பிரம்ம புராணம்
18. கவுதம முனிவரும் கங்கையும்
சிவனை மணம் புரிந்த பார்வதி, அவர் கங்கை மீது ஆசையாய் இருப்பது குறித்து வருத்தமுற்று கங்கையை அகற்ற பலவாறு முயன்றும் வெற்றி கொள்ள இயலவில்லை. அந்த நிலையில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பஞ்சம் தாண்டவமாடிற்று. அவ்வமயம் கௌதம முனிவரின் ஆசிரமம் மட்டும் பஞ்சத்தால் பாதிக்கப்படாமல் செழிப்பாகவே விளங்கியது. எனவே எல்லா முனிவர்களும் கவுதமர் ஆசிரமத்தை அடைய, அவர்களை வரவேற்றார் கவுதமர். இதற்கிடையில் தாயின் வருத்தத்தை அறிந்த கணேசரும் கவுதமர் ஆசிரமத்தை அடைந்தார். பார்வதிக்கு ஜயா என்றொரு தோழி. கணேசர், அவளிடம் ஒரு பசுவாக மாறி கவுதமர் வயலில் மேயும்படி கூற, அவ்வாறே நிகழ்ந்தது. பசு மேய்வதைக் கண்ட கவுதமர் ஒரு தர்ப்பைப் புல்லைக் கொண்டு அதை விரட்ட, பசு துயரக்குரல் எழுப்பி கீழே வீழ்ந்து இறந்தது..
இவ்வாறு பசுஹத்யை நடந்த ஆசிரமத்தில் இருக்க இஷ்டம் இன்றி முனிவர்கள் அகன்றனர். அவர்களைத் தடுக்க கவுதமர் முயன்றார். மேலும், தான் என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று கூறுமாறு வேண்டினார். அப்போது கணேசர், சிவபெருமான் சடையிலுள்ள கங்கையை இறக்கி கீழே ஓடச் செய்து, அந்நீர் இறந்த பசுவின் உடலை அடைந்தால் பாவம் அகலும் என்று சொன்னார். கணேசரின் திட்டத்தை அனைவரும் ஆமோதித்தனர். கவுதமரும் அதை ஒப்புக்கொண்டார். கவுதமர் கைலாயம் சென்று சிவனைக் குறித்துத் தவம் செய்ய, மகிழ்ச்சியுற்ற சிவபெருமான் வேண்டும் வரம் கேட்குமாறு கூற, கவுதமரின் வேண்டுதலின்படி அவரும் கங்கையை இறக்கி விட்டார். இவ்வாறு கவுதமர் கங்கையை புவிக்குக் கொண்டு வந்ததால் கௌதமி கங்கை என்ற பெயர் ஏற்பட்டது. விண்ணில் கங்கைக்கு நான்கு உபநதிகளும், பூமியில் ஏழு கிளை நதிகளும், பாதாளத்தில் நான்கும் உள்ளன என்று கூறப்படுகிறது.
19. கபோத தீர்த்தம்
கபோதம் என்றால் புறா. இரண்டு புறாக்களின் ஞாபகார்த்தமாக ஏற்பட்ட கபோத தீர்த்த வரலாற்றினைப் பார்ப்போம். பிரம்மகிரி என்ற மலையில் ஒரு கொடிய வேடன் இருந்தான். அவன் பறவைகள், மிருகங்களை மட்டுமின்றி பிராமணர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் வேட்டை ஆடிக்கொண்டே காட்டில் வெகுதூரம் சென்றுவிட்டான் வேடன். அவனிடம் பிடிபட்ட சில புறாக்களும், பறவைகளும் இருந்தன. இருள் சூழ்ந்தது. மழையும் பெய்ய ஆரம்பித்தது. வேடனுக்குப் பசியும், தாகமும் அதிகரித்தது. அவன் ஒரு மரத்தை அடைந்து ஒரு கிளையில் அமர்ந்து இரவைக் கழிக்க முடிவு செய்தான். ஆனால், அவன் மனமோ மனைவி, மக்களை எண்ணி வருத்தமுற்றது. அந்த மரத்தில் பல நாட்களாக ஒரு பெண்புறாவும், ஆண் புறாவும் வாழ்ந்து வந்தன. அவற்றில் பெண் புறா வேடனால் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைப்பட்டு வேடனிடம் இருந்தது. இதனை அறியாத ஆண்புறா தன் மனைவியை எண்ணி வருந்தியது. வேடன் நல்ல உறக்கத்தில் இருந்தான். அவனிடமிருந்த பெண் புறா, ஆண் புறாவின் செவிகளில் விழும்படியும், ஆண் புறா பெண் புறாவின் காதுகளில் விழும்படியும் பேசத் தொடங்கின.
வேடன் உறங்குவதால் பெண் புறாவை விடுவிப்பதாக ஆண் புறா கூற பெண் புறா அதை மறுத்தது. மேலும், ஒன்று ஒன்றை அழித்து உயிர் வாழ்வது உலக இயற்கை. எனவே அந்த எண்ணத்தை விடுத்து விருந்தினனான வேடனை எண்ணி அவனுக்கு உதவுவது தமது கடன் என்று கூறிற்று. உடனே ஆண் புறா வேடனின் குளிரை நீக்கச் சுள்ளிகளையும், சருகுகளையும் கொண்டு தீ மூட்டியது. பின்னர் அது தீயில் விழுந்து இறந்தது. பெண் புறாவும் தானும் தீயில் விழுந்து உணவாக விரும்புவதாக கூறி தீயில் குதித்தது. இவற்றை உணர்ந்த அந்த வேடன் மனம் மாறினான். அவன் அன்று முதல் வேட்டையாடுவதை நிறுத்தியதுடன் இதுவரையில் செய்த கொலைகளுக்காக வருந்தி, தான் இனி செய்ய வேண்டுவது யாது? எனச் சிந்தித்தான். புறாக்களின் தியாகத்தைக் கண்டு விண்ணிலிருந்து வந்த விமானத்தில் புறாக்கள் ஏறி நல்லுலகை அடைந்தன. அப்போது அப்புறாக்கள் கவுதம கங்கையில் பதினைந்து நாட்கள் நீராடினால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று வேடனிடம் கூறின. இவ்வாறு புறாக்கள் தியாகம் செய்ய தீயில் விழுந்த இடம் கபோத தீர்த்தம் என்ற பெயரைத் தாங்கி நிற்கிறது.
