ராமாயணம் பகுதி-16
உனக்கு மரணமில்லாத பெரும் பதவியை தருகிறேன், என்றும் இளமையாக இருக்க வரம் தருகிறேன், 14 லோகங்களின் ஆட்சியையும் உன் கையில் தருகிறேன் என்றெல்லாம் சொன்னாலும் அவற்றையெல்லாம் தூக்கி எறிந்துவிடுவேன். உங்களுக்கு செய்யும் கைங்கர்யத்தின் முன்னால், இந்த இன்பங்களெல்லாம் வெறும் தூசு. எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். என்னை தங்களோடு வர அனுமதியுங்கள், என்று உருக்கமாக கேட்டான். ராமபிரான் தம்பியை மார்போடு அணைத்துக்கொண்டார். லட்சுமணா! நான் சொல்வதை கவனமாக கேள். நீ என்னோடு காட்டிற்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அப்படி வந்துவிட்டால் இங்கே நம் அன்னையர் கவுசல்யாவையும், சுமித்ராவையும் கவனிப்பது யார்? அவர்களது மனம் வருந்தும் வகையில் நாம் நடந்து கொள்ளலாமா? பரதன் கவனிக்க நினைத்தாலும் கைகேயி அதற்கு அனுமதிப்பாள் என சொல்ல முடியாது. கைகேயியோ தன் சக்களத்திகளை கண்டுகொள்ளவே மாட்டாள். இதனால் அவர்களின் மனநிலை வெகுவாக பாதிக்கப்படும்.
நீ இங்கிருந்து அப்படியெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள். அது மட்டுமல்ல. என்னுடைய பட்டாபிஷேகத்திற்காக நடத்தப்படும் ஏற்பாடுகளை நிறுத்திவிடு. நீ எனக்கு மிகவும் பிரியமானவன். தர்மத்தைத்தவிர உன் மனம் வேறு எதையும் சிந்திக்காது. என் உயிரும், நண்பனுமாய் இருப்பவனே! உன்னிடம் கல்யாண குணங்கள் நிறைந்திருக்கிறது. நம்மைப் பெற்ற அன்னையர் மனம் மகிழும் வகையில் சேவை செய்வதே நமக்கு நல்லதாக அமையும். நீயும், நானும், சீதையும் இணைந்து இங்கிருந்து போய்விட்டால் நம் தாய்மார்கள் எப்படி வாழ்வார்கள்? என்றெல்லாம் விபரமாக எடுத்துச் சொன்னார். லட்சுமணன் விடுவதாக இல்லை. அண்ணா! பரதனை நீங்கள் சந்தேகம் கொள்ளாதீர்கள். உங்கள் மீது அவன் அதிக அன்பு வைத்திருக்கிறான். கவுசல்யா தேவியை கவனித்துக் கொள்ளாவிட்டால் உங்களுடைய கோபத்திற்கு ஆளாக வேண்டி வரும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். அது மட்டுமல்ல. பெரும் பாவமும் அவனை பிடிக்கும். எனவே அவன் நமது தாய்மார்களை நல்ல முறையில் கவனிப்பான் என்பது உறுதியே. நான் உங்களுடைய சேஷனாக (தாங்குபவன்) இருப்பதற்காகவே பிறந்தவன்.
