அக்னி புராணம் பகுதி-2

அக்னி புராணம் பகுதி-2




25. பாபங்கள், பிராயச்சித்தம்: 

ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ இழைத்துவிட்ட தவறுக்காக மனமுருகி வருந்துவது பிராயச்சித்தம் எனப்படும். அவ்வாறு செய்வதன் மூலம் மறுபடியும் அத்தகைய தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. அழையாதார் வீட்டில் நுழைந்து புசிக்கும் பிராமணன் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து உபவாசம் (அ) கிருச்ச சாந்த்ராயனம் என்ற கர்மாவைக் கடைப்பிடிக்க வேண்டும். தீட்டுக் காலத்தில் பிறர் இல்லத்தில் உணவு கொள்வதால் ஏற்படும் தோஷம் நீங்க கிருச்ச விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அமாவாசையன்று மது அருந்துவதால் ஏற்படும் தோஷம் நீங்க விராஜா பத்தியம் என்ற கர்மாவைச் செய்ய வேண்டும். உப பாவங்கள் எனும் செயல்களைப் புரிந்தவர்கள் சாந்திராயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

ஒருவன் வேண்டுமென்றே ஒரு குற்றத்தைச் செய்தால் அவனைச் சாதிப்பிரஷ்டம் செய்ய வேண்டும். தெரியாமல் செய்து விட்டால் பிரஜாபத்தியம் என்ற கர்மாவை மேற்கொண்டால் போதும். இப்பகுதியில் ஏராளமான தவறுகள் பற்றியும் அவற்றிற்கு பிராயச்சித்தமும் சொல்லப்பட்டுள்ளன. சில மட்டுமே காட்டப்பட்டன. பிராமணர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் கடுமையானதாக இருக்கும். அதைவிடச் சற்று குறைவாக க்ஷத்திரியனுக்கும், அதைக் காட்டிலும் குறைவாக வைசியனுக்கும், மற்றவர்களுக்குத் தண்டனை அதைவிடக் குறைவாகவும் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.


26. பிராயச்சித்த விரதங்கள்


1. மகாபாதகன் ஒரு மாதக் காலத்துக்கு புருஷஸூக்தம் கூற வேண்டும்

2. 2. அகர்ஷண மந்திரத்தை மும்முறை உச்சரித்தல், வாயு, யமனுக்குõன மந்திரங்கள், காயத்திரி மந்திரமும் உச்சரித்தலால் சாதாரணக் குற்றங்களிலிருந்து ஒருவன் விடுபடலாம்.

3. 3. கிருச்ச விரதம்-மொட்டை அடித்துக் கொண்டு, நீராடி, ஹோமம் செய்து ஹரியை வழிபட வேண்டும். பகலில் நின்று கொண்டும், இரவில் உட்கார்ந்து கொண்டும் கழிக்க வேண்டும்.

4. சாந்திராயன விரதத்தைக் கடைப்பிடிப்பவன் ஒரு நாளைக்கு எட்டுப்பிடி-காலையில் 4 பிடி, மாலையில் 4 பிடி என்று உணவு கொள்ள வேண்டும்

5. 5. தப்தகிருச்சம் : முதல் மூன்று நாட்கள் மூன்று கை வெந்நீர், அடுத்த மூன்று நாட்கள் மூன்று கை சூடான பால், அதற்கடுத்த மூன்று நாட்கள் சூடான நெய் அதே அளவு, கடைசி மூன்று நாட்கள் காற்றே ஆகாரம்

6. 6. கிரச்ச சந்தானபன விரதம் ஒரு பகல், ஓர் இரவு சுத்த உபவாசம்.

7. 7. பாரகயஜ்ஞ கர்மாவுக்கு பன்னிரண்டு நாட்கள் உபவாசம்.

8. பிராஜாபத்யம்-ஒரு வேளை உணவு மட்டும். மூன்று நாட்களுக்கு

கிருச்ச விரதம் : ஒரு பிராம்மணன் மேற்கொள்வதை விட க்ஷத்திரியன் ஒரு மாதம் குறைவாகவும், வைசியன் இரண்டு மாதம் குறைவாகவும் விரதம் கொள்ள வேண்டும்.

9. பல கிருச்சத்துக்கு ஒரு மாத காலம் பழ உணவு மட்டும்; ஸ்ரீ கிருச்சத்துக்குப் பேயத்தி பழம் மட்டும் உணவு.

10. பத்மாக்ஷம்-1 மாதகாலம்-நெல்லிக்காய் மட்டும் உணவு.
புஷ்ப கிருச்சத்துக்கு மலர்கள், பத்திர கிருச்சத்துக்கு இலைகள், மூல கிருச்சத்துக்கு மலர், தோய கிருச்சத்துக்கு நீர் ஆகாரம்-இவற்றைத் தனியாகவோ, தயிர் (அ) மோர் கலந்தோ உட்கொள்ளலாம்.

11. வாயல்யம் என்ற பிராயச்சித்தம் : எல்லாப் பாபங்களையும் நசிக்கச் செய்யும்-ஒரு மாதகாலம்-நாள் ஒன்றுக்கு ஒரு பிடி அன்னம்.

12. கிருச்சம், ஆக்நேயம்-பன்னிரண்டு நாட்கள் ஒரு கையளவு நல்லெண்ணெய் உட்கொள்ள வேண்டும். பாபங்களை விலக்கிக் கொள்ளவும், செல்வம் பெறவும், மரணத்துக்குப்பின் விண்ணுலகு அடையவும் ஒருவன் கிருச்சவிரதம் மேற்கொள்ளலாம்.
காயத்திரி மந்திரம், பிரணவ மந்திரம், நாராயணன், சூரியன், நரசிம்மர் மூலமந்திரங்களும் பாபங்களைப் போக்கக் கூடியவை.

சந்திராயன விரதத்தை மேற்கொள்ளுபவன் பவுர்ணமியன்று 15 கவளம், அடுத்த நாள் முதல் 14, 13 என்று குறைத்துக் கொண்டே வந்து அமாவாசை அன்று சுத்த உபவாசம் இருக்க வேண்டும். அடுத்த நாள் ஒரு கவளம் மட்டும் உட்கொண்டு அது முதல் ஒவ்வொன்று கூட்டி பவுர்ணமி அன்று 15 கவளம் உட்கொள்ள வேண்டும். ஒரு மாதத்திற்கு இரண்டு அமாவாசை வந்தால், அது மலமாசம், அந்த மாதங்களில் விரதம், ஓமம், பிரதிக்ஞை-திருவுருவப் பிரதிஷ்டை கூடாது. 

ஒரு பவுர்ணமி முதல் அடுத்த பவுர்ணமி வரை உள்ள நாட்கள் கொண்டது சாந்திர மாசம்; முப்பது நாட்களை உடையது சவுர மாசம்; சூரியன் ஒரு ராசியில் தங்கி இருக்கும் காலம் சவுர (அ) சூரிய மாதம்; 27 நாட்களைக் கொண்டது நட்சத்திர மாதம் எனப்படும். விரதகாலத்தில் தரையில் உறங்க வேண்டும். ஜபங்களை விடாமல் செய்ய வேண்டும். பிராமணர்களுக்குத் தக்ஷிணை, தானம் தர வேண்டும். பசு, சந்தனக்கட்டை, பாத்திரங்கள், நிலம், குடை, கட்டில் போன்றவை தானப் பொருள்களாகும்.


27. விரதங்கள்


1. பிரதமை விரதம்

அமாவாசை பவுர்ணமி அடுத்த நாள் பிரதமை. சித்திரை கார்த்திகை மாத விரதங்கள் விசேஷமானவை. இந்த விரதத்தில் நாள் முழுவதும் உபவாசம். வலக்கையில் ஜபமாலை, கரண்டி, இடக்கையில் கமண்டலம், உத்தரிணி கொண்டு நீண்ட ஜடைகளுடன் இருக்க வேண்டும். பகவானுக்குப் பாயச நிவேதனம் செய்ய வேண்டும். இதன் மூலம் செழிப்பான வாழ்வு, மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும். மாசி மாத பிரதமை உத்தமமானது. அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்க வேண்டும்.

2. துவிதியை விரதம்

இந்த விரதத்தால் ஒருவன் அடுத்த பிறவியில் முக்தி அடைவான். பிரதமை விரதம் முடித்து அடுத்த நாள் யம விரதம் மேற்கொள்ள வேண்டும். கார்த்திகை மாதம் அமாவாசை அடுத்த துவிதியையில் விரதம் தொடங்கி ஓர் ஆண்டு அனுஷ்டிப்பவர்க்கு நரகம் இல்லை.

சூன்ய சயன விரதம்

ஆவணி மாதத்தில் துவிதியை திதியில் தொடங்கி இந்த விரதம் அனுஷ்டித்தல் நலம். ஸ்ரீமந் நாராயணனுக்குரிய விரதம் இது. விஷ்ணு, லக்ஷ்மியையும் சேர்த்து இவ்விரதம் செய்ய தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்வும், முக்தியும் பெறுவர்.

காந்தி விரதம்

கார்த்திகை மாதம், அமாவாசைக்குப் பின் துவிதியையில் தொடங்கி அனுஷ்டித்தால் தேக காந்தியும், நலவாழ்வும் பெறுவான்.

விஷ்ணு விரதம்

தை மாதம் அமாவாசை அடுத்த துவிதியையில் தொடங்கி நான்கு நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். முதல் நாள் அன்னம் தேய்த்து ஸ்நானம், இரண்டாம் நாள் கருநிற எள் தேய்த்து நீராடல், மூன்றாம் நாள் வாசனைப் பொருள்கள் தேய்த்து நீராடல், நான்காவது நாள் சர்வ ஒளஷதணி என்ற மருந்து பொருள்கள் கொண்டு நீராடல்.

விஷ்ணுவையும், சந்திரனையும் ஆராதித்தல் வேண்டும். சந்திரன் அஸ்தமனத்திற்குப் பிறகு உணவு உட்கொள்ள வேண்டும். இதைப் பதினெட்டு நாட்கள் அனுஷ்டித்தால் வாயுவின் அருளொடு, விரும்பும் பொருள்கள் தடையின்றி கிடைக்கும்.

3. திருதியை விரதம் : 

சித்திரை திருதியை அன்று கவுரி சிவனை மணந்த நாள். அன்று மங்கல ஸ்நானம் செய்து கவுரி, சிவன் இருவரையும் வழிபட வேண்டும். இருவரையும் அர்ச்சித்தல், தானங்கள் செய்தல் வேண்டும். வைகாசி, புரட்டாசி, மார்கழியின் வளர்பிறை துவிதியையில் தொடங்கி தேவியை வழிபட்டு அந்தணத் தம்பதிகளுக்கு உணவளித்து, தானங்கள் அளித்தல்; மற்றும் இருபத்து நான்கு அந்தணர்களுக்கு உணவளித்தல் உகந்தது. 
இதனைச் சவுபாக்கிய சயன விரதம் என்பர்.

சவுபாக்கிய விரதம்

பங்குனி வளர்பிறை திருதியையில் தொடங்கிச் செய்தல். உப்பில்லா உணவு உட்கொள்ளுதல், அந்தணத் தம்பதியருக்கு உணவு அளித்துத் தர்மங்கள் செய்தல் வேண்டும். வைகாசி, புரட்டாசி, மாசியிலும் செய்யலாம்.

தமனசத் திருதியை விரதம்

இதில் தேவியை மருக்கொழுந்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஆத்ம திருதியை விரதம்

மாசி வளர்பிறை திருதியையில் தொடங்கி மாதம் ஒரு அம்பிகையை (கவுரி, காளி, உமா, பத்திரை, துர்க்கை, காந்தி, சரஸ்வதி, வைஷ்ணவி, லக்ஷ்மி, பிரகிருதி, சிவை, நாராயணி வழிபடுவோர் சொர்க்க வாசம் பெறுவர்.)

4. சதுர்த்தி விரதம்

சந்தோஷ வாழ்வும், மோக்ஷ சாம்ராஜ்யமும் தரும். மாசி வளர்பிறை சதுர்த்தி அன்று கணபதி பூஜை செய்து உபவாசம் இருக்க வேண்டும். மறுநாள் பஞ்சமி பகவானுக்கு எள்ளோரை நிவேதனம். மற்றும் மலர்கள் சாத்தி கொழுக்கட்டை நிவேதனம். புரட்டாசி சதுர்த்தி விரதம் சிவலோகம் அளிக்கும். பங்குனியில் இதற்கு அவிக்ஞா சதுர்த்தி என்று பெயர். சித்திரையில் சதுர்த்தி மனமகிழ்ச்சி அளிக்கும்.

5. பஞ்சமி விரதம்

உடல் நலம், சொர்க்கவாசம், மோக்ஷம் அளிக்கும் பஞ்சமி அன்று வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்திரன், ஐராவதன், திருதராஷ்டிரன், கார்க்கோடகன், தனஞ்சயன் ஆகிய சர்ப்ப வழிபாடு. ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாத வளர்பிறை பஞ்சமி விரதம் நீண்ட ஆயுள், திரண்ட செல்வம், புகழ், ஞானம் தரும்.

