ராமாயணம் பகுதி-6

ராமாயணம் பகுதி-6




மகிழ்ச்சிக்கடலில் அவள் மூழ்கிப்போனாள். பிறகென்ன! உலகைக் காக்கும் பரம்பொருள் மானிட அவதாரம் எடுத்துள்ளார். அன்னை மகாலட்சுமி சீதையாக பூமிக்கு வந்திருக்கிறாள். மகாலட்சுமி இருக்கும் இடத்தில் செல்வவளத்துக்கு குறைவில்லை. அந்த செல்வநாயகியை அடையப் போகிறவர் மகாவிஷ்ணு. இருவரும் இணைந்து விட்டால், இந்த உலகமும் சுபிட்சம் பெறத்தானே போகிறது!விஸ்வாமித்திரர் திருமணப் பேச்சை துவக்கினார். ஜனகராஜா! பிறகென்ன! உனக்கு மருமகன் கிட்டிவிட்டான். 

எவராலும் அசைக்கக்கூட முடியாத சிவதனுசை என் சீடன் உடைத்தே போட்டு விட்டான் என்றால், நீ அவனது பராக்கிரமத்தை உணர்ந்திருப்பாய் என்றே கருதுகிறேன்,.அதிலென்ன சந்தேகம் முனிவரே! எனது தூதர்களை இப்போதே அயோத்திக்கு அனுப்பி தசரத மாமன்னரை அழைத்து வரச் சொல்கிறேன். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இருக்கிறதே! மாப்பிள்ளையின் பெற்றோர் சம்மதமும் முறைப்படி பெற வேண்டுமல்லவா? என்றார் ஜனகர். அதன்படியே தூதர்கள் அயோத்தி சென்றனர். மதிலையில் நடந்த விபரங்களை வரிவிடாமல் விபரமாக தசரதரிடம் கூறினர். தன் மகன்கள் விஸ்வாமித்திரரின் யாகத்தை வெற்றிகரமாக நடத்தியது கேட்டும், அரக்கியும், அரக்கர்களும் அழிந்து பட்டதைக் கேட்டும், இவற்றையெல்லாம் விட சிவதனுசுவை ஒடித்து, மகாலட்சுமிக்கு நிகரான சீதையை மணம் முடிக்க இருப்பது கேட்டும் தசரதரும், ராணிகளும் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை. 

அயோத்தி மக்களிடமும் இந்த செய்தி வேகமாக பரவ, நாடே கோலாகலத்தில் ஆழ்ந்தது. விஸ்வாமித்திரர் காரணமாகத்தான் தன் மக்களை காட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் என்பதையும் தசரதர் புரிந்து கொண்டார். உடனடியாக படை பரிவாரங்கள் மணமகளுக்குரிய நகை, சீர்வரிசையுடன் மிதிலை நோக்கி புறப்பட்டது. இதற்கிடையே மிதிலையில் மற்றொரு திருமணப் பேச்சும் எழுந்தது.
மகரிஷியே! என் மகள் சீதைக்கு தங்கமகன் ராமன் கிடைத்து விட்டார். அதே போல், என் அன்புப்புதல்வி ஊர்மிளாவுக்கும் மாப்பிள்ளை வேண்டும். ராமனுடன் வந்துள்ளாரே இளவல் லட்சுமணன். அவர் மட்டும் சாதாரணமானவரா? அண்ணனுக்கேற்ற தம்பி. அண்ணனின் நல்வாழ்வுக்காகவே தன்னை அர்ப்பணித்தவர். இப்படிப்பட்ட பாசப்பிணைப்புள்ள குடும்பத்தில், இந்த அன்புச்சகோதரிகளும் இருந்தால், இறுதிவரை குடும்ப ஒற்றுமை நிலைத்திருக்குமே! லட்சுமணனுக்கு ஊர்மிளாவைத் திருமணம் செய்து வைத்து விடுவோமே,. ஜனகர் இவ்வாறு சொல்லவும், விஸ்வாமித்திரர் மகிழ்வுடன் சம்மதித்தார். 

ராமனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சம்சாரம் கூட ஒரே வீட்டிலிருந்து கிடைக்கிறது என்றால், எங்கள் ஒற்றுமையை பிரிக்க எவரால் இயலும், என இரும்பூது எய்தினார். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் ஜரூராக நடந்து முடியவும், தசரதர் மிதிலைக்கு வரவும் சரியாக இருந்தது. தங்கள் நாட்டு இளவரசியை மணம்பேசி முடிக்க பக்கத்து நாட்டு ராஜா வருகிறார் என்றால் மிதிலைமக்கள் சும்மாவா இருப்பார்கள். எங்கும் இதே பேச்சு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். சம்பந்தி தசரதரை வரவேற்றார் ஜனகர். பரதன், சத்ருக்கனன், தசரதரின் தேவியர் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்களோடு வந்திருந்த வசிஷ்டமாமுனிவர்
திருமணப்பேச்சை ஆரம்பித்தார். ஜனகா! உன் புத்திரியை மணக்கப்போகும் எங்கள் ராமனின் குலப்பெருமையைக் கேள். பிரம்மாவின் மகன் மரீசி. அவருக்கு ஒரு மகன்; அவர் தான் காஷ்யப முனிவர். இவர் பெற்ற மகன் சூரியபகவான். சூரியனின் மகன் மனு.மனுவின் உத்தமபுத்திரன் இக்ஷ்வாகு. இவரைத் தொடர்ந்து, திரிசங்கு, மாந்தாதா, திலீபன், பகீரதன், ரகு, அம்பரீஷன், யயாதி, அஜன் ஆகியோர் பிறந்தனர். இந்த வரிசையில் வந்தவர் தான் எங்கள் தசரத மகாராஜா. உலகைப் படைக்கும் பிரம்மனின் மரபில் வந்த தசரதர் நான்கு திருக்குமாரர்களைப் பெற்றெடுத்தார். அவர்களில் மூத்தகுமாரருக்கு தங்கள் மகள் சீதையையும், இரண்டாமவருக்கு இரண்டாம் மகள் ஊர்மிளாவையும் பெண் கேட்கிறோம். உன் சம்மதம் முறைப்படி தேவை,.

ஜனகர் மகிழ்ச்சியுடன் சம்மதித்து, தசரதரே! தாங்கள் உங்கள் குலப்பெருமையை வசிஷ்டர் வாயிலாகச் சொன்னீர்கள். எங்கள் குலப் பெருமையையும் தாங்கள் அறிய வேண்டும். நிகேது, சுமி, மகாவீரன் ஆகிய பெரியவர்களின் வரிசையில் அவதரித்தவர் தான் ஹரஸ்வரோமன். அவர் இரு குமாரர்களை ஈன்றெடுத்தார். மூத்தவன் இந்த ஜனகன். இரண்டாமவன் என் தம்பி குசத்வஜன். அவனுக்கும் என்னைப் போலவே இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவர்கள் மாண்டவி, சுருதகீர்த்தி. இவர்களுக்கும் மணமகன்களை தேடிக் கொண்டிருக்கிறோம், என்றே நிறுத்தினார். விஸ்வாமித்திரர் இப்போது தொடர்ந்தார். ஜனகா! இதில் உனக்கோ, உன் தம்பி குசத்வஜனுக்கோ எந்தக் கவலையும் வேண்டாம். தாய்மார்கள் வேறென்றாலும் கூட தசரதரின் மகன்கள் தான் பரதனும், சத்ருக்கனனும். அண்ணன் புதல்விகள் வாழும் வீட்டிற்கே தம்பி புதல்விகளும் செல்வது தான் முறை. இந்த அன்புச்சகோதரர்களை இங்கிருக்கும் அன்புச்சகோதரிகள் ஆளட்டுமே, என்று கூறி சிரித்தார். ஜனகருக்கு புரிந்து விட்டது. ஆஹா! பாக்கியம் செய்தோம் நானும் என் தம்பியும். மாண்டவியும், சுருதகீர்த்தியும் என்னைப் பொறுத்தவரை தம்பி மக்களல்ல. என் மக்கள் தான். சீதைக்கும், ஊர்மிளாவுக்கும் இங்கு என்ன உரிமைகள் உண்டோ அதே உரிமை அவர்களுக்கும் உண்டு. என் தம்பி புதல்விகளை பரதனுக்கும், சத்ருக்கனனுக்கும் மணம் முடிக்க சம்மதிக்கிறேன்,. ஜனகர் இவ்வாறு சொல்லவும், தசதரரும் அவரது மனைவியரும் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. ஒரு திருமணப் பேச்சுக்காக வந்தவர்கள், நான்கு திருமணப் பேச்சை முடித்து விட்டனர்.

To Top