20. கருட தீர்த்தம்
பெரிய நாகமாகிய அனந்தனின் மகன் மணிநாகன் என்பான். பாம்புகளின் பகைவன் கருடன். எனவே பாம்புகள் கருடனிடம் அச்சம் கொண்டிருந்தன. மணிநாகன் சிவனை வேண்டி கருடனால் தனக்கு அபாயம் ஏற்படாதவாறு வரம் பெற்று அச்சமற்று திரிந்து வந்தது. கருடனால் மணிநாகனைக் கொல்ல முடியாது எனினும் அவனைப் பிடித்து சிறையில் வைத்தது. சிவபெருமான் நந்தியிடம் மணிநாகனுக்கு என்ன ஆயிற்று. அதைக் காணவில்லையே என்று கேட்டார். அதற்கு நந்தி மணிநாகனைக் கருடன் சிறை வைத்திருக்கிறது என்றார். உடனே, நந்தியை விஷ்ணுவை நோக்கித் தவம் செய்யுமாறு சொல்ல, நந்தியின் தவத்தை மெச்சி தோன்றிய விஷ்ணுவிடம் நந்தி, கருடனது பிடியிலிருந்து மணிநாகனை விடுவிக்குமாறு வேண்டிட, விஷ்ணுவும் கருடனிடம் உடனே மணிநாகனை விடுவிக்கச் செய்தார். இதனால் கோபம் கொண்ட கருடன் விஷ்ணுவிடம், எல்லோரும் தன் தொண்டர்களுக்கு உதவி செய்கின்றனர், பரிசு அளிக்கின்றனர். ஆனால் நீங்களோ நானே பெற்ற ஒன்றையும் விட்டுவிடச் செய்கிறீர்கள். இது என்ன நியாயம் என்று கேட்டது. அப்போது விஷ்ணு நீ சொன்னது சரிதான். என்னை சுமந்ததால் நீ இளைத்து பலவீனம் அடைந்து விட்டாய். உன்னுடைய சக்தி, திறமை, சாமர்த்தியத்தால் தான் நான் அரக்கர்களை வெல்ல முடிந்தது. உனக்கு மிக்க பலம் உள்ளது. இதோ இந்த எனது சிறு விரலைத் தாங்கி உன் வலிமையை நீ நிரூபி என்று கூறி, தன் சிறு விரலைக் கருடன் தலையில் வைத்து அழுத்த கருடன் நசுங்கியது. அதனால் வெட்கமுற்று, தன் தவறுக்காக வருந்தி தன்னைக் காத்திடுமாறு சரணடைந்தது. விஷ்ணு நந்தியிடம், கருடனைச் சிவபெருமானிடம் அழைத்துச் செல்லுமாறு கூறி, கருடனுக்கு சிவபெருமான் அருள்புரிவார் என்று சொல்ல, கருடன் மணிநாகனை விடுதலை செய்து விட்டு பரமசிவனைச் சென்று தரிசித்தது. சிவபெருமான் கருடனை கௌதமி கங்கையில் தீர்த்தமாடி முன் போல் மாறிட அருள் புரிந்தார். அவ்வாறே கருடன் நீராடி முன்னைவிட பலமும், வேகமும் பெற்றது. கருடன் நீராடிய அவ்விடம் கருட தீர்த்தம் எனப்படுகிறது.
21. விசுவாமித்திர தீர்த்தம்
முன்னொரு காலத்தில் கோர பஞ்சம் தலைவிரித்தாடியது. விஸ்வாமித்திர முனிவர், மனைவி மக்கள் மற்றும் சீடர்களுடன் கவுதமி கங்கை கரைக்கு வந்தடைந்தார். அவர்கள் உணவைத் தேடி அலைகையில் ஓர் இறந்த நாயின் உடல் மட்டும் காணப்பட்டது. அதன் இறைச்சியைத் தூய்மை செய்து கடவுளுக்கும், முனிவர்களுக்கும், மூதாதையர்களுக்கும் படைக்குமாறு கூறினார். அப்போது கழுகு வடிவில் அங்கு வந்த இந்திரன் அந்த மாமிசக் கலயத்தைத் திருடிச் சென்றார். இதை அறிந்த முனிவர் அவருக்குச் சாபம் அளிக்க எண்ணியபோது, இந்திரன் அந்தப் பாத்திரத்திலுள்ள இறைச்சியை அமிர்தமாக மாற்றிக் கொண்டுவந்து கொடுக்க, முனிவர் அதை ஏற்க மறுத்தார். உலகில் எல்லோரும் உணவின்றி தவிக்கையில் தனக்கு அமிர்தம் வேண்டாம் என்றும், அத்தகைய சூழ்நிலையில் நாயினிறைச்சியை உட்கொள்வது தவறாகாது. மேலும் அதை இறைவனுக்குப் படைப்பது பாவம் ஆகாது, என்றார். மழைக்குக் கடவுளாகிய இந்திரன், முனிவர் நாய் இறைச்சியை உண்ணாமல் செய்ய ஒரே வழி மழையே என்று எண்ணி மழை பொழியச் செய்ய பஞ்சம் பறந்தோடியது. அப்போது விசுவாமித்திரர் அமிர்தத்தை ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் விசுவாமித்திர தீர்த்தம் எனப் பெயர் பெற்றது.
22. கவுதமி கங்கை ஜல மகிமை
சுவேதன் என்னும் பிராமணர் ஒரு சிவபக்தர். கௌதம முனிவரின் நண்பர். கவுதமி கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்த அவர் மரணம் அடைந்தார். அவரை யமனிடம் அழைத்துச் செல்ல வந்த யம தூதர்களால் அவரது ஆசிரமத்தில் நுழையக்கூட முடியவில்லை. அவர்கள் திரும்பி வராததைக் கண்ட சித்திரகுப்தன் அது குறித்து யமனிடம் கூற, யமன் தனது தோழனாகிய மிருத்யுவை அனுப்பி வைத்தான். மிருத்யு, ஆசிரம வாயிலிலேயே நின்று கொண்டிருந்த யமதூதர்களை அணுகி கேட்க, சுவேதனின் உடலை சிவபெருமான் காத்துக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். சிவகணங்களில் ஒருவர், யமதூதர்களையும், மிருத்யுவையும் பார்த்து அவர்களுக்கு என்ன வேண்டும். ஏன் அங்கு நிற்கிறார்கள் என்று கேட்க, மிருத்யு சுவேதனின் ஆயுள் முடிந்து விட்டது. அவரை யமபுரிக்கு அழைத்துச் செல்ல வந்திருப்பதாகக் கூறினான். சுவேதனின் உடல் மீது மிருத்யு பாசக்கயிறை வீச சிவகணம் மிருத்யுவைத் தடியால் அடித்துக் கொன்றான். செய்தி கேட்ட யமதர்மன் மிகவும் கோபம் கொண்டு தன் பரிவாரங்களுடன் சுவேதனின் வீட்டைத் தாக்கினான். சிவபெருமான் பக்கத்தில் கணேசர், நந்தி, கார்த்திகேயன் முதலியோர் யமனுடன் போர் தொடுத்தனர். கடும் போர் நடந்தது. கார்த்திகேயனால் யமன் கொல்லப்பட்டான். இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டு வர தேவர்கள் கூடினர். யமன் தன்னுடைய கடமையைச் செய்தான். ஆனால் சிவபக்தர்களை யமன் யமபுரிக்கு அழைத்துச் செல்லக் கூடாது. அவர்கள் நேராகச் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்றார். அந்த நிபந்தனை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கௌதமி கங்கை ஜலத்தை நந்தி கொண்டு வந்து யமன் மீதும், மற்றும் போரில் இறந்தவர்கள் மீதும் தெளிக்க அவர்கள் உயிர் பெற்றனர்.
23. நிதிக்கதிபதி குபேரன்
விச்ரவ முனிவருக்கு இரண்டு மனைவியர். மூத்தவள் மகன் குபேரன். இளையவள் ஓர் அரக்கி. அவளுக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்று மூன்று மகன்கள். இலங்கையைப் பேரும், புகழுடன் குபேரன் ஆண்டு வந்தான். இது அவனுடைய சிற்றன்னைக்குப் பொறுக்கவில்லை. அதைப் பற்றி தன் புத்திரர்களிடம் கூறி, அவர்களும் புகழ்பெற ஆவன செய்யுமாறு கூற, அவர்கள் கானகம் சென்று பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து வலிமை பெற்று நாடாள வரம் வேண்ட பிரம்மனும் அவர்கள் விரும்பியபடி வரம் அளித்தார். இவ்வாறு வலிமை பெற்ற ராவணன், கும்பகர்ணன் ஆகியோர் குபேரனை எதிர்த்து தோற்கடித்தனர். அவனை இலங்கையை விட்டு விரட்டினர். குபேரனுடைய புஷ்பக விமானத்தையும் கைப்பற்றினர். குபேரனுக்கு யாரேனும் அடைக்கலம் கொடுத்தால் அவனைக் கொல்வதாக அறிவிக்க யாரும் அவனுக்கு அடைக்கலம் அளிக்க முன்வரவில்லை. குபேரன் தன் பாட்டனாராகிய புலஸ்தியரின் அறிவுரையை வேண்டினான். புலஸ்தியர் குபேரனை கவுதமி கங்கைக் கரையை அடைந்து சிவனைக் குறித்துத் தவம் செய்யுமாறு கூறினார். குபேரன் கவுதமி கங்கைக் கரையில் சிவனை நினைத்து தவம் செய்ய சிவபெருமான் தோன்றி, குபேரனை நிதிக்கதிபதியாக்கி ஆசிர்வதித்தார். இவ்வாறு குபேரன் செல்வத்துக்குக் கடவுள் ஆனான்.