6. ஷஷ்டி விரதம்

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பர். அதாவது ஷஷ்டி விரதம் புத்திரபாக்கியம் அளிக்கும். கார்த்திகை மாத வளர்பிறை ஷஷ்டி விரதம் வழிபாடு சிறந்தது. அன்று பழம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். புரட்டாசி வளர்பிறை சஷ்டி கந்தசஷ்டி ஆகும். மாசிமாத வளர்பிறை சஷ்டி கிருஷ்ண ஷஷ்டி ஆகும். அன்று இருக்கும் விரதம் செல்வச் செழிப்பும் மகிழ்ச்சியும் தரும்.

7. சப்தமி விரதம்

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சப்தமி அன்று தாமரை மலர் கொண்டு சூரியனை வழிபட்டால் ஆனந்தமய வாழ்வு, அடுத்த பிறவியில் முக்தி உண்டாகும். மாசி மாத சப்தமி விரதம் உள்ளவரை துன்பம் அண்டாது. புரட்டாசி மாதமும் அவ்வாறே. தை மாத விரதம் சக்தி உண்டாகும்; பாபம் தொலையும். 

மாசி மாத தேய்பிறை சப்தமி விரதம் மனோமாத தேய்பிறை சப்தமி விரதம் மனோபீஷ்டம் நிறைவேறும். பங்குனி மாத வளர்பிறை சப்தமி நந்தா சப்தமி விரதபலன் தெய்வ பக்தி வளரும். உத்தமலோக வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

8. அஷ்டமி விரதம்

புரட்டாசி மாத அஷ்டமி, ரோகிணியின் அஷ்டமி-அன்று கிருஷ்ணாஷ்டமி ஆகும். இது ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி என்றும் கூறப்படும். அபாயம் நீங்கும். சந்ததி வளரும். சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி அன்று பிரம்மன் அஷ்டமாதாக்களை வழிபட்டார். அன்று கிருஷ்ண வழிபாடு செல்வம் அளிக்கும். ஒவ்வொரு மாத அஷ்டமியிலும் ஒவ்வொரு கடவுளை வழிபாடு செய்யலாம். பகவானை ஆராதித்தல், தானதருமம் செய்தல் வேண்டும்.

சந்ததி விரதம்

சுக்ல பட்சம் (அ) கிருஷ்ணபட்ச அஷ்டமி புதன் அன்று வந்தால் அன்று அம்பிகையை வழிபட்டு அன்னதானம் செய்ய வேண்டும்.

புதாஷ்டமி விரத பலன்-கதை

கவுசிகன், சகோதரியுடன் காணாமல் போன எருதைத் தேடிச் செல்ல ஓரிடத்தில் தேவலோக மாதர்கள் ஜலக்கிரீடை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் பசிக்கு உணவு கேட்க, அவர்கள் விரதம் ஒன்று கூற அதை அனுஷ்டித்து உணவும், காணாமல் போன காளையையும் பெற்றான். அவன் சகோதரி விஜயை யமன் மணந்தான். அவன் பெற்றோர்கள் நரகில் அவதிபட்டு வந்தனர். கவுசிகன் அரசனாகி புதாஷ்டமி விரதம் இருந்த பலனால் அவனது பெற்றோர்கள் நரகம் நீங்கியது. அதுகேட்ட விஜயையும் அந்த விரதம் இருந்து அதன் பலனால் மரணத்திற்குப் பின் பேரின்ப வாழ்வு பெற்றாள்.

9. நவமி விரதம்

ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ நவமி அன்று இருந்த விரதம் இருந்து தேவியை ஆராதிக்க வேண்டும். நவமி விரதங்களிலே மிகவும் சிறந்தது அனார்த்தன நவமி விரதம். அரசன் தேவியை நவதுர்க்கை வடிவில் வழிபட வேண்டும். அரசன் நீராடி எதிரியின் உருவை இரண்டாக வெட்ட வேண்டும். தான தருமங்கள் செய்ய வேண்டும். வெற்றிபெறுவான்.

10. தசமி விரதம்

ஒருவேளை உணவு. விரத முடிவில் கோதானம், சுவர்ண தானம் செய்ய வேண்டும். அவன் தெய்வபக்தி நிறைந்தவனாய், பெருந்தலைவனாய் விளங்குவான்.

11. ஏகாதசி விரதம்

உத்தம பொருள்கள் கிடைக்கும், மகிழ்ச்சி தரும். அடுத்த பிறவியில் மோக்ஷம் கிட்டும். ஏகாதசி நியம நிஷ்டைகளுடன் உபவாசம் இருந்து துவாதசி பாரணை செய்ய வேண்டும். வளர்பிறை ஏகாதசி அன்று பூசநட்சத்திரம் கூடி வந்தால் அது பாப நாசினி எனப்படுகிறது. சர்வபாபங்களும் விலகும் விரதம் இது. ஏகாதசி (அ) துவாதசி அன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அது விஜயதிதி ஆகும். தெய்வ அருள் கிட்டும். பங்குனி மாத ஏகாதசி, பூசம் இணைந்து வந்தாலும் விஜயதிதி எனப்படும். ஏகாதசியில் விஷ்ணு ஆராதனை-திரண்ட செல்வம், சந்தான விருத்தி, வாழ்வின் முடிவில் வைகுந்தம் கிட்டும்.

12. துவாதசி திதி

இவ்விரதம் அனுஷ்டிப்பவன் சுகபோகங்கள் பெறுவதுடன் அடுத்த பிறவியில் மோக்ஷமும் அடைவான். சித்திரை மாத சுக்கிலபக்ஷ துவாதசி மதன துவாதசி எனப்படும். அன்று விஷ்ணு பகவானை மன்மதனாக எண்ணி வழிபடல் வேண்டும். மனோ பீஷ்டம் அனைத்தும் நிறைவேறும். மாசி மாத சுக்கில துவாதசி பீம துவாதசி ஆகும். அன்று நாராயணனை ஆராதித்தால் சுகயோக வாழ்வு கிட்டும். பங்குனி மாத சுக்கில துவாதசி கோவிந்த துவாதசி. ஐப்பசி மாத சுக்கில துவாதசி விசேஷ துவாதசி, மாசி மாதம் அது கோவத்ஸ துவாதசி எனப்படும்.

சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச துவாதசி தில துவாதசி எனப்படும்.

பங்குனி மாத சுக்கில துவாதசி மனோரத துவாதசி ஆகும். 

நாம துவாதசி விரதம் அன்று விஷ்ணுவின் நாமங்களைக் கூறி வழிபடல். பங்குனி மாத சுக்கில துவாதசி சுமதி துவாதசி எனப்படும். 

புரட்டாசியில் அனந்த துவாதசி, தை மாதத்தில் சம்பிராப்த துவாதசி மாசி மாதம் சுக்ல பக்ஷ துவாதசி அகண்ட துவாதசி விரதம்

13. அனங்க திரயோதசி விரதம்

மாசி மாதம் வளர்பிறை திரயோதசி திதியில் அரனைக் காதல் தெய்வமாக வழிபடல். விரதம் இருப்பவன் தேனை உட்கொள்ள வேண்டும். நெய், எள்ளு, அன்னம் ஆகியவற்றால் ஹோமம் செய்ய வேண்டும். தையில் அதே திதியில் யோகேஸ்வரனை ஹோமம் முதலியவற்றால் ஆராதித்தால் சொர்க்கவாசம் அடைவான். மாசி மாதம் திரயோதசியில் மகேச்வரனை வழிபடுவதால் முக்தி கிட்டும். பங்குனியில் நீரை மட்டும் பருகி பகவான் கரோல்கரை ஆராதிக்க வேண்டும். சித்திரையில் கற்பூரம் உட்கொண்டு மகேசுவரனை வழிபட்டால் செல்வத்துக்கு அதிபதி ஆவான்.

வைகாசியில் ஜாதிப்பத்திரி உண்டு மகாரூபனையும், ஆனியில் கிராம்பை உட்கொண்டு உசாகாந்தனையும், ஆவணியில் நறுமணநீர் உட்கொண்டு சூலபாணியையும், புரட்டாசியில் சத்யோ ஜாதரையும், ஐப்பசியில் தங்கம் வைத்திருந்த நீரை உட்கொண்டு தேவதேவனையும், கார்த்திகையில் இலவங்கச் செடியை சமைத்து உட்கொண்டு விசுவேஸ்வரனையும், மார்கழியில் சம்புவையும் ஆராதிக்க வேண்டும்.

14. சதுர்த்தசி திதி விரதம்

கார்த்திகை மாதம் சுக்ல சதுர்த்தசி உபவாசம் இருந்து விரதம் அனுஷ்டித்து ஓர் ஆண்டு சிவனை ஆராதித்தால் நீண்ட ஆயுளைப் பெறுவதோடு சகல அபீஷ்டங்களும் நிறைவேறும். சதுர்த்தசி அன்று பழம் மட்டும் உண்டு சிவனை ஆராதிப்பவர் ஆனந்த மயவாழ்வைப் பெற்று, சொர்க்கத்தையும் பெறுவர்.

15. சிவராத்திரி விரதம் : 

மாசி, பங்குனி மாதங்களுக்கு இடையே கிருஷ்ண பட்ச சதுர்த்தசி அன்று உபவாசமிருந்து, இரவில் கண் விழித்து இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். சிவனை பக்தியுடன் ஆராதிக்க வேண்டும்.

16. பவுர்ணமி விரதம்

நாராயணனையும், சிவனையும் குறித்துச் செய்யப்படுவதாகும்.
அசோக பவுர்ணமி விரதம் : சித்திரை மாதப் பவுர்ணமி அன்று சிவனைப் பூதாகாரராக வழிபட வேண்டும். அடுத்து, பூதேவி வழிபாடு. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஓராண்டு காலம் செய்ய வேண்டும்.

17. அமாவாசை விரதம் : 

விருஷ விரதம் : ஒவ்வொரு அமாவாசை அன்றும் பிண்டம் இட்டுத் தர்ப்பணம் செய்ய வேண்டும், முழுநாள் உபவாசம். ஓராண்டு செய்பவன் பாபங்களிலிருந்து விடுபட்டு சொர்க்கவாசம் அடைவான். மாசிமாத அமாவாசை அன்று நாராயணனை ஆராதிப்பவன் மனோபீஷ்டங்கள் நிறைவேறும். ஆனி மாத அமாவாசை அன்று சாவித்திரி விரதம்.

18. நட்சத்திர விரதம்

ஒவ்வொரு நட்சத்திரமும் உச்சத்தில் இருக்கும் தினத்தில் ஹரியை ஆராதித்துக் கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. இதன் மூலம் ஒருவன் தன் வாழ்நாளில் எல்லாவித ஆசைகளும் நிறைவேறப் பெறுவான். ஹரியைச் சித்திரை மாதத்தில் நட்சத்திர புருஷனாக வழிபட வேண்டும். அவரது உடலில் 27 நட்சத்திரங்களும் இருப்பதாகப் பாவிக்க வேண்டும். பகவான் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பூசிக்க வேண்டும். கருப்பஞ்சாறு (அ) சர்க்கரை நீர் நிறைந்த பாத்திரத்தில் பகவானை ஆவாகனம் செய்து வழிபட வேண்டும்.

19. சாம்பவயனிய விரதம் : 

ஒவ்வொரு மாதமும் இவ்விரதம் இருப்பவன் ஹரியை நட்சத்திர புருஷனாக வழிபடவேண்டும். கார்த்திகை, மிருகசீர்ஷம் ஆகிய நட்சத்திரங்களில் இவ்விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி பொங்கலையும், ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இனிப்புப் பலகாரங்களையும், கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களில் அன்னத்தையும் நிவேதனமாய் படைக்க வேண்டும்.

20. அனந்த விரதம் : 

நட்சத்திர விரதங்களில் அதிக பலனைத் தரும் விரதம் இது. மார்கழி மாதத்தில் மிருகசீர்ஷ நட்சத்திரத்தன்று ஹரியை வழிபட்டு விரதம் இருக்கவேண்டும். அன்றிரவு பகவானுடைய ஆராதனைக்கு பிறகு உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

21. திரிராத்திரி விரதம் : 

ஒவ்வொரு பக்ஷத்துக்கும் மூன்று இரவுகளில் விரதமோ உபவாசமோ இருப்பதாகும். மூன்று நாட்கள் ஒரு கவளம் மட்டும் உணவு உட்கொண்டு விரதம் இருக்க வேண்டும். இதனை முதலில் சுக்ல நவமியில் தொடங்க வேண்டும். முதல் நாள் அஷ்டமி அன்று ஒரு வேளை உணவு இரவு உபவாசம்.

22. தேனு (பசு) விரதம் : 

பசுவின் வாயிலும், வாலிலும் தங்கத்தைக் கட்டி ஆராதித்து அந்தணர்களுக்குத் தானம் செய்ய வேண்டும். நெய்யை சிறிது உட்கொண்டு உபவாசம் இருக்க வேண்டும். பலன் முக்தி கிட்டும்.

