ராமாயணம் பகுதி-18

ராமாயணம் பகுதி-18





தசரதருக்கு மயக்கம் தெளிவிக்கப்பட்டது. ராமா! இன்று இரவு மட்டுமாவது நீ என்னுடன் தங்கிவிட்டுப்போ என்று வற்புறுத்திச் சொன்னார் அந்த மன்னர். ராமன் அவரிடம், இன்று இங்கே நான் தங்கினால் சுகபோகங்கள் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், நாளை முதல் காட்டில் அந்த போகங்களை யார் தருவார்கள்? எனவே நான் இன்று புறப்படுவதுதான் நல்லதாகப் படுகிறது. இந்த உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளையும், மக்களையும், சொத்துகளையும் பரதனுக்கு கொடுத்துவிடுங்கள். உங்களுடைய உத்தரவை நிறைவேற்றுவதால் எனக்கு கிடைக்கப்போகும் புண்ணியத்தையும், சுகத்தையும் தடுத்துவிடாதீர்கள். தந்தை சொல்லைக் கேட்பதுதான் மகனின் கடமை. நீங்கள் எக்காரணம் கொண்டும் அழக்கூடாது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் கலக்கம் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது. கடல் என்றாவது கலங்கியதாக நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அதுபோல உறுதியான மனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் எனக்கு கண்கண்ட தெய்வம். நான் இதுவரை சம்பாதித்தது புண்ணியங்கள் மட்டுமே. அந்தப்புண்ணியங்கள் மீது சத்தியமாக ஒரு நொடி கூட இங்கு இருக்கமாட்டேன்.

உங்களிடம் மட்டுமல்ல; என் அன்புத்தாய் கைகேயிடமும் காட்டிற்குச் செல்வதாக வாக்களித்துவிட்டேன். அதை நிறைவேற்றியே தீரவேண்டும். காட்டில் உள்ள விலங்குகளைப்பற்றி எனக்கு கவலையில்லை. அவை என்னுடன் நட்புடன்தான் இருக்கும். கவலைப்படாமல் போய் வா என்று எனக்கு தைரியம் கொடுத்து வாழ்த்தி வழி அனுப்ப வேண்டிய நீங்களே, இவ்வாறு கலங்கினால் நான் யாரிடம் முறையிடுவேன்? நீங்கள் கொடுத்த கெடு முடியும் வரை அயோத்திக்கு திரும்பவே மாட்டேன். நாடு, நகரம், செல்வம், தான்யம், மக்கள் இவற்றின் மீதெல்லாம் எனக்கு கொஞ்சம்கூட விருப்பமே கிடையாது. இப்போதைய எனது விருப்பம் உங்களுயை கட்டளையை நிறைவேற்றுவது மட்டுமே. தர்மத்தை கடைபிடிக்க வேண்டுமென என் மனம் விரும்புகிறது. என் சீதைகூட எனக்கு வேண்டாம். சொர்க்கத்தை என்னிடம் கொண்டுவந்து கொடுத்தால் அதுவும் வேண்டாம். எனது உயிர்கூட எனக்கு வேண்டாம். ஆனால், உங்களிடம் செய்துகொடுத்த சத்தியம் மட்டும் வேண்டும், என்றெல்லாம் சொல்லி சமாதானம் செய்தார்.
அன்பு மகனின் உருக்க மொழி கேட்டு, ராமனை மார்போடு அணைத்துக்கொண்ட சக்ரவர்த்தி தசரதர், அந்த நிலையிலேயே மயக்கமடைந்து அசைவற்று போய்விட்டார். அமைச்சர் சுமந்திரர் துக்கம் தாங்க முடியாமல் அழுதார். கைகேயியைப் பார்த்து பற்களைக் கடித்து கோபத்தால் முகம் சிவந்தார். ஒரு நாட்டில் தவறு நடக்கும் போது அதைச் சுட்டிக்காட்டுவது அமைச்சரின் கடமை. அதிலும் நாட்டிற்கே அவமானம் வரும்போது மிகக் கடுமையாக அரசுக் கட்டிலில் இருப்பவர்களை கண்டித்தாக வேண்டும். சுமந்திரரும் தன் கடமையை செவ்வனே செய்தார். கடுமையான வார்த்தைகளால் கைகேயியை ஒருமையில் கண்டித்தார். எங்கள் மகாராஜா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நீ கேட்பதாக இல்லை. உனது கொடுமையான வார்த்தைகளால் அவரை அழும்படி செய்துவிட்டாய். ஒரு ஆண்மகனை அழச்செய்த நீ பெண்தானா? இரக்க சுபாவமே உன்னிடம் இல்லையா? இஷ்வாகு குலம் என்றால் சாதாரணமானதென்று நினைத்தாயா? அவர் எவ்வளவு பெரிய மனிதர்? அண்ட சராசரத்திற்கும் அவரே அதிபதியாக இருக்கிறார். அக்னி சாட்சியாக உன்னை திருமணம் செய்திருக்கிறார். இமயமலைகூட அசையும். எங்கள் ராஜாவை யாராலும் தொடமுடியாது. அப்படிப்பட்ட மனிதரை கலங்கச் செய்துவிட்டாயே. நீ செய்யும் பாவம் அவரையும் சேரும் என்பதை புரிந்துகொள்.

ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டால் அவள் செய்யும் பாவத்திலும் அவனுக்கு பங்கு கிடைக்கும் என்பதை நீ உணராதவளா? உன் புத்திரன்தான் இந்த நாட்டை ஆளட்டும் என்று நாங்கள் விட்டுவிட்டோமே. அப்படியிருந்தும் ராமச்சந்திர மூர்த்தியை காட்டுக்கு அனுப்ப ஏன் துடிக்கிறாய்? பரதன் இந்நாட்டை அரசாண்டால் நாங்கள் இந்த ராஜ்யத்தைவிட்டு போய்விடுகிறோம். உனது அரசாட்சியின்கீழ் ஒரு பிராமணன் கூட இருக்கமாட்டான். உன் நாட்டிற்குள் முனிவர்களும் சாதுக்களும் வரவே அஞ்சுவார்கள். கைகேயியே! உன்னைச்சொல்லி குற்றமில்லை. இந்நாட்டிலே ஒரு பழமொழி உண்டு. தாயைப்போல பெண் இருப்பாள். தந்தையைப்போல மகன் இருப்பான் என்று. நீயும் உன் தாயைப்போல கொடுமைக்காரியாகத்தான் இருக்கிறாய். உனக்கு நினைவிருக்கும். ஒரு சமயத்தில் உன் தந்தையான கேகயராஜன் உன் தாயோடு உரையாடிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒரு கந்தர்வன் விசேஷமான வரம் ஒன்றை தந்தான். உலகத்தில் உள்ள மிருகங்கள், பறவைகள், பூச்சிகள், பிற ஜந்துக்கள் என்ன பேசிக் கொள்கின்றன என்பதை உணரும் சக்தி அது. அன்று சில எறும்புகள் பேசிக்கொண்டிருந்தை கேகயராஜன் கவனித்தார். அவை நகைச்சுவையோடு பேசியதால் சிரித்து மகிழ்ந்தார். அருகில் இருந்த உன் தாய் சந்தேகப்பட்டு, எதற்காக சிரிக்கிறீர்கள்? என்னை கேலி செய்ய வேண்டுமென்பது உங்களுக்கு நோக்கமா? என்று கோபத்தோடு கேட்டாள்.


உன் தந்தை நடந்த விஷயத்தை சொன்னான். அவள் அதை நம்பவில்லை. அப்படியானால் அந்த எறும்புகள் என்ன பேசிக் கொண்டன என்பதை எனக்கும் சொல்லுங்கள் என்றாள். கேகயராஜன் அவளிடம், உன்னிடம் நான் அந்த தகவலை சொன்னால் என் தலை வெடித்து சுக்கு நூறாகிவிடும். எனக்கு வரம் கொடுத்த கந்தர்வன் இந்த நிபந்தனையையும் விதித்துள்ளான், என்றான். ஆனாலும் உன் தாய் கேட்கவில்லை. என்ன நடந்தது என்பதை பிடிவாதமாக கேட்டாள். மாட்டிக் கொண்ட உன் தந்தை தனக்கு வரம்கொடுத்த கந்தர்வனிடமே ஓடினான். என் மனைவி இவ்வாறு கேட்கிறாளே! நான் என்ன செய்வது? என்றான். அதற்கு அந்த கந்தர்வன், உன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அந்த உயிருடன் விளையாடும் பெண் உனக்கு தேவைதானா? அவள் பெண்ணல்ல, பேய். அவளை விரட்டி அடித்துவிடு என்று யோசனை சொன்னான். கேகயராஜனும் உன் தாயை விரட்டியடித்த கதை உனக்கும் தெரியும். மகாராணியே! உனக்கும் உன் தாய்க்கும் என்ன வித்தியாசம்? என்று கடுமையாகப் பேசினார். அரக்க குணம் கொண்ட கைகேயி இதற்கெல்லாம் மசியவில்லை. மாறாக தன் குலப்பெருமையை இழிவாக பேசியதற்காக அவளுக்கு கோபம்தான் வந்தது.

To Top