24. ஹரிச்சந்திரன்
இஷ்வாகு குலத்தோன்றல் ராஜா ஹரிச்சந்திரனுக்கு புத்திரப் பேறு ஏற்படவில்லை. நாரதரும், பர்வதரும் அவனுக்குப் புத்திரன் இல்லாவிட்டால் அவர் நரகம் செல்ல நேரிடும் என்றனர். அதற்கான வழியை அவன் முனிவர்களிடம் கேட்க, அவர்கள் கவுதமி கங்கைக் கரையை அடைந்து வருணனைக் குறித்து பிரார்த்திக்கும் படியும், அதனால் மகப்பேறு ஏற்படும் என்றும் அறிவுரை கூறினர். வருணன் தோன்றி அவனுக்கு ஒரு மகன் பிறப்பான் என்றும், ஆனால் அவனை வருணனைக் குறித்த யாகத்தில் பலி கொடுக்க வேண்டும் என்று கூற, ஹரிச்சந்திரன் சம்மதிக்க அவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து ரோஹிதன் என்ற பெயரில் வளர்ந்து வந்தது. சில நாட்களில் வருணன் தோன்றி யாகத்தைப் பற்றி நினைவூட்ட அவனுக்குப் பத்து நாட்கள் ஆகட்டும். அதுவரையில் தூயவனாகான் என்று கூறி வருணனை அனுப்பிவிட்டான். பன்னிரண்டு நாட்கள் கழித்து வருணன் வர குழந்தைக்குப் பல் முளைக்கட்டும் என்றான். ஏழாண்டுகள் கழித்து மறுபடியும் வருணன் வந்து கேட்க, அவனுக்குப் பால் பற்களே உள்ளன. உண்மை பற்கள் வளரட்டும் என்றான். அடுத்து வருணன் வந்தபோது அந்தப் பாலகன் க்ஷத்திரியக் குலத்தோன்றல். அவன் அங்கே சாத்திர வித்தைகள் கற்று முழு க்ஷத்திரியன் ஆகட்டும் என்றான் மன்னன். பதினாறு வயதில் அவனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான் வருணன். அவ்வமயம் வந்த வருணன் முன் மன்னனும், இளவரசன் ரோஹிதனும் உரையாடினர். அப்போது மன்னன் பேசுவதற்கு முன்பே ரோஹிதன் வருணனிடம், தான் விஷ்ணுவைக் குறித்த ஒரு யாகம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதைச் செய்ய அனுமதிக்குமாறும் அதன்பின் விரும்பிய வண்ணம் செய்யலாம் என்று கூறினான்.
ரோஹிதன் கானகம் சென்றான். அவ்வமயம் அவன் தந்தை வயிற்று நோயால் அவதியுறுவதாகவும் செய்தி எட்டியது. காட்டில் ரோஹிதன் அஜிகர்த்தா என்னும் ஓர் ஏழை முனிவரை அவரது மனைவி, மற்றும் மூன்று புத்திரர்களுடன் வறுமையில், உண்ண உணவின்றித் தவிப்பதைக் கண்டான். அவன் முனிவரிடம் ஒரு யாக பலிக்காக அவருடைய புதல்வர்களில் ஒருவரைத் தருமாறும் அதற்கு ஈடாக ஆயிரம் பசுக்களும், ஆயிரம் பொற்காசுகளும், ஆயிரம் ஆடைகளும், நிறைய செல்வமும் அளிப்பதாகக் கூறினான் ரோஹிதன். முனிவர் தனது நடுமகனாகிய ஷுனஷேபனைக் கொடுக்க, ரோஹிதன் அவனைத் தந்தையிடம் அழைத்து வந்தான். அப்போது ஹரிச்சந்திரன் மன்னன் பிராமணர்களை ரக்ஷிக்க வேண்டியவன். எனவே அவனை முனிவரிடம் திருப்பிக் கொண்டு போய் விட்டுவிடு என்ற ஆணையிட்டான். அப்போது ஓர் அசரீரி வாக்கு கேட்டது. யாரும் பலி ஆக வேண்டியதில்லை. ஷுனஷேபனைக் கவுதமி கங்கைக் கரைக்கு அழைத்துச் சென்று வருணனை முன்னிட்டு யாகம் நடக்கட்டும். அது மிகச்சிறந்த புண்ணிய நதி. அதன் கரையில் செய்யப்படும் யாகத்திற்குப் பலி தேவையில்லை என்றது. ஹரிச்சந்திரன் அவ்வாறே செய்ய வருணனும் திருப்தி அடைந்தான். விசுவாமித்ர முனிவர் ஷுனஷேபனைத் தன் மகனாகத் தத்தெடுத்துக் கொண்டார்.
25. விருத்த கவுதமனும் விருத்த சங்கமமும்
கௌதம முனிவருக்கு விருத்த கவுதமன் என்றொரு மகன் இருந்தான். அவன் ஒரு மூக்கறையன். எனவே அவன் குருகுலம் செல்லவில்லை. கற்கவுமில்லை. எனினும் எப்போதும் சில மந்திரங்களை உச்சரித்த வண்ணம் இருந்தான். இளமை அடைந்த அவன் உலகைச் சுற்றிவரக் கிளம்பினான். மூக்கறையன் என்பதால் அவனுக்குத் திருமணம் ஆகவில்லை. சுற்றுப்பயணம் கிளம்பிய அவன் ஷிதகிரியை அடைந்தான். அங்கு ஓர் அழகிய குகையைக் கண்டு அதனை இருப்பிடமாக்கிக் கொள்ள உள்ளே நுழைந்தான். அதனுள் ஓர் ஆச்சரியத்தைக் கண்டான். அதனுள் வயது முதிர்ச்சியால் மிகவும் மெலிந்த ஒரு முதியவனைக் கண்டு அவளுடைய பாதங்களைத் தொட முயற்சிக்கையில் அம்முதியவள், அவன் அவளுடைய குரு என்றும், அதனால் தன்னை வணங்கக் கூடாது என்றும் தடுத்தாள். அப்போது முனிபுத்திரன் வியப்புற்று அது எவ்வாறு சாத்தியமாகும், தானோ வயதில் சிறியவன் என்று கூறி மூதாட்டியை வினவ, அவள் தன் வரலாற்றைக் கூறினாள்.