23. கற்பக விருக்ஷ தான விரதம் : 

மூன்று நாட்கள் நெய் மட்டும் சிறிது உட்கொண்டு தங்க கற்பகவிருக்ஷத்தை ஆராதித்து தானம் தருபவன் பிரம்மலோகம் அடைவான்.

24. கார்த்திகை விரதம் : 

கார்த்திகையில் சுக்ல தசமியில் உபவாசம் இருந்து விஷ்ணுவை ஆராதிப்பவன் வைகுந்தம் அடைவான்.

25. கிருச்ச மகேந்திர விரதம் : 

கார்த்திகை மாதம் சுக்ல ஷஷ்டியில் முதல் மூன்று நாட்கள் இரவில் பால் மட்டும் அருந்தி, அடுத்த மூன்று நாட்கள் உபவாசம் இருக்க வேண்டும்.

26. கிருச்ச பாஸ்கர விரதம் : 

கார்த்திகை சுக்ல பக்ஷ ஏகாதசி அன்று தயிரை மட்டும் உட்கொண்டு அனுஷ்டித்தால் செல்வம் கொழிக்கும்.

27. சந்தாபன விரதம் : 

கார்த்திகை சுக்கில பஞ்சமியில் விரதம். கோதுமையால் செய்யப்பட்ட பலகாரங்களை உண்ண வேண்டும்.

28. கவுமுத விரதம் : 

ஐப்பசி சுக்கில துவாதசியில், வயிற்றில் உணவின்றி தாமரை, மற்றும் நறுமண மலர்களால் விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும். நல்லெண்ணெய், நெய்யாலான பலகாரங்கள் நிவேதனம். இவையே அன்றி மாத விரதங்கள், ருது காலங்களில் விசேஷ விரதங்கள் அனுஷ்டித்தால் அடுத்த பிறவியில் முக்தி அடைவர்.

29. சரசுவதி விரதம் : 

ஒரு மாதம் மவுனம். முடிவில் அந்தணர்களுக்கு மணிகள், ஆடைகள், எள் குடங்கள், நெய் நிறைந்த பாத்திரம் ஆகியவற்றை தானம் செய்தால் தெய்வீகத் தன்மையை அடைவர்.

30. விஷ்ணு விரதம் : 

சித்திரை சுக்கில ஏகாதசி அன்று விஷ்ணுவை ஆராதித்து அன்று உபவாசம் இருந்தால், அவரது திருவடியில் ஐக்கியமாகலாம்.

31. சங்கராந்தி விரதம் : 

சங்கராந்தி அன்று இரவு கண்விழித்து விரதம் இருப்பின் சொர்க்க வாழ்வு கிட்டும். அன்று அமாவாசையும் கூடி வந்தால் சிவன், சூரியன் வழிபாடு தேவலோக வாசம் அளிக்கும்.

32. தீபதான விரதம் : 

நல்லெண்ணெய் ஊற்றி சுடரொளி விளக்குத் தானம் செய்யின் சிறப்பான வாழ்வும், முக்தியும் பெறுவார்.

தீபத்திரியை தூண்டிய எலி : 

(கதை

மன்னன் சாருதர்மனின் மனைவி லலிதை. தினமும் அவள் விஷ்ணு ஆலயத்தில் தீபங்கள் ஏற்றி வந்தாள். மற்ற பெண்கள் அவளிடம் தீபதான விரதம் பற்றிக் கேட்க அவள் கூறலுற்றாள். மைத்திரேய முனிவர் சவ்வீரன் என்ற அரசனுக்குக் குருவாக இருந்தார். முனிவர் ஒருநாள் மன்னனிடம் விஷ்ணுவுக்கு ஓராலயம் எழுப்பவேண்டும் என்று கோரிட, அரசனும் உடனே அதற்காகப் பணியைத் தொடங்கினான். அந்த ஆலயத்தைச் சுற்றிலும் எலிகளும், பூனைகளும் இருந்தன. 

ஒரு எலி ஆலயக் கருவறையில் ஒரு வளையில் வசித்து வந்தது. அது கீழே சிந்திக் கிடந்த படையல் பொருள்களை யாரும் இல்லாத சமயங்களில் இரவு நேரங்களில் தின்று வந்தது. ஒரு நாள் இரவு பூட்டப்பட்டிருந்த கருவறையில் ஒரு விளக்கில் எண்ணெய் குறைந்து சுடர் குறைந்தது. அப்போது அந்தச் சுண்டெலி தீபத்தின் திரியை வெளியில் தள்ளி ஒளிரச் செய்தது. 

அதாவது ஆலயத்தில் அணைய இருந்த தீபத்தை ஒளிரச் செய்யும் கைங்கரியத்தைப் பலனேதும் வேண்டாமல் செய்தது. அதனால் அந்த எலி மரணமடைந்தவுடன் அடுத்த பிறவியில் விதர்ப்ப நாட்டு அரசன் குமாரத்தி லலிதையாகப் பிறந்தது என்று தன் முன் வரலாற்றைக் கூறினார். ஏகாதசி அன்று ஆலயத்தில் தீபம் ஏற்றுபவன் சொர்க்க வாசம் பெறுவான். அன்றிலிருந்து அனைவரும் ஆலயத்தில் தீபம் ஏற்றும் பணியைத் தொடங்கினர்.

பூக்கள்:

தீபம் ஏற்றுவது போல ஸ்ரீஹரியை பலவித நறுமண மலர்கள் கொண்டு அர்ச்சித்து வழிபடலாம். பூசைக்குப் பயன்படும் மலர்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு பலன் சொல்லப்படுகிறது. மாலதி மலர் மிகச்சிறந்தது. மருக்கொழுந்து ஆனந்த வாழ்வு தரும். மல்லிகை சகல பாவங்களையும் போக்கும். ஜாதி, மலயத்தி, குருக்கத்தி, அலரி, முட்செவ்வந்தி, தகனா, கர்ணீகாரம் ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்தால் வைகுந்த வாசம் அளிக்கும். 

தாமரை, கோதகி, குந்தம், அசோகம், திலகம், தருசமலர்கள் ஆகியன முக்தி அளிக்கும். சமீபத்திரன், பிருங்கராஜ புஷ்பம், தமாலம், கல்காரம், கருந்துளசி, பொன் துளசி ஆகியவற்றால் அர்ச்சிப்பவன் வைகுந்தத்தில் விஷ்ணுவின் பக்கத்திலேயே இருப்பான். கோகநதம், நூறுவில்லி மலர்மாலை, ரூபம், அர்ஜுனம், வகுளம், சிஞ்சுகம், மணி, கோகானம், சந்தியா, குசம், காசம் ஆகிய மலர்களின் அர்ச்சனை, பாபங்கள் நீக்கும், நெடுநாள் ஆனந்த வாழ்வு அளிக்கும், இறுதியில் மோக்ஷமும் தரும். இவை விஷ்ணு பூஜைக்கு உகந்தவை. மணம் மிக்க பிரம்ம பத்மம், நிலத்தாமரை ஆகியவை கொண்டும் விஷ்ணுவை ஆராதிக்கலாம்.

தர்மராஜனை ஆராதிக்க உதவுபவை குதஜம், சால்மலி, சிலிசம் மந்தாரை, துஸ்துரம் ஆகியவை. பகவானைப் பல வண்ணமிகு, நறுமண மலர்களால் ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது மானச புஷ்பங்கள் ஆகும். அதாவது, எட்டு வகை சிறந்த குணங்களே அந்த மானச மலர்கள்
அவை : 

1. ஜீவஹிம்சை செய்யாதிருத்தல். 
2. தன் கட்டுப்பாடு. 
3. உயிர்களிடம் அன்பு. 
4. திருப்தியுடன் இருத்தல். 
5. தெய்வ பக்தி. 
6. பகவானைத் தியானித்தல். 
7. வாய்மை. 
8. பற்றற்றிருத்தல்.


28. பாபிகளுக்கு நரகத் தண்டனைகள்: 


நாள்தோறும் இறைவனைப் பக்தியுடன் ஆராதித்து வருபவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலைச் சேர்ந்திடும். ஆனால், பாபிகளின் ஆன்மா நரகத்தை அடைந்து தண்டனை பெறும். மரணத்தின் போது உடலை விட்டு ஆன்மா நீங்கி வேறொரு உடலில் புகுகிறது. அவனவன் செய்த கர்மாக்களுக்கேற்ப அவர்கள் மறுபிறவி நிர்ணயிக்கப்படுகிறது. உடலை விட்டு அகன்ற ஆத்மாவை யம தூதர்கள் யமனிடம் அழைத்துச் செல்லுகின்றனர். தீய கர்மாக்கள் செய்தவரின் ஆத்மா யம பட்டணத்தில் தெற்குவாயில் வழியாகச் சென்று நரகத்தை அடையும். 

நரகங்கள் மகரவிசி, அமரகும்பம், ரௌரவம், மகாரௌரவம், அந்தகாரம், அசிபத்திரவனம், காகோலம், குத்தலம், துர்க்கதம், நிருச்சாசம், மனஜ்வாலம், அம்வரிசம், வஜ்ரசஸ்திரகம், காலசூத்திரம், உக்கிரகந்தம் என்று பலவகை. அவரவர் செய்த தீய கர்மாக்களுக்கேற்ப நரகத்தில் தண்டனைகள் அளிக்கப்படும். தண்டனைகளும் பலவிதமாகின்றன. விலக்கப்பட்ட உணவை உண்டவன் உதிரத்தை அருந்த வேண்டும். நம்பிக்கைத் துரோகி, மூர்க்கன் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியில் வறுக்கப்படுவான்.

அயோக்கியர்கள் தீயில் பொசுக்கப்படுவர். பிறர் இல்லாளை விரும்பியவன் அவயவங்கள் ரம்பத்தால் அறுக்கப்படும். பிறரை இழித்தவன் கொதிக்கும் வெல்லப்பாகில் தள்ளப்படுவான். பொய்ச்சாட்சி கூறியவன், பிறர் பணத்தைக் கவர்ந்தவன், மது அருந்திய அந்தணன், துவேஷி, நட்பைக் கெடுத்தவன் ஆகியோர் கொதிக்கும் செப்புக்குழம்பில் தள்ளப்படுவர். நரகத்திலிருந்து தப்பவேண்டி நினைப்பவர் ஒரு மாத காலம் உபவாசம், ஏகாதசி விரதம், பீஷ்ம பஞ்சக விரதம் போன்றவற்றை அனுஷ்டித்தால் பலன் பெறலாம்.


29. பலவகை தானங்கள்: 

அந்தணர்களுக்குத் தானங்கள் அளிப்போர் இப்பிறவியில் உலக சுகங்களைப் பெறுவதுடன், அடுத்த பிறவியில் முக்தியும் அடைவர். எனவேதான், ஒவ்வொரு பூஜை, விரதம் ஆகியவற்றிற்குப் பின் தானங்கள் வற்புறுத்தப்படுகின்றன. தானங்கள் பலவகை.

1. அக்னிஹோமம், தவ விரதங்கள் கடைபிடிப்பது, வேத நெறியில் நடப்பது, உண்மை பேசுவது, கர்மாக்கள் செய்தல் போன்றவை இஷ்ட தானங்கள் எனப்படும். நீர் நிலைகள் எடுத்தல், ஆலயம் அமைத்தல், அன்னச்சத்திரம் கட்டுதல், பழமரங்கள் நடுதல், சத்திரம் கட்டுதல், போன்றவை, மற்றும் கிரகண காலம், சூரியன் ஒரு ராசியில் பிரவேசித்தல், துவாதசி திதியில் அளிக்கப்படும் தானங்கள் பூர்த்தி தானங்கள் எனப்படும். 

இவை பன்மடங்கு பலன்களைத் தரும். சிராத்த கர்மங்களின் போதும், அயன புண்ணிய காலங்களிலும் செய்யப்படும் தானங்கள் நான்கு (அ) எட்டு மடங்கு பலன் தரும். கயை, பிரயாகை, கங்கைக் கரை போன்ற புண்ணிய தலங்களில் மற்றவரைத் தேடிச் சென்று தானம் அளிக்க வேண்டும். தானம் கொடுப்பவர், வாங்குபவர், கோத்திரம், பாட்டன், முப்பாட்டன் பெயர்களைக் கூற வேண்டும். இதனால் இரு சாராரின் ஆயுளும் பெருகும். திருமணத்தின் போது பெண்ணுடன், மருமகனுக்குத் தரவேண்டியவை குதிரை, சுவர்ணம், எள்ளு, யானை, பணிப்பெண்கள், வீடு, வாகனம், சிவப்பு நிறப் பசுக்கள், தச மகாதானப் பொருள்கள் ஆகிய பத்து ஆகும்.