இந்த உலகம் உள்ள வரையிலும் உங்களுக்கு சேவை செய்ய மறுக்காமல் அனுமதி கொடுங்கள். காட்டிற்கு தாங்கள் செல்லும்போது உங்கள் முன்பாக நான் நடந்து செல்வேன். மண்வெட்டி, கூடை ஆகியவற்றை எடுத்து வருகிறேன். ஆங்காங்கே கிடைக்கும் உணவுப் பொருட்களை சேகரித்து தருகிறேன். மலைச்சாரலில் நீங்கள் அன்னை சீதாவோடு ஆனந்தமாக காலம் கழியுங்கள். ஒரு கணம் கூட இமை மூடாமல் உங்களைநான் பாதுகாப்பேன், என்று பிரார்த்தித்தான். ராமனுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. இவனைப்போல ஒரு தம்பி கிடைக்க நாம் என்ன தவம் செய்தோமோ என நெக்குருகிப்போனார். தன்னுடன் வர லட்சுமணனுக்கு அனுமதி அளித்தார். அடுத்தடுத்து லட்சுமணனுக்கு உத்தரவுகளை பிறப்பித்தார். லட்சுமணா! நீ உடனடியாக ஜனக மகாராஜா நடத்திய பூஜையின்போது வருணன் நமக்கு தந்த அதிபயங்கரமான இரண்டு வில்களையும், எதிரிகள் நம் மீது அம்புமழை பொழிந்தால் அவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் உறுதியான இரண்டு கவசங்களையு, இரண்டு அம்பறைகளையும், சூரியனைப்போல பிரகாசிக்கும் இரண்டு கத்திகளையும் எடுத்து வா. இவை அனைத்தும் நமது குரு வசிஷ்டரின் ஆசிரமத்தில் பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ளன. உன் உறவினர்களிடமும், நண்பர்களிடமும் சொல்லவிட்டு புறப்படு, என்றார். லட்சுமணன் வசிஷ்டரின் ஆசிரமம் சென்று அவரை வணங்கி அவரது அனுமதியுடன் ஆயுதங்களைப் பெற்றுவந்தான். இதன்பிறகு தன்னிடமிருந்த அனைத்து செல்வங்களையும் பிராமணர்களுக்கு தர்மம் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
ஸுயக்ஞர் என்ற மிகப்பெரிய தபஸ்வி தர்மம் பற்றி அறிந்தவர். மகாஞானி. அவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் ராமன். தர்மம்கொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. தகுந்தவர்களுக்கு தர்மம் கொடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் எல்லா வகையிலும் தகுதியான ஸுயக்ஞருக்கு அபூர்வமான நவரத்தினங்கள், குண்டலங்கள், கை வளைகள் ஆகியவற்றை அளித்தனர். இதுதவிர, ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளும் கொடுக்கப்பட்டன. இதன்பிறகு அகஸ்தியர், விஸ்வாமித்திரர் ஆகியோரின் மகன்களுக்கும் ஆயிரக்கணக்கான பசுக்கள், தங்கம், வெள்ளி ஆகியவை தானமாக கொடுக்கப்பட்டன. கவுசல்யாவுக்கு யஜுர் வேதத்தை கற்றுத்தரும் பிராமணர் ஒருவருக்கு வேலைக்காரர்கள் பட்டு, போர்வைகள், வாகனங்கள் ஆகியவற்றை கொடுத்தார். நீண்டகாலமாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த சாரதி, சித்ராரதர் என்பவருக்கு ஏராளமான ஆடுகள், மாடுகள், வஸ்திரங்கள், தானியங்கள் கொடுக்கப்பட்டன. இப்படி முக்கியமானவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினார் ராமன். காரணம் என்ன தெரியுமா? தர்மம் பெற்றவர்கள் அதை தங்களுக்கென வைத்துக் கொள்ளாமல் பிறருக்காக செலவழிக்க வேண்டும். அப்படிப்பட்ட குணமுடையவர்களை தேர்ந்தெடுத்துக் கொடுத்தார் ராமன். ராமன் காட்டிற்கு புறப்படுகிறார் என்ற தகவல் அங்கிருந்த படை பட்டாளங்களுக்கு தெரிந்துவிட்டது. அவர்கள் கண்ணீர்விட்டு கதறிக்கொண்டிருந்தனர். அவர்களை சமாதானம் செய்த ராமன், நாங்கள் ஊருக்கு திரும்பி வரும்வரை நீங்கள் இந்த வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றார். பொக்கிஷத்திலிருந்த அனைத்து செல்வத்தையும் கொண்டு வரச்செய்து பிராமண சிறுவர்களுக்கும், முதியவர்களுக்கும், ஏழை மக்களுக்கும் கொடுத்தார். அனைவருமே திருப்தியடைந்தனர். ராமரும் சீதாவும் மகாராஜா தசரதர் இருந்த இடத்திற்கு சென்றார்கள். செல்லும் வழியில் மக்கள் அவர்களை பார்த்து துக்கம் தாளாமல் அழுதனர். சோகத்தில் பிதற்ற ஆரம்பித்தனர்.