மூதாட்டியின் வரலாறு:
ரிதத்வஜன் என்றொரு இளவரசன் இருந்தான். அவன் ஓர் அழகிய வலிமை வாய்ந்த இளைஞன். அர்ஷ்டிஷேனனின் மகன். அவன் வனத்தில் வேட்டையாடித் திரிய அந்த குகைக்கருகில் ஓர் அப்சர மங்கையைக் கண்டான். அவள் பெயர் சுஷ்யமை. இருவரும் திருமணம் செய்து கொள்ள அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் அந்த இளவரசன் ஊர் திரும்ப நேர்ந்தது. அப்போது சுஷ்யமை அந்தப் பெண் குழந்தையிடம் அவள் குகையை விட்டு வரக்கூடாது என்றும், குகையில் அவள் முதல் முதல் சந்திக்கும் ஆணே அவளுக்குக் கணவனாவான் என்றும் கூறிச் சென்று விட்டான். அந்தப் பெண் குழந்தையே இந்த வயது முதிர்ந்த மூதாட்டி. ரிதத்வஜனும் அவன் மகனும் நெடுங்காலம் நாடாண்டனர். இத்தனை ஆண்டுகளாகத் தான் அங்கிருப்பதாகக் கூறினாள் மூதாட்டி. முதன்முதலில் தான் கண்ட ஆண் விருத்த கௌதமனே என்றும், அவனே அவள் கணவன் என்றும், ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் குரு அல்லவா என்றும் சொன்னான். அப்போது அவன், அதெப்படி சாத்தியமாகும். நீயோ மூதாட்டி. நானோ உனக்குக் குழந்தை போல என்று மறுக்க, அவளோ அவன் தன்னை மணம் செய்து கொள்ளாவிடின் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினாள்.
அப்போது அவன் தான் அசிங்கமானவனென்றும் தான் கல்விமானாயும், அழகனாயுமானால் அவளை மணப்பதாகவும் கூறினான். அதற்கு மூதாட்டி, தான் சரசுவதியைக் குறித்துத் தவம் ஆற்றித் திருப்தி செய்திருப்பதால் அவள் அவனைக் கல்விமான் ஆக்குவாள் என்றும், வருணனிடம் வேண்டியுள்ளதால் வருணன் அவனை அழகனாக்கி விடுவான் என்றும் கூறினாள். உடனே விருத்த கவுதமன் கல்விமானாகவும், பேரழகனாகவும் மாறி அவளை மணந்து சுகமாக வாழ்ந்து வந்தான். பல முனிவர்கள் அவர்கள் ஆசிரமத்திற்கு வந்தனர். அவர்களில் சிறந்த கல்விமான்களாகிய வசிஷ்டரும், வாமதேவரும் இருந்தனர். அவர்களுடன் சில இளம் சீடர்களும் இருந்தனர். அவர்கள் இந்தத் தம்பதியரைக் கண்டு எள்ளி நகையாடினர். அவர்கள் அந்த ஆண் யார் என்று மூதாட்டியிடம் கேட்டனர். இதனால் இருவரும் வெட்கமடைந்தனர். அவர்கள் அகஸ்திய முனிவரை நாடி அவருடைய அறிவுரையை வேண்டினர். முனிவர் அவர்களிடம் கவுதம கங்கையின் சிறப்பை எடுத்துக் கூறி அங்கு சென்று அதில் நீராடினால் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற சொன்னார். அவ்வாறே அவர்கள் தீர்த்தமாடி அரியையும், அரனையும் வழிபட்டனர். கிழவி அழகிய குமரியானாள். இத்தகைய அதிசய நிகழ்ச்சி நடந்த இடம் விருத்த சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.
26. பிப்பலதன் வரலாறு
பல்லாண்டுகளுக்கு முன்பு ததீசி என்ற முனிவரும், அவரது மனைவி லோபமுத்திரையும் வாழ்ந்து வந்தானர். புனித நதி கங்கøக்கருகில் ததீசி ஆசிரமம் இருந்தது. அத்தம்பதியருடன் லோபமுத்திரையின் சகோதரி கபஸ்தினியும் இருந்து வந்தாள். அவருடைய தவ வலிமையை அறிந்த தானவர்களும், தைத்தியர்களும் அவரது ஆசிரமத்தில் நுழையவே அஞ்சினர். ஒரு சமயம் தேவாசுரப் போரில் அசுரர்களை வென்ற தேவர்கள் ததீசி முனிவருக்குத் தமது மரியாதையையும் வணக்கத்தையும் செலுத்த அவருடைய ஆசிரமத்திற்கு வந்தனர். முனிவர் அவர்களுடைய நலன்கள் பற்றி விசாரித்தார். அப்போது தேவர்கள், அசுரர்கள் தோற்று ஓடிவிட்டதால் இனி தமது ஆயுதங்களுக்கு பாதுகாவலாக ஓரிடத்தைத் தேடி வந்த தேவர்கள், அவற்றை முனிவர் ஆசிரமத்தில் வைக்க விரும்பி அவரை வேண்டினர். முனிவர் சம்மதம் தெரிவிக்கவே, தேவர்கள் அவற்றை ஆசிரமத்தில் வைத்து விட்டுச் சென்றனர். அது கண்ட லோபமுத்திரை, பற்றற்ற முனிவர், மற்றவர் பொருள்களைத் தன்னிடத்தில் வைத்துக் கொள்வது சரியல்ல. அந்த ஆயுதங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது? தேவர்கள் நம்மைக் குறை கூறமாட்டார்களா? என்றாள். நான் அதை எண்ணிப் பார்க்கவில்லை. எனினும் வாக்குக் கொடுத்த பின் அதிலிருந்து பின்வாங்க முடியாது என்றார் முனிவர். பல்லாண்டுகள் கழிய ஆயுதங்கள் மறைய ஆரம்பிக்க, என்ன செய்வதென்றறியாத முனிவர் அவற்றை புனித நீரில் தூய்மை செய்ய, அவை தமது சக்தியை இழந்துவிட்டன. அந்த நீரைத் ததீசி முனிவர் குடித்து விட்டார். பின்னர் தேவர்கள் அவர்கள் ஆயதங்களைப் பெற வந்து முனிவரைக் கேட்டனர். மறுபடியும் அசுரர்கள் வலிமை பெற்றுள்ளனர் என்றனர். முனிவர் அவர்களிடம் நடந்ததைக் கூறி அவை வலிமை இழந்துவிட்டதாலும், கழுவின நீரை அவர் பருகி விட்டதாலும், தான் தனது தவவலிமையால் உயிரை விடுவதாகவும், தன்னுடைய எலும்புகளிலிருந்து சிறந்த ஆயுதங்கள் உருவாகும் என்றார். ததீசி முனிவர் மரிக்க, தேவர்கள் விசுவகர்மாவிடம் முனிவர் எலும்பிலிருந்து ஆயுதங்களை உருவாக்க வேண்டினர். அப்படித் தயாரான ஆயுதங்களில் வஜ்ராயுதம் தலை சிறந்தது. இவ்வளவு நடைபெறும் போது லோபமுத்திரை அங்கில்லை. முனிவர் உடலுடன் அவள் உடன்கட்டை ஏற விரும்பினாள். ஆனால் அவள் கருவுற்றிருந்ததால் சதி தடைப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் அதை ஒரு பிப்பல மரத்திடம் (அத்திமரம்) வளர்க்க விட்டுவிட்டாள்.