கல்வி போதித்தல், பராக்கிரமம், நியமங்கள், பெண்ணை மணம் செய்தல், பிறருக்கு யாகம் செய்து வைத்தல், சீடனிடமிருந்து குரு தக்ஷிணை பெறுதல் ஆகிய செல்வம் சுல்கம் எனப்படும். தீயவழியில் பொருளீட்டி தானம் செய்தால் ஏற்படும் நல்ல பலன்களும், தீமைகளும் அவனைச் சேரும். மணப்பெண்ணுடன் ஸ்ரீதனமாக ஆறு முக்கியப்பொருள்கள் தரப்படும். அவை அத்தியக்கனி (அ) ஹோம குண்டத்தின் முன்பு அளிக்கப்படும் பரிசு பொருள்கள், புருஷன் வீட்டுக்குப் புறப்படும் போது அவளுடைய நண்பர்கள், கணவன் அளிக்கும் பரிசுப்பொருள்கள், தந்தை தரும் பொருள்கள், தாய், சகோதரர் ஆகியோரால் அளிக்கப்படுபவை. 

தகுதி கொண்டவர்களுக்குத் தக்கப் பொருள்களைத் தானம் செய்ய வேண்டும். ஞானவான், நற்குணவான், தரும ஆர்வம் உடையவர். உயிர்களிடம் கருணை உள்ளவர்களே தானம் பெறத் தகுதி வாய்ந்தவர். தாய்க்கு அளிக்கும் பரிசு நூறு மடங்கு உயர்ந்தது. தானம் பெறுபவன் நீராடி, தூயவனாய் கையில் நிஷ்க்கலன் ஏந்தி நிற்க, தானம் அளிப்பவன் சாவித்திரி மந்திரம் கூறி அப்பொருளின் பெயர், அதனால் திருப்தி அடையும் தெய்வத்தின் பெயர் கூறி தானம் அளிக்க வேண்டும்.

யாருக்கு என்ன தானம் : விஷ்ணுவுக்கு பூமி; பணிப்பெண், வேலையாள். பிரமனுக்கு யானைகள், யமனுக்கு குதிரைகள், சிவனுக்குக் காளை; யமனுக்கு எருமை; நிருத்திக்கு ஒட்டகம், ரௌத்ரிக்குப் பசு, அக்கினி தேவனுக்கு ஆட்டுக்கடா, வாயுவுக்கு காட்டு மிருகங்கள், வருணனுக்கு நீர் பாத்திரம்; பிராமணனுக்கு தானியங்கள், சமைத்த உணவுகள், இனிப்புப் பலகாரங்கள். பிரஜாபதிக்கு நறுமணப் பொருள்கள். பிரகஸ்பதிக்கு ஆடைகள், வாயுவுக்குப் பறவைகள், சரசுவதிக்கு பிரம்ம வித்தைகள், புத்தகங்கள், விசுவகர்மாவுக்குக் கலைகள் தூய்மையானவை. ஒருவன் தேவதைகளைப் பூஜித்து, முன்னோர்களை வணங்கி தானம் அளிக்க வேண்டும். மஹாதானங்கள் பதினாறு உத்தமமானவை.

துலாபுருஷதானம், ஹிரண்ய கர்ப்ப தானம், கல்பக விருக்ஷதானம், ஸஹஸ்ர கோதானம், சுவர்ண தேனு தானம், சுவர்ண ஹஸ்தி தானம், சுவர்ண வாகன தானம், சுவர்ண அசுவதானம், சுவர்ண ரத தானம், பஞ்ச ஹலா தானம், கல்பலதா தானம், சப்த சாகர தானம், ரத்தினதேனு தானம், மஹாபூதகண தானம், இவற்றுள் துலாபுருஷ தானம் மிகவும் சிறந்தது.

பத்துவகை மேரு தானங்கள் : பத்து வகை தானியங்களை அலை போலக் கொட்டி மேருமலையாகக் கொண்டு தானம் செய்வது. உப்பு தருதல்-லவண தானம், வெல்லப் பாகு தருதல்-குளாத்ரி தானம், எள் தருதல்-திலாத்திரி தானம், பஞ்சு தருதல்-பஞ்சுமலை தானம், நெய்குடம் கொடுத்தல்-கிருதாசல தானம், வெள்ளி கொடுத்தல்-ராஜதாசல தானம், சர்க்கரை கொடுத்தல்-சகிக்ராசல தானம். தேனு தானம் (அ) பல பொருள்களைப் பசு வடிவில் தருவது பத்து வகையாகும். தேனு தானம் எனப்படும் கோதானம் செய்வதால் ஒருவன் இப்பிறவியில் நீண்ட ஆயுளையும், செழிப்பான வாழ்வையும் பெறுவதோடு, மரணத்துக்குப் பின் சொர்க்கவாசம் பெறுவான்.

தங்கம், வெள்ளி, செம்பு, அன்னம் ஆகியவற்றைத் தானமாகக் கொடுக்கும் போது தனியாக தக்ஷிணை தரவேண்டிய அவசியம் இல்லை. எல்லா தானங்களிலும் சிறந்தது அன்னதானமாகும். பூதானம், வித்தியா தானம் (அ) புத்திர தானம் ஒன்றுக்கொன்று சமமானதாகும். ஆலயத்தில் புராணம் படிப்பவன் எல்லா விதமான பலனையும் பெறுவான். ஆலயத்தைத் தூய்மை செய்தல் பாபம் நீக்கும். தர்ம, நீதி நெறிமுறைகளை அச்சிட்டு வழங்குவதால் எல்லாவித நன்மையும் தரும்.


30. ஆண், பெண் லக்ஷணம்


லக்ஷணங்களுக்கு முன் நம் உடலில் உள்ள பலவகை நாடிகள்-பிராணன்கள் பற்றி அறிதல் உதவியாக இருக்கும். நம் உடலில் ஏராளமான நரம்புகள், இரத்தக் குழாய்கள் உள்ளன. நாபிப் பகுதியிலேயே எழுபத்திரண்டாயிரம் நரம்புகள் உள்ளன. நரம்புகள் எனப்படுபவற்றுள் பத்து நாடிகள் மிகவும் முக்கியமானவை. இடை நாடி, பிங்கலை நாடி, சுஷும்ன நாடி, காந்தாரி நாடி, ஹஸ்தி ஜிஸ்வை நாடி, பிரீதை நாடி, யøக்ஷ நாடி, ஆலம்புஷை நாடி, ஹுஹு நாடி, சங்கிலி நாடி என்பவை அவை. நம்முடலில் தசவித வாயுக்கள் உள்ளன. அவை முறையே பிராண வாயு, அபான வாயு, சமான வாயு, உதான வாயு, வியான வாயு, நாக வாயு, கூர்ம வாயு, கிரிகரன் வாயு, தேவதத்த வாயு, தனஞ்சய வாயு என்பன ஆகும்.

பிராண வாயுவே இதயம் துடிப்பதற்கும், நாம் மூச்சு விடுவதற்கும் காரணமாகும். இது இன்றேல் உடலில் உயிர் தங்காது. அபான வாயு ஜீரணமண்டலக் காவலன் ஆகும். உணவு செரிக்கப்பட்டு உடலில் எல்லாப் பகுதிகளுக்கும் செரித்த உணவு அடைவதற்கும், கழிவுப்பொருள்கள் வெளியேறுவதற்கும் உதவுவது அபான வாயு ஆகும். உடலில் இரத்தம், பித்தம், வாதம் சமானமாக உதவுவது சமான வாயு; முகத்தினுள்ள தசைகளை இயங்கச் செய்வது உதான வாயு; பூட்டுகளில் இருந்து விக்கல் உண்டாக்குவது  பியான வாயு; இதன் கோளாறு நோய்க்கு ஏதுவாகும். ஏப்பத்தை உண்டாக்குவது நாக வாயு; இமைகளை இயக்குவது கூர்ம வாயு; உணவு செரிக்க ஜடாராக்கினியாக உதவுவது கிரிகரன் வாயு; கொட்டாவிக்குக் காரணம் தேவதத்தன் வாயு; அனைத்து இயக்கங்களைக் கவனிப்பவனும், மரணத்துக்குப் பின் உடல் சுருங்காமல் இருக்கவும் காரணம் தனஞ்சயன் வாயு ஆகும்.

நன்முறையில் நாடி, நரம்புகள், இரத்தஓட்டம், வாயுக்கள் பணி செவ்வனே அமைந்து விட்டால் நல்ல அழகிய அம்சமான உடல் தோற்றம் அமைந்து விடும். உடலும், உள்ள ஒழுக்கமும் நன்கு அமைந்து விட்டால் அதுவே ஸ்திரீ, புருஷ லக்ஷணங்களுக்கு அடிப்படையாகும். சிறந்த வாழ்க்கையை நடத்தக்கூடிய ஒருவனுக்குக் குறிப்பிட்ட எட்டு வகை லக்ஷணங்கள் கூறப்பட்டுள்ளன. அவை பற்றி அறிந்து கொள்வோம்:

1. ஏகாதிகம்

முறைப்படி நித்ய கர்மானுஷ்டானங்கள் செய்து, நல்லொழுக்கம் பெற்றவன் வாழ்வில் சுகமும், மகிழ்ச்சியும் பெறுவான்.

2. துவிசுக்லம் : 

கண்களும், பற்களும் இரண்டும் வெண்மை நிறம் கொண்டதாய் இருக்க வேண்டும்.

3. திரிகம்பீரம் : 

திரி=மூன்று. கண்கள், நாபி-ஆழமுடைய நாசி, ஆழ்ந்த பொறுமை என்ற மூன்று ஆழங்களை இது குறிக்கிறது.

4. திரி த்ரகம் : 

அதாவாது (3*3=9) ஒன்பது குணங்களைக் குறிக்கிறது இது. பொறாமை இன்மை, அஹிம்சை, அனைத்து விடத்தும் அன்பு, பொறுமை, நன்மையே செய்தல், தூய்மை, விருப்பம், கள்ளம் இல்லாமை, மன உறுதி என்ற நற்குணங்களை ஒருவன் பெற்றிருக்க வேண்டும்.

5. திரிப்ரலம்பங்கள் : 

கைகள், குறி, முதுகு என்ற மூன்றும் நீளமாக அமைந்திருத்தல்.

6. திரிவாவி : 

வயிற்றின் மீது காணப்படும் மூன்று மடிப்புகள் இவை.

7. திரிவித்தல் : 

மூன்று முக்கிய விதிகள். அதாவது இறைவன், அந்தணன், தன் முன்னோர்களிடம் பணிவு கொண்டிருத்தலாகும் இது.

8. திரிகாலக்ஞம் : 

காலம் இயைந்த மூன்று வகை ஒழுக்கங்களைக் குறிப்பது. நேரம் அறிந்து மகிழ்ச்சி அடைதல், லாபம் ஈட்டல், அதற்கான முயற்சியில் ஈடுபடுதல் நன்மை தரும். திரிவியாபின் மூன்று வகையில் புகழ் கொண்டு பரந்திருத்தல் இது. தன்னைச் சார்ந்தோர், தன் நாட்டார், உலகினர் என மூன்று நிலையில் புகழ்பெற்று விளங்குவது அவசியம். திரிவிஸ்தீர்ணம்-விஸ்தீர்ணம்=பரப்பு, மார்பு, முகம், முகநெற்றி அகன்றிருப்பதைக் குறிக்கும் இது.

9. சதுர் லேகை : 

நான்கு வகை குறிகள், இரு கைகள், இருகால்களில் கொடிகள், குடைகள் போன்ற குறிகள் அதிருஷ்டத்தைக் குறிக்கும். முதுகு, மார்பு விரல்களுடைய தசைகள் அகன்றிருப்பதும் நன்மையே.

10. சதுர்தம்ஸ்திரம் : 

முத்துப்போல் வெண்மை நிறத்தில் முன் நான்கு பற்கள் இருத்தல்.

11. சதுர்கந்தம் : 

மூக்கு, முகம், அக்குள், விடும் மூச்சுக்காற்று-துர்கந்தமாக இருக்கக் கூடாது.

12. சதுர்கிருஷ்ணம் : 

(கிருஷ்ணம்=கருப்பு) கண் புருவங்கள், கேசம், இரு கண்விழிகள் (ஆகிய நான்கும்) கருப்பாய் இருத்தல்.

13. சதுர் ஹ்ரஸ்வம் : 

(ஹ்ரஸ்வம்=குறுகி இருத்தல்) கழுத்து, குறி, முழங்கால், பூட்டுக்கள் குறுகி (அ) சிறுத்து இருத்தல் ஆகும். விரல் நகங்கள் உயர்ந்து மிருதுவாக இருக்க வேண்டும். மெல்லிய தோல், கற்றையான கேச வளர்ச்சி இருக்க வேண்டும்.

14. ஷடோன்னதம் : 

ஷட் (ஆறு) உன்னதம்) உயர்ந்த கன்னங்கள், உயர்ந்த கதும்பு எலும்புகள், உயர்ந்த மூக்கு இருக்கவேண்டும்.

15. சப்தஸ் நிக்தம் : 

(சப்த-ஏழு) தோல், தலையில் கேசம், உடலில் மயிர், விரல், நகங்கள், பார்வை, பேச்சு ஆகியவை பரவசம் உடையதாக இருத்தல் வேண்டும்.

