கீர்த்தித் திரு அகவல் - திருவாசகம்

திருவாசகம் 



கீர்த்தித் திரு அகவல் 

(தில்லையில் அருளியது - நிலைமண்டில ஆசிரியப்பா) 



தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும் 5

என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும் 10

கல்லா டத்துக் கலந்து இனிது அருளி
நல்லா ளோடு நயப்புறவு எய்தியும்
பஞ்சப் பள்ளியில் பால்மொழி தன்னொடும்
எஞ்சாது ஈண்டும் இன்அருள் விளைத்தும்
கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் 15

விராவு கொங்கை நல்தடம் படிந்தும்
கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும்
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து
உற்ற ஐம் முகங்களால் பணித்து அருளியும் 20

நந்தம் பாடியில் நான் மறையோனாய்
அந்தமில் ஆரியனாய் அமர்ந்து அருளியும்
வேறு வேறு உருவும் வேறுவேறு இயற்கையும்
நூறு நூறு ஆயிரம் இயல்பினது ஆகி
ஏறு உடை ஈசன் இப்புவனியை உய்யக் 25

கூறு உடை மங்கையும் தானும் வந்தருளிக்
குதிரையைக் கொண்டு குடநாடு அதன்மிகைக்
சதுர்படத் சாத்தாய்த் தான் எழுந்தருளியும்
வேலம் புத்தூர் விட்டேறு அருளிக்
கோலம் பொலிவு காட்டிய கொள்கையும் 30

தர்ப்பணம் அதனில் சாந்தம் புத்தூர்
வில்பொரு வேடற்கு ஈந்த விளைவும்
மொக்கணி அருளிய முழுத்தழல் மேனி
சொக்கது ஆகக் காட்டிய தொன்மையும்
அரியொடு பிரமற்கு அளவு அறி ஒண்ணான் 35

நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்
ஆண்டுகொண்டருள அழகுறு திருவடி
பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று
ஈண்டு கனகம் இசையப் பெறா அது
ஆண்டான் எம்கோன் அருள்வழி இருப்பத் 40

தூண்டு சோதி தோற்றிய தொன்மையும்
அந்தணன் ஆகி ஆண்டுகொண்டருளி
இந்திர ஞாலம் காட்டிய இயல்பும்
மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் 45

ஆங்கது தன்னில் அடியவர்க்கு ஆகப்
பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தக வேடங் காட்டிய இயல்பும்
பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித் 50

தூவண மேனி காட்டிய தொன்மையும்
வாத வூரினில் வந்து இனிது அருளிப்
பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்
திரு ஆர் பெருந்துறைச் செல்வன் ஆகிக்
கரு ஆர் சோதியில் கரந்த கள்ளமும் 55

பூவலம் அதனில் பொலிந்து இனிது அருளிப்
பாவம் நாசம் ஆக்கிய பரிசும்
தண்ணீர்ப் பந்தர் சயம்பெற வைத்து
நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்
விருந்தினன் ஆகி வெண்காடு அதனில் 60

குருந்தின் கீழ் அன்றிருந்த கொள்கையும்
பட்ட மங்கையில் பாங்காய் இருந்து அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்
வேடுவன் ஆகி வேண்டு உருக் கொண்டு
காடு அது தன்னில் கரந்த உள்ளமும் 65

மெய்க் காட்டிட்டு வேண்டு உருக் கொண்டு
தக்கான் ஒருவன் ஆகிய தன்மையும்
ஓரி ஊரில் உகந்து இனிது அருளி
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்
பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் 70

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவார் கோலம் கொண்ட கொள்கையும்
தேன் அமர் சோலைத் திரு ஆரூரில்
ஞானம் தன்னை நல்கிய நன்மையும்
இடைமருது அதனில் ஈண்ட இருந்து 75

படிமப் பாதம் வைத்த அப்பரிசும்
ஏகம் பத்தில் இயல்பாய் இருந்து
பாகம் பெண்ணோடு ஆயின பரிசும்
திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து
மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் 80

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப்
பாவகம் பலபல காட்டிய பரிசும்
கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்
ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும்
ஐயாறு அதனில் சைவன் ஆகியும் 85

துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும்
திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும்
கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்
கழுக்குன்று அதனில் வழுக்காது இருந்தும்
புறம்பயம் அதனில் அறம்பல அருளியும் 90

குற்றாலத்துக் குறியாய் இருந்தும்
அந்தமில் பெருமை அழல் உருக் கரந்து
சுந்தர வேடத்து ஒருமுதல் உருவுகொண்டு
இந்திர ஞாலம் போலவந்து அருளி
எவ்வெவர் தன்மையும் தன்வயிற் படுத்துத் 95

தானே ஆகிய தயாபரன் எம் இறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும்
மந்திர மாமலை மகேந்திர வெற்பன் 100

அந்தம் இல் பெருமை அருள் உடை அண்ணல்
எம் தமை ஆண்ட பரிசு அது பகரின்
ஆற்றல் அதுவுடை அழகமர் திரு உரு
நீற்றுக் கோடி நிமிர்ந்து காட்டியும்
ஊனம் தன்னை ஒருங்குடன் அறுக்கும் 105

ஆனந் தம்மே ஆறா அருளியும்
மாதில் கூறுஉடை மாப்பெரும் கருணையன்
நாதப் பெரும்பறை நவின்று கறங்கவும்
அழுக்கு அடையாமல் ஆண்டுகொண்டு அருள்பவன்
கழுக் கடை தன்னைக் கைக்கொண்டு அருளியும் 110

மூலம் ஆகிய மும்மலம் அறுக்கும்
தூய மேனிச் சுடர்விடு சோதி
காதலன் ஆகிக் கழுநீர் மாலை
ஏல் உடைத்தாக எழில்பெற அணித்தும்
அரியொடு பிரமற்கு அளவு அறியாதவன் 115

பரிமாவின் மிசைப் பயின்ற வண்ணமும்
மீண்டு வாராவழி அருள் புரிபவன்
பாண்டி நாடே பழம்பதி ஆகவும்
பக்தி செய் அடியாரைப் பரம்பரத்து உய்ப்பவன்
உத்தர கோச மங்கை ஊர் ஆகவும் 120

ஆதி மூர்த்திகட்கு அருள்புரிந்து அருளிய
தேவ தேவன் திருப் பெயர் ஆகவும்
இருள் கடிந்து அருளிய இன்ப ஊர்தி
அருளிய பெருமை அருள்மலை யாகவும்
எப்பெருந் தமையும் எவ்வெவர் திறமும் 125

அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டருளி
நாயினேனை நலம்மலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருகஎன
ஏல என்னை ஈங்கு ஒழித் தருளி
அன்று உடன் சென்ற அருள்பெறும் அடியவர் 130

ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்
எய்த வந்திலாதார் எரியில் பாயவும்
மாலது வாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனில் புரண்டுவீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி 135

நாத நாத என்று அழுது அரற்றி
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக் கருளிய பரமநாடக என்ற
இதம் சலிப்பெய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புஉடை அம்பொன் 140

பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகு உறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவ ரோடும்
பொலிதரு புலியூர் புக்கு இனிது அருளினன் 145
ஒலிதரு கைலை உயர்கிழ வோனே

திருச்சிற்றம்பலம்

To Top