பிப்பலதன் :
பிப்பல மரத்தினால் வளர்க்கப்பட்ட அவன் பிப்பலதன் எனப்பட்டான். அம்மரம் பிப்பலதனுக்கு அமிர்தம் கேட்டு, சந்திரனை வேண்டிட, சந்திரன் கொடுக்க பிப்பலதன் அதிக பலம் பெற்றான். பிப்பலதன் தன் பெற்றோர்களின் மரணம் பற்றிய விவரங்களைக் கேட்டு பழிவாங்க நினைத்தான். பிப்பல மரம் அவனைச் சந்திரனிடம் அழைத்துச் செல்ல, சந்திரன் நல்லுரை வழங்கினான். சந்திரன் பிப்பலதனிடம் அவன் சிறியன் என்றும், அவன் கல்வி கற்க வேண்டும், அஸ்திர சாஸ்திர வித்தைகளைக் கற்க வேண்டும் என்றும் தண்ட காரணியத்துக்குச் செல்லுமாறும் அங்கு கௌதம கங்கை பாய்கிறது என்றும், அங்கு சென்று சிவனைக் குறித்து தவம் செய்தால் அவனுடைய கோரிக்கை நிறைவேறும் என்றும் அறிவுரை வழங்கினான். அவ்வாறே பிப்பலதன் தவம் செய்ய சிவபெருமான் தோன்றி, என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தேவர்களை நான் அழிக்க வரம் தரவேண்டும் என்று கேட்டான். அப்போது சிவபெருமான் தன் நெற்றியில் உள்ள கண்ணை அவன் என்று பார்க்கிறானோ அன்று அவன் கோரிக்கை நிறைவேறும் என்றார். நெடுநாட்களாகியும் சிவபெருமானைக் காணவோ, அவரது நெற்றிக் கண்ணைக் காணவோ இயலாததால் மறுபடியும் சிவனைக் குறித்துக் கடுந்தவம் செய்ய சிவனது நெற்றிக்கண்னைக் காண அதிலிருந்து ஒரு பூதம் தோன்றியது. அது பிப்பலதனிடம் என்ன வேண்டும் என்று கேட்க, பிப்பலதன் தன் பகைவர்களாகிய தேவர்களை அழிக்குமாறு ஆணை இட்டான். உடனே அது பிப்பலதனையே எதிர்த்தது. அதற்கு பிப்பலதன் என்ன காரணம் என்று கேட்க, அவன் உடலும் தேவர்களாலேயே உண்டாகியது. எனவே உன்னையும் நான் கொல்வேன் என்றது. தன்னைக் காத்துக் கொள்ள பிப்பலதன் சிவனிடம் ஓடினான். சிவபெருமான் ஓர் இடத்தைப் பிப்பலதனுக்காகக் குறிப்பிட்டு அதில் அவன் வசிக்க வழி ஏற்படுத்தினார். அவ்விடத்தில் பூதம் செல்ல முடியவில்லை. இதற்கிடையில் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்களைக் காப்பாற்ற வேண்டினர்.
பிப்பலதனுக்கு அறிவுரை:
சிவபெருமான் பிப்பலதனிடம் கோபத்தை அடக்கிக் கொள்ளுமாறும், தேவர்களைக் கொல்வதால் அவனுடைய பெற்றோர்கள் திரும்பிவரப் போவதில்லை என்றும் கூறி சாந்தி அடையச் சொன்னார். ஆனால், பிப்பலதன் தன் பெற்றோர்களை ஒருமுறை பார்க்க விரும்பினான். அப்போது விண்ணிலிருந்து ஒரு விமானம் வந்தது. அதில் ததீசி முனிவரும், லோபமுத்திரையும் இருந்தனர். அவர்கள் பிப்பலதனை ஆசிர்வதித்து, திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று இல்லறம் நடத்துமாறு அறிவுரை கூறினர். அந்தப் பூதம் ஒரு உபநதியாகி கங்கையுடன் இணைந்தது.
27. நாகேசுவரனும் நாகதீர்த்தமும்
பிரதிஷ்டானபுரம் என்ற நகரில் சூரேஸ்வரன் என்னும் ஓர் அரசன் ஆண்டு வந்தான். ஒருநாள் பிரார்த்தனைக்குப் பிறகு அவன் மனைவிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அது ஒரு பாம்பாக இருப்பதைக் கண்டு மன்னனும், அவள் மனைவியும் துயரக் கடலில் ஆழ்ந்தனர். எனவே, அக்குழந்தையை யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் வளர்த்து வந்தனர். சில மாதங்களில் இளவரசனாகிய அந்தப் பாம்பு ஒரு மனிதக் குழந்தையைப் போல பேச ஆரம்பித்தது. அதற்கு வேதங்களைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய அதுவும் கற்று முடித்தது. அப்போது அந்த நாகக்குழந்தை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறும், தனக்கொரு புத்திரன் இல்லாவிடில் நரகமே வாய்க்கும் என்றும் அந்த நாகம் கூறிற்று. இதைக் கேட்டு வியப்புற்ற மன்னன் எந்த இளவரசி பாம்பை மணக்கச் சம்மதிப்பாள் என்று கேட்டான். அதற்கு அது அதெல்லாம் தெரியாது தனக்குத் திருமணம் செய்து வைக்காவிடில் தற்கொலை செய்து கொள்வதாக கூறிற்று. அதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஓர் இளவரசியைக் கடத்தி வந்து மணம் செய்விக்கலாம் என்றது. செய்வதறியாமல் மன்னன் அமைச்சர்களிடம், இளவரசன் தக்க வயது அடைந்து கல்வி கேள்விகளில் சிறந்துள்ளான். தைரியசாலிகளில் அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்குத் திருமணம் செய்வித்து தான் வனம் சென்று தவம் செய்யப் போவதாகக் கூறினான். ஆனால், நாகேசுவரன் ஒரு பாம்பு என்ற விஷயம் அமைச்சர்களுக்குத் தெரியாது.
சூரசேனனுக்கு அறிவுமிக்க, மூத்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவர் நாட்டின் கிழக்கில் விஜயன் என்றொரு மன்னன் ஆண்டு வருகிறான் என்றும், அவனுக்கு எட்டு புத்திரர்களும், போகவதி என்ற ஒரு புத்திரியும் இருக்கிறாள், அவள் சிறந்த அழகி. அவள் நாகேசுவரனுக்குத் தக்க மனைவி ஆவாள் என்றார். அந்த அமைச்சர் மன்னன் விஜயனிடம் தூதாக அனுப்பப்பட்டார். ஓர் இளவரசி ஒருவனை நேரில் பார்த்துத் தான் விவாகம் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. அவள், வாளுக்கோ அல்லது எந்த ஆயுதத்துக்கோ மாலையிட்டு மணம் செய்து கொள்ளலாம். அமைச்சர் மன்னன் விஜயனிடம் சில முக்கிய காரணங்களால் இளவரசன் நேரில் வரமுடியாத சூழ்நிலை. எனவே இளவரசன் வாளுக்கு மாலையிட்டு மணம் செய்யலாம் என்று கூற, மன்னனும் அதற்கு இசைந்தான். எனவே, இளவரசியுடன் அனைவரும் பிரதிஷ்டானபுரம் வந்தடைந்தனர். அப்போது நாகேசுவரனின் தாயார் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி மணமகள் இளவரசியிடம் அவள் கணவன் ஒரு பாம்பு என்று கூறி, அதற்கு அவளுடைய பிரதிக்கிரியை எப்படி இருக்கிறது என்று அறிய முற்பட்டாள். அவ்வாறே பணிப்பெண் சென்று இளவரசியிடம் கூற, இளவரசி அது தான் செய்த பாக்கியம், பெண்கள் சாதாரணமாக ஆண்களை மணப்பர். தான் முற்பிறவியில் செய்த நல்வினைப் பயனால் நாக தேவதையை மணக்கிறேன் என்று கூறினாள். இவ்வாறு இளவரசி கூற, அவளை நாகேசுவரன் முன் கொண்டுவர போகவதியைக் கண்டவுடன் நாகேசுவரனுக்கு முற்பிறவி ஞாபகம் வந்தது. தான் முன் ஜென்மத்தில் சிவனுடன் தோழனாக இருந்ததும், அப்போது போகவதி தன் மனைவியாக இருந்ததும் நினைவுக்கு வந்தது. ஒரு சமயம் பரமன் பார்வதியிடம் ஒரு நகைச்சுவை சொல்ல அங்கிருந்த அவனும் அதைக்கேட்டு சிரிக்க, சிவனார் அவனை ஒரு மனிதனுக்குக் குழந்தையாக, பாம்பு வடிவில் பிறக்க சாபமிட்டார். அதே சமயம் போகவதிக்கும் தன் முற்பிறவி செய்திகள் நினைவுக்கு வந்தன. இருவரும் கௌதம கங்கை ஆற்றை அடைந்து புனித நீராடினர். நாகேசுவரன் ஓர் அழகிய ஆண் வடிவம் பெற்றான். இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அவன் தந்தை சூரசேனன் இறந்த பிறகு நாகேசுவரன் அரசாட்சி செய்து இறுதியில் கைலையை அடைந்து சிவசந்நிதியைப் பெற்றான். அந்த ஆற்றங்கரையில் இருவரும் ஓர் சிவாலயம் எழுப்பினர். அவ்விடத்தின் பெயர் நாகதீர்த்தம் ஆகும்.