16. அஷ்ட வாசம் : 

(அஷ்டம்-எட்டு) மூக்கு, முதுகெலும்பு, இரு துடைகள், முழங்கால், முழங்கை மூட்டுக்கள் ஆகிய எட்டும் நேராக அமைந்திருக்க வேண்டும்.

17. நவாமலம் : 

(நவ-ஒன்பது) வாய், மூக்குத் துவாரங்கள், கண் இமைகள், ஆசனவாய், முகம், காதுகள் தூயதாக இருக்க வேண்டும்.

18. தசபத்மம் : 

(தச-பத்து) நாக்கு, மேல்வாய், கண்விழி நரம்புகள், உள்ளங்கைகள், பாதங்கள், விரல் நகங்கள், குறியின் நுனி, வாய் உதடுகள், தாமரை நிறத்தில் இருக்க வேண்டும்.

19. தசவ்யூகம் : 

முகம், கழுத்து, காதுகள், மார்பு, தலை, வயிறு, முன் நெற்றி, கைகள், கால்கள் முதலியன வளர்ச்சியோடு இருக்க வேண்டும்.

20. நியக்ரோத பநிமண்டலம் :

ஒருவன் நிற்கும் போது உடலின் நீள, அகலம், கைகள் சமமாக இருக்க வேண்டும்.

21. சதுர்த்தச சமாத்வந்தம் : 

கணுக்கால்கள், ஆடுசதை, இமை பக்கங்கள், விரைகள், மார்புகள், காதுகள், உதடுகள் சமமாக இருக்க வேண்டும்.

22. ஷாடஷம் : 

பதினான்கு பிரிவு வித்தைகளில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இரு கண்களிலும் நல்ல பார்வை இருக்க வேண்டும். ஒருவனது உடலில் ஒரே மயிர்க்கால்கலிலிருந்து இரண்டு மயிர்கள் வளர்ந்திருந்தால் தீமையைக் குறிக்கும். அதிருஷ்டமுடையவன் குரல் இனிமையாகவும், நடை யானை போலும் இருக்கும். இதற்கு 14 அங்க அமைப்புகளும், எட்டு லக்ஷணங்களும் புகழைத் தேடித் தரும்.


எத்தகைய பெண் அதிருஷ்டசாலி

நல்ல தோற்றம், நல்ல வளர்ச்சி, உருண்ட துடைகள், இடை, அலைபாயும் விழிகள் கொண்டு இளமையுடன் கூடிய பெண் அதிருஷ்டசாலி. நீண்ட அடர்த்தியான கருமை நிற கேசம், எடுப்பான மார்பகம், நெருங்கிய கால்கள், நடக்கையில் சீரான காலடி, உடலில் காணப்படும் மிகையான உரோமங்கள் நீக்கப்பட்டவளுமான பெண்ணும் அதிருஷ்டசாலிதான். 

அரசுஇலை போன்ற இரகசிய இடம், நடுவில் சிறுபள்ளம் கொண்ட கணுக்கால்கள், கட்டைவிரல் நுனி அளவு உள்ள நாபித் துவாரம் உடைய பெண் புகழத்தக்க அமைப்புகளைக் கொண்டிருப்பவள் ஆவாள். ஒரு பெண்ணின் அடிவயிற்றில் கட்டமான மாற்றமுள்ள மயிர்கள் இருந்தால் அது கஷ்டங்களையே குறிக்கும். ஒரு பெண் அண்டை அயலாருடனும், உறவினருடனும் சண்டை போடுதல், பேராசை கொண்டிருத்தல், துர்நாற்றவாய் இருப்பின் அது அவளுக்குச் சாபக்கேடு ஆகும். குறைபாடுகள் காணப்படினும், மதுக மலர் போன்ற கன்னம், மூக்குக்கு நேரே தனித்த புருவங்கள், கணவனை முழு மனத்துடன் நேசிப்பவள் என்றால் அவளை மனைவியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


31. கனவு காணுதல்-பலன்கள்


வாழ்க்கையே கனவு. கனவு காண்பதால் நன்மைகள் ஏற்படலாம். பல கனவுகள் இரவில் தூங்கும்போதே காணப்படுகின்றன. அவை தீமையை விளைவிக்கும்.

தீய கனவுகள்: 

நாபி தவிர மற்ற இடங்களில் தாவரங்கள் வளர்ந்திருப்பது, தலை மொட்டையடிக்கப்பட்டுள்ளது, உடல் முழுவதும் சேறு, ஆடையில்லா நிர்வாண உடல், உயரத்திலிருந்து கீழே விழுதல், தொட்டிலில் இங்கும் அங்குமாக ஆடிக்கொண்டிருத்தல், கம்பி வாத்தியங்களில் இசைத்துக் கொண்டிருத்தல் என்று இவ்வாறு காணப்படும் கனவுகள் தீமையையே குறிக்கும். 

மேலும் சில : 

இரும்புத்தாது பொருக்குதல், இறந்த பாம்பு குறுக்கில் கிடத்தல், சண்டாளனைக் காணுதல், செந்நிறப்பூக்கம் பூத்துக் குலுங்குதல் போன்றவை வரப்போகும் துன்பத்துக்கு அறிகுறியாகும். 

மேலும் கரடி, கழுதை, நாய், ஒட்டகச் சவாரி, சந்திரன், சூரியன் நிலைபெயர்தல், மீண்டும் கர்ப்பவாசம் அடைதல், சிதையில் ஏறுதல், பூகம்பம் போன்ற உற்பாதங்கள், மூத்தோர் சினத்துக்கு ஆளாதல் போன்ற கனவுகள் துன்பத்தையே குறிக்கும். 

ஆற்றில் மூழ்குதல், சாணி கரைத்த நீரில் நீராடல், கன்னிப் பெண்ணுடல் சல்லாபம், அங்கம் இழத்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற கனவுகள் தீமையையே காட்டுகின்றன.

தெற்கு நோக்கிப் பயணம், பயங்கர நோய் பீடித்திருத்தல், உலோகப் பானை உடைதல், பூதம், பிசாசு, அரக்கர்களுடன் விளையாடுதல் போன்றவையும் தீமையையே அறிவிக்கின்றன. 

பிறருடைய ஏசல், மிகுந்த கஷ்டம், சிவப்பு நிற ஆடை உடுத்தி இருத்தல், சிவப்பு நிறமாலை, சந்தனம் போன்றவையும் நிகழக்கூடிய தீமையை அறிவிப்பவையே.

பரிகாரம்: 

பயங்கரக் கனவுகள் கண்டால், விழித்தெழுந்து, கைகால் கழுவி பகவானைத் தியானித்தபடி உறங்க வேண்டும். 

தீயகனவுகள் ஏற்படின் ஓமம் செய்த, புனித நீரால் அபிஷேகம் செய்து கொள்ளலாம். அரி, அரன், அயன், விநாயகர், சூரியன் ஆகியோரை அர்ச்சித்து வழிபடலாம். புருஷஸுக்தம் மனதிலேயே சொல்லிக் கொள்ளலாம்.

பலன்: 

இரவில் முற்பகுதியில் கண்ட கனவு ஓராண்டிலும், இரண்டாம் பகுதியில் கண்ட கனவு ஆறு மாதத்திலும், மூன்றாம் பகுதியில் கண்ட கனவு மூன்று மாதங்களிலும், நான்காம் பகுதியில் கண்டது பதினைந்து நாட்களிலும் பலன் தரும். விடியற்காலை கனவு பலன் பத்து நாட்களில் தெரியும். ஓர் இரவில் இருமுறை கனவு கண்டால் பின்னதே பலிக்கும்.

நன்மை பயப்பவை: 

மலை ஏறுதல், அரண்மனை மேல் முற்றத்தில் உலாவுதல், குதிரை, யானை, ரிஷபச்சவாரி, வெண் மலர்கள் பூத்துக் குலுங்குதல் ஆகிய கனவுகள் நன்மை பயப்பவை. 

வெண்ணிற ஆடை, பூக்கள், நரைத்த முடி போன்றவை நல்ல கனவுகள். கிரகணம், பகைவன் தோல்வி, போரில் வெற்றி, போட்டி, சூதாட்ட வெற்றி, மழையில் நனைதல், நிலம் வாங்குதல் போன்றவை நன்மையைக் காட்டும் கனவுகள். மேலும் பச்சை மாமிசம் உண்ணுதல், இரத்த தானம் செய்தல், மது, போர், சோமபானம் உட்கொள்ளல், குருதியில் நீராடல் போன்றவை நன்மையை அறிவிக்கும் கனவுகள். 

கையில் கத்தியுடன் நடத்தல், தோட்டத்துக்கு வேலி அமைத்தல், பசு, எருமை, பெண்குதிரை, சிங்கம், யானை, மடியில் பால் அருந்துதல், பெரியோர்கள் தேவர்கள் ஆசி கூறல், பசுக்கொம்பிலிருந்து கொட்டும் நீர் தெளிக்கப்படல் ஆகியவை வரப்போகும் நன்மையைக் காட்டும் கனவுகள்.

சந்திரக் கலையிலிருந்து கீழே விழுதல், சிங்காதனத்தில் முடி சூடுதல், சிரச்சேதக் கனவுகள் கண்டார் அரசுரிமை எய்துவர். மரணம், தீயில் எரிதல், அரசின் பரிசு பெறுதல் ஆகியவையும் நல்லவையே. 

குதிரை, யானை, காளை காணல், அரசவைக்குச் செல்லுதல், உறவினர்கள் சேர்க்கை, காளை, யானை சவாரி, கொடிக்கம்பம் மீது ஏறுதல், மேல்மாடியில் நடத்தல், நிர்மலமான ஆகாயம், காய் கனிகளுடன் குலுங்கும் மரங்கள் போன்றவை மனமகிழ்ச்சியை அளிக்கக்கூடிய கனவுகள். ஓர் ஆணின் வலது கண் தோள் துடிப்பதும், பெண்ணுக்கு இடது கண், தோள் துடித்தலும் இன்ப அதிருஷ்டம் ஆகும்.


33. சகுனங்கள்:


 வேலையாக வீட்டை விட்டுப் புறப்படுகையில் காணத்தக்க நற்சகுனங்கள் : 

கருப்பு நிறமில்லா தானியங்கள், பஞ்சு, வைக்கோல், சாணம், காசுகள் நல்ல சகுனம். பறவைகள் சகுனம் நேரம், அதன் திசை, இடம், செய்யும் ஒலி, ஒளியின் தன்மை, செய்யும் பறவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

பறவை (அ) பட்சி சகுனங்கள்

பரத்துவாசம், கருடன், டேகை, கோட்டான் வலமிருந்து இடம் போனாலும், காகம், நாராயணபட்சி, கன்னி, கிளி, மயில், காக்கை, கொக்கு, குயில் இடமிருந்து வலம் போனாலும் சுபசகுனம்.

பிராணிகள்

அதேபோல் மான், கிளி, அணில், நாய், பூனை, மூஞ்சூறு வலமிருந்து இடம் போனாலும், நரி, குரங்கு, மாடு, எருமை, ஜவ்வாது பூனை இடமிருந்து வலம் போனாலும் அபசகுனம் ஆகும். தூங்கி எழுந்தவுடன் நற்சகுனமாக பார்க்கத் தக்கவை தாமரைப் பூ, தீபம், தணல், தனது வலக்கை, மனைவி, மிருதங்கம், கருங்குரங்கு, கண்ணாடி, சூரியன், கோபுரம், சிவலிங்கம், சந்தனம், கடல், வயல் முகில் ஆழ்ந்த மலை ஆகியவை சுபம் தரும். 

ஒருவன் புறப்படும்போது இடப்புறம் காகத்தின் குரல் கேட்டாலோ, அவனுடன் இடதுபுறத்தில் பறந்து வந்தாலோ, நன்மை தரும் சகுனம். மாறாக, வலப்புறத்தில் காகத்தின் குரல் கேட்டாலோ, வலப்புறத்தில் பறந்து வந்தாலோ, எதிரில் இடது புறமாகப் பறந்து வந்தாலோ நல்லதல்ல.

புறப்படும் போது காணக்கூடாதவை : 

சண்டாளன், வெல்லப்பாகு கலன், சாலமரம், மொட்டை மனிதன், எண்ணெய் தேய்த்த உடல், நிர்வாண ஆள், மனநோயாளி, ஆண்மையற்றவன், கர்ப்பிணி, விதவை, கசாப்புக்கடைக்காரன், பறவை வேடன். அரசன் புறப்படும்போது குதிரை காலடி தவறுதல், ஆயுதம் நழுவி விழுதல், ஆடைகள் நழுவுதல், குடை கவிழுதல், தேர் ஏறும்போது கால் தவறுதல் போன்றவை கூடாது. அவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் பயணத்தை நிறுத்தி, விஷ்ணுவை ஆராதித்து வழிபட்டு அதன் பின்னரே பயணத்தை மறுபடியும் தொடரவேண்டும்.

