைந்து ராமகிருஷ்ணர்களை அடைந்து வணங்கி கோகுலவாசிகளின் அன்பை எடுத்துக் கூறி, நந்தகோபர் அளித்த காணிக்கைகளை உக்கிரசேனர், பலராம, வசுதேவர்களிடம் அளித்து வணங்கினார். பின்னர், பகவான் தனக்குச் சந்தனம் கொடுத்து வீட்டிற்கு வரவேண்டுமென்று அன்புடன் அழைத்த திரிவிக்ரன் வீட்டுக்குச் சென்று அவருக்கு அனுக்கிரகம் செய்தார்.

15. அஸ்தினாபுரத்தில் அக்ரூரர்

அடுத்து வாக்களித்தபடி அக்ரூரர் வீட்டுக்குச் சென்றார். பலராமர், உத்தவர்களுடன் தன் இல்லம் வந்த கிருஷ்ணனை அக்ரூரர் மனமுவந்து வரவேற்று உபசரித்தார். பகவானுடைய அருள்வேண்டி அக்ரூரர் பிரார்த்தித்தார். அப்போது கிருஷ்ணன் அக்ரூரரிடம் அவர் தமக்கெல்லாம் குரு, உற்ற பந்து என்றும் அவருடைய பாதுகாப்பில் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார். மேலும் தங்களைப் போன்ற சுயநலமற்ற சாதுக்கள் பூசிக்கத் தக்கவர்கள்; சாதுக்கள் தரிசனம் உடனே பயன் தருவது என்று கூறினார் கிருஷ்ணன். அடுத்து அக்ரூரரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். தந்தையை இழந்த பாண்டவர்கள் திருதராட்டிரனிடம் இருக்கின்றார். அவர்கள் கஷ்டப்படுவதாகத் தெரிகிறது. துஷ்ட புத்தியுள்ள துரோனாதியர் தந்தை திருதராட்டிரன் அவர்களை அன்பாகக் கவனிக்கமாட்டான். உடனே அஸ்தினாபுரம் சென்று பாண்டவர்கள் நலம் அறிந்து வரவேண்டும் எனப் பணிந்து பலராமருடன் தன் இருப்பிடம் அடைந்தார்.

கிருஷ்ணன் சொல்லியபடி அஸ்தினாபுரம் சென்ற அக்ரூரர் பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகிய பெரியோர்களையும், திருதராட்டிரர், பாண்டவர், துரியோதனன் ஆகியோரையம், உற்ற பந்துக்களையும் சந்தித்து ÷க்ஷமலாபங்களை விசாரித்தார். மேலும் சில நாட்கள் அங்கே தங்கினார். குந்திதேவி அக்ரூரரைக் கண்டவுடன் வருத்தமுற்றாள். பிறகு எல்லோருடைய நலன்கள் பற்றி விசாரித்தாள். பக்தவத்சலனாகிய கண்ணன் பாண்டவர்களைப் பற்றியும், தன்னைப் பற்றியும் நினைக்கின்றானா? அன்பிலாரிடையே வாழ்ந்து வரும் தனக்கும், தன் குழந்தைகளுக்கும் ஆறுதல் அளிக்க வருவானா? என்றெல்லாம் கேட்டாள்; அழுதாள். அப்போது அக்ரூரனும், விதுரனும் அவளுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் ஒருநாள் அக்ரூரர் திருதராஷ்டிரனிடம் தர்மநீதியுடன் ஆட்சி புரியும் பந்துக்களிடம் சமபாவத்துடன் இருந்து புகழ் பெற்று ÷க்ஷமமடையுமாறு கூறினார். அதற்கு திருதராஷ்டிரன் புத்திர வாஞ்சையுள்ள மனம் சஞ்சலிக்கிறது. உமது நல்லுபதேசங்கள் நிலைக்காது. சர்வேசுவரன் கட்டளையை யாரும் மீறமுடியாது என்றார். அக்ரூரர் மதுராபுரி அடைந்து கிருஷ்ணனிடம் செய்திகளைக் கூறினார்.

16. ஜராசந்தனை வென்றது

கம்சனுடைய மரணத்துக்குப் பின் அவனது மனைவியர் அஸ்தி, பிராஸ்தி என்போர் தமது பிதா ஜராசந்தன் வீட்டை அடைந்தனர். மகத நாட்டு மன்னனாகிய ஜராசந்தன் ஐம்பத்து மூன்று அசெக்ஷளஹிணி சேனைகளுடன் மதுராபுரியை முற்றுகையிட்டான். அப்போது ராமகிருஷ்ணர்கள் தமது ஆயுதங்களை அடைய திருவுள்ளம் கொள்ள விண்ணிலிருந்து சார்ங்கம் என்ற வில்லும், அக்ஷய துணீரங்களும், கவுமோதகி என்ற கதையும் கிருஷ்ணனை அடைந்தன. பலராமருக்குக் கலப்பையும், ஓர் உலக்கைத் தடியும் வந்தன. இரண்டு தேர்களும் சாரதியுடன் வந்து சேர்ந்தன. ஜராசந்தனுக்கும், ராமகிருஷ்ணர்களுக்கும் இடையே நடந்த போரில் ஜராசந்தன் தோற்கடிக்கப்பட்டான். அவனை உயிருடன் திரும்பிச் செல்ல விட்டனர். எனவே அவன்தான் வெற்றி பெற்றதாக எண்ணினான். இவ்வாறு பதினெட்டு முறை ராமகிருஷ்ணர்களுடன் போர் புரிந்த ஜராசந்தன் கிருஷ்ணனால் தோல்வி அடைந்து ஓடிப் போனான்.

பதினெட்டாவது முறை ஜராசந்தன் போருக்கு வந்தபோது காலயவன் என்ற அசுரனும் மதுரையைத் தாக்கினான். இருவரையும் எதிர்கொள்ள வேண்டி இருந்ததால் பகவான் சமுத்திரத்தின் நடுவில் பன்னிரண்டு யோசனை பரப்புள்ள ஒரு நகரத்தை நிர்மாணிக்குமாறு விச்வகர்மாவுக்கு ஆணையிட அவனும் ஓர் அழகிய நகரத்தை உருவாக்கினான். அதில் இந்திரனால் அனுப்பப்பட்ட சுதர்மா என்ற சபையும், தேவலோக பாரிசாதமும், குபேரன் அனுப்பி வைத்த அஷ்டநிதிகளும் அங்கே இருந்தன. அந்நகரில் மதுராபுரி மக்களையும், உறவினர்களையும் குடியேற்றி பலராமரையும் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கச் செய்து நிராயுதபாணியாக வெளியே சென்றார் பகவான் கிருஷ்ணன்.

காலயவனன் அழிதல்

ஒளி பொருந்திய கிருஷ்ணனைக் கண்ட காலயவனன் அவரைப் பின் தொடர அவர் அவனை வெகுதூரம் அலைக்கழித்து இறுதியில் ஒரு குகையில் நுழைந்து மறைந்துவிட்டார். காலயவனன் அக்குகையில் நுழைந்த கிருஷ்ணனைக் காணாமல் அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஒருவனைக் கோபத்துடன் உதைக்க அவன் காலயவனனை விழித்துப் பார்க்க, காலயவனன் எரிந்து சாம்பலாகி விட்டான்.

17. முசுகுந்தனுக்கு அருளியது

இக்ஷவாகு குலத்தோன்றல் மாந்தாதாவின் மகன் முசுகுந்தன். அவன் ஒரு சமயம் தேவசேனாதிபதியாக இருந்து போர் செய்து தேவலோகத்தைக் காத்து வந்தான். பின்னர் குகப்பெருமான் தேவசேனாதிபதி ஆனவுடன் பூலோகம் திரும்பி வந்த அவன் அம்மலைக்குகையில் படுத்துறங்கி விட்டான். அவன் நித்திரைக்குப் பங்கமளிப்போர் எரிந்து சாம்பலாவர் என்று அவனுக்குத் தேவர்கள் வரமளித்து இருந்தனர். அதனால் முசுகுந்தனை எழுப்பிய காலயவனன் எரிந்து போனான். அவன் எரிந்தவுடனே முசுகுந்தனுக்குப் பகவான் சங்கு சக்கரதாரியாய் சதுர்புஜங்களுடன் காட்சி அளித்தார். அதைக் கண்டு பிரமித்து அவரை யார் என்று முசுகுந்தன் கேட்டான். கிருஷ்ணன் தன்னைப் பற்றிக் கூறினார். மேலும் முசுகுந்தன் முற்பிறவியில் மிகவும் பக்தியுடன் தன்னை ஆராதித்ததால் அவனுக்கு அருள்புரிய வந்திருப்பதாகத் தெரிவித்தார். அப்போது முசுகுந்தன் அவர் சர்வ சொரூபியாகிய பகவான் என்று அறிந்தான்.

அப்போது அவன் பகவானைப் பார்த்து இவ்வாறு வேண்டினான், நான் தன்யனானேன். உமது அருள் கிடைத்தவர்க்கு சாது சங்கம் ஏற்படுகிறது. அது பக்தியை உண்டாக்குகிறது. உமது சரண சேவையே எனக்கு வேண்டும். உமது சரணார விந்தங்களிலேயே சரணமளித்து ரக்ஷிக்க வேண்டும் என்று பிரார்த்தித்து வணங்கிய முசுகுந்தனுக்குப் பகவான் அருள்புரிந்தார். மேலும், முசுகுந்தனிடம் அவன் க்ஷத்திரியனாக இருந்து பல பாவங்களைச் செய்தபடியால் அப்பாவ நிவாரணம் பெற கிருஷ்ணரைத் தியானிக்க வேண்டும் என்றும், மறுபிறவியில் அந்தணராகப் பிறந்து உயிர்களிடம் அன்பு செலுத்தி முடிவில் தன்னை வந்தடையுமாறும் அவரது பக்தி குன்றாமலிருக்கும் என்றும் கூறி அனுக்கிரகித்தார். முசுகுந்தன் பகவானை வலம் வந்து வணங்கி பதரிகாசிரமம் அடைந்து தவத்தில் ஈடுபட்டு ஸ்ரீகிருஷ்ணரை ஆராதனை செய்து வந்தான். பின்னர், கிருஷ்ணன் மதுரை அடைந்து, யவனர்களை வென்று அவர்களுடைய ஐஸ்வர்யங்களைத் துவாரகைக்கு எடுத்து வரச் செல்ல, ஜராசந்தன் அவர்களைத் துரத்த அவர்கள் மலைமீது ஏறி மறைய, அவன் மலையைச் சுற்றி தீ மூட்டிவிட, ராமகிருஷ்ணர்கள் விண்ணில் கிளம்பி பூமியில் குதித்துக் கடலால் சூழப்பட்ட துவாரகை அடைந்தனர்.

ஆனால், ஜராசந்தன் அவர்கள் தீயால் எரிக்கப்பட்டு இறந்து விட்டதாக எண்ணி சேனைகளுடன் தன் மகத நாட்டிற்குத் திரும்பிச் சென்றான்.


18. பலராமன் கல்யாணம்

ஆதிசேஷன் மனைவி வாருணியைப் பார்த்து வருணன் ஆதிசேஷனே பலராமனாக பூவுலகில் அவதரித்துள்ளார். அவர் மகிழுமாறு உதவவேண்டும் என்று வேண்டினான். வாருணி, மதுபான வகைகளுக்கெல்லாம் அதிதேவதை ஆகி மதிரை என்றும் அழைக்கப்படுபவள். பிருந்தாவனத்தில் ஒரு கடம்ப மரப்பொந்தில் ஸந்திதானம் செய்ய மதுமணம் நுகர்ந்த பலராமன் பொந்திலிருந்து மது பெருக்கெடுத்தோடுவதைக் கண்டு கோபிகளுடன் மதுபானம் அருந்தி களித்தார். அந்நிலையில் அருகில் ஓடும் யமுனையைக் கண்ட பலராமர் நீராட அருகில் வருமாறு அழைக்க, யமுனை அவர் கர்வத்தினால் அழைக்கிறார் என்று பலராமர் அழைப்பை நிராகரிக்க, பலராமர் கோபம் கொண்டு தனது ஆயுதமாகிய கலப்பையை எடுத்து அந்த நதியை இழுக்க யமுனை அப்பகுதி முழுவதையும் வெள்ளத்தில் நிறைத்து விட்டு விடுபட்டுச் சென்றாள். யமுனையில் நீராடி எழுந்த பலராமருக்கு மகாலக்ஷ்மி இரண்டு நீலப்பட்டாடைகள் அளிக்க அவர் தோற்றம் மிக அதிக ஒளி பெற்றது. இவ்வாறு இரண்டு மாத காலம் பலராமர் கோகுலத்தில் இருந்துவிட்டு துவாரகைக்கு சென்றார். பலராமர் ஆனர்த்த ரைவத மன்னனுடைய மகளான ரேவதியை மணந்து நிசிதன், உல்முகன் என்ற இரண்டு புத்திரர்களைப் பெற்றார்.

19. ருக்மிணி கல்யாணம்

விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கு ஐந்து புத்திரர்களும், ஒரு பெண்ணும் இருந்தனர். மகாலக்ஷ்மி அம்சமாகிய அப்பெண்ணின் பெயர் ருக்மிணி. அவருடைய மூத்த சகோதரன் ருக்மிணியை சிசுபாலனுக்குத் திருமணம் முடிக்க விரும்பினான். ஆனால் ருக்மிணியோ கிருஷ்ணனைப் பற்றிக் கேள்வியுற்று அவருக்கே மாலைசூட விரும்பினாள். அதே நம்பிக்கையில் அவள் ஒரு வேதியரைக் கிருஷ்ணனிடம் தூது விடுத்தாள். அந்தணரைக் கண்ட கிருஷ்ணன் அவரை அன்புடன் வரவேற்று ÷க்ஷம லாபங்களைப் பற்றி விசாரித்தார். அடுத்து, அவர் வந்த காரணம் பற்றி விசாரித்தார். அப்போது அந்தணர் ருக்மிணியால் சொல்லி அனுப்பப்பட்ட செய்தியை பற்றி எடுத்தியம்பினார்.

அச்சுதா, தங்கள் ரூபசவுந்தரியத்தையும், குணவைபவங்களையும் பற்றிக் கேட்ட என் மனம் வெட்கத்தை விட்டு உம்மையே நாடுகின்றது. நான் எனது ஆத்மாவையே தங்களுக்குச் சமர்ப்பணம் செய்து விட்டேன். அல்பனான சிசுபாலன் என்னைத் தீண்டிவிடாமல், நீங்கள் வந்து என்னைப் பாணிக்கிரகணம் செய்து கொள்ள வேண்டும். விவாகத்துக்கு முன்நாள் குலதெய்வத்தைப் பூஜிக்க கவுரிதேவி ஆலயத்திற்குப் போகும்போது என்னைக் கிரகிக்கவும். நீங்கள் இரகசியமாக இங்கு வந்து சிசுபாலன், ஜராசந்தன் ஆகியோரை வென்று என்னை அபகரித்துச் சென்று ராக்ஷச விதிப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ருக்மிணி சொல்லி அனுப்பியதாக அந்தணர் கூறிவேண்டினார்.