28. நான்முகனாகிய பிரமன்
ஒரு சமயம் நடந்த தேவாசுரப் போரில், தேவர்கள் பிரம்மனின் அறிவுரையைக் கேட்க வர, அவர் அவர்களுடன் சிவபெருமானைத் தரிசித்தார். சிவனார் தேவர்களுக்கு உதவியாகப் போரில் கலந்துகொண்டு அசுரர்களை சுமேரு மலையிலிருந்தும், சொர்க்கத்திலிருந்தும் விரட்டி அடிக்க அவருக்கு உடலில் அதிக வியர்வை ஏற்பட, வேர்வைத் துளிகள் விழுந்த இடத்திலெல்லாம் தோன்றிய பூதங்களும் சிவபெருமானுக்கு உதவியாக நின்றன. அவை மாத்ரிகள் எனப்பட்டன. அவை அரக்கர்களைப் பாதாளத்திற்குத் துரத்திச் சென்று கொல்லுகையில், பிரம்மனும் மற்ற தேவர்களும் கவுதமி கங்கை நதிக்கரையில் காத்திருந்தனர். அந்த இடமே பிரதிஷ்டானபுரம் என்றானது. அரக்கர்களைக் கொன்று விட்டு பூமிக்கு வந்த மாத்ரிகள் கவுதம கங்கைக் கரையில் வசித்தனர். அங்குள்ளது மாத்ரி தீர்த்தம். பூர்வம் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஐந்தாவது தலை கழுதை வடிவில் இருந்தது. அரக்கர்கள் பாதாளத்துக்கு ஓட, இந்தக் கழுதைத் தலை அரக்கர்களை நோக்கி ஏன் ஓடுகிறீர்கள் திரும்பி வாருங்கள். நானும் உங்களுக்காக தேவர்களுடன் போர் செய்கிறேன் என்றது. தேவர்களுக்கு உதவியாக பிரம்மன் போரில் ஈடுபட அவரது கழுதை தலை மட்டும் அரக்கர்களுக்கு உதவ முற்பட்டது கண்டு தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று, பிரம்மனின் கழுதை தலை எல்லோரையும் குழப்பத்தில் ஆழ்த்துவதாகக் கூறி அதை நீக்கிவிட வேண்டினர். நீக்குவது எளிது என்றாலும், அது புவியில் விழுந்தால் உலகையே அழித்து விடும். எனவே அதற்கான வழி காண சிவபிரானைப் பிரார்த்தியுங்கள் என்றார் விஷ்ணு. புவியும், கடலும் பிரம்மனது கழுதைத் தலையை ஏற்க முடியாத நிலையில் என்ன செய்யலாம் என்று எண்ணி இறுதியில் சிவனே அத்தலையை ஏற்பதாக முடிவாயிற்று. பிரம்மனது தலையைச் சிவபெருமான் கொய்த இடம் ருத்ர தீர்த்தம் எனப்படுகிறது. இதனால் பிரம்மன் நான்கு முகங்களுடன் சதுர்முகன் அல்லது நான்முகன் எனப்பெயர் பெற்றார். கௌதம கங்கைக் கரையில் பிரம்மனது கோயில் உள்ள இடம் பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. இங்கு பிரம்மதரிசனம் செய்வதன் மூலம் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்துக்கு நிவாரணம் பெறலாம்.
29. ஆந்தையும் புறாவும்
கவுதமி கங்கை ஆற்றங்கரையில் யமனின் பேரனான அனுஹ்ரதன் என்ற புறாவும் அதன் மனைவி ஹேதியும் வசித்து வந்தன. கொஞ்சம் தூரத்தில் அக்னி குலத்தைச் சார்ந்த உலூகன் என்ற ஆந்தையும், அதன் மனைவி உலூகியும் வசித்து வந்தன. ஆந்தையும், புறாக்களும் பகைவர்கள். புறாக்கள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களை யமனிடமிருந்தும், ஆந்தைகள் தமக்கு வேண்டுவனவற்றை அக்னியிடமிருந்தும் பெற்று அடிக்கடி போர்செய்தவண்ணம் இருந்தன. அதனால் எல்லாம் எரிந்து போகக்கூடிய அபாயம் ஏற்பட யமனும், அக்கினி தேவனும் ஆந்தைகளையும், புறாக்களையும் தமக்குள் உள்ள விரோதத்தை மறந்து நண்பர்களாக வாழுமாறு அறிவுரை கூறினர். அந்தப் புறாக்கள் வசித்தி இடம் யமதீர்த்தம் என்றும், ஆந்தைகள் வசித்த இடம் அக்னி தீர்த்தம் என்றும் பெயர் பெற்றன.
30. அந்தணன் வேதாவும் வேடன் பில்லாவும்
வேதா என்ற பெயருடைய அந்தணர் பிற்பகல் வரை தினமும் சிவபூஜை செய்து விட்டு பிற்பகலில் அருகிலுள்ள கிராமங்களில் யாசகம் செய்வது வழக்கம். பில்லா என்ற பேர் கொண்ட வேடன் பிற்பகலில் காட்டுக்குள் வேட்டைக்குச் செல்வது வழக்கம். வேட்டை முடிந்தவுடன் பில்லா அங்குள்ள சிவலிங்கத்திற்குத் தான் கொண்டு வந்த இறைச்சியை நிவேதனம் செய்வது வழக்கம். அப்போது அவன் சிவலிங்கத்தின் மீதிருந்த பூக்கள், வில்வ இலைகள் போன்றவற்றை அகற்றுவான். பில்லாவின் பக்தியில் மகிழும் சிவபெருமான் தினமும் பிற்பகலில் அவன் வருகைக்காக காத்திருப்பார். இவ்வாறு நடைபெற்று வர வேதனும், வேடனும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை. ஆனால், அங்கு அன்றாடம் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்து வந்தனர். அந்தணர் யாசகத்துக்குச் செல்லும் போது, வேடன் நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் யாரால், எது நிகழ்கிறதென்று அந்தணருக்குப் புரியவில்லை. எனவே, ஒருநாள் அந்தணர் யாசகத்துக்குப் போகாமல் அங்கு நடப்பவற்றை மறைந்திருந்து கண்டார்.