அயல்நாட்டுப் பயணத்திலிருந்து திரும்பி வரும் மன்னன் வெண்மலர்கள், நீர் நிறைந்த குடங்கள், முதியோர், பசு, குதிரை, யானை, தேவதை உருவங்கள், எரியும் அக்கினி, பசும்புல், தங்கம், வெள்ளி ஆயுதங்கள், ரத்தினங்கள், பழங்கள், தயிர், பால், கண்ணாடி, சங்கம், கரும்பு, மேக இடி ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்து உள்ளே நுழைய வேண்டும். 

நாய் ஊளையிடுவது மரண அறிகுறி. அபசகுனம். இரண்டு யானைகள் எல்லோரும் அறிய இன்புறல், பெண் யானை குட்டிபோடல், மதயானை போன்றவையும் மரண அறிகுறிகளே. ஒரு யானை இடது முன்கால் மீது வலது முன் காலை போட்டிருந்தால், வலது புறத்தில் தந்தத்தைத் தும்பிக்கை சுற்றிக் கொண்டிருந்தால் நற்சகுனம். ஒரு குதிரை எதிரியைக் கண்டதும் உடல் சிலிர்த்து, முன் கால்களால் தரையை உதைத்துக் கொண்டு, உக்கிரமாகப் பாய்ந்து சென்றால் வெற்றி நிச்சயம்.


34. ராஜ தருமம், ராஜ நீதி

ராஜ தருமம், ராஜ நீதி பற்றிய விவரங்கள் திருக்குறள், அர்த்தசாஸ்திரம் ஆகிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இங்கே, அக்னி புராணத்தில் கூறியவற்றுள் முக்கியமான சில இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி அவனது குறிக்கோள் நாட்டு நலனைப் பற்றியே இருக்க வேண்டும். அரசன் தன் தருமத்தில் பிறழாது, நீதி நெறி வழுவாமல் ஆட்சி புரிய வேண்டும். அரசன் பட்டத்துக்கு வந்த ஒரு வருடம் கழித்தே பட்டாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். 

தனக்குரிய மனைவி, அமைச்சர், ராஜகுரு ஆகியவர் சாஸ்திரங்கள் கற்றுணர்ந்தவர்களாகவே கொள்ள வேண்டும். ராஜகுரு மன்னனையும், பட்டத்தரசியையும் எள், அரிசி, தலையில் தேய்த்து மங்கல ஸ்நானம் செய்வித்து ஜயவிஜயிபவ என்ற முழக்கத்துடன் அரியாசனத்தில் அமர்த்த வேண்டும். ராஜ்ஜியாபிஷேகத்துக்கு முன் இந்திர சாந்தி என்னும் யாகத்தைச் செய்து வைக்க வேண்டும்.

பிராமண மந்திரி தங்கக் குடத்தில் நெய் நிரப்பி வந்து அபிஷேகம் செய்விக்க வேண்டும். க்ஷத்திரியனாகில் வெள்ளிக் குடத்தில் மோர் கொண்டும், வைசியனாகில் செப்புக்குடத்தில் தயிர் கொண்டும், மற்றவர் மண் குடத்தில் நீர் ஏந்தியும் முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளிலிருந்து அரசனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அடுத்து குரு புனித குடநீரை அமைச்சர், அதிகாரிகள் தலை மீது தெளிக்க வேண்டும். பின்னர் பல பொருள்களை அவற்றுக்கேற்ற மந்திரங்கள் கொண்டு அபிஷேகம் செய்விக்க வேண்டும். மகுடாபிஷேகம் சாஸ்திர முறைப்படி செய்து வைக்க வேண்டும். 

படைகளுக்கு பிராமணன் (அ) க்ஷத்திரியனைத் தளபதி ஆக்க வேண்டும். நற்குணம், நல்லொழுக்கம் உள்ளவர்களையே அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். சிறந்த அறிவாளி, பேசக்கற்றவர்களைத் தூதுவனாக நியமிக்க வேண்டும். மெய்க்காப்பாளர்கள் வலுவுள்ள, திறமையுள்ள, ஆயுதபாணிகளாக இருக்க வேண்டும். ரத்தினங்களின் மதிப்பு அறிந்தவர், நாணயமானவரைக் கருவூல அதிகாரியாக நியமிக்க வேண்டும். அதேபோல் அரண்மனை வைத்தியர், குதிரை யானைக் காப்பாளர்கள் அந்தந்த வித்தையைக் கற்றுணர்ந்து அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும்.

அந்தப்புரத்தில் பெண்களையே பணிப்பெண்களாக நியமிக்க வேண்டும். அங்காங்கு பல துறைகளில், பல நாடுகளில் ஒற்றர்களை நியமித்து ஆட்சி நன்கு அமையுமாறு செய்ய வேண்டும். நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் மிக்க கவனம் செலுத்த வேண்டுமும். ஆறுவித அரண்களை அரசன் பெற்றிருக்க வேண்டும். தனுர் துர்க்கம், மகிதுர்க்கம், நரதுர்க்கம், அக்ஷதுர்க்கம், அப்புதுர்க்கம், கிரிதுர்க்கம். இவை நில அரண், நீர் அரண், காட்டரண், மலையரண் ஆகியவை. 

ஆலயங்களை நன்கு பராமரிக்க வேண்டும். ஆறில் ஒரு பங்கு வரி வசூலிக்க வேண்டும். தவறு செய்பவர்களைக் கண்டுபிடித்து தவறுகள் நடவாமல் மக்கள் சாந்தியுடன் வாழ மன்னன் அடிகோல வேண்டும். ஒரு மன்னனின் ஆட்சி நிலையாக இருக்க மன்னனது திறமை, தேர்ச்சி உடைய மந்திரிகள், வளமுள்ள நகரங்கள், அரண்கள்,கடுமையான தண்டனை, பிறநாட்டவரிடம் நட்பு ஆகியவை மிகவும் அவசியம். அரசன் சூரியன் போன்ற ஒளியும், சந்திரின் போன்ற குளிர்ச்சியும், குற்ற விசாரணையில் தருமர்; துன்பம் நீக்குவதில் அக்கினி தேவன்; ஏழைகளுக்கு வழங்குவதில் வருணன், மக்களைக் காப்பதில் விஷ்ணுவாக விளங்க வேண்டும்.

திருடன், கொலைக்காரன், சொத்தை அபகரிப்பவன், பொய்யன், வழிபறிச் செய்பவன், மனைவி, உறவினர்களைத் தவிக்க விடுபவன், பெண்களின் கற்பைக் கெடுப்பவன், ஒழுக்கமற்ற வியாபாரி, போன்றவர்களை அவரவர்கள் குற்றங்களுக்கேற்ப நீதிநெறி தவறாமல் தண்டனை அளித்து அவர்களைத் திருத்தி நாட்டை அமைதியுடன் ஆள்வது அரசன் கடமையாகும்.


35. படைகள், படைக்கலன்கள்

மன்னனுடைய குறிக்கோள் போரில் வெற்றி பெறுவதே என்றாலும், தோல்வியுற்று சரணமடைந்த (அ) வீர மரணம் அடைந்த பகை மன்னனையும், அந்த நாட்டை நிர்வகிப்பதிலும் சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். போரை உடனே நிறுத்தி, கொள்ளையடிப்பதை நிறுத்துவது, பசு, பிராமணர், பெண்களுக்குப் பாதுகாப்பு, ஆலயப் பராமரிப்பு இவற்றிற்குப் பாதகம் இன்றி நடந்துகொள்ள வேண்டும். போர் முடிந்து அமைதி ஏற்பட்ட பிறகே திறமை காட்டியவர்களுக்கு பரிசுகள், பதவிகள் அளித்து கவுரவிக்க வேண்டும். போரில் படைகளை கட்டுக் கோப்பு குலையாமல் வியூகங்கள் அமைக்க வேண்டும். அவை பல வகை : மகர வியூகம், கருடவியூகம், அர்த்தசந்திர வியூகம், வஜ்ர வியூகம், சகட வியூகம், மண்டல வியூகம், சர்வதோ பத்திரி வியூகம், சூசி வியூகம் என்பவை.

வியூகத்தில் ஐந்து பகுதிகள்-முதலாவது உடல், இரண்டு மூன்றாவது அதன் பக்கங்கள், நான்கு ஐந்து இருபக்கச் சிறகுகள். ஒன்று அல்லது இரண்டு பகுதிகளுக்கு மேல் நேரிடத் தாக்குதல்களில் ஈடுபடாமல், மற்ற பகுதிகள் உதவியாக இருக்க வேண்டும். போரில் உயிருக்குப் பயந்து ஓடுபவன், காயமுற்றவர்களைக் கொல்லக்கூடாது. அந்தப்புர மாதர்களைக் கவுரவமாக நடந்த வேண்டும். வெற்றி முழக்கத்துடன் நாடு திரும்பிய மன்னன் முக்கியமான இரண்டு காரியங்களை உடனடியாகக் கவனிக்க வேண்டும். போரில் மரணமடைந்தவர் குடும்பங்களுக்கும், அங்கவீனமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கும் தக்க மானியங்கள் அளித்து அவர்கள் தங்கள் வாழ்க்கையைச் செவ்வனே நடத்திச் செல்ல வேண்டும். வெற்றிக்கு இறைவனே காரணம் என உணர்ந்து நன்றி செலுத்த வழிபாடுகள் செய்ய வேண்டும்.

படைக்கலங்கள்

அரசனுடைய சாமரம் தங்கக் கைப்பிடியுடன் குடையின் மீது அன்னம், மயில், கிளி, நாரை ஏதாவதொரு பறவையின் இறகுகளைக் கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். அந்தணர் குடை சதுரமாகவும் , அரசன் குடை வட்டமாகவும், வெண்மை நிறத்திலும் இருக்க வேண்டும். காம்பு 28 அடி நீளம் இருக்க வேண்டும். குறுக்குக் கட்டைகள் க்ஷீர மரத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஓரங்களில் முத்துக்களாலான பதக்கங்களும், குஞ்சங்களும் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். வில்லின் காம்பு இரும்பு, மாட்டுக் கொம்பு (அ) மரத்தினால் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். அதன் நாண் மூங்கில் நார் அல்லது வேறு பொருள்களால் ஆகியதாக இருக்க வேண்டும். வில்லின் காம்பை தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகியவற்றால் செய்யலாம். ஆனால், மாட்டுக் கொம்பால் செய்வது உத்தமமானது. மூங்கிலால் செய்யப்பட்ட வில்லே சிறந்தது. மூங்கில் (அ) இரும்பால் அம்புகள் செய்யப்படலாம். அவற்றின் பின்பகுதியில் இறகுகளை அமைத்து எண்ணெயில் ஊறவைக்க வேண்டும்.

ஒரு சமயம் கங்கைக் கரையில் பிரமன் பகவானைக் குறித்து ஹோமம் முதலிய கர்மாக்களால் ஆராதித்து வந்தார். ஓர் அரக்கன் அங்கு வந்து தடைகள் உண்டாக்க எண்ணினான். அப்போது அக்கினிதேவன் தோன்றினார். மற்ற தேவர்களும் அவரை வணங்கினார். அங்கிருந்த விஷ்ணு அக்கினிதேவன் வைத்திருந்த நந்தகம் என்ற கத்தியை வாங்கி அரக்கனை அவனது உடலின் பல இடங்களில் வெட்டினார். வெட்டுப்பட்ட இடங்கள் பூமியிலே விழுந்தன. அவை இரும்பாக மாறின. அவையே பூவுலகில் ஆயுதங்களாகட்டும் என்றார். எனவே ஆயுதங்கள் இரும்பால் செய்யப்படுகின்றன. உத்தமமான வாள் ஐம்பது விரற்கடை நீளம் இருக்க வேண்டும். கத்தி மோதும் போது சிறு மணி எழும்பும் ஓசையைப் போல் ஒலி எழுப்பின் அது சிறந்தது. கத்தியின் வலிமை பற்றிப் பிறரிடம் பேசக்கூடாது.


36. இரத்தின வகைகள்

இரத்தினங்கள் அனேகம். ஆனால் குறிப்பாக, சிறந்த ஒன்பதை மட்டும் நவரத்தினங்கள் என்று குறிப்பிடுவர். மக்களும், மன்னனும் இரத்தினங்களை உபயோகிக்கின்றனர். ஒருவனுக்கு செழிப்பான, வளமான வாழ்வு அமைய முத்து, நீலம், வைதுர்ஜம், இந்திரநீலம், சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல், ஸ்படிகம், புஷ்பராகம், ஜ்யோதிராம், ராஜபட்டம், ராஜமயம் ஆகிய இரத்தின வகைகளை அணிய வேண்டும். ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற கந்தகம், முத்து சிப்பி, கோமேதகம், ருத்ராக்ஷம், பவழம், நாகரத்தினம் தங்கத்தில் பதித்து அணிய வேண்டும். குறையின்றி, உட்புறமிருந்து ஒளி வீசி, நன்கு பதிக்கப்பட்ட இரத்தினம் நல்ல அதிருஷ்டம் அளிக்கும். ஒளியற்று, பிளவுபட்டு, சொர சொரப்பானவற்றை ஒருபோதும் உபயோகிக்கக் கூடாது.