இதன் மூலம் ருக்மிணியின் உள்ளத்தை அறிந்த கிருஷ்ணன் புன்சிரிப்புடன், வேதியரே கவலையை விடுங்கள். என்னிடமே உள்ளத்தை அர்ப்பணித்து என்னையே நம்பியிருக்கும் ருக்மிணியை அழைத்து வந்து விவாகம் செய்து கொள்ளுவேன் என்று கூறி, அந்தணரும் கிருஷ்ணரும் தேர் ஏறிச் சென்று விதர்ப்ப நாட்டை அடைந்தனர். சிசுபாலன் கலகம் செய்யக் கூடுமென பலராமரும் சேனைகளுடன் குண்டினபுரம் வந்தடைந்தார். அனுகூலமான செய்தியுடன் திரும்பி வந்த அந்தணரின் பாதங்களில் தலை வைத்து வணங்கித் தனது திருப்தியைத் தெரிவித்துக் கொண்டாள். ருக்மிணியின் தந்தை பீஷ்மகன் ராமலக்ஷ்மணர்களை நன்முறையில் வரவேற்று உபசரித்தான். நகரமாந்தர் ருக்மிணிக்கு ஏற்ற கணவர் கிருஷ்ணனே என்று பேசிக் கொண்டனர்.

கிருஷ்ணனின் திருவடிகளையே மனதில் தியானித்தவளாக ருக்மிணி அம்பிகையைத் தரிசிக்க மங்கல வாத்தியங்களுடன் நடந்து சென்றாள். அங்கே அமைதியாக சிரத்தை, பக்தியுடன் பவானியைப் பூஜித்தாள். ஸ்ரீகிருஷ்ண பகவானே தனக்குக் கணவனாக அருள்புரியுமாறு பிரார்த்தித்தாள். கோயிலிலிருந்து திரும்பிய போது ருக்மிணி மன்னர்களிடையே மாதவனைக் கண்டு மகிழ்ச்சியுற்று தேரில் ஏற சமீபிக்கையில் கிருஷ்ணன் அவளது கரம் பற்றி லாவகமாக இழுத்துத் தன் தேரில் ஏற்றிக் கொண்டு, பலராமரும் அவர் படையும் பின் தொடர மெதுவாகச் சென்றார். இதுகண்டு கடும் சினம் கொண்ட ஜராசந்தன் கிருஷ்ணரைத் தொடர்ந்து பாணங்களைச் செலுத்த இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் ஜராசந்தன் முதலியோர் தோற்று ஓடினர். சிசுபாலனும் ருக்மிணி கிடைக்காதது பற்றி வருத்தத்துடன் திரும்பி தன் நகர் சேர்ந்தான்.

ஆனால், சிசுபாலனின் நண்பனான ருக்மிணியின் சகோதரன் ருக்மி, ருக்மிணியை மீட்டு வருவதாகச் சூளுரைத்து கிருஷ்ணனைத் தொடர்ந்தான். தனித்துவரும் ருக்மி கோபத்துடன் வாளைக் கையிலேந்தி கிருஷ்ணன் மீது பாய, கிருஷ்ணன் ருக்மியைக் கொல்லத் தயாராக, பின்னர் ருக்மிணியின் வேண்டுகோளின்படி ருக்மியைக் கொல்லாமல் தேர் சக்கரத்தில் கட்டிப் போட்டு அவன் சிகையையும், மீசையையும் கத்தரித்து அவனை உருக்குலைய வைத்தார். அவ்வமயம் பலராமர் உறவினர்களை அவமதிக்கக்கூடாது என்று கூறி ருக்மியை கட்டவிழ்த்து விட்டார். கிருஷ்ணன் ருக்மிணியைச் சமாதானம் செய்து அமைதி படுத்தினார். ருக்மி அவமானத்தால் தன் ஊர் திரும்பாமல் கொதிப்படைந்து போஜகடம் என்ற அவ்விடத்திலேயே தங்கிவிட்டான். இவ்வாறு ஸ்ரீகிருஷ்ணன் அரசர்களை ஜயித்து பீஷ்மகரின் புத்திரி ருக்மிணியை துவாரகைக்கு அழைத்து வந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். துவாரகையில் ஸ்ரீகிருஷ்ண பகவான் வாழ்ந்து வருகையில் மக்கள் பேரானந்தமொடு ÷க்ஷமமாக வாழ்ந்து வந்தனர்.

ஜாம்பவதி, சத்தியபாமை விவாகம்

சத்ராஜித் மன்னன் சூரியனிடமிருந்து தான் பெற்ற சியமந்தக மணியை அவன் தம்பி பிரசேனன் தன் கழுத்திலணிந்து வேட்டைக்குச் செல்ல, அங்கு ஒரு சிங்கம் அவனைக் கொன்றுவிட்டு, மணியையும் எடுத்துச் சென்றது. அச்சிங்கத்தைக் கொன்று மணியை ஜாம்பவான் எடுத்துச் சென்றான். இஃதறிந்த கிருஷ்ணன் குகைக்குள் இருந்த ஜாம்பவானுடன் போர்புரிய அதில் தோற்ற ஜாம்பவான் கிருஷ்ணன் சாக்ஷõத் பகவானே என்றறிந்து மணியுடன், தன் மகள் ஜாம்பவதியையும் திருமணம் செய்து வைத்தான். சத்ராஜித் கிருஷ்ணன் மணியை அபகரித்ததாக எண்ணியிருந்தான். பின்பு உண்மை அறிந்தவுடன் தன் மகள் சத்தியபாமையைக் கிருஷ்ணனுக்கு மனம் செய்வித்து, சியமந்தகமணியையும் கொடுக்க கிருஷ்ணன் மணியை அவனிடமே திருப்பித் தந்துவிட்டார்.

20. இந்திரப் பிரஸ்தத்தில் கிருஷ்ணன்

அரக்கு மாளிகையில் அகப்பட்டு பாண்டவர்கள் இறந்ததாக எண்ணினர். ஆனால், அவர்கள் உயிருடன் இருப்பதனால் அவர்களுடைய சேமநலன் தெரிந்து வர கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தம் சென்றார். பகவானாகிய கிருஷ்ணனைக் குந்தியும், பாண்டவர்களும் வரவேற்று, உபசரித்து பூஜை செய்து ÷க்ஷமம் விசாரித்தனர். அப்போது திரவுபதி கிருஷ்ணனை வணங்கினார். குந்தி தேவி தன் கஷ்டங்களைக் கூறி வருந்தினாள். மேலும் கிருஷ்ணன் வந்துவிட்டதால் இனி கவலை இல்லை என்று அன்புடன் கூறினாள். தருமபுத்திரர் கிருஷ்ணனை அங்கேயே தங்கி இருக்குமாறு வேண்டிட கிருஷ்ணனும் சில மாதங்கள் அங்கு தங்கினார்.

காளிந்தியை மணத்தல்

ஒருநாள் அருச்சுனனும், கிருஷ்ணனும் வனத்தில் வேட்டையாடி களைத்து யமுனை ஆற்றங்கரையில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு காளிந்தி என்ற அழகிய பெண் வந்தாள். அவளைப் பற்றி விசாரிக்க அவள் தன் பெயரைக் கூறி யமுனையில் தன் மாளிகையில் வாழ்வதாகவும் பகவான் நாராயணனைத் தன் பதியாக அடைய தவம் இருப்பதாகவும் அவரை அடையும் வரை அங்கேயே இருப்பதாகவும் கூறினாள். இந்திரப் பிரஸ்தத்தில் பகவான் விஸ்வகர்மாவைக் கொண்டு ஓரழகிய நகரத்தை ஏற்படுத்திக் கொண்டு பாண்டவர்களுடன் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தார். அருச்சுனனுக்கு சாரதியாக இருந்து பல அதிசயங்களை நிகழ்த்தினார்.

காண்டவவனம் எதிர்த்தல்

காண்டவ வனத்தை அக்கினிக்கு உணவாக அளிக்க, கிருஷ்ணன் அருச்சனனுக்குக் காண்டீபம் என்ற வில்லையும், அக்ஷயமான அம்புராத் தூணிரத்தையும், உறுதியான கவசத்தையும், ஒரு ரதத்தையும் அழகிய வெள்ளைக் குதிரையையும் பரிசாக அளித்தார். சில காலத்திற்குப் பின் கிருஷ்ணன் காளிந்தியுடன் துவாரகையை அடைந்து அவளை மணந்து கொண்டார்.

பல திருமணங்கள்

அவந்தி நாட்டரசன் சகோதரி மித்திர விந்தையை மணந்தார். கோசல மன்னன் நக்னஜித் தன்னிடமுள்ள ஏழு காளைகளை அடக்குபவனுக்குத் தன் மகளை மணமுடிப்பதாகக் கூறியுள்ளதால், அந்த ஏழு முரட்டுக்காளைகளையும் கிருஷ்ணன் அடக்கிட அவன் குமாரி சத்யாவைக் கிருஷ்ணனுக்கு விவாகம் செய்வித்தான். இவளே நப்பின்னை ஆவாள். பின்னர் அத்தை சுருத கீர்த்தியின் மகள் பத்திராவையும், மந்திர தேசத்தரசன் மகள் லக்ஷ்மணாவையும் ஆக எட்டு பட்ட மகிஷிகளுடன் வாழ்ந்து வந்தார் கிருஷ்ணன். மற்றும் இஷ்டப்படி உருவம் கொள்ளும் மத்ரராஜனுடைய மகள் சுசீலை என்பவளையும் மணந்தார்.

21. பிரத்யும்னனும் மாயாவதியும் சம்பராசுரன் வதமும்

கிருஷ்ணன்-ருக்மிணிக்கு மன்மத அம்சனான பிரத்தியும்னன் பிறந்தான். அவன் பிறந்த ஆறாம் நாளில் சம்பராசுரன் என்ற அரக்கன் அந்தக் குழந்தை தன்னைக் கொன்றுவிடும் என்று எண்ணி அதனை முதலைகள், திமிங்கிலங்கள் நிறைந்த லவண சமுத்திரத்தில் எறிந்துவிட்டான். அக்குழந்தையை ஒரு மீன் விழுங்கி விட்டது. அந்த மீன் ஒரு செம்படவன் கையில் சிக்க, அவன் அதை சம்பாசுரனிடமே கொடுத்தான். அவனுடைய மனைவி மாயாவதி என்பவள் அம்மீனைச் சேதிக்க அதன் வயிற்றில் அக்குழந்தையைக் கண்டு, அது குறித்து யோசித்துக் கொண்டு இருக்கையில் அங்கு நாரத முனிவர் வந்தார். அக்குழந்தையின் வரலாற்றைக் கூறினார். அதுகேட்ட அசுரன் மனைவி மாயாவதி அக்குழந்தைக்குப் பலவித வித்தைகளையும் கற்பித்து, அதன் மீது காமுற்று கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தாள். அவன் அவனிடம் பழகும் விதத்தைப் பற்றிப் பிரத்தியும்னன் குறை கூற அவன் அவனுக்குத் தாயில்லை என்பதையும் அவனுடைய உண்மை வரலாற்றையும் கூறினாள்.

தன் விவரம் அறிந்த பிரத்தியும்னன் சம்பராசுரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றான். பின்னர் அவன் மாயாவதியுடன் புறப்பட்டுத் தன் தந்தையின் அந்தப்புரத்துக்கு வந்து அடைந்தான். எல்லோரும் அவனைக் கிருஷ்ணனென்று நினைக்க ருக்மிணி மட்டும் அவனை அடையாளம் கண்டு கொள்ள, அப்போது நாரதர் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு அங்கு வந்தார். கிருஷ்ணன் ருக்மிணியிடம் பிரத்யும்னன் அவள் மகனே என்றும், மாயாவதி அவன் மனைவி என்றும் முற்பிறவி செய்திகளுடன் அறிவித்தார். பிரத்யும்னன் மன்மதன் என்றும், மாயாவதி ரதிதேவி என்றும் தெரிவித்தார். ருக்மிணியின் மகன் பிரத்தியும்னன் தன் மாமன் ருக்மியின் மகளை மணந்தான். அவர்களுக்கு அநிருத்தன் பிறந்தான். ருக்மி கண்ணன் விருப்பப்படி அநிருத்தனுக்குத் தன் பேத்தியைக் கன்னிகாதானம் செய்து வைத்தான். இந்தத் திருமணத்துக்குப் பலராமரும், மற்ற யாதவர்களும் போஜகடம் சென்றிருந்தனர். அங்கு சூதாட்டம் சரியாக ஆடத்தெரியாவிட்டாலும் அந்த ஆட்டத்தில் பலராமனுக்குப் பற்று அதிகம். எனவே, அவன் முதல் மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்தான்.

நான்காம் முறை விதர்ப்பராஜன், கலிங்கராஜனுடன் ஆடி பலராமன் வெற்றி பெற்றார். அதனை மற்றவர்கள் ஒத்துக் கொள்ளாததால் கோபம் கொள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தனர். ருக்மியை அடித்துத் தள்ளினார். தந்தவக்கிரனுடைய பற்களை உதிர்த்துத் தள்ளினார். இவ்வாறு சூதாட்ட வைரிகள் கொல்லப்பட்டனர்.

22. நரகாசுரன் வதம்

நரகாசுரன் பூமிதேவியின் புத்திரன். அவன் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான். பல தேசத்து அரசகுமாரிகளையும் துன்புறுத்தி வந்தான். ஸ்ரீகிருஷ்ணன் துவாரகையை அடைந்தபோது தேவேந்திரன் ஐராவதத்தின் மீது ஏறிக்கொண்டு துவாரகைக்கு வந்து, ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி, நரகாசுரனைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். சத்ரு நாசகா! பிராக் ஜோதிக்ஷம் என்ற நகரில் பூமி புதல்வன் நரகாசுரன் செய்யும் கொடுமைகள் எண்ணில் அடங்கா. அரசகுமாரர்களை அபகரித்தான். எப்போதும் மழைபொழியும் வருணன் குடை, மந்தரபர்வதத்தின் சிகரம், என் தாயாரின் அமுதம் ததும்பும் குண்டலங்கள், ஆகியவற்றைக் கவர்ந்து கொண்டான். மேலும் எனது ஐராவதத்தையும் அபகரிக்க தக்க சமயம் பார்த்துக் கொண்டுள்ளான் என்று அவன் அநியாயங்களை விளக்கினான். பின்னர், இனி ஆவன செய்யுமாறு பிரார்த்திக்கிறேன் என்றான்.

அதைக் கேட்ட கிருஷ்ணன் புன்சிரிப்புடன் இந்திரனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். உடனே அவர், சத்தியபாமையுடன் கருடாரூடராய் பிராக் ஜோதிஷ நகரத்தை அடைந்து சங்கநாதம் எழுப்பினார். கதாயுதத்தால் கோட்டைச் சுவர்களைத் தகர்த்தார். அதைக் கண்ட முரன் என்னும் அசுரன் கூச்சலுடன், சூலமேந்தி கிருஷ்ணன் மீது பாய்ந்து தாக்கிட, பகவான் அவன் சூலத்தை முறித்து, அவன் தலையையும் அறுத்துத் தள்ளினார். அவனை அடுத்து எதிர்த்த அயக்கிரீவன், பாஞ்சானன் ஆகியோரை அவர்களுடைய படைகளுடன் சுதர்சனச் சக்கரம் எரித்து விட்டது. இறுதியில் எதிர்த்து வந்து பல ஆயுதங்களைப் பிரயோகித்த நரகாசுரனை சக்கராயுதத்தால் இரு பிளவாக்கி வீழ்த்திட, பூமிதேவி அதிதியின் குண்டலங்களை கண்ணனிடம் சமர்ப்பித்து திருவடிகளை வணங்கிப் பிரார்த்தித்தாள்.

நாதனே! நீ வராக அவதாரம் செய்த போது உன் ஸ்பரிசத்தால் இவன் பிறந்தான். இதோ குண்டலங்களை எடுத்துக் கொள். என் மகன் நரகன் செய்த பிழைகளைப் பொறுத்திடுக. நரகாசுரன் மகனான பகதத்தனைக் காப்பாற்றுங்கள். பாவங்களைப் போக்கும் தங்கள் கர கமலங்களை இவன் சிரசில் வைத்து அனுக்கிரகிக்கவும் என்று வேண்டிட பகவானும் பகதத்தனுக்கு அபயம் அளித்து அனுக்கிரகித்தார். பின்னர் நரகனால் பலவந்தமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான அரசகுமாரர்களை மீட்டார். மற்றும் வருணன் குடை, மணி பர்வதங்களைப் பெரிய திருவடியின் மேல் ஏற்றிக் கொண்டு சத்தியபாமையுடன் தாமும் ஏறி, அதிதியிடம் குண்டலங்களை ஒப்படைக்க தேவலோகம் சென்றார். நரகாசுரன் இறந்த நாளை மக்கள் அனைவரும் தீபாவளி எனக் கொண்டாட வேண்டும் என்று வேண்டியதாகப் பத்ம புராணம் கூறுகிறது.

23. ருக்மிணி ஊடல் தீர்த்தான்

ஒரு சமயம் கிருஷ்ணன் ருக்மிணியுடன் ஒரு வேடிக்கை செய்தார். ஒருநாள் ருக்மிணி கிருஷ்ணனுக்கு அன்புடன் பணிவிடை செய்து வந்தாள். அப்போது பகவான், திருமாமன்னர் பலர் உன்னை மணம் புரிய விழைந்தனர். ஆனால் நீ, பகைவர்களுக்கு அஞ்சி, கடலில் ஒளிந்து வாழும் தகுதியற்ற என்னை வரித்தது ஏன்? மற்றும் நானோ பரம ஏழை. நட்பும் விவாகமும் ஏற்றத் தாழ்வுள்ள இடத்தில் பொருந்தாது. நான் குணங்களற்றவன். துறவிகளின் தோழன். உதாசீன குணமுள்ளவன். எனக்கு எதிலும் விருப்பம் கிடையாது. நீ என்னிடம் என்ன சுகத்தை அடைவாய் என கூறினார் விளையாட்டாக. பகவான் தன்னையே விரும்புவதாகவும், அதனாலேயே விட்டுப் பிரிவதில்லை என்றும் எண்ணிய ருக்மிணியின் கர்வத்தை அடக்கவே அவ்வாறு பேசினார் அவர். பரிகாசப் பேச்சு அது என்று அறியாத ருக்மிணி மனம் கலங்கி, மயங்கி விழ, அந்தப் பிரிய பத்தினியை வாரி அணைத்து சமாதானப்படுத்தினான் கண்ணன்.

அப்போது மனம் தெளிவுற்ற ருக்மிணி பகவானை நோக்கி, நான் உங்களுக்கு எவ்வகையிலும் சமமானவளல்ல. உங்களுடைய மகிமை எனக்கேது. நீரோ ஞானி. நானோ அஞ்ஞானி. இகபர சுகங்களை அளிக்கும் தங்கள் பாதகமலங்களே எனக்குத் தேவை. அதற்காகத்தான் சர்வாத்ம சொரூபியான உங்களை விரும்பி மணந்தேன் என்று பதில் கூறினாள். உடனே கிருஷ்ணன் அவளிடம் அன்பும், கருணையும் கொண்ட மனத்தனாய் ருக்மிணியைப் பார்த்து பிரியே! பலனையே விரும்பாமல் என்னிடம் பக்தி செலுத்தும் நீயே மிகச்சிறந்தவள். அனன்ய பக்தியே சம்சார தாபத்தை நிவர்த்தி செய்கின்றது. அன்பினால் என்னை வென்ற நீயே பதிவிரதை என்று புகழாரம் சூட்டினார்.

24. நாரதரும் கிருஷ்ணனும் (பாகவதம்)

கிருஷ்ணனுக்கு பட்ட மகிஷிகள் எண்மர், மற்றும் நரகாசுரனிடம் சிறை மீட்ட பதினாராயிரம் பெண்கள் என்று பல மனைவியர் உள்ளனர். அவர் எப்படி எல்லாரையும் சமாளிக்கிறார்? என்ற ஐயம் மனதில் தோன்ற அதனை நேரில் கண்டு அனுபவிக்க ஒருநாள் நாரதர் துவாரகைக்கு வந்தார். கிருஷ்ண பத்தினிகளின் அழகிய மாளிகைகளைக் கண்டு பிரமித்தார். நேராக ருக்மிணியின் மாளிகையில் நுழைந்தார் நாரதர். அங்கு ருக்மிணி கிருஷ்ணனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். நாரதரைக் கண்ட பகவான் உடனே எழுந்து, அவரை வரவேற்று உபசரித்தார். நான் என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார். அப்போது நாரதர், பிரபோ, இதென்ன லீலை! தங்கள் திவ்ய சரணார விந்தங்களைச் சேவிப்பவனுக்கு வேறென்ன வேண்டும்! மோக்ஷ சுகத்தை அளிக்கும் உங்கள் பாதகமலங்களின் நினைவு என் மனத்தை விட்டு அகலாமலிருக்க அருள்புரிவீராக என்றார்.

மற்றொரு மாளிகையில் நாரதர் நுழைய அங்கு பகவான் உத்தவருடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார். நாரதரைக் கண்ட அவர் அவரிடம் குசலம் விசாரித்தார். இன்னொரு வீட்டில் பகவான் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். வேறொரு வீட்டில் பகவான் புராண பிரவசனம் கேட்டுக் கொண்டிருந்தார். அடுத்த வீட்டில் யாகாக்கினியில் ஹோமம் செய்து கொண்டிருந்தார். ஒரு வீட்டில் நீராடச் சென்று கொண்டிருந்தார். ஆங்கே மற்றோர் இல்லத்தில் பிராம்மண சமாராதனை நடந்து கொண்டிருந்தது. பகவான் அவர்களைப் பரிவுடன் உபசரித்துக் கொண்டிருந்தார். இவ்வாறு இல்லங்கள் தோறும் பகவான் பற்பல செயல்களில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியும், வியப்பும் அடைந்தார். பிறகு கிருஷ்ணரை வணங்கி, யோகேச்வரா! உமது மாயாசக்தியை இன்று கண்டு கொண்டேன். உமது லீலா வைபவங்களைப் பாடிக் கொண்டே உலகெங்கிலும் உலாவப் போகிறேன். எனக்கு விடைகொடுங்கள் என்று கூறி விடைபெற்றார். அப்போது பகவான் உலக மக்களுக்கு வழிகாட்டவே அவற்றைச் செய்து வருவதாகக் கூறி ஆனந்தமாகச் செல்லும்படி அருள்புரிந்தார்.

25. பாரிஜாதபஹரணம் (ஸ்ரீ விஷ்ணு புராணம்)

நரகாசுரனைக் கொன்ற பின் கிருஷ்ணனும், சத்தியபாமையும் அதிதியைக் கண்டு குண்டலங்களைத் தந்தனர். அதிதி மகிழ்ந்து வாசுதேவனைத் துதித்தாள். தாமரைக் கண்ணா! பரமார்த்தம் தெரியாமல் மோகம் செய்யும் மாயை உன்னுடையது. அதனால் ஆன்மா அல்லாததை மூடன் ஆன்மாவென்று எண்ணி பாதிக்கப்படுகிறான். நான் உன்னை ஆராதித்தது மோட்சத்துக்காக அல்ல. அது உன் மாயையே யாம். நீயே ஞானம் போன்றுள்ள அஞ்ஞானத்தை அழிக்க வேண்டும். உன்னுடைய ஸ்தூல வடிவைக் காண்கின்றேனே தவிர சூக்ஷ்மமான ரூபத்தைக் காணவில்லையே எனக்கு அருள் செய்ய வேண்டுகிறேன் என்றாள். அப்போது பகவான் அதிதியிடம், அம்மா, நீ எங்களுக்குத் தாய் ஆனதால் எங்களை அனுக்கிரகியும் என்றார். பிறகு சத்தியபாமையும் தன்னை அனுக்கிரகிக்குமாறு அதிதியிடம் வேண்டினாள். இருவருக்கும் அதிதி ஆசி கூறினாள். மேலும் அதிதி இந்திரனையும் கிருஷ்ணனையும் பூசித்தாள்.

அவ்வமயம் அங்கு வந்த இந்திராணி சத்தியபாமையை மானிடப் பெண் என்று எண்ணி பாரிஜாத மலரைக் கொடுக்காமல் தானே சூடிக் கொண்டாள். கிருஷ்ணன் சத்தியபாமையுடன் தேவலோகத்து நந்தவனங்களை எல்லாம் சுற்றிப் பார்க்கலானார். அப்போது அங்கு பாற்கடலில் தோன்றிய பாரிஜாத மரத்தைக் கண்டார். அப்போது சத்தியபாமை கிருஷ்ணனிடம், நீங்கள் நான் தான் உங்களுக்குப் பிரியமானவள் என்றால், இந்தப் பாரிஜாதத் தருவை துவாரகைக்குக் கொண்டு போக வேண்டும். இந்தப் பாரிஜாத மரத்தை என் மாளிகையின் புழக்கடையில் கொண்டு போய் வைக்க வேண்டும். நான் இந்த மலர்களைக் கொண்டு, என் கூந்தலை அலங்கரித்து மற்ற பத்தினிகளின் முன் மிகவும் சிறந்திருக்க வேண்டும். இது என் விருப்பம் என்றாள். உடனே கிருஷ்ணன் அந்த மரத்தை அடியோடு பெயர்த்து கருடனின் மீது வைத்தார். அதுகண்டு காவற்காரர்கள் தடுத்தனர். மேலும், அது சசிதேவிக்குப் பிரியமானது. இதை எடுத்தால் தேவர்களுடன் போர் செய்ய வேண்டும் என்றனர்.

அப்போது சத்தியபாமை பாற்கடலில் தோன்றிய இது அனைவர்க்கும் பொது. இதை சத்தியபாமை எடுத்துச் சென்றாளென கூறுங்கள் என்று சொன்னாள். அதுகேட்ட இந்திராணி இந்திரனைத் தூண்டிவிட அவன் படையுடன் வந்து கிருஷ்ணனை எதிர்க்க பெரிய போர் நடந்தது. இறுதியில் கிருஷ்ணன் இந்திரன் ஏவிய வச்சிராயுதத்தைப் பற்றிக் கொண்டு, இந்திரா நில்! என்று முழங்கினார். வச்சிராயுதத்தை இழந்த இந்திரன் ஓடிப்போக முயன்றான். கருடனால் சிதைக்கப்பட்ட ஐராவதம் சோர்ந்து ஓட முடியாததால் இந்திரன் மேலும் தவித்தான். அப்போது சத்தியபாமை இந்திரனிடம், இனி கர்வியான உன் மனைவி பாரிஜாத மலரை அணிய முடியாது. பாரிஜாதத்தைக் கொண்டு போ. அவள் தன் கர்வத்தால் தன் மாளிகையில் என்னை மதிக்கவில்லை. பெண்மையால் ஆழ்ந்திராத-சித்தமுடைய நான் என் கணவரின் மகிமையைக் கொண்டாடி உன்னுடன் போர் செய்தேன். புருஷன் பெருமையைப் பற்றி கர்வப்படாத பெண் உலகில் இல்லை. ஆனால் சசி, அதற்காக மட்டுமின்றி உருவினாலும் கர்வம் கொண்டுள்ளாள் என்றாள்.

அப்போது இந்திரன் அடிபணிந்தான். ஓடவில்லை. எவன் எல்லாருக்கும் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார கர்த்தாவாக இருக்கின்றானோ அத்தகைய பகைவனால் ஜெயிக்கப்பட்ட எனக்கு வெட்கம் ஏதும் இல்லை. எவன் யாராலும் ஆக்கப்படாமல் தானே ஈஸ்வரனாய், அஜனாய், நித்தியனாய், தனது திருஉள்ளத்தால் உலக நன்மை கருதி மானிடனாய் அவதரித்திருக்கிறானோ அந்தப் பகவானை வெல்ல வல்லவர் யார்? நான் அவரிடம் தோற்றது நியாயந்தான் என்றான்.

26. தருமரின் ராஜசூய யாகம்

சுகதேவர் பரீக்ஷித்திடம் மீண்டும் கூறலானார்: கிருஷ்ணன் ஒரு நாள் சாத்யகி, உத்தவர் ஆகிய நண்பர்களும், விருஷ்ணிகளும், போஜர்களும் அருகிருக்க அரியாசனத்தமர்ந்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருக்கையில் பல தேசத்தினர் ஜராசந்தனால் சிறையில் அடைக்கப்பட்டுப் பெருந்துயரை அனுபவித்து வருகின்றனர். அவர்களைத் துஷ்டனிடமிருந்து காப்பாற்றி விடுதலை செய்யுமாறு என் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பகவான் என்ன, எப்படிச் செய்ய வேண்டுமோ, உடனே செய்யப் பிரார்த்திருக்கிறோம் என்று ஒருவன் வந்து கூறினான். அவ்வமயம் நாரத முனிவரும் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது பகவான் அவரிடம், மூவுலகம் சஞ்சரிக்கும் நீங்கள் நமது பிரிய பந்துக்களான பாண்டவர்கள் நலமாய் இருக்கிறார்களா? அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்றும் கேட்டார். அதற்கு நாரதர் உமக்குத் தெரியாததா? எனினும் கூறுகிறேன். தர்மபுத்திரர் ஆராதிக்க விரும்புகிறார். அதற்குத் தங்கள் அனுமதியும் கோருகிறார் என்றார் நாரதர். அப்போது பகவான் உத்தவரின் ஆலோசனையைக் கேட்டார். அதற்கு உத்தவர் ராஜசூய யாகம் செய்பவர்கள் திக்விஜயம் செய்யும்போது ஜராசந்தனை வதம் செய்து சிறைப்பட்ட அரசர்களை விடுதலை செய்து காத்திடலாம். சரணாகதர்களை ரக்ஷித்த புகழும் உமக்கு ஏற்படும். யஜ்ஞ காரியமும் நிறைவேறும் என்றார்.

ஜராசந்தனை வெற்றி கொள்ள ஒரே யுக்திதான் உள்ளது. அவன் பிராம்மணர்களைத் தெய்வமாகப் போற்றுகிறவன். பீமன் ஒருவனாலேயே அவனை வெல்ல முடியும். எனவே கபடமாக அந்தணர் வேஷத்தில் சென்று துவந்த யுத்தத்திற்கு யாசித்து ஒப்புக் கொள்ளச் செய்வதே சிறந்த உபாயம். அவ்விருவர்களும் உமது முன்னிலையில் துவந்த யுத்தம் செய்தால் ஜராசந்தன் கொல்லப்படுவான். சிறையிலுள்ள மன்னர்களும் ரக்ஷிக்கப்படுவர். யாகமும் பூர்த்தியாகும் என்றார் உத்தவர். இதைக் கேட்ட அனைவரும் உத்தவரைக் கொண்டாட, கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தம் செல்ல ஏற்பாடுகளுக்கு உத்தரவிட்டார். நாரதரும் விடைபெற்றுச் சென்றார். ராஜதூதனிடமும் அபயம் கூறி அனுப்பினார். இந்திரப் பிரஸ்தம் வந்து சேர்ந்த கிருஷ்ண, பலராமர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் உரிய முறையில் வரவேற்றனர். இருதரப்பினர்களும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு வணங்கினர். தருமரும் கிருஷ்ணனைப் பூசித்து அவர் தனது பரிவாரங்களுடன் தங்குவதற்குத் தக்க ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

தருமன் கிருஷ்ணரிடம் ராஜசூய யாகம் பற்றிக் கூறிப் பகவான் அனுக்கிரகத்தை வேண்டினார். அப்போது கிருஷ்ணர், எல்லா தேசத்து அரசர்களையும் வென்று, பூமியை உமது வசப்படுத்திக் கொண்ட பிறகே யாகத்தைத் துவக்க வேண்டும் என்றார். தருமர் தனது நான்கு சகோதர்களையும் நான்கு திசைகளில் அனுப்பினார். பல அரசர்களை அவர்கள் வென்று ஏராளமான ஐச்வர்யங்களை திரட்டிக் கொண்டு வந்து தருமரிடம் ஒப்படைத்தனர். ஜராசந்தன் மட்டும் ஜயிக்கப்படவில்லை. அப்போது கிருஷ்ணர் உத்தவர் கூறிய உபாயத்தைக் கூறினார்.

ஜராசந்தன் வதம்

கிருஷ்ணன், பீமன், அருச்சுனன் மூவரும் அந்தணர் வேடத்தில் மகத நாடு சென்றனர். ஜராசந்தன் அதிதிகளை உபசரித்துப் பூஜை செய்தான். அப்போதும் அவர்கள் தாங்கள் யாசகர்கள் என்றும், தங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்யுமாறும் வேண்டினர். ஜராசந்தன் அவர்களை நம்பமுடியாமல் யோசனை செய்தான். எனினும், அவர்கள் விருப்பத்தைக் கூறுமாறு கேட்டான். அப்போது கிருஷ்ணன் துவந்த யுத்தம் செய்வதையே தாங்கள் யாசிப்பதாகக் கூறினார். அவர்கள் யாரென்று புரிந்து கொண்ட ஜராசந்தன் கிருஷ்ணன் கோழை என்றும், அர்ஜுனன் சமமில்லாதவன் என்றும் எனவே பீமசேனனே போர்புரியத் தக்கவன் என்றும் அவன் தயாராக இருப்பதாயும் கூறினான். முதலில் பீமனுக்கும், ஜராசந்தனுக்கும் கதாயுத்தம் நடந்தது. பிறகு துவந்த யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் சளைக்காமல் போர் செய்வதைக் கண்ட கிருஷ்ணன் ஒரு குச்சியை எடுத்து இரண்டாக பிளந்து முனைகள் மாற்றி எறிந்தார். அதைப் புரிந்து கொண்ட பீமன் ஜராசந்தனைக் கீழே தள்ளி ஒரு காலால் அவன் காலை மிதித்து, இருகைகளாலும் அவனுடைய மற்றொரு காலை உறுதியாகப் பிடித்து வேகமாகக் கிழித்து தலைகால் மாற்றி இரு பக்கங்களில் வீசி எறிய ஜராசந்தன் உயிர் நீத்தான்.

பிறகு, பகவான் சிறையிலிருந்த மன்னர்களை விடுவித்தார். அவர்களுக்கு உணவும் உடையும் அளித்தார். அரசர்கள் துன்பங்களும், சிரமங்களும் நீங்கப் பெற்று பகவானைக் கண்டு மெய்மறந்து துதி செய்தனர். கிருஷ்ணன் அவர்களுக்கு விடை கொடுத்தனுப்பினார். பிறகு ஜராசந்தன் மகன் சகாதேவனுக்கு முடிசூட்டி மகதநாட்டு மன்னன் ஆக்கினார். பிறகு பீமார்ச்சுனர்களும், கிருஷ்ணனும் இந்திரப் பிரஸ்தம் அடைந்து யுதிஷ்டிரரிடம் நடந்தவற்றைக் கூறினர். யுதிஷ்டிரர் கிருஷ்ணனைப் பூசித்து அவர் அனுமதி பெற்று ராஜசூய யாகத்தைத் தொடங்கினார். வேதியர்கள் யாகத்தை விதிமுறை நழுவாமல் சிரத்தையுடன் நடத்தி வைத்தனர். யாக முடிவில் தர்மர் அக்ரபூஜை செய்வதற்கு உரியவர் யார் என்பது பற்றி ஆலோசித்தார். அப்போது சகாதேவன், சாந்த சொரூபியும், பரிபூர்ணரும், பேதமற்றவருமாகிய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கே அக்ரபூஜையைச் செய்வோம். அதுவே தக்கது; சிறப்புடையது என்றான். எல்லோரும் அதனை ஆமோதிக்க கிருஷ்ணனைப் பூஜித்தனர். உயர்ந்த வஸ்திர பரணங்களை அளித்து, பூக்களால் ஆனந்தக் கண்ணீருடன் அர்ச்சனை செய்தனர். அனைவரும் கைகூப்பி நமோ நம, நமோ நம என்று கோஷித்தனர்.

சிசுபாலன் வதம்

இந்த நிகழ்ச்சிகளைக் கண்ட சிசுபாலன் ஆத்திரமடைந்தான். கிருஷ்ணன் புகழைக் கேட்க சகிக்காமல் கொந்தளித்தான். இதென்ன அநியாயம்! அறிவில்லாத சிறுவனின் ஆலோசனையைக் கேட்கும் காலம் வந்து விட்டதே! குணக்கேடான இடையனுக்கா அக்ர பூஜை செய்வது! தர்மத்தை அனுஷ்டிக்காத அற்பனுக்கா அக்ரபூஜை என்று குமுறினான். இந்த பகவத் நிந்தனையை கேட்டவர் வெளியேறினர். உடனே சக்கராயுதத்தைப் பிரயோகித்து சிசுபாலன் சிரத்தைச் சேதித்தார். அப்போது சிசுபாலன் உடலிலிருந்து ஒரு ஒளி எழுந்து பகவானில் சேர்ந்து மறைந்தது.

யாக முடிவு

சிசுபாலன் பகவானிடம் துவேஷத்தை வளர்த்து எப்போதும் பகவான் நினைவாகவே இருந்ததால் பகவத் சொரூபத்தை அடைந்தான். தக்ஷிணைகளையும், தானங்களையும் உரியவர்களுக்கு நல்கி, பெரியோர்களுடன் தருமபுத்திரர் கங்காதீரத்தை அடைந்து மங்களமான அவப்ருத ஸ்நானத்தையும் செய்து யாகத்தை முடித்தார். சில மாதங்கள் கழித்து கிருஷ்ணன் தன் மனைவி, மக்கள் மந்திர பிரதானிகளுடன் துவாரகை புறப்பட்டுச் சென்றார்.

27. உஷை பரிணயம்

கிருஷ்ணனுக்கு பத்தினிகள் மூலம் அனேக புத்திரர்கள் பிறந்தனர். அவர்களுள் ருக்மிணியின் புத்திரன் பிரத்யும்னன் மூத்தவன், பிரத்யும்னனுடைய பிள்ளை அநிருத்தன். இவன் மகாபலி சக்கரவர்த்தியின் பவுத்திரியும், பாணாசுரனின் புத்திரியுமான உஷையை மணந்து கொண்டான். இனி உஷா பரிணயம் பற்றிய முழு சரிதத்தையும் முனிவர் கூறலானார்.

உஷையின் காதல்

பாணனுக்கு உஷை என்னும் மகள் இருந்தாள். அவளுக்குத் தக்க வயது வந்ததும் ஒருநாள் அவன் சிவனும் பார்வதியும் கூடி மகிழ்ச்சியுடன் இருப்பதை உளவு பார்த்துவிட்டாள். தானும் அவ்வாறு மகிழ ஆசைப்பட்டாள். அதை அறிந்த பார்வதி அவளும் அவள் புருஷனுடன் கூடி மகிழ்வாள் எனக் கூறினாள். அப்போது உஷை தன் கணவராகக் கூடியவன் யார்?எப்போது அந்தச் சுகம் கிடைக்கும்? எனக் கேட்டாள்.

உஷையின் கனவு

அப்போது பார்வதி வைகாசி மாதச் சுக்கிலபக்ஷத் துவாதசியன்று அவள் கனவில் ஒருவன் களிக்கப் போவதாகவும் அவனே அவளுக்குக் கணவனாவான் என்றும் கூறினாள். அதேபோல் ஒருநாள் ஒரு சுந்தர புருஷனை அவள் கனவில் கண்டாள். கனவிலேயே புலம்ப ஆரம்பித்தாள். அப்போது அவளுடைய அன்புத்தோழி சித்திரலேகை ஏன் அப்படிப் புலம்புகிறாள் என்று கேட்டாள். முதலில் வெட்கப்பட்ட உஷை பின்னர் தோழியின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகப் பார்வதி கூறியதையும், அதன்படி தான் கண்ட கனவினையும் விவரித்தாள். மேலும் அவனை அடைவதற்கான உபாயத்தையும் அவளே செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். சித்திரலேகையும் முயற்சி செய்வதாகக் கூறினாள். ஆனாலும் ஏழு (அ) எட்டு நாட்களாகும் என்றும் அதுவரை பொறுத்திருக்க வேண்டும் என்றாள்.

அனைத்து தேவர், கந்தருவர், அசுரர், மனிதர்களில் வாலிபர்களுடைய ஓவியங்களை வரைந்து உஷையிடம் காண்பித்தாள். இவ்வாறு காட்டுகையில் இராமகிருஷ்ணர்கள், பிரத்தியும்னன் படங்களைக் கண்டு நாணம் கொண்ட உஷை கடைசியில் அநிருத்தன் ஓவியத்தைக் கண்டவுடன் வெட்கமின்றி அவனே தன் கனவில் வந்தவன் என்றும், கலவி மகிழ்ச்சி அளித்தவன் என்றும், அவன் தான் கனவு நாயகன் என்றும் உரைத்தாள்.

அநிருத்தன் கட்டுப்படல்

சித்திரலேகை தனது யோகவித்தை பலத்தால் வான்மூலம் துவாரகை சென்று, அநிருத்தனைத் தூக்கிக் கொண்டு வந்து அந்தப்புரத்தில் சேர்த்திட, உஷை காதல் மிகக் கொண்டு அவனோடு தான் விரும்பிய போகங்களை அனுபவித்து வந்தாள். இதை அறிந்த அந்தப்புர காவலாளர்கள் பாணாசுரனிடம் சென்று கன்னிமாடத்தில் ஓர் அரசகுமாரன் இருப்பதை எடுத்துக் கூறினர். இதனால் கோபங்கொண்ட பாணாசுரனுக்கும் அநிருத்தனுக்கும், போர் மூண்டிட அநிருத்தன் வென்றான். அப்போது பாணாசுரன் அமைச்சன் மாயை கொண்டு போர் புரிய ஆலோசனை கூற, அந்த மாயப்போரில் அநிருத்தனைப் பாணாசுரன் நாகாஸ்திரத்தால் கட்டிப்போட்டான்.

பாணனின் வருத்தம்

உஷையின் தந்தை பாணாசுரன் ஒரு சமயம் சிவபெருமானிடம், ஆயிரம் கைகள் இருப்பதால் வெறுப்பே உண்டாகிறது. போர் வந்தால் தானே அவற்றால் பயன்? எனவே யுத்தம் வருமா? என்று கேட்டான். அதற்குச் சிவபெருமான் பாணா! மயில் அடையாளமுள்ள உன் வீரக்கொடி எப்பொழுது முறிந்து விழுகிறதோ, அப்போது போர் ஒன்று எழும் என்று கூறினார். துவாரகையில் அநிருத்தனைக் காணாமல் யாதவர்கள் எண்ணிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நாரதமுனிவர் சித்திரலேகை என்பவள் தன் யோக சக்தியால் அநிருத்தனை பாணாசுரன் மகள் உஷையிடம் சேர்த்தது முதல் அநிருத்தன் நாகாஸ்திரத்தால் கட்டுப்பட்டிருக்கும் வரையில் விவரமாக எடுத்துரைத்தார். ஸ்ரீகிருஷ்ணன் கருடாரூடராய் பலராமர், பிரத்தியும்னர் ஆகியோருடன் சோணித புரத்திற்குச் சென்றார். அங்குக் காவலில் இருந்த சிவகணங்கள் எதிர்த்தன. கிருஷ்ணன் பாணபுரத்திற்கு வந்தான். சைவஜுரம் கிருஷ்ணனைப் பாதிக்க விஷ்ணு ஜ்வரம் ஓடி ஒளிந்தது. பிறகு கிருஷ்ணர் அக்கினிதேவர் ஐவரையும், அவர்களுடன் வந்த சேனையையும் வென்றிட, பாணாசுரன் கிருஷ்ணனுடன் போர் செய்ய வந்தான். இருவருக்கும் மிகக்கொடிய யுத்தம் நடைபெற்றது.

கிருஷ்ணன் அனுப்பிய அஸ்திரத்தால் சிவன் செயலற்றுப் போனார். அடுத்து முருகனையும் கிருஷ்ணன் தோற்கடித்தார். மேலும் பாணாசுரன் போர் செய்ய அவன் கரங்களைச் சேதிக்க சக்கராயுதத்தைப் பிரயோகித்தார் கிருஷ்ணன். அது பாணாசுரனின் ஆயிரம் கரங்களையும் அறுத்தெறிந்து திரும்பவும் கிருஷ்ணனை அடைந்தது. அப்போது மீண்டும் சக்கரம் ஏவி பாணனைக் கொல்ல நினைக்கையில், பாணனுக்கு உதவியாக இருந்த சிவபெருமான் கண்ணனிடம் வந்து தான் அவனுக்கு அபயம் அளித்திருப்பதால் அவனை மன்னித்தருள வேண்டினார். அப்போது கிருஷ்ணன் சிவபெருமானின் வேண்டுகோளை ஏற்று சக்கரப் பிரயோகம் செய்யவில்லை. மேலும் சிவன் அபயம் கொடுத்தது, நான் கொடுத்ததேயாகும். உன் விஷயத்தில் நான் அனுக்கிரகம் உடையவன். நான் துவாரகை செல்கிறேன். நீயும் உன் இடம் செல்க என்று கூறினார். பிறகு அநிருத்தன் இருக்குமிடம் செல்ல கருடனின் காற்றுப்பட்டதும் நாகபாசம் அகன்றது.

கிருஷ்ணன் அநிருத்தன் உஷையுடன் பிரத்தியும்னனுடன் துவாரகை வந்தடைந்தார். அங்கு தம் தேவியரோடும், புத்திரி பவுத்திரர்களுடன் வாழ்ந்து வந்தார். இவ்வாறு பராசரர் மைத்திரேய முனிவரிடம் உஷை பரிணயம் வரலாற்றை எடுத்துரைத்தார்.

28. பவுண்டரன் மரணம்-காசி தகனம்

புண்டரக தேசாதிபதியைச் சிலர் அவர் ஸ்ரீவாசுதேவ அவதாரம் என்று கூறினர். அவன் தானே வாசுதேவன் என்று கூறிக்கொண்டு விஷ்ணுவின் சின்னங்களான, சங்கு சக்கர ஆயுதங்கள், வனமாலை ஆகியவற்றை அணிந்து கொண்டான். மேலும் அவன் ஒரு மூடனைக் கிருஷ்ணனிடம் அனுப்பி, தானே உண்மையான வாசுதேவன் என்றும், எனவே கிருஷ்ணன் அவன் சின்னங்களை விட்டு விடுமாறும் கூறி அனுப்பினான். அப்போது கிருஷ்ணன் புன்சிரிப்புடன் தூதரிடம் நான் அவன் எண்ணத்தை அறிந்து கொண்டேன். அவன் சொன்னபடி செய்கிறேன். எல்லாச் சின்னங்களையும் தரித்து, காசி வந்து இந்தச் சக்கரத்தை அவனிடமே விட்டு விடுகிறேன் என்று இருபொருள்படும்படி கூறி அனுப்பினார். பிறகு கண்ணபிரான் கருடாரூடராய் பவுண்டரக வாசுதேவனின் பட்டணம் சென்றார்.

வாசுதேவர் இருவர் போர்

இதையறிந்த காசி மன்னன் பெரும்படையோடு போருக்கு வந்தான். தனது சின்னங்களை அணிந்து வந்த பவுண்டரகனை கிருஷ்ணர் கண்டார். அவன் பவுண்டரகனிடம் சக்கரத்தையும், கதையும் அவனிடமே எறிந்ததாகவும் அவன் அவற்றிற்குப் பாத்திரமாகலாம் என்றும், கருடனை அனுப்புவதாகவும், அவனைக் கொடியில் ஏற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினான். சக்கரம் பொய் வாசுதேவனை அறுத்தது. கதையை முறித்தது. கொடி விழுந்தது. அப்போது காசி மன்னன் நண்பன் சாரங்கத்தோடு வர, கண்ணன் தன் சாரங்க வில்லை வளைத்து பாணவர்ஷம் பொழிந்து காசிராஜனின் சிரசை அறுத்து அந்தத் தலையை காசி நடுத்தெருவில் விழும்படி எறிந்தார்.

காசி எரிந்தது

அஃதறிந்த மன்னன் மகன் சிவனை ஆராதித்து கிருஷ்ணனை வதை செய்ய ஒரு பூதத்தை சிருஷ்டித்துத் தர வேண்டிட, சிவனருளால் தக்ஷிணாக்கினியிலிருந்து பூதம் தோன்றியது. அது கிருஷ்ணனைக் கொல்ல துவாரகை ஓடியது. அதைக்கண்ட கிருஷ்ணன் தனது சக்கராயுதத்தைப் பிரயோகிக்க, அது பூதத்தைத் தொடர்ந்து துரத்த அது காசி நகரையே அடைந்து ஏவினவர்களையும், காசி நகரத்தையும் எரித்து விட்டது. இவ்வாறு காசி நகரம் தகனமாகியது. சக்கரம் பகவானின் கையில் திரும்ப வந்தடைந்து அலங்கரித்தது.

29. உத்தம நண்பர்கள் கிருஷ்ணரும் குசேலரும்

சுகமுனிவர் கிருஷ்ண, குசேலம் (ஸுதாமா) சரிதம் கூறலானார். குசேலர் விஷய சுகங்களில் பற்றற்றவராய், ஞானியாய், சாந்த சீலராய் விளங்கினார். புலன்களை வென்று, தீவிர வைராக்கியத்துடன், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் தன் மனைவி க்ஷத்க்ஷõமா (சுசீøலை) மற்றும் இருபத்தேழு குழந்தைகளுடன் எளிய, வறிய வாழ்க்கை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் மனைவி குடும்பத்தின் தரித்திர நிலையைக் குறிப்பிட்டு குசேலரின் பால்ய சினேகிதர் கிருஷ்ணனைத் தரிசித்து திரவிய சகாயம் பெற்று வருமாறு வேண்டினாள். சரணமடைந்தவரைக் காத்திடும் அச்சரணாகத வத்சலன் அள்ளித்தரும் அச்சுதன் அல்லவா என்றாள். அப்போது குசேலர் வெறுங்கையுடன் கிருஷ்ணனிடம் எவ்வாறு செல்வது என்று கூறிட, அவர் மனைவி தான் சேர்த்து வைத்திருந்த சிறிதளவு அவலை மூட்டை கட்டி அவரிடம் கொடுத்தாள்.

மகாபிரபுவான கிருஷ்ணனின் தரிசனம் ஏழை பிராம்மணனாகிய தனக்கு கிடைக்குமா என்ற ஐயத்துடன் புறப்பட்ட குசேலர் துவாரகையை அடைய காவலர் அவரை அனுமதிக்கவில்லை. அப்போது ருக்மிணியுடன் கட்டிலில் அமர்ந்துள்ள கிருஷ்ணனைக் கண்டார். வெகுதொலைவில் வரும்போதே குசேலரைக் கண்டுவிட்ட கிருஷ்ணன் தனது பால்ய சிநேகிதன் நலிவுற்றிருந்த குசேலரைக் கண்டு, மகிழ்ச்சியுடன் ஓடோடி வந்து வரவேற்று, தன் மாளிகைக்கு அழைத்துச் சென்று வெகுவாக உபசரித்து, ருக்மிணிக்கும் அவரை அறிமுகம் செய்துவித்தார். பாதபூஜை செய்தார். கிருஷ்ணன் குசேலரின் ÷க்ஷமநலம், குடும்பத்தில் மனைவி மக்கள் பற்றி எல்லாம் விசாரித்து கடைசியில், எனக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்? என்று வினவ, குசேலர் மவுனமாக இருக்க, கிருஷ்ணன் அவர் மேல் துணியில் இருந்த முடிப்பைக் கண்டு, அதனை அவிழ்த்து அதிலிருந்த அவலை ஒரு பிடி கையில் எடுத்துக் கொண்டு, தனக்கு அவல் என்றால் ரொம்பவும் பிடிக்கும் என்று கூறிக் கொண்டே ஆவலுடன் உட்கொண்டார்.

அவர் இன்னொரு பிடி அவலை உட்கொள்ள ருக்மிணி அதனைத் தடுத்தாள். உமது திருப்திக்கு அது போதும் என்றாள். கிருஷ்ணன் குசேலரின் வருகையின் காரணம் அறிந்து ஒரு பிடி உட்கொண்டதன் மூலமே மிகுதியான செல்வத்தைக் குசேலருக்கு அளித்துவிட்டார். இது கிருஷ்ணனுக்கும் ருக்மிணிக்கும் மட்டுமே தெரியும். குசேலர் உதவி கேட்கவில்லை. பகவான் அளித்ததை அறியவுமில்லை. இதை நினைத்துக் கொண்டே கிருஷ்ணனிடம் விடைபெற்று வீடு திரும்பினார். பகவானுடைய தரிசனம் கிடைத்ததே பெருத்த லாபமென்று எண்ணிக் கொண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் தன் ஊர் அடைந்த அவர் தன் இல்லம் இருக்குமிடம் தெரியாமல் தவித்தார்.

அவர் வீடு சிறந்த மாளிகையாக மாறி சகல வசதிகளுடன் விளங்கியது. இதையெல்லாம் கண்டு வியந்து, பகவான் கருணையை எண்ணி தியானத்தில் இருந்த அவரை ஒரு லக்ஷ்மி போன்ற மங்கை எதிர்கொண்டு அழைக்க அவர் ஒன்றும் புரியாமல் திகைத்தார். தன்னை வரவேற்பவள் தன் மனைவி என்று தெரியவே சிறிது நேரம் ஆயிற்று. அப்போது அவர் மனதில் எண்ணினார், பகவான் பக்தர்கள் அளிப்பது குறைவாயினும், அதனைப் பெரிதாக எண்ணி அவர்களுக்கு நிறைவான செல்வத்தை அளிக்கிறார். அவர் அருளால் எனக்கு எல்லாப் பிறவிகளிலும் அவருடைய நட்பும், அவரிடம் இடையறாத பக்தி, அவர் சேவையில் மனம் லயித்து இருக்க வேண்டும் என்று எண்ணினார். குசேலர் இடைவிடாமல் பகவானைத் தியானம் செய்து, அகங்காரம், மமகாரம் நீக்கி, பற்றற்று பந்தபாசங்கள் விட்டு சத்புருஷர்களால் அடையப்பெறும் திவ்ய பதத்தை அடைந்தார்.

30. சுருதி கீதை

(ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீநாராயண மகரிஷியால் நாரத முனிவருக்கு உபதேசிக்கப்பட்டது சுருதி கீதை. அது விரிவானது. சிறப்புமிக்கது. எனவே, அதில் ஓர் அம்சமே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.) சுகமுனிவர் கிருஷ்ணர் சுருத தேவர்க்கும், பகுளேச்வரருக்கும் உபதேசித்து அனுக்கிரகம் செய்ததைக் கூறலானார். மிதிலா நகரத்தில் வாழ்ந்து வந்த சாந்தசீலரான சுருத தேவர் பற்றற்று, வைராக்கியமுடன், கிருஷ்ண பக்தியில் திளைத்து, கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடைந்து, நித்ய கர்மானுஷ்டனங்களைச் செய்து கொண்டு ஆனந்தமாக வாழ்ந்து வந்தார். அந்நாட்டு அரசனான பகுளேச்வரரும் கிருஷ்ண பக்தராய், பற்றின்றி அரசை ஆண்டு வந்தார். பகுளேச்வரரும், சுருததேவரும் பிரியமான தோழர்கள்.

ஒரு சமயம் அவ்விருவர்க்கும் அருள் புரியவேண்டி கிருஷ்ணன், நாரதர், வாமதேவர், வியாசர், அத்ரி, அருணர் முதலான முனிவர்களுடன் செல்ல, மேற்படி இருவரும் மக்கள் புடைசூழ பூஜா திரவியங்களைக் கைகளில் ஏந்தி மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். அவர்கள் இருவருக்கும் அனுக்கிரகம் செய்ய எண்ணிய பகவான் இரண்டு உருவங்களை எடுத்துக் கொண்டு அவர்கள் இல்லங்களில் தனித்தனியே பிரவேசித்தனர். தம்முடனேயே பகவான் இருப்பதாக எண்ணி இருவரும் மகிழ்ச்சி உற்றனர். அப்போது பகுளேச்வரர் பகவானைத் தனது கிரகத்தில் முனிவர்களுடன் தங்கியிருந்து புனிதப்படுத்துமாறு வேண்டித் துதி செய்தார். பகவானும் மிதிலாபுரி மக்களுக்கு மங்களத்தை அருளிக்கொண்டு சில காலம் அங்கேயே தங்கியிருந்தார்.

சுருத தேவரும் அதிதிகளை நன்முறையில் உபசரித்துப் போற்றி வணங்கி மெய்மறந்து ஆனந்தத்தில் நர்த்தனம் செய்தார். பகவத் சரணாம் ருதத்தை சிரசில் தரித்து ஆனந்தக்கண்ணீர் பெருக்கினார். அந்த மகான்களின் கூட்டுறவு பெரிய பாக்கியம் என எண்ணிப் பரசவமடைந்தார். அவர் கிருஷ்ணனிடம் கூறினார், ஹே! பரமபுருஷா! இணையற்ற மகிமை வாய்ந்த சத்திய சொரூபியாகிய தாங்கள் இந்த உலகைச் சிருஷ்டித்து, திவ்ய அதிதிகளுடன் அனைத்திலும் பிரவேசித்து பரவி இருப்பதைக் கண்டு தரிசித்து ஆனந்தமடைந்தேன். இன்று நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன் என்றார். தாய் உள்ளம் கொண்ட பக்தர் இதயத்தொளிரும் தாங்கள், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை உத்தர விடுங்கள் என்று கேட்டார். அப்போது பகவான் சுருத தேவரிடம் கீழ்க்கண்டவாறு கூறினார்: சுருததேவா! உமது பாத தூளிகளால் உலகைத் தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் சஞ்சரிக்கும் இந்த முனிசிரேஷ்டர்கள் உனக்கு அனுக்கிரகம் செய்யவே வந்திருக்கின்றனர். சாதுக்கள் தமது பார்வையால், உடனே தூய்மை ஆக்குகிறார்கள். தபஸ்வியாகவும், ஞானியாகவும் திருப்தி கொண்ட அந்தணர்களோ சாலச்சிறந்தவர்கள். அந்தணர்களை ஆதரிப்பவன் என்னையே ஆராதிப்பவனாகிறான். பிரம்மத்தை நிரூபணம் செய்கின்ற உப நிஷத்தார்கள் முறைப்படி அங்கீகரிக்கப்பட்டவர்கள். பிரம்ம வித்தையை அறிந்து சரீர அபிமானத்தை விட்டு மோட்சத்தை அடைகிறார். இது குறித்து ஒரு சமயம் நாரத முனிவர்க்கும், நாராயண மகரிஷிக்கும் நடந்த சம்வாதத்தைக் கூறுகிறேன் என்றார்.

பிரளய காலத்தில் ஜகத் முழுவதையும் சக்திகளுடன் உபசம்ஹாரம் செய்து விட்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த பரமாத்மாவை பிரளயத்தின் முடிவில் சுருதிகள் பிரம்மத்தின் மகத்வங்களைக் குறிப்பிடுகின்ற வாக்கியங்களால் துதிப்பாடித் துயில் எழுப்புகின்றன. சில சமயம் பிரகிருதியுடன் சேர்ந்தும் மற்றும் சில சமயம் தன்னில் தானே ஆழ்ந்திருந்தும் பல லீலைகளைச் செய்கின்ற தங்களையே சுருதிகள் புகழ்ந்து பாடுகின்றன. சகல யோக மக்களின் பாபங்களை எல்லாம் நீக்கி அருள் செய்கின்ற பிரபு தாங்களே என்பதையும் அறிந்த ஞானிகள் தங்கள் திவ்ய கதாம்ருதக் கடலில் மூழ்கி மூன்றுவிதத் தாபங்களிலிருந்தும் விடுபடுகின்றார்கள். அருட்செல்வர்கள் தங்கள் சரண கமலங்களில் ரமிக்கின்ற ஹம்சங்கள் ஆகின்ற ஞானிகள் சத்சங்கத்திலேயே விருப்பமுள்ள அவர்கள் வீட்டைக் கூட துறந்துவிடுகிறார்கள்.

உமது சிருஷ்டியான இந்தப் பிரபஞ்சமும், உமது சத்தால் பரவியுள்ள ஜீவ சொரூபமும் பிரம்மமே. உங்களிடம் பக்தியுள்ள மகனீயர்கள் எல்லோரையும் தூய்மையாக்குகின்றனர். தாமும் மேன்மை அடைகின்றனர். பிறப்பற்றவர்களான பிரகிருதி, புருஷன் ஆகிய இருவர்களுக்கும் உற்பத்தி என்பதில்லை. பல நாம ரூபங்களை உடைய ஜீவர்கள் அவற்றை இழந்து பிரளய காலத்தில் உம்மிடத்திலேயே லயத்தை அடைகின்றனர். பரம்பொருளை உணரும் முயற்சியில், பிரம்ம நிஷ்டரான குருவின் அருள் மிகவும் அவசியம். மனதை அடக்கி பகவானிடம் செலுத்த சிறந்த குருவை நாடி நல்ல முறையில் உபாசித்து அவர் அருளைப் பெற வேண்டும். பகவத் சொரூபிகளாகிய பக்தர்கள் தங்களுடைய நற்செயல்களால் மக்களையும் தீர்த்தங்களையும் பரிசுத்தம் செய்யவே சஞ்சரிக்கின்றனர். தேஜஸ், ஐஸ்வர்யம், சத்தியம், பராக்கிரமம், ஞானம், வைராக்கியம் கொண்டு உம்மை ஆராதிப்பவனுக்கு மோக்ஷ சுகம் கிடைக்கின்றது.

இவ்வாறு ஆகாய வெளியில் சஞ்சரிப்பவர்களும், ஆதிகாலத்தில் தோன்றியவர்களுமான மகாத்மாக்களாகிற சனகாதி முனிவர்களால் சகல வேத, புராண உபநிஷத்துக்களின் சாரமானது திரட்டி அளிக்கப்பட்டது என்று நாரதமுனிவருக்கு நாராயண மகரிஷியால் கூறப்பட்டது. இதைக்கேட்டு தேவரிஷிமிக்க திருப்தியும், மகிழ்ச்சியும் அடைந்தவராக நாராயண ரிஷியை வணங்கித் துதித்தார். சகல பிராணிகளின் பிறவிப் பிணியையும் போக்கி அருள் செய்யவே மனதைக் கவருகின்ற மங்கள வடிவங்களைத் தரிக்கின்ற பரிசுத்தமான கீர்த்தியையுடைய ஸ்ரீகிருஷ்ண பகவானை நமஸ்கரிக்கின்றேன் என்று துதித்து வணங்கி நாராயண ரிஷியிடம் விடைபெற்றுக் கொண்டு வியாசர் ஆசிரமத்துக்கும் சென்றார். பரப்பிரமம் குறிப்பிட முடியாத வஸ்துவாகவும், நிர்க்குணமாகவும் இருந்தபோதிலும் வேதங்களால் நிரூபணம் செய்யப்பட்டதென்பதை அறிவாயாக என்று கூறி பரபிரம்மத்தைத் துதி செய்து தியானிக்கலானார்.

31. நிருகனுக்கு அருள்புரிதல்

நிருகன் இக்ஷ்வாகுவின் மகன். தர்மவான், கொடையாளி. ஒரு சமயம் நிருகன் ஒரு பெரும் யாகம் செய்தான். அப்போது காசியபருக்கு பல பசுக்களைத் தானம் கொடுத்தான். அவற்றை முனிவர் ஓட்டிச் செல்கையில் அவற்றுள் ஒரு பசு தப்பி ஓடிவிட்டது. இது தானம் பெற்றவரோ, கொடுத்தவரோ மற்றவரோ அறியார். அப்பசு நிருகன் பசுக்கூட்டத்தில் கலந்துவிட்டது. சிலநாட்களுக்குப் பிறகு நிருகராஜன் வேறோர் அந்தணனுக்கு சில பசுக்களைத் தானம் செய்தான். அவற்றுள் ஏற்கனவே கச்யபருக்குக் கொடுத்துத் திரும்பி வந்த பசு கலந்திருந்ததை மன்னரோ, அந்தணரோ அறியார். அந்தணர் பசுக்களை ஓட்டிக்கொண்டு செல்கையில் காசியபர் அப்பசுக்கூட்டத்தில் தனது பசுக்களிலிருந்து பிரிந்துபோன பசு இருப்பதைக் கண்டு அந்தணனைக் கேட்க, அந்தணர் தனக்கு மன்னன் அளித்த பசுக்கள் அவை என்றார். பிறகு காசியபர் நிருகனிடம் சென்று எனக்களித்த பசுவை மறுபடியும் அந்தணர்க்கு எப்படி அளித்தாய் என்று கோபித்தார். அப்போது மன்னன் தனக்குத் தெரியாமல் நேர்ந்த தவறு அது என்றும், தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டான். மேலும், அந்தப் பசுவிற்கு ஈடாக ஆயிரம் பசுக்கள் கொடுப்பதாகவும் சொன்னான். ஆனால், காசியபரோ அதே பசுதான் வேண்டும் என்றார்.

பின்னர் பசுக்களைத் தானம் பெற்ற அந்தணரை வேண்ட, அவரும் மறுத்து விட்டார். அப்போது காசியபர் நிருகனை இனி ஓணானைப் போல் நடக்காதே என்று கூறிச் சென்றார். நிருகன் மரணமடைந்த பின் யமனிடம் எடுத்துச் செல்லப்பட, இயமன் நிருகன் பல புண்ணியங்கள் செய்திருந்தபோதிலும் அறியாமல் செய்த பாவம் பசுவின் காரணமாக முனிவர் கோபத்திற்கு ஆளானது என்று கூறி முதலில் பாப பலனோ அல்லது ஸ்வர்க்கபோகமா எதை அனுபவிக்கப் போகிறாய் என்று கேட்டார். நிருகமகாராஜா சிறிய பாபப் பலனை முதலில் பெறுவதாகக் கூற ஓணானாக மாறி பூமியில் விழுந்தான். பின்னர் துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணன் தொட, பாப விமோசனம் பெற்று திவ்ய சரீரம் பெற்று சொர்க்கத்தை அடைந்தான் நிருக மகாராஜன்.

32. பலராமன் தீர்த்த யாத்திரை

பலராமன் யமுனை ஆற்றில் தீர்த்தமாடிய பின்னர், அடுத்து கங்கை மாநதி படிந்து யானையைப் போல் நடந்தான். பின்னர் நைமிசாரணியத்தை அடைந்தான். அங்கு வியாசருடைய மாணாக்கர் ரோமஹர்ஷணர் என்ற இயற்பெயரைக் கொண்ட சூதரைக் கொன்றான். புல்லின் நுனியையே ஆயுதமாகக் கொண்டு கொன்றான். இந்த ரோம ஹர்ஷணரே சூதபவுராணிகர் ஆவார். இவ்வாறு செய்த பலராமரிடம் நைமிசாரணிய முனிவர்கள் சூதனைக் கொன்றது தருமமல்ல. எனவே, உலக வழக்கப்படி பலராமனைப் பன்னிரண்டு மாதங்கள் புனித நீரை உடைய துறைகளில் நீராட வேண்டும் என்று கூறினர். இவ்வலன் என்றவன் மகன் வற்கலன் நைமிசாரணிய முனிவரைத் துன்புறுத்தி வந்தான். கொடியவனால் எல்லோரையும் வருத்துபவனைக் கொல்ல வேண்டுமென்றதற்கு இணங்கக் கொல்லப்பட்டான். அந்தச் சூதன் மகனே திரும்பவும் சூதபவுராணிகராய் பிறந்தான். பலராமனுக்கு கலப்பையையும், வைஜயந்தி பொற்றாமரை மாலையையும், பூணையும், கலையையும் அந்தணர் உதவினர்.

பலராமன் கவுசிகியாறு, பூந்துறையை உடைய சரயுநதி, பிரயாகை, கோமதி, கங்கை, சோணிதயாறு ஆகியவற்றில் நீராடி கயையைக் காணுதற்குச் சென்றான். திரிவேணி சங்கமத்தில் மூழ்கி பரசுராமனைத் தரிசித்துப் புறப்பட்டான். ஏழுவகைப் பிறவித் தோற்றம் கெட கோதாவரி, பெண்ணையாறு, பம்பா நதிகளில் நீராடி மகேந்திர மலையில் முருகனைக் கண்டு தமிழ்நாட்டை அடைந்தான். பின்னர் திருவேங்கட மலையிலுள்ள திருமாலைத் தரிசித்தான். அடுத்து காஞ்சி, திருவரங்கம் சென்று காவிரியில் நீராடினான். பின்னர், திருமாலிருஞ்சோலையை அடைந்தான். பின்பு மதுரை நகரை அடைந்து வைகையில் நீராடினான். அடுத்துக் கடலில் விளங்கும் சேதுவை அடைந்து நீராடினான். பின்னர், பொதியமலை கடந்து தாமிரபரணியாற்றில் நீராடினான். குமரியாற்றிலும் நீராடிவிட்டு துவாரகை வந்தடைந்து கிருஷ்ணனை வணங்கினான். சுகமுனிவர் பரீக்ஷித்திடம் கூறலானார்.

ஒரு சமயம் ராம, கிருஷ்ணர்கள் வசுதேவரை வணங்கி பணிவுடன் நின்றனர். மக்களின் மகிமைகளை மகரிஷிகளின் மூலம் அறிந்த வசுதேவர் அவர்களைப் புகழ்ந்து கொண்டாடினர். கிருஷ்ணா, சங்கர்ஷனா நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் முக்கிய புருஷர்கள். ஜீவனுக்கு மனிதப் பிறவி கிடைப்பதே அரிது. இருந்தும் உம்மைத் தியானம் பண்ணாமல் காலத்தை வீணாகக் கழித்துவிட்டேன். உமது சரணங்களையே தஞ்சமாக அடைகின்றேன். கிருபை கூர்ந்து என்னை ரக்ஷித்து அருள வேண்டும். அப்போது பகவான் வசுதேவரிடம், நீங்கள் கூறியவை உண்மையே. இந்த துவாரகாவாசிகள் அனைவரும், இந்தச் சராசரி பிரபஞ்சம் முழுவதும் பரப்பிரம்ம சொரூபம் என அறியவும், ஆத்மா என்பது ஒன்றே தான். அது அழிவற்றது. சுயம் பிரகாசமாக விளங்கும் நித்திய வஸ்து. குண சம்பந்தமற்றது என்றும் அறிய வேண்டும் என்று கூறினார். அப்போது அங்கு வந்த தேவகி கொல்லப்பட்ட குழந்தைகளை எண்ணி அழுதாள். பிறகு கிருஷ்ணனைப் பார்த்து, கிருஷ்ணா, பலராமா நீங்கள் ஆதிபுருஷர்கள் என நானறிவேன். கம்சனால் கொல்லப்பட்ட என்னரும் குழந்தைகளைக் காண விரும்புகிறேன் என்றாள்.

பகவான் உடனே தனது யோக சக்தியினால் ஸுதலலோகம் சென்று பலி சக்கரவர்த்தியிடம் இருந்த அக்குழந்தைகளை அழைத்து வந்தார். தன் செல்வக்குழந்தைகளை தேவகி கண்டவுடனே அவர்களைத் தழுவிக் கொண்டு உச்சிமுகர்ந்து மிக்க இன்படைந்தாள். சிறிது நேரம் கழிந்ததும் அக்குழந்தைகள் எல்லோரையும் வணங்கி அவர்கள் எதிரிலேயே தேவலோகம் சென்று விட்டனர். இதைக்கண்ட தேவகி இது கிருஷ்ணனின் மாயையே என நினைத்து ஆச்சரியத்தினால் பிரமித்து நின்றாள். அழிவற்ற கீர்த்திவாய்ந்த அம்ருதமயமான அவருடைய திவ்ய சரித்திரமானது பாவங்களையும், தாபங்களையும் போக்கி விடுகிறது. பகவானுடைய கீர்த்தியாகிய தீர்த்தம் கங்கையை விட மேன்மையானது. ஸ்ரீகிருஷ்ண திவ்ய நாமங்களை உச்சரிப்பவர்களின் சகல பாவங்களும் நசித்து விடுகின்றன. பகவான் துவாரகையில் வசித்தபோது அனைவரும் பகவானைப் பக்தியுடன் ஆராதித்தனர். அங்கே வசித்துவந்த ஸ்திரீகள் ஸ்ரீகிருஷ்ணனிடம் தம் உள்ளத்தை அர்ப்பணம் செய்து விஷ்ணு பதத்தை அடைந்தனர்.

அப்பியாச யோகத்தினாலும் மனத்தைத் தன் லக்ஷ்யத்திலேயே நிலைநாட்ட வேண்டும். சர்ப்பமானது பிறர் அமைத்த வீட்டில் நுழைந்த ஜன சமூகத்திலிருந்து விலகி தனியாக வசிப்பதைப் போல் யோகி உலகத்தாருடன் சேராமல் ஒளிந்து வாழ வேண்டும். தேனீ சேகரிக்கும் தேனை மற்றவர் எடுத்து அனுபவிக்கிறார்கள். அதுபோல் தான் லோபியின் செல்வம் பிறருக்கே பயன்படும். தன் சுகத்திற்கும், பிறர் நலனுக்கும் உபயோகப்படுவது சிறப்புடையது. சிலந்திப் பூச்சி தன் வாயினால் உண்டாகும் நூலை பரப்பி விளையாடி பின்னர் தானே விழுங்கிவிடும். அதுபோலவே பகவானும் லீலா மாத்திரமாக இவ்வுலகைப் படைத்து முடிவில் அழித்து விடுகிறார். கூட்டில் அடைக்கப்பட்ட புழு குளவியையே எண்ணி, எண்ணி அதன் வடிவையே அடைகின்றது. சரீரம் பிறருடையது என்பதைத் தெரிந்து கொண்டு பற்றுதலை அகற்றி, அகங்காரமற்றவனாக, ஆத்ம சொரூபத்தில் நிலைபெற்ற மனத்துடன் இவ்வுலகில் சஞ்சரிப்பாள். இவ்வாறு இருபத்து நான்கு ஆசாரியர்களை ஆகிரயித்து அவதூதர் கற்றது பற்றி, தத்தாத்ரியேருடன் அளித்த உபதேசங்களை கேட்ட யது மகாராஜன் பற்றற்ற சித்தமுடையவராக வாழ்ந்து வந்தார் என்று பகவான் உத்தவ சுவாமிக்குச் சொன்னார்.

33. உத்தவர் ஐயம் தெளிதல்

ஸ்ரீகிருஷ்ண பகவான் மேலும் கூறினார், மோக்ஷத்தில் விருப்பமுள்ளவர்கள் காம்ய கர்மங்களை விடவேண்டும். என்னிடம் பக்தி உள்ளவன் காம்ய கர்மங்களை விட வேண்டும். ஞான மார்க்கத்தில் விருப்பமுடையவர்கள் நித்திய கர்ம விதிகளையும் ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை. என் பக்தன் நியமங்களை இடைவிடாமல் செய்ய வேண்டும். நியமங்களைக் கூடிய மட்டும் செய்ய வேண்டும். திறமை, நிதானம், அன்புள்ளம் உடையவனாக இருக்க வேண்டும். சத்விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவனாகவும், பிறர் நலனைக் கோருகின்றவனாகவும் இருக்க வேண்டும்.  சாந்தகுணமுள்ள குருவை என் வடிவமாகவே நினைத்து உபாசனை செய்ய வேண்டும். மனிதன் சுதந்திரம் அற்றவன். துன்பம் நீக்கி, சுகம் பெறும் உபாயத்தை அறிந்த ஜீவனால் மரணத்தை வெல்ல முடியும். குணங்களின் சம்பந்தங்கள் இருக்கும் வரையில் மனிதன் துன்பத்திற்கு ஆளாகி மோகத்தில் உழல்கிறான்.

அப்போது உத்தவர், ஒரே மனிதன் எப்படி நித்ய பக்தனாகவும், நித்ய முக்தனாகவும் இருக்க முடியும்? குணசம்பந்தம் உள்ள சரீரத்தை உடைய புருஷன் சுகதுக்கங்கள் இல்லாமல் எப்படி இருக்க முடியும் எனக்கேட்டார். அப்போது பகவான், குணங்கள் எனது மாயையின் மூலமே. ஆகையால் அதற்கு பந்தமோ, மோக்ஷமோ இல்லை. சோக, மோக, சுக துக்கங்களும், இச்சரீரமும் மாயையால் ஆனவையே ஆகும். ஆத்ம விஷயத்தில் உண்டாகிய மயக்கத்தை, எங்கும் நிறைந்த என்னிடம் நிர்மலமான மனத்தை அர்ப்பணம் செய்து சாந்தியைப் பெற வேண்டும். அவ்விதச் சக்தி அற்றவன் செயல்களைப் பற்று இன்றி செய்து அவற்றை எனக்கே சமர்ப்பணம் செய்ய வேண்டும். சாதுக்களுடைய உதவியால் எனது திவ்ய பதத்தைச் சுலபமாக அடைகின்றான். பலி, சுக்ரீவன், விபீஷணன், ஜாம்பவான், ஜடாயு, கஜேந்திரன், யஜ்ஞ பத்தினிகள், கோபியர் ஆகியோர் நன்மை அடைந்தது சாது சங்கத்தினாலேயே ஆகும்.

எனவே, நீயும் சர்வாத்ம சொரூபியாகிய என்னையே சர்வஹித பாவத்துடன் சரணடைவாயாக. அதனால் சகல பயமும் நீங்கி ÷க்ஷமத்தை அடைவாய். தனது சுத்தாத்ம சொரூபமே பரமாத்ம சொரூபம் என உணர்ந்து, வைராக்கியத்தைக் கடைபிடித்து தூரீயத்தில் நிலைபெற்று அபிமானத்தை விட்டுவிட வேண்டும். கர்ம வசத்தால் உண்டான இச்சரீரம் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என நினைக்கும் யோகி சமாதி யோகத்திலே நிலைபெற்று ஆத்ம சாக்ஷõத்காரத்தை அடைந்து ஆனந்தத்தைப் பெறுகிறான். என்னிடம் மனதை அர்ப்பணித்த பக்தனுக்கு ஒரு பிரம்ம பதவி, இந்திர பதவி, அணிமா சித்திகள், மோக்ஷம் கூட ஒரு பொருட்டல்ல. பற்றற்று, விரோதம் இன்றி சாந்தனாக எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கின்றவனுடைய பாத துளியை நான் அணிகின்றேன். பக்தி யோகத்தால் ஆத்மா கர்ம வாசனைகள் நீங்கி உண்மை சொரூபத்தை அடைகின்றது.

கிருஷ்ணா, முக்தி கோருபவன் உம்மை, எப்படி, எந்த வடிவில் தியானிக்க வேண்டும்! அந்தத் தியானமுறை பற்றி அறிய விரும்புகிறேன் என்று உத்தவர் கேட்டார். உத்தவ! சமமான ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து, கைகளை மடிமீது வைத்து, புருவ மத்தியில் பார்வையை நிலைநாட்டி, பூரக, கும்பக, ரேசகங்களால் பிராமணனுடைய வழியைத் தூய்மைப்படுத்தி, இந்திரியங்களை வெற்றிகொண்டவனாக இருக்க வேண்டும். பிரணவ நாதத்தை பிராண சக்தியின் மூலம் மேலே கொண்டு சென்று அங்கு நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகளும் பிரணவ ஜபத்துடன் பிராணாயமத்தைப் பத்து முறை செய்துவந்தால் ஒரு மாத காலத்தில் மனம் அடங்கும். அப்போது எட்டு இதழ்களும், கர்ணிகையும் கொண்ட இதயத் தாமரையை மேல்போர்த்தி மலர்ந்துள்ளதாக எண்ணி, அங்கே சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்றை முறையே தியானித்து அக்னி நடுவில் தியானத்தால் உகந்ததான எனது எல்லா அவயங்களிலும் தனித்தனியே நிறுத்தி தியானிக்க வேண்டும். முடிவில் புன்சிரிப்புடன் கூடிய முகமண்டலத்தில் தியானிக்க வேண்டும். சித்தத்தை வேறு எதிலும் செலுத்தக்கூடாது.

தீவிரமான தியான யோகத்தினால் ஆத்மாவிடம் ஒன்றிப் போய்விட்ட யோகிக்கு காணப்படும் பொருள், காண்பவன் அறிவு (உணர்வு) என்ற வேற்றுமை மயக்கம் முழுவதும் விரைவில் அற்றுப் போய்விடும் என்றார் பகவான். அடுத்து, உத்தவரிடம் முன்பு குரு÷க்ஷத்திரத்தில் அர்ச்சுனனுக்கு கூறின விஷயங்களையே கூற ஆரம்பித்து விளக்கினார். எல்லா உயிரினங்களுக்கும் நானே ஆத்மா. எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி இருப்பவனும் நானே. இவ்வுலகை ஆக்கிக் காத்து, அழிப்பவனும் நானே. காலம், குணங்கள், புண்ணிய ஹிரண்யகர்ப்பனாக இருப்பவன் நானே. நாரதர், பிருகு, மனு, காமதேனு ஆகியவை எம் அம்சங்களே. எனது விபூதிகள் அல்லது மகிமைகளை கணக்கிட முடியாது என்றார்.

அவமானமும் வைராக்கியமும் ஒரு கதை

பின்னர் கொடூரமான சொற்களால் கலக்கமடைந்த மனத்தை ஒருவராலும் சமாதானம் செய்ய முடியாது என்று கூறிய பகவான், அது விஷயமாக ஒரு கதையைக் கூறினார். அவந்தி நாட்டில் ஒரு வேதியன் இருந்தான். அவன் தனவான். எனினும் கருமி, காமி. இதனால் அவனை அவன் மனைவி, உற்றார், உறவினர் அனைவரும் வெறுத்தனர். அறமும் அன்பும் இல்லாத அவன் மீது பஞ்சயக்ஞ தேவதைகளும் கோபம் கொண்டதால் அவன் செல்வம், தர்மம், இன்பம் அனைத்தும் இழந்து ஏழையானான். அவனை எல்லோரும் அவமதித்து அலக்ஷ்யம் செய்தனர். அவனால் அவற்றைச் சகித்துக் கொள்ள முடியாமல் கண்ணீர் சிந்தினான். அப்போது அவனுக்குத் தீவிரமான வைராக்கியம் உண்டாயிற்று. லோபிக்குச் சுகமில்லை. பணத்தாலேயே எல்லா ஆனந்தங்களும் உண்டாகின்றன. எனவே, பணத்தாசை கூடாது. செல்வமிருந்தும் அதனை உற்றார் உறவினர், ரிஷிகள், தேவர்கள் என்ற உரிமை உடையவர்களை ஆராதிக்கவில்லை. அதனாலே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. கருணையுள்ள பகவானால் இப்போது வைராக்கியம் ஏற்பட்டுள்ளது. இனி நற்செல்வங்கள் செய்து, உடலை வாட்டி, தவவாழ்வை மேற்கொள்ளுவேன் என்று நிச்சயித்து அகங்காரம் அகற்றி, சாந்தனாகி துறவறத்தை மேற்கொண்டார்.

அழுக்கான உடல், கந்தல் துணியுடன் காட்சி அளித்த அத்துறவியை அனைவரும் பரிகசித்தனர். கைகொட்டி நகைத்தனர். அடித்து நிந்தித்தனர். ஆனால், அத்துறவி கோபமோ, வருத்தமோ இன்றிப் பொறுமையுடன் இருந்தான். மனதை அடக்கியவனே வெற்றி கண்டவன். பிரகிருதிக்கு அப்பாற்பட்ட ஆத்மாவுக்கு எதனாலும், எப்போதும் எவ்விதமாகவும் சுகதுக்கங்கள் உண்டாவதில்லை. இதை அறிந்த விவேகி யாரிடமும் அகங்கொள்ள மாட்டான். இனி நான் பரமாத்ம நிஷ்டையைப் பெற்று ஸ்ரீமுகுந்தனின் சரண சேவையினாலேயே சம்சாரத்தைக் கடக்கப் போகிறேன் என்று நிச்சயித்த அத்துறவி வைராக்கியத்துடன் உலகில் சஞ்சரித்தான். நண்பன், விரோதி என்பதும், சம்ஸாரத் தொல்லையும் அஞ்ஞானத்தின் விளைவு என அறிந்தான்.

முக்குணங்கள்

முக்குணங்கள் ஆவன ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் ஆகும் என்றும் அவற்றின் தன்மைகளையும் பகவான் உத்தவருக்குக் கூறினார். பரிசுத்த சத்வகுணமே என்னை அறியக்கூடியது. ஆத்மாவை அறிய வேண்டுமென்ற ஆவல் சாத்வீகம், செயல்களினால் ஆசை ரஜோகுணம், அதர்மத்தில் விருப்பம் தாமசம். என்னை சேவிப்பதில் சிரத்தை நிர்க்குணம். எனவே சித்தத்தில் தோன்றுகின்ற இந்த குணங்களை வெற்றிகொண்டு என்னை யோகத்தால், சிரத்தை கொண்டு உபாசித்துத் தியானிப்பவனே என்னை அடையத் தகுதி உடையவனாவான். உத்தவர், அச்சுதா ஞானயோகம் அனுஷ்டிக்க முடியாதவன் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்க, பகவான், மனத்தை என்னிடம் அர்ப்பணித்து எல்லாச் செயல்களையும் எனக்காகவே செய்ய வேண்டும். எனது பக்தர்களின் செயல்களைப் பின்பற்ற வேண்டும். ஆகாயம் போல உள்ளும் வெளியும் எங்கும் வியாபித்துள்ள ஆத்மாவாகிய என்னையே எல்லாப் பொருள்களிலும் தன்னிடத்திலும் தெளிந்த மனத்துடன் பார்க்க வேண்டும்.

இந்தப் பரிசுத்தமான உபதேசங்களை ஒவ்வொரு நாளும் உரக்கப் படிக்கின்றவன் ஞானமாகிற தீபஒளியில் என்னைத் தரிசித்துப் பரிசுத்தமடைவான். அமைதியாக இருந்து சிரத்தையுடன் கேட்கும் பக்தனுக்குக் கர்ம பந்தங்கள் விலகி விடும். ஞானத்தை நாடுகின்றவன் இதை அறிந்துகொண்டால் வேறு எதையுமே அறிய வேண்டியதில்லை. எவன் என்னிடமே தனது ஆத்மாவை சமர்ப்பணம் செய்கின்றானோ அப்போதே அவன் எனது அன்புக்குரியவனாகிறான். அவனே எனது சொரூபத்தை அடையத் தகுதி உள்ளவனாகிறான் என்ற பகவானுடைய இனிய வசனங்களைக் கேட்ட உத்தவர், அன்பினால் குரல் தழுதழுக்கப் பேசமுடியாமல் மவுனத்துடன் கைகூப்பி நின்றார்.

34. பகவான் கட்டளை

உத்தவர் கிருஷ்ணனைப் பார்த்து, இந்தச் சிறப்புக் காரியம் நிறைவேறும் பொருட்டு உற்றார் உறவினர்களிடம் உறுதியான பாசத்தை நீரே உமது மாயையால் உண்டாக்கினீர். இப்போது ஆத்ம ஞானமாகிய சுத்தியினால் அதை நீரே துண்டித்துவிட்டீர். ஹே! கிருஷ்ணா! உமது சரணார விந்தங்களில் நீங்காத பக்தி ஏற்பட அருள்புரிவீராக! சரணாகதனாக எனக்கு எதைச் செய்ய வேண்டுமோ அதைக் கட்டளையிடுங்கள் என்று வேண்ட, பகவான் சொன்னார், உத்தவ! நீ உடனே பதரிகாசிரமம் சென்று, பாததீர்த்தமாகிய கங்கையில் நீராடி, ஆசமனம் செய்து பரிசுத்தமடைவாயாக. அலகநந்தா நதியைத் தரிசிப்பதாலேயே சகல பாவங்களும் நீங்கி விடும். பிறகு மரவுரி தரித்து, சுகத்தில் ஆசையின்றி, கிடைத்ததை உண்டு, வெப்பதட்சம் சகித்து, இந்திரியங்களை வென்று ஒழுக்கத்துடன், ஞான விஞ்ஞான அறிவுடன் சாந்தனாக இருந்து, மனதை அடக்கி, திரிகரணங்களையும் என் மீதே வைத்து, பாகவத தர்மத்தில் நிலைபெற்று, முக்குண வழிகளையும் கடந்து என்னையே வந்தடைவாயாக எனக் கட்டளையிட்டார்.

உடனே உத்தவர் புறப்படும் சமயத்தில் மனம் கசிந்துருகி பகவானை மும்முறை வலம் வந்து அவரது பாதங்களில் தலையை வைத்து கண்ணீரால் நனைத்தார். அப்போது பகவான் அவருக்குத் தனது பாதுகைகளை அன்புடன் அளித்தார். அவற்றை சிரசில் தாங்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் வணங்கி புறப்பட்டுச் சென்றார். பிறகு பதரிகாசிரமம் சென்று, ஸ்ரீகிருஷ்ணனை இதய பீடத்தில் நிலைபெறச் செய்து தியானித்து அவருடைய உபதேசங்களை அனுஷ்டித்துத் தவம் செய்து லோக பந்துவாகிய ஸ்ரீஹரியினுடைய உத்தம பதத்தை அடைந்தார். யோகீஸ்வரர்களால் சேவிக்கப்படும் சரணங்களை உடைய ஸ்ரீகிருஷ்ணனால் உத்தவருக்கு உபதேசிக்கப்பட்ட பகவத் பக்தி மார்க்கம் என்ற இந்த ஞானானந்த மார்க்கத்தை ஒருவன் சிரத்தையுடன் சிறிதளவு உட்கொண்டாலும் முக்தியை அடைந்து இவ்வுலக மக்களையும் விடுவிக்கின்றான் என்று சுகமுனிவர் கூறி மனம் உருகிப் பகவான் கிருஷ்ணனைத் துதி செய்தார். வேதங்களை வெளியிட்ட பகவான், சம்சார பயத்தைப் போக்கிட, தேனைச் சேகரிக்கும் வண்டு போல, வேத சாரமான ஞான, விஞ்ஞான அமிர்தத்தைத் திரட்டித் தனது பக்தர்களுக்குப் புகட்டினார். அந்த மகிமை பொருந்திய ஆதிபுருஷராகிய கிருஷ்ணன் என்ற பெயருள்ள புரு÷ஷாத்தமனை நான் வணங்குகிறேன் என்று கூறி வணங்கினார் சுகமுனிவர்.

35. இரும்புலக்கை தோற்றம்

பகவான் பிராம்மண சாபத்தைக் காரணமாகக் காட்டி, யாதவர் குலத்தை அழிக்க எண்ணினான். பகவான், விசுவாமித்திரர், பிருகு, அஸிதர், துர்வாசர் முதலிய முனிவர்களைப் பிண்டாசாக ÷க்ஷத்திரத்திற்குச் சென்று வசிக்குமாறு கட்டளையிட்டார். அதன்படி அவர்கள் அங்கு சென்றடைந்து வசிக்கலாயினர். ஒரு சமயம் யாதவச் சிறுவர்கள் ஜாம்பவதியின் குமாரன் சாம்பவனுக்கு பெண் வேஷம் போட்டு மகரிஷிகளிடம் சென்று இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? அல்லது பெண் குழந்தையா? என்று பணிவுடன்-ஆனால் விளையாட்டாக கேட்க, கோபம் கொண்ட முனிவர்கள் அவர்கள் குலத்தை நாசமாக்கும் உலக்கை பிறக்கும் என்று கூறினர். அவ்வாறே சாம்பன் வயிற்றில் ஓர் உலக்கை தோன்றிட, அவர்கள் உக்கிரசேன மன்னரிடம் சென்று நிகழ்ந்ததை எல்லாம் கூறினர். உக்கிரசேனர் அவர்களிடம் அதனைப் பொடி செய்து கடலில் போட்டுவிடும்படி கூறிட, அவர்களும் அவ்வாறே செய்தனர். மீதி இருந்த துண்டுகளையும் கடலுக்குள் வீசினர். இரும்புத்துண்டுகளை விழுங்கிய மீன் வலையில் சிக்கியது. அதனை அறுத்த வலைஞன் இரும்புத்துண்டை எடுத்து ஒரு வேடனிடம் கொடுக்க, வேடன் அதனைத் தனது அம்பின் நுனியில் பொருத்தி வைத்தான்.

காலச் சொரூபியாகிய பகவான் பிரம்மனின் சாபத்தை மாற்றியமைக்க சக்தியுள்ளவர் என்றாலும் அதை அவர் மாற்ற விரும்பவில்லை. இது இப்படி இருக்க, ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணனை உபாசிக்க விரும்பிய நாரத முனிவர் அவருடன் துவாரகையிலேயே வசித்து வந்தார். அப்போது ஒருநாள் வசுதேவர் நாரதரிடம், வீடு உறுதிறலைக் கூறி அருளுமாறு கேட்டார். அப்போது நாரதர் கீழ்க்கண்டவாறு கூறலுற்றார். திருமாலிடம் அன்பு செலுத்தி அவனுடைய திருவடிகளை வணங்குபவர் பாகவதர் ஆவர். சர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்றவாறு சாராம்சம் யாவும் அவனே என்ற உள்ளம் படைத்தவன் உத்தம பாகவதர். துளவோன் விதிவுற்ற உருக்களில் மாத்திரம் உறைகின்றான் என்று தொழுபவர் பிராகிருதர். இல்லறத்தில் ஈடுபட்டிருப்பவனும் யான் எனது எனும் பற்றற்ற நிலையில் இருப்பவர்களும் உத்தம பாகவதர்களே. அவர்கள் பிரம்மத்துடன் வேறுபாட்டை அடையமாட்டார். உலகுண்ட முதல்வனையே அன்பினால் தொழுது தூய தொழில்புரிவோர் ஒரு பழுதுமின்றி பயன்பெறுவார். திருமால் எங்கும் எதிலும் விராட்சொரூபனாகி, முத்தொழில் புரிகிறான்.

36. தன்னுடைச் சோதிக்கு எழுந்தருளல்

உத்தவர் வனம் சென்ற பிறகு துவாரகையில் நடந்தவற்றைச் சுகமுனிவர் பரீக்ஷித்துக்குக் கூறினார். அதன் பிறகு பகவான் துவாரகையில் தோன்றிய அபசகுனங்களைக் கண்டு சபையோரைப் பார்த்து, யது சிரேஷ்டர்களே! இந்த அபசகுனங்கள் மரண பயத்தைக் காட்டுகின்றன. இனி நாம் இங்கு இருக்கக் கூடாது. பெண்டிர், முதியோர், குழந்தைகள் உடனே சங்கத்வாரம் செல்லட்டும். இப்போதே அந்த பிரபாச ÷க்ஷத்திரத்திற்குப் புறப்படலாம். அங்கு சென்று தேவதைகளை ஆராதிப்பதால் துன்பங்கள் நீங்கி நலம் ஏற்படும். நாம் நீங்கியவுடன் துவாரகையைச் சமுத்திரம் கொள்ளும். ஆனால், நம் திருமாளிகை மட்டும் மூழ்காது. அதில் நாம், அடியாருக்கு நன்மை புரிய சாந்நித்யமாக இருப்போம் என்றார். எல்லோரும் உடனே புறப்பட்டு பிரபாசதீர்த்தத்தை அடைந்தனர்.

ஒருநாள் யாதவர்கள் தெய்வ கதியால் விசேஷமாக மது உண்டு அந்த மது வெறியால் அறிவிழந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கலகம் செய்தனர். அந்தக் கலகம் ஆயுதப் போராகவும் மாறியது. ஆயுதங்கள் அழிந்துவிட கடற்கரையில் முளைத்திருந்த கோரைப் புற்களைப் பிடுங்கி ஒருவரை ஒருவர் தாக்கினர். இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டவரைப் பகவான் தடுத்தபோதிலும் அவர்கள் பகவானையே தாக்க முற்பட்டனர். எனவே கண்ணனும் ஒரு பிடி கோரைப் புற்களைப் பிடிங்கிக் கொண்டு இரும்பு உலக்கை போன்ற அதனாலேயே அனைவரையும் சங்கரிக்க யாதவர்கள் குலநாசம் அடைந்தனர். கண்ணனது திருத்தேர், சாரதியான தாருகன் பார்த்துக் கொண்டிருந்தபோதே குதிரைகளால் சமுத்திரத்தின் நடுவே இழுத்துச் செல்லப்பட்டது. அவ்வாறே பகவானின் சங்கு, சக்கர, கட்க, கதை, சாரங்கம் என்னும் பஞ்சாயுதங்களும் கண்ணனை வலம்வந்து சூர்யமார்க்கமாய் போய்விட்டன.

மீதி இருந்த மூவர் கிருஷ்ணர், தாருகன், பலராமன் மட்டும். ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த பலராமனின் திருமுகத்திலிருந்து ஒரு சர்ப்பம் ஒளியுடன் புறப்பட்டது. அந்த நாகம் நாகர்கள் துதி செய்ய, சமுத்திர ராஜன் வரவேற்க நீரில் புகுந்து விட்டது. அப்போது ஸ்ரீகிருஷ்ணன் தாருகனைப் பார்த்து தலைநகரம் சென்று யாதவர்கள் அழிந்ததையும், பல தேவர் தன்னைச் சோதிக்கு எழுந்தருளியதையும் வசுதேவர், உக்கிரசேனரிடம் சொல்லும்படிப் பணிந்து அனுப்பினார். மேலும் தானும் யோக நிஷ்டையில் உயிர்விடப் போவதையும், துவாரகையும் கடலில் மூழ்கடிக்கப் போகிறதென்றும், அனைவரும் அருச்சுனன் வந்ததும் அவனுடன் போக வேண்டும். யாரும் துவாரகையில் இருக்கவேண்டாம் என்றும் சொல்லச் சொன்னார். அப்படியே அஸ்தினாபுரத்திலிருந்து அருச்சுனனை அழைத்து வந்து அனைவரையும் காப்பாற்றச் சொல்லி நீயும் உடன் செல்வாயாக என்றார். எஞ்சிய யாதவர்க்கு வஜ்ரனை அரசனாக முடிசூட்டுமாறு கூறினார். அவ்வாறே தாருகன் செய்து முடித்தான்.

பின்னர் ஸ்ரீகிருஷ்ண பகவான் வசுதேவ ஸ்வரூபமான பிரமம் தான்தான் என்று சகல பிரபஞ்ச அதீதமான தன் சொரூபத்தில் நின்று அங்கே அரசமரத்தினடியில் மவுனியாக அமர்ந்திருந்தார். துர்வாசர் முதலிய முனிவர்களின் கூற்றுப்படி ஒரு முழந்தாளின் மீது மற்றொரு திருவடியை வைத்து யோக நித்திரையிலாழ்ந்தார். அப்போது கடலிலிருந்து கிடைத்த உலக்கையின் துண்டை தன் அம்புக்கு முன்னாக வைத்துக் கொண்டிருந்த வேடன் அங்கே வந்தவன் எம்பெருமானின் திருவடியை ஒரு மிருகமாக எண்ணி திருத்தாளின் அடிப்புறத்தில் எய்ய, அங்கு நான்கு புஜங்களுடன் பிரகாசமாய் தோன்றிய ஒரு புருஷனைக் கண்டான். உடனே அவரருகில் ஓடோடிவந்து தன்னிடம் சமர்ப்பித்து அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள பிரார்த்தித்தான். அதைக்கேட்டு பகவான் அவனை அஞ்சேல் என்று கூறி யாவும் தன் விருப்பப்படியே நடந்தது என்றும், அதனால் அவனுக்குப் பாதகம் எதுவும் ஏற்படாது என்றும், அவன் அப்போதே புண்யலோகம் செல்வான் என்றும் அருளினார்.

பிறகு கண்ணபிரான் அவ்யயமாயும், அசிந்த்யமாயும், வாசுதேவ ஸ்வரூபமாயும், மலமற்றதாயும், பிறப்பிறப்பு இல்லாத தாயும், அழைத்தற்கரியதாயும், ஸர்வாத்மகமாயும், இருக்கிற தன்னிடத்திலேயே தன் மனத்தைச் செலுத்தி, முக்குண கதியைக் கடந்து அன்றுவரை கொண்டிருந்த மனுஷ்ய சரீரத்தை விட்டருளினார். அருச்சுனன் ஸ்ரீகிருஷ்ண, பலராமர்களுடைய திருமேனிகளைத் தேடி எடுத்து ஈமக்கிரியைகளைச் செய்தான். ருக்மிணியும் மற்ற பட்ட மகிஷிகளும் அக்கினிப் பிரவேசம் செய்தனர். பலராமர் திருமேனியுடன் ரேவதியும் தீக்குளித்தாள். இஃதறிந்த தேவகி, வசுதேவர், ரோகிணி ஆகியோரும் தீக்குளித்தனர். யாவருக்கும் நீத்தார் கடன்களை ஆற்றி அருச்சுனன் துவாரகை சென்று வச்சிரனையும், மற்றும் கிருஷ்ணதேவிமார்களையும் அழைத்துக் கொண்டு பிறகு வந்து சேர்ந்தான். பகவானுக்குப் பிறகு அவரது சுதர்மை என்ற தேவசபையும், பாரிஜாதகத்தருவும் தேவலோகம் போய்ச் சேர்ந்தன. கிருஷ்ணன் மறைந்தவுடன் கலி புகுந்தான்.

துவாரகை கடலில் மூழ்கியது. பகவானின் திருமாளிகை தவிர மற்ற அனைத்தும் மூழ்கின. துவாரகை ஒரு புண்ணிய தலம். அதன் தரிசனமே சகல பாவங்களையும் நாசமாக்கும். அருச்சுனன் துவாரகாவாசிகளைப் பஞ்சந்தம் என்ற நாட்டில் தங்க வைத்திருந்தான். அருச்சுனன் தனியனாய் ஆயிரம் பெண்டிர்களை அழைத்துக் கொண்டு போவதைக் கண்ட திருடர்கள் பொருள்களையும், பெண்களையும் கவர்ந்து சென்றனர்; அருச்சுனன் தனது காண்டீபத்தை வைத்து நாண் பூட்ட முயற்சி செய்து அது பலிக்கவில்லை. அருச்சுனனால் போரில் ஒன்றும் செய்யமுடியவில்லை. அக்கினி பகவான் அஸ்திரத்திலிருந்த அக்ஷர தூணிரங்கள் காலி ஆயின. சகலவித இடையூறுகளும் அவனுக்கு நேர்ந்தன. அப்போது அவன், ஸ்ரீகிருஷ்ணன் தன் சக்தியைக் கொண்டுபோய் விட்டாரே. முன்பு வெற்றிகள் குவித்த அதே கைகள், அதே இடம், அதே அருச்சுனன்....புண்ணிய சொரூபியாகிய பகவான் கிருஷ்ணன் இல்லாமல் எல்லாம் வீணே. தெய்வம் வலியது என்று வருந்தினான்.

பின்னர் வேத வியாசரை வழியில் கண்டு தரிசிக்க, அவர் அவனது அவல நிலைக்கான காரணம் கேட்க, அருச்சுனன் நிகழ்வுகள் பற்றிக் கூறினான். மேலும் எனது பலம், தேஜஸ், வீரியம், பராக்கிரமம், சம்பத்து அனைத்துமாக இருந்த பகவான் எங்களை விட்டுவிட்டு மறைந்துபோனார். அடியேன் தனியனாய் ஒளியிழந்து காணப்படுகிறேன். இருந்தும் நான் இன்னும் உயிருடன் இருப்பதே வியப்பாக உள்ளது என்று பரிதாபமாகக் கூறி வருத்தமுற்றான். வியாசர் அவனுக்கு ஆறுதல் கூறினார். சகல பூதங்களுக்கும் இப்படிப்பட்ட காலகதி ஏற்படும். காலமே தோற்றத்துக்கும் அழிவுக்கும் காரணம். எல்லாம் காலத்திற்குள் ஆதினப்பட்டவை. பகவான் கிருஷ்ணனே அந்தக் காலச் சொரூபி. கண்ணனுடைய மகிமையாக நீ கண்டவை எல்லாம் அத்தன்மையினவே. அதில் ஐயம் ஏதுமில்லை. பகவான் அவதரித்த காரியம் அனைத்தும் நிறைவேறியது. எனவே அவர் தன் சோதிக்கு எழுந்தருளினார். பகவான் படைப்புக் காலத்தில் படைப்பும், ஸ்திதி காலத்தில் ஸ்திதியும் செய்தது போலவே சங்கார காலத்தில் அதையும் செய்தார். அனைத்தும் அவன் திருவிளையாடல்களே ஆகும். பகவான் திருவுள்ளம் பற்றிய மங்கையரை அற்பர்கள் இழுத்துச் சென்றதற்குக் காரணம் உண்டு. ஆனால், அவர்கள் கற்புக்கு பங்கம் ஏதும் ஏற்படாது.

முன்னொரு காலத்தில் அஷ்டவர்க்கிரர் (எட்டுக்கோணல் உடையவர்) என்ற முனிவர் கழுத்தளவு நீரில் அமிழ்ந்து பல ஆண்டு காலம் பிரம்மத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். தேவாசுரர் போரில் வெற்றி பெற்ற தேவர்கள் மேருமலைச் சாரலில் ஒரு விழா எடுத்தனர். அப்போது தேவமாதர்களாகிய ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் முனிவரைக் கண்டு வணங்கிப் புகழ்ந்து துதித்தனர். பெண்கள் வணங்கியது கண்டு பெருமகிழ்ச்சி கொண்ட முனிவர் நீங்கள் வேண்டும் வரம் யாது? என்று வினவ, அப்பெண்கள் புரு÷ஷாத்தமனே எங்களுக்குக் கணவனாக வர வேண்டும் என வேண்டினர். அவரும் அப்படியே ஆகுக என்று வரமளித்தார். பின்னர் அவர் நீரிலிருந்து வெளியில் வர அவரது கோணல் உடலைக் கண்ட தேவ மாதர்கள் சிரித்து விட்டனர். அப்போது முனிவர் தான் அளித்த வரத்தின்படி அவர்கள் பகவானின் மனைவிகள் ஆனார்கள். இறுதியில் திருடர்கள் வசப்படுவீர்கள் என்றார். அதன் பலனே இது. மறுபடியும் பெண்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்புக் கோர, எனினும் சொர்க்கம் அடைவீர்கள் என்று கூறினார். யாவும் எம்பெருமானாலேயே நிச்சயிக்கப்பட்டு நடந்தேறின என்று கூறினார். அருச்சுனன் அஸ்தினாபுரம் அடைந்து நிகழ்ந்ததைச் சகோதரர்களிடம் கூறி வியாசர் வாக்குப்படி நடக்குமாறு கூற, பாண்டவர்கள் பரீக்ஷித்துக்கு குரு ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்வித்து உடனே வனத்திற்குச் சென்றனர்.

கிருஷ்ணாவதாரம் முடிவுற்றது.


#bhagavata-puranam

#bhagavata_puranam

#bhagavata puranam

#bhagavatha puranam

To Top