அவ்வமயம் சிவபெருமான் தோன்றி பில்லாவிடம் அன்று ஏன் தாமதமாயிற்று என்றும், அவனுக்காகத் தான் காத்திருப்பதாகவும் கூறினார். பூசை முடிந்து பில்லா சென்றவுடன் அந்தணர் எம்பெருமானை அணுகி, கொடிய, தீய வேடுவனுக்குக் காட்சி அளித்தீர். நான் இத்தனை ஆண்டுகள் பூஜையாகிய தவமேற்று செய்து வருகிறேன். எனக்குக் காட்சி தரவில்லை. ஏன் இந்த ஓரவஞ்சனை. பாராங்கல் கொண்டு இந்த லிங்கத்தை உடைக்கிறேன் என்று கூறினார். தேவைப்பட்டால் செய்யவும். எனினும், நாளை வரை பொறுத்திருந்து பார் என்று அசரீரி வாக்குக் கேட்டது. அடுத்த நாள் அந்தணர் பூசைக்கு வந்தபோது லிங்கத்தின் மீது ரத்தத்தைக் கண்டு அதை அகற்றி இடத்தைத் தூய்மை செய்து தன் பூஜையை முடித்தார். பின்னர் அங்கேயே மறைந்திருந்தார். சிறிது நேரம் கழித்து பில்லாவும் வந்து, லிங்கத்தின் மீதுள்ள இரத்தத் துளிகளைக் கண்டு, தானே அதற்கு பொறுப்பேற்று ஒரு கூரிய அம்பால் தன் உடலைப் பல இடங்களில் தானே தண்டனையாகக் குத்திக் கொண்டான். வேதன், வேடன் இருவர் முன்பும் எம்பெருமான் தோன்றி அந்தணர் வேதனுக்கும், வேடன் பில்லாவுக்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்தினார். அந்தணர் வேதன் தனக்கு அன்பான பூஜையும், நைவேத்தியமும் அளித்ததாகவும், ஆனால் வேடன் பில்லா தன்னையே இறைவனுக்கு அளித்து விட்டதாகவும் கூறினார். அதுவே பூஜை, புனஸ்காரங்களுக்கும், ஆத்மார்த்த உண்மையான பக்திக்கும் உள்ள வேறுபாடு என்றார். பில்லா சிவனை ஆராதித்து வழிபட்ட இடம் பில்லா தீர்த்தம் ஆகும்.
31. தர்மம், தர்மத்தைக் காக்கும்
பௌவனம் என்ற நகரில் கௌதமன் என்னும் ஓர் அந்தணன் வசித்து வந்தான். அவனுக்கு வைசிய குலத்தைச் சார்ந்த மணிகுண்டலன் என்ற நண்பன் இருந்தான். கௌதமனின் தாயார் அவனுக்கு அதர்ம வழிகளைக் கூறி வந்தாள். அதனால் அவன் நண்பனிடம், இருவரும் அயல்நாடு சென்று வாணிகம் செய்து நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறினான். ஆனால், மணிகுண்டலன் தன் தந்தையிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் மேலும் செல்வம் தேடும் அவசியம் இல்லை என்றான். அதற்கு கவுதமன், நண்பனிடம் அவனுக்கு வருங்காலம் பற்றியும் வாழ்வில் முன்னேறுவது பற்றியும் அக்கறை இல்லை என்றும், ஒரு வெற்றியுள்ள மனிதன் தன் தந்தையின் பொருள் கொண்டு வாழமாட்டான். ஆனால் அவனுடைய அதிர்ஷ்டத்தை அவனே தேடிக் கொள்வான் என்றும் கூறினான். கவுதமனின் வார்த்தை சரியே என மணிகுண்டலன் எண்ணினான். நண்பன் தனக்கு மோசம் செய்வதை அவன் உணரவில்லை. மணிகுண்டலன் தேவையான மூலதனத்துடன் வர, கவுதமனும், மணிகுண்டலனும் தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். வழியில் கவுதமன் சொன்னான், நல்ல தர்மநெறியில் நடப்பவர்கள் எப்படியெல்லாம் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு செல்வமோ, மகிழ்ச்சியோ ஏற்படுவது இல்லை. எனவே தருமம், நியாயம் என்பது எல்லாம் வீணானவையே என்றான்.
அதற்கு மணிகுண்டலன், தருமநெறியில் நிற்பதே மகிழ்ச்சியை அளிக்கிறது. வறுமை, துயரம் என்பனவெல்லாம் தவிர்க்க முடியாதவை என்று கூறி மறுத்தான். இருவரும் அவரவர் போக்கிலேயே நின்றதால் யார் சொல்வது சரி என்று நிச்சயிக்க இயலவில்லை. இதற்காகப் பணயம் வைத்தனர். மற்றவர்களிடம் கேட்டு யார் சொல்வது சரி எனப்படுகிறதோ அவருக்கு மற்றவருடைய பணம் உரித்தாகும் என்று முடிவெடுத்து அவ்வாறே கேட்க, அனைவருமே தீயவரே வாழ்கின்றனர். நல்லவர் துன்பமடைகின்றனர் என்று கூற, மணிகுண்டலன் தன்னிடமிருந்த பொருளை எல்லாம் கவுதமனிடம் கொடுத்துவிட வேண்டியதாயிற்று. எனினும், மணிகுண்டலன் தருமத்தையே சிலாகித்துப் பேசினான். கவுதமன், மணிகுண்டலன் ஒரு கழுதை. அவன் பொருளைத் தன்னிடமிழந்தும் தருமமே சிறந்ததென்று கூறுவது விந்தை என்றான். அப்போது மணிகுண்டலன் எப்போதும் இறுதியில் வெல்வது தர்மமே. கவுதமன் பெற்ற வெற்றி ஒரு மாயை என்றான்.
மற்றொரு முறை அவர்கள் பந்தயம் வைத்துக் கொண்டு வேறு சிலரிடம் அவர்களது அபிப்பிராயத்தைக் கேட்டனர். இதில் தோற்பவர் தன் இரு கைகளையும் இழப்பதாக முடிவெடுத்தனர். மறுபடியும் பெரும்பாலோர் கவுதமன் கூற்றே சரியென்று கூற, மணிகுண்டலனின் இரு கரங்களும் வெட்டப்பட்டன. அப்போது கவுதமன் மணிகுண்டலன் போக்தைக் குறை கூற, அவன் தருமமே முக்கியமானது. தேவையானது. அது தன் பக்கம் இருப்பதாகக் கூறினான். இதனால் மிக்க கோபம் கொண்ட கவுதமன், மேலும் மேலும் மணிகுண்டலன் தர்மத்தைப் புகழ்ந்தால் அவன் தலையை வெட்டிவிடுவதாகக் கூறினான். ஆனால் மணிகுண்டலன் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. மறுபடியும் ஒரு பந்தயம் வைக்க, அதிலும் கவுதமன் கூற்றே சரி என மற்றோர் ஒப்புக்கொள்ள கவுதமன், மணிகுண்டலன் கண்களைப் பிடுங்கி விட்டு அவன் அப்படியே சாகட்டும் என்று எண்ணி வழியிலேயே விட்டுச் சென்றான். கவுதமி கங்கைக் கரையில் தன் விதியை நொந்து கொண்டு மணிகுண்டலன் விழுந்து கிடந்தான்.
இரவு வந்தது. எங்கும் இருள் சூழ்ந்தது. அங்கே விஷ்ணுவின் சிலை ஒன்று இருந்தது. தினந்தோறும் இரவில் விபீஷ்ணனின் மகன் அங்கு விஷ்ணு பூசை செய்ய வருவது வழக்கம். அவன் கண்களை இழந்து பரிதவிக்கும் மணிகுண்டலனின் கதையைக் கேட்டு தந்தையிடம் தெரிவித்தான். அப்போது விபீஷணன், லக்ஷ்மணனைக் காப்பாற்ற சஞ்சீவி மலையைக் கொண்டு வந்த போது அந்த இடத்தில் விஷல்யகரணி என்ற மூலிகைச் செடி விழுந்து வளர்ந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி மணிகுண்டலனுக்குச் சிகிச்சை செய்து காப்பாற்றலாம் என்றும் கூறினார். அந்தச் செடி இப்போது அங்கு மரமாக வளர்ந்து இருந்தது. அதன் கிளை ஒன்றை வெட்டி மணிகுண்டலன் மீது வைக்க, அவன் கண்களும், கைகளும் வலுப்பெற்று எழுந்தான். இவ்வாறு மணிகுண்டலனுக்குச் சிகிச்சை செய்தபின் விபீஷ்ணன், மகனுடன் இலங்கை சென்றான். இவ்வாறு தர்மநெறி நின்ற மணிகுண்டலன் பயணத்தைத் தொடர்ந்து மஹாராஜன் என்பவரால் ஆளப்படும் மஹாபுரத்தை அடைந்தான். அந்த மன்னனுக்கு புத்திரன் இல்லை. ஆனால், ஒரு குருட்டுப் புத்திரி மட்டும் இருந்தாள். அவளைக் குணப்படுத்துபவனே தன் மாப்பிள்ளை ஆவான் என்றும், தனக்குப் பின் நாட்டை ஆள்வான் என்றும் அறிவித்திருந்தான். இப்போது விஷல்யகரணி மூலிகையைப் பற்றி அறிந்திருந்த மணிகுண்டலன் அவளைக் குணப்படுத்தி, அவளையே மணந்து அந்த மஹாபுரத்துக்கு மன்னன் ஆனான்.
பல ஆண்டுகள் கழிய, ஒரு நாள் சேவகர்கள் கவுதமன் இழைத்த குற்றத்திற்காக அவனை இழுத்து வந்து மன்னனின் முன் நிறுத்தினர். அப்போது கவுதமன் செல்லாக் காசுகூட இல்லாமல் பிச்சைக்காரனை விட மோசமான நிலையில் இருந்தான். கவுதமனைக் கண்ட மணிகுண்டலன் அவனை மன்னித்து தன் செல்வத்தை அவனுடன் பகிர்ந்து கொண்டான். எனவே தர்மம் தலைகாக்கும் என்பது போல் எல்லா வகையிலும் துணை புரியும். இப்படிப்பட்ட பல நிகழ்ச்சிகள் நடந்த இடங்கள் கவுதமி கங்கைக் கரையில் உள்ளன.
32. கண்டு மகரிஷியும், அப்ஸரஸும்
கவுதம கங்கைக் கரையில் ஓர் அழகிய ஆசிரமத்தில் கண்டு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் வெயில், மழை, குளிர், காற்று என்று பாராமல் நெடுங்காலம் தவமியற்றி வந்தார். அவர் தவத்தால் தன் இந்திர பதவிக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சிய இந்திரன் அவர் தவத்தைக் கெடுக்க பிரேமலோசனை என்ற அப்சர ஸ்திரீயை அனுப்பினான். அவள் ஆடிப்பாடி தன் இனிய குரலால் முனிவரின் தவத்துக்குப் பங்கம் விளைவிக்க முயன்றாள். அவளின் இனிய குரலையும், அழகையும் கண்ட முனிவர் அவளை மணந்தார். பல ஆண்டுகள் இன்பத்தில் திளைத்த அவர் ஒரு நாள் ஆசிரமத்தை விட்டு வெளியே செல்ல முற்பட பிரேமலோசனை அவர் எங்கு செல்கிறார் என்று கேட்க, முனிவர் மாலை ஆனதால் சாயங்கால வந்தனைக்குப் புறப்படுவதாகக் கூறினார். பிரேமலோசனையுடன் பல நாட்கள் கழிந்ததை அறியாத முனிவர் ஒரு பகல் முடிந்து சாயங்காலம் வந்ததென்று எண்ணிக் கூறினார். பிரேமலோசனை தான் காலை வந்தது என்பது பல ஆண்டுகளுக்கு முந்திய காலை என்றும் அன்றிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழிந்துவிட்டன என்றும் கூறினாள். உண்மையை அறிந்த முனிவர் தன் தவத்தை அவள் கெடுத்து விட்டதாகவும், எனினும் மனைவியாக இருந்ததால் அவளை சபிப்பதில்லை என்றும், அவள் தேவலோகம் செல்லலாம் என்று, கூறி விடை கொடுத்து அனுப்பிவிட்டு, தான் பிராயச்சித்தத்தை மேற்கொண்டார். கண்டு முனிவர் புரு÷ஷாத்தம ÷க்ஷத்திரத்தை அடைந்து தவம் புரிய விஷ்ணுவால் ஆசிர்வதிக்கப்பட்டார். கண்டு, பிரேமலோசனைக்கு மரீஷை என்றொரு மகள் பிறந்தாள். தற்போதுள்ள கோதாவரி ஆறே கவுதம கங்கை எனத் தெரிகிறது.
33. ஒரு சண்டாளனும், ஒரு பிரம்மராக்ஷசனும்
நாடு கடத்தப்பட்டவனை அல்லது சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவனை சண்டாளன் என்பர். அவந்தி நகரின் புறப்பகுதியில் ஒரு சண்டாளன் வசித்து வந்தான். ஆனால், அவன் ஒரு சிறந்த விஷ்ணு பக்தன். ஒவ்வொரு ஏகாதசி அன்றும் உபவாசம் இருந்து, இரவில் விஷ்ணு ஆலயம் சென்று திருமால் புகழ்பாடுவது அவன் வழக்கம். அவந்தி நகருக்கருகில் ஷிப்ரா என்னும் ஓர் ஆறு ஓடுகிறது. ஓர் ஏகாதசி திதி அன்று சண்டாளன் ஆற்றங்கரையில் பூசைக்கான மலர்களைச் சேகரிக்க சென்றான். ஆற்றங்கரையில் ஒரு பெரிய மரம் இருந்தது. அதில் ஒரு பிரம்மராக்ஷசன் வசித்து வந்தது. சண்டாளனைப் பார்த்ததும் அது அவனைக் கபளீகரம் செய்ய எண்ணியது. நான் விஷ்ணு பூசைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இன்றிரவு என்னை விட்டுவிடு என்று கூறினான். அதற்கு பிரம்மராக்ஷசன் பத்து நாட்களாக உணவின்றிக் கடும் பட்டினியாக இருப்பதால் உன்னை விடமாட்டேன் என்றது. அப்போது சண்டாளன், இப்போது தன்னைப் போக விடும் படியும், பூஜை முடிந்தவுடன் தானே வந்து சேர்வதாகவும் உறுதி அளித்தான். சண்டாளன் விடுபட்டுச் சென்று இரவெல்லாம் விஷ்ணு பூஜை, பக்திப் பாடல்கள் எல்லாம் முடித்து காலையில் தான் கூறியவாறே பிரம்மராக்ஷசனிடம் வந்து சேர்ந்தான். என்னால் நம்ப முடியவில்லை. வியப்பாக உள்ளது. நீ சண்டாளனாக இருக்க முடியாது. ஓர் அந்தணனே என்று கூறி பிரம்மராக்ஷசன் சண்டாளனிடம் சில கேள்விகள் கேட்டது.
பிரம்மராக்ஷசன் : இரவெல்லாம் என்ன செய்தாய் ?
சண்டாளன் : விஷ்ணு ஆலயத்தில் முன் நின்று விஷ்ணுவின் புகழ் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தேன்.
பிரம்மராக்ஷசன் : எத்தனை காலமாக இவ்வாறு செய்கிறாய்?
சண்டாளன் : இருபத்தைந்து ஆண்டு காலமாக.
இவ்வாறு கூறிய பதில்களைக் கேட்டு பிரம்மராக்ஷசன் சண்டாளனிடம், நிறைய புண்ணியத்தைச் சம்பாதித்திருப்பீர்கள். நான் ஒரு பாவி. எனக்கு ஓர் இரவு புண்ணியத்தைத் தாருங்கள் என்று கேட்டது. அதற்கு சண்டாளன