பிறை போன்றதாய், அறுகோணமாய், எளிதில் உடையாததாய், நீரோட்டம் உடையதும், உச்சிகால சூரியனைப் போன்ற ஒளி கொண்டதுமான இரத்தினங்களையே உபயோகிக்க வேண்டும். மரகதக்கல் தூய்மையானதாய், குளிர்ச்சி ஒளி கொண்டு, கிளிபோல் பச்சைநிறம் கொண்டிருக்க வேண்டும். உட்புறம் தங்க நிறப் படிகங்கள் கொண்டிருக்க வேண்டும். பதுமராகம் ஒளியுடன் கூடிய சிவப்பு நிறம் கொண்டிருக்கும். சிப்பிகளில் காணப்படும் முத்துக்கள் சிவப்பு நிறத்தை உடையனவாகவும் வெள்ளை நிறச் சிப்பிகளில் உள்ள முத்துக்கள் வெண்மையாகவும் இருக்கும். மூங்கில், யானை, கரடி, கன்னப்பொறிகள், மீன்கள் மூளையிலும் முத்துக்கள் உண்டாகும். வெண்மை நிறம், வெளிப்பொருளைப் பார்க்கும் தன்மை, எடை, உருண்டை முத்துக்களில் கவனிக்க வேண்டும். இந்திர நீலக்கல்லைப் பாலில் அமிழ்த்தினால் பாலும் நீலமானால் அது நல்லது. வைடூர்யம் சிவப்பு, நீல நிறங்களில் விதுர நாட்டில் எடுக்கப்படுகிறது.


37. தனுர் வேதம்

அக்கினி தேவன் வசிஷ்ட முனிவருக்கு தனுர் வேதம் என்னும் வில் வித்தையைப் பற்றிக் கூறலுற்றார். தேரோட்டுனர், யானை வீரர், குதிரை வீரர், மற்போர் வீரர், காலாட்படையினர் என்று வீரர்கள் ஐந்து வகையினர். (பொதுவாக நால்வகைச் சேனை என்றும் சொல்வர். ரத, கஜ, துரக, பதாதி; தேர், யானை, குதிரை, காலாள்.) ஆயுதங்களும் ஐந்து வகையாகும். பொறிகள் கொண்டு எறியப்படுபவை, கைகளால் எறியப்படுபவை, கையை உபயோகித்துப் பின்னர் நிறுத்திக் கொள்ளப்படுபவை, கைகளில் நிலையானவை. துவந்த யுத்தத்தில் கைகள் மட்டுமே. மேலும் போர்க்கருவிகள் நீளமானவை, வளைவானவை என இரண்டு வகை. முதல் வகை-அம்புகள், தீப்பந்தங்கள். இரண்டாவது-ஈட்டி, கவண்கல். மூன்றாவது-சுருக்குக் கயிறு. நான்காவது-வாள், கத்தி, வில், அம்பு

வில்போரே சிறந்ததாகக் கருதப்படுகிறது. பிராமணன், க்ஷத்திரியன் இருவரும் தனுர் வித்தையைக் கற்பிப்போர் ஆவர். வில்லைக் கையில் ஏந்தி நாணை இழுத்துப் பூட்டி எய்வதற்குத் தக்க பயிற்சி வேண்டும். அம்பை எய்த மறுகணம் கை பின்னுக்குச் சென்று அடுத்ததைத் தொடுக்க வேண்டும். விரைவைப் பொருத்து ஒருவன் வெற்றி அடைவான். இப்பயிற்சியில் இலக்குகள் மூன்று வகை 

1. நேர் பார்வைக்குக் கீழாகவும், மேலாகவும் உள்ள இலக்குகள் துஷ்கரம் எனப்படும். 
2. தலைக்குக் கீழே தூரத்தில் உச்சிக்கும் இடையே உள்ளவை சித்ர துஷ்கரம் ஆகும். 
3. ஒளியற்ற கூறிய முனை உடையதாய் நேர் பார்வைக்கும் அடிவானத்துக்கும் கீழே உள்ளது த்ரிதம். இலக்கு நோக்கி இடப்பக்கமிருந்தும், வலப்பக்கமிருந்தும், குதிரை மீது இருந்தும் குறி தவறாது எய்ய சிறந்த திறமைக்கேற்ற பயிற்சி தேவையாகும். நகர்ந்து செல்லும் பொருள்கள், சுழலும் பொருள்கள் ஆகியவற்றையும் குறி தவறாது அடிக்கும் திறமை பெறுதல் அவசியம். இவ்வாறு பலவகையிலும் போர்க்களத்தில் வில்லேந்தி அம்பெய்தி குறி தவறாமல் செலுத்தி, மற்றும் அவற்றிற்கான தேவதா மந்திரங்களை உச்சரித்து எய்தல் போன்ற சகல வித்தைகளும் கற்றவன் வில்லுக்கு விசயன் என்று பெயர் பெறுவான்.


38. அபிஷேக வகைகள், பலன்கள்

காயத்திரி மந்திரத்தை நீரிலிருந்து ஜபித்தாலும், பிராணாயாமத்துடன் ஜபித்தாலும் மந்திரத்தைக் கூறி ஹோமம் செய்தாலும் மனோ பீஷ்டங்கள் நிறைவேறும். இடுப்புவரை நீரில் சென்று பிரணவ மந்திரத்தை நூறுமுறை ஜபித்து, புனித நீரைச் சிறிது உட்கொண்டால் தோஷங்கள் நீங்கி புனிதம் ஏற்படும். 

நாட்டில் நிலநடுக்கம், தீ விபத்து, வெள்ளம் போன்ற உற்பாதங்கள் நிகழும் போது அக்கினியை ஆராதிக்க வேண்டும். விஷ்ணுவின் திருமேனிக்குத் திருமஞ்சனம் (நீராட்டம்) செய்தால் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் ஏற்படும். தீர்த்தங்களை ஆலயம், இல்லம் ஆகியவற்றில் திருமஞ்சனம் செய்யலாம். குறை பிரசவம் பெறும் பெண்கள் தாமரை மலரில் விஷ்ணுவை இருத்தி திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்தால் அந்தக் குறை நீங்கும். மக்களை இழந்த பெண் அசோக மரத்தின் கீழ் விஷ்ணு திருஉருவை வைத்து ஆராதித்தால் நன்மை ஏற்படும்.

திரண்ட செல்வம் பெற விஷ்ணுவுக்கு அபிஷேகம் செய்து ஆராதிக்க வேண்டும். உதகசாந்தி செய்து, அந்த நீரால் நீராட்டி ஹோம காரியங்கள் செய்ய வேண்டும். நெய்யபிஷேகம் நீண்ட ஆயுளைத் தரும். கோமலம், கோநீர் அபிஷேகம் தோஷங்களை நீக்கும். பாயச அபிஷேகம் உடல், உள்ளம் வலிமை தரும். இன்னும் தர்ப்பை, நீர், பஞ்சகவ்வியம், வில்வ இதழ், தாமரை இதழ், தங்கம், வெள்ளி, செம்பு, சர்வகந்த நீர், பழச்சாறு, தேன் போன்றவற்றைக் கொண்டு செய்யும் அபிஷேகம் பலவித பயனை அளிக்கும். பகவான் விஷ்ணுவின் திருமேனியைத் திருவடித் தாமரைகளை திருமஞ்சனம் செய்த நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து கொள்வது சிறந்தது, உத்தமமானது. 

அந்த நாள் முழுவதும் பகவத் தியானத்தில் ஈடுபடல், தானங்கள் செய்தல், பகவானை அர்ச்சித்தல் ஆகியவற்றினால் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். விஷ்ணு பஞ்சரம் என்ற மந்திரத்தை முறைப்படி ஜபித்தால் எதிரி அழிவான். வலன் என்ற அசுரனை அழிக்க இந்திரன் இந்த மந்திரத்தைக் குருவிடம் கற்று பிரயோகித்தான். திரிபுரதகனத்தின் போது சிவபிரானுக்கு இம்மந்திரம் பயன்பட்டது.


39. தேக தத்துவம், நோய்க்கு மருந்து தேக தத்துவம்

பிறந்த குழந்தை அசைதல், கை கால்களை அசைத்தல், ஒலி கேட்க உதவுவது ஆகாயத்தின் தன்மை; அது புரண்டு படுக்கவும், சுவாசிக்கவும் உதவுவது வாயு; குழந்தையின் பித்த கோசத்தை இயங்கச் செய்வது, தோலுக்கு நிறம் தருவது, ஜீரண உறுப்புகளைச் செயல்பட செய்வது அக்கினி; இரத்தஓட்டம், சுவை அறிதல், கழிவுப்பொருள்களை அகற்ற உதவுவது நீர்; முகரும் உணர்ச்சி தருவது, உரோமம், நகம் வளர்ச்சி, உடல் ஆகியவற்றுக்குக் காரணம் பூமி; ஆக ஐம்பூதங்களே ஒருவனுடைய தேக நிலையை உண்டாக்குகிறது. ஒரு குழந்தை தந்தையிடமிருந்து இரத்தக்குழாய், நரம்பு, வீரியம் ஆகியவற்றையும், தாயிடமிருந்து மற்றவற்றையும் பெறுகிறது.

ஒருவனுடைய குணநலன்கள் தாமச குணத்தாலும், விருப்பம், வீரம், கர்மாக்கள் செய்தல், ஆர்வம், தற்புகழ்ச்சி, அலட்சியம் ஆகியவை ராஜஸகுணத்தாலும் உண்டாகின்றன. இலட்சியம், மற்ற நற்குணங்கள், தெய்வபக்தி ஆகியவை சாத்வீக குணத்தால் உண்டாகின்றன. வாதத்தின் ஆதிக்கத்தால் ஒருவனது அமைதியின்மை, கோபத்தால் கீழே விழுதல், வளவள என்று பேசுதல், வெட்கப்படுதல் காணப்படும். பித்த ஆதிக்கம் ஒருவனை முன்கோபி ஆக்கும். மேலும் முடிஉதிர்தல், அறிவை வளர்த்துக் கொள்வதும் அதனாலேயே ஆம்; அன்புடைமை, இடைவிடாத முயற்சி வாதத்தின் நோக்கம் ஆகும். செயல்பாட்டுக்குக் கர்மேந்திரியங்களும், பரப்பிரம்ம சொரூப ஞானம் பெற ஞானேந்திரியங்களும் உதவுகின்றன. இருபத்து நான்கு தத்துவங்களைக் கொண்டது ஜீவன். உத்தம ஜீவன் உடலை விட்டு மேல்நோக்கி வெளியேறும். யோகிகளுடைய ஜீவன் உச்சந்தலையைப் பிளந்து கொண்டு வெளிப்படும். அது உத்தமமானது.

மறுபிறவி

உடலை நீங்கிய ஜீவன், ஒரு சூக்கும சரீரம் அடைந்து யம பட்டணம் அழைத்துச் செல்லப்பட்டு அதன் கர்மாவுக்கேற்ப நரக வாசம் அனுபவிக்கிறது. கோரம், அகோரம், அதிகோரம், மகாகோரம், கோரரூபம், தாரள தரம், பயானகம், ப்யோதிகரம், காலராத்திரி, மகாசண்டம், சண்டம், கோலாகலம், பிரசண்டம், பத்மம், நாகநாயிகம், பத்மாவதி, பீஷணம், பீமம் கராலிகம், பிகரானம், மகாவஜ்ரம், திரிகோணம், பஞ்சகோணம், சுத்ரிகம், வர்துலம், சப்தபூமம், சபூமிகம், தீப்தம் என்பவை இருபத்தெட்டு முக்கிய நரகங்கள். ரௌரவம், தூமிச்ரம் முதலியவை நரகத்தின் உட்பிரிவுகள். பாபங்களுக்கேற்ப நரகத்தில் தண்டனைகள் அளிக்கப்படும். (விவரங்கள் : நரகலோகம்-விஷ்ணு புராணம்)

துன்பங்கள் வகை

மனத்தால் ஏற்படும் துன்பங்கள் அத்தியாத்மிகம்; 
ஆயுதங்களால் ஏற்படுபவை ஆதிபௌதிகம்; 
இடி, மின்னல், மழை போன்ற இயற்கையின் செயல்களால் ஏற்படுபவை ஆதிதை விகம் எனப்படும். இத்துன்பங்களை உணர்ந்த அறிவாளி அவற்றால் ஏற்படும் துன்பங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வான்.

யோகங்கள்

பற்றற்று, பகவானுடைய தியானத்திலேயே சிந்தனையை நிறுத்தி, ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் ஐக்கியப்படுத்துவதே யோகம். அது இயமம், நியமம், அகிம்சை, உண்மை பேசுதல், பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்; அகத்தூய்மை, மது அருந்தாமை, பற்றற்றிருத்தல், புலன் அடக்கம், பிராணாயாமம், தியானம், தாரணை சமாதி எனப் பலவகையாகும். ஜீவாத்மா, பரமாத்மா என்ற பேதமின்றி அதனோடு ஐக்கியமாகத் தான் இருக்கும். உடலைத் துறந்து வெளிப்படுகிறது ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாதல் முக்தி எனப்படும்.

நோய்க்கு மருந்து

ஒருவன் நோய்வாய் பட்டிருக்கிறான் என்றால் அவனுடலில் வாதம், பித்தம், கபம் அளவில் மாறுபட்டிருக்கிறது என்று அறிய வேண்டும். நாம் உட்கொள்ளும் உணவு உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்துடன் கலந்து உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாகிறது. தேவையற்ற பொருள்கள் மலம், மூத்திரம், வியர்வை என்ற வடிவில் கழிவுப்பொருள்களாக வெளியேறுகின்றன. பிராமணனுக்குத் தானம் கொடுத்து, அறுசுவை உண்டி அளித்து, லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து ஆராதிப்பவன் நோய்களிலிருந்து விடுபடுவான். 

நோயிலிருந்து விடுபட்டவன், ஜன்ம நக்ஷத்திரத்தன்று, மந்திரபூர்வமாக அபிஷேகம் செய்து பகவானை ஆராதிக்க வேண்டும். விஷ்ணு ஸ்தோத்திரம் என்ற துதியை உச்சரித்துக் கொண்டிருந்தால் அனைத்து மனோ வியாதியும் நீங்கிவிடும். நல்லநாள் பார்த்து மருந்து கொடுக்க வேண்டும். ந சோமோ புத வைத்ய திங்கள், புதன் கிழமைகளில் மருந்து உண்ணவோ, வைத்தியம் தொடங்குவதோ கூடாது.

பகவானைப் பிரார்த்தித்து, மற்ற தேவதைகளையும் மனதில் எண்ணி கொடுக்கப்படும் மருந்து மகரிஷிகளால் தயாரிக்கப்பட்ட உயர் மருந்தாகவும், தேவர்களாலும் உத்தமமான கர்ப்பங்களாலும் அருந்தப்பட்ட அமிர்தமாகட்டும் என்ற பிரார்த்தனையுடன் மருந்தை உட்கொள்ள வேண்டும். கபம் குளிர்காலத்தில் அதிகமாகி, வசந்தகாலத்தில் உச்சநிலை அடைந்து, கோடை காலத்தில் படிப்படியாகக் குறையும். 

வாதம் 

கோடையில் அதிகமாகி, குளிர் காலத்தில் இரவு நேரத்தில் கடுமை அதிகமாகி பனிக்காலத்தில் குறைந்து விடும். 

பித்தம் 

மழைக்காலத்தில் அதிகமாகி, பனிக்காலத்தில் உச்சமடைந்து, குளிர்காலத்தில் குறைந்து விடும். வயிற்றில் ஆகாரம் மூன்றில் இரண்டு பங்கே இருக்க வேண்டும். மீதி ஒரு பகுதியில் காற்று நிறைந்திருக்க வேண்டும். அதுவே ஜீரணத்துக்கு நல்ல வழியாகும்.

பாம்பு கடி, விஷ முறிவு

ஆதியில் பகவான் எட்டு சர்ப்பங்களை உண்டாக்கினார். 
அவை ,,.

சேஷன், 
வாசுகி, 
தக்ஷகன், 
கற்கடகன், 
அவ்யன், 
மகரம், 
புஜன், 
சங்கபாலன், 
குளிகன் 

என்பவை. இவற்றிலிருந்து நூற்றுக்கணக்கான பாம்புகள் உண்டாகிப் பெருகின. பெண் பாம்புகள் மாரிக்காலத்தில் கருவுற்று நான்கு மாதங்களில் நூற்றுக்கணக்கான முட்டைகள் இடுகின்றன. சில முட்டைகளை தாயே சாப்பிட்டு விடுகின்றன. 

முட்டையிலிருந்து வெளிவரும் குட்டிப்பாம்பு ஏழாம் நாள் கண் திறந்து, பன்னிரண்டாவது நாள் முழுவளர்ச்சி பெற்று, பதின்மூன்றாம் நாளிலிருந்து தனியே வெளியேறுகின்றது. அது சூரியனைப் பார்த்ததும் இதற்கு மேலே இரண்டும், கீழே இரண்டுமாக நான்கு பற்கள் முளைத்துவிடுகின்றன. அந்தப் பற்கள் கராளி, மகரி, கலராத்திரி, யமதூக்கை எனப்படுகின்றன.

இரவில் பாம்பு கடித்தால் வீக்கம், காயத்தில் எரிச்சல், வலி, தொண்டை அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். பொதுவாக, எந்த வகையான பாம்பு கடித்தாலும் மரணம் நிச்சயம் என்பர். ஏனெனில், விஷம் முன் நெற்றியை அடைந்து, கண்களைப் பாதித்து முகத்தில் பரவி நரம்புகளைத் தாக்கி உயிர் வாழ உதவும் முக்கிய பகுதிகளைப் பற்ற மரணம் ஏற்படுகிறது. 

பாம்பால் கடிபட்ட ஒருவன் நெய்யில் தேன் கலந்து உட்கொள்ள வேண்டும். அது பெரும் அளவில் விஷத்தை முறித்து விடும். நீலகண்டனைப் போற்றும் மந்திரம், கருமந்திரம் மற்றும் சாஸ்திரங்களில் கூறப்பட்ட மந்திரங்களை முறையாக உச்சரித்து விஷத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, இறக்க முயற்சி செய்ய வேண்டும். தற்காலத்தில் டாக்டரை அணுகி விஷமுறிவு மருந்தை உட்கொள்ளுகின்றனர். அதனால் உயிர் காக்கப்படுகிறது.


40. கோ மாதா, கோ சாலை


கோமாதா, பசு, ஆ என்றெல்லாம் கூறப்படும் பசு மிகவும் புனிதமானது. அதன் மகிமை அளவிடற்கரியது. அவற்றைப் பராமரித்தால் ஆனந்தம் அளிக்கும். கோ சாலை அமைத்துப் பசுக்களைப் பராமரித்தல் மிகவும் சிறந்ததாகும். பசுஞ்சாணம், பசு மூத்திரம், பசும்பால், பசுந்தயிர், பசு நெய் ஆகியவை பஞ்சகவ்வியம் எனப்படும். இவை உடல் தூய்மைக்காக கொடுக்கப்படுகின்றன. பசுவைத் தொடுவது புனிதம்; அது உள்ள இடம் புனிதமாகும்; 

அதன் மூச்சுக்காற்று பட்ட இடத்தில் நோய் அண்டாது. பசுவை கோமாதா என்று தெய்வமாக வழிபட வேண்டும். பசு மற்ற பிராணிகளை விடப் புனிதமானது. அது நன்மையும் புனிதமடையச் செய்கிறது. சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் முதல் படி பசு. தினமும் ஒரு கைப்பிடி அளவு புல் பசுவுக்குக் கொடுத்தால் மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிட்டும். துன்பத்திலுள்ள பசுவைக் காப்பாற்றுதல், பசுவைப் போற்றிக் கொண்டாடுதல், கோதானம் ஆகியவை உறவினர்களையும் கரையேறச் செய்யும்.

சண்டாளர்களும் பஞ்சகவ்வியத்தை உட்கொண்டு ஒரு வேளை உபவாசமிருந்தால் பாபங்கள் நசித்துப் போகும். சந்தாபன விரதத்தைக் கடைபிடிக்கையில் பஞ்சகவ்யம் உட்கொள்ளுமாறு தேவதைகள் கூறியுள்ளனர். கிருச்சாதி கிருச்ச விரதத்தை கடைப்பிடிக்கையில் 21 நாட்களுக்கு பசும்பாலை மட்டும் ஆகாரமாக உட்கொள்ள வேண்டும்.

கோவிரதம் : ஒருவன் உடலை கோமயத்தால் தூய்மையாக்கிக் கொண்டு, பசும்பாலை அருந்தி, பசுவைப் பாலித்து வருதல். இதை ஒரு மாதம் செய்தால் பாவங்கள் நீங்கிச் சொர்க்கவாசல் கிடைக்கும். பசுக்களை நோயின்றி தக்க மருந்துகள் அளித்துப் பாதுகாக்க வேண்டும். பஞ்சமி அன்று மகாலக்ஷ்மியை பசுஞ்சாணத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அன்று விஷ்ணுவை மலர்களாலும், நறுமணப் பொருள்களாலும் வழிபட வேண்டும்.


41. மகாவிஷ்ணுவின் திருக்கோலங்கள்


புஷ்கரத்தில் விஷ்ணு புண்டரீகாக்ஷன்; 
கயாவில் சுதாதரன்; 
சித்திரகூட பர்வத உச்சியில் ராகவன், 
பிரபாஸ க்ஷத்திரத்தில் தைதிய சூதனன், 
ஜயந்தில் ஜயந்தன் 

என்று வெவ்வேறு திருக்கோலம் கொண்டுள்ளார் திருமால். ஹஸ்தினாபுரத்தில் ஜயந்தன், வர்த்தமானத்தில் வராகர், காஷ்மீரத்தில் சக்கரபாணி, கூர்ஜரத்தில் ஜனார்த்தனன், மதுரையில் கேசவன் முதலிய கோலங்களில் காட்சி அளிக்கிறார். குப்ஜ பிரகத்தில் ரிஷிகேசனாக, கங்கை சங்கமத்தில் ஜடாதரராக, சாலக்கிராமத்தில் மகாயோகராக, கோவர்த்தனகிரியில் ஹரியாக, பிண்டாரகத்தில் சதுர்பாகுவாகக் கோலம் கொண்டு பக்தர்களை மகிழ்விக்கிறார். 

சங்கத்துவாரத்தில் சங்கி, குரு க்ஷத்திரத்தில் வாமனன், யமுனா தீரத்தில் திருவிக்ரமர், சோணை ஆற்றங்கரையில் விசுவேச்வரர், கிழக்குக் கடற்கரையில் கபிலராக கோலம் கொண்டுள்ளார். சமுத்திர தீரத்தில் விஷ்ணு, கிஷ்கிந்தையில் வனமாலர், ரைவதத்தில் தேவர், விரோஜத்தில் நிபுஞ்ஜயர், விசாக பூபத்தில் அஜிதராக அவர் கொண்டாடப்படுகிறார்.

நேபாளத்தில் லோகபாவனர், துவாரகையில் கிருஷ்ணர், மந்தாரத்தில் மதுசூதனர், லோகாகுலத்தில் நிபுஹரர், புருஷவடத்தில் புருஷர், விமலையில் ஜகத்பிரபு, சைந்த வாரண்யத்தில் அனந்தர், தண்டகாரணியத்தில் சாரங்கதாரி, உத்பல பரிதகாலத்தில் கவுரி, நர்மதா, தீர்த்தத்தில் ஸ்ரீ யப்பதி, மாதவாரண்யத்தில் வைகுந்தர், கங்கைக் கரையில் விஷ்ணு, ஒரிசாவில் புருஷாத்தமர் என்றும், மேலும் 108 திவ்ய÷க்ஷத்திரங்களில் இருந்தான், கிடந்தான், நின்றான் என பல கோலங்களிலும் காட்சி தருகிறான்.


42. ருத்திரபாக்ஷ வகைகள்

சிவமந்திர ஜபத்தின்போது ருத்திராக்ஷ மாலையை அணிந்திருத்தல் அவசியம். அவை பலவகை:

அவற்றின் ஒரு முகம், மூன்று முகம், ஐந்து முகம் இருப்பவை உத்தமமானவை. இரண்டு, நான்கு, ஆறு முகங்கள் உள்ளவை, முட்கள் உள்ளவை, விரிசல் உள்ளவை புனித மற்றவை. ஆனால், நான்கு முக ருத்திராக்ஷத்தைக் கையில் அணியலாம். தலையில் முடியுடன் சேர்த்துக் கட்டிக் கொள்ளலாம். பயன்படும் ருத்திராக்ஷங்கள் நான்கு பிரிவில் அடங்கும்.


1. கோசரங்கள்-இவற்றால் லக்ஷம் முறை ஜபித்தால் வெற்றி நிச்சயம்.

2. பிராஜாபத்தியம், மகியாலம், சுலோதம், இரந்திகம் ஆகியவை சிவம் என்னும் பிரிவில் அடங்கும்.

3. குடிலம், வேதாளம், பத்மஹம்சம் போன்றவை சிகம் பிரிவைச் சாரும்.

4. குட்டிகாம், சரதம், குடிகம், தண்டினம் சவிதிரம் பிரிவு ஆகும்.

மேலும் திருதராஷ்டிரம், வாகம், காகம், கோபாலம் ஆகியவை ஜோதி வகை ருத்திராக்ஷங்கள் எனப்படும்.

(குறிப்பு : பிரளயம், பரதமுனிவர், நசிகேதன், சூரியவம்ச, சந்திரவம்ச அரசர்கள், புராணங்கள், புராண பலன்கள் பற்றிய விவரங்கள் விஷ்ணு புராணம், பாகவத புராணம் மற்றும் பல புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.)

அக்னி புராணம் முற்றிற்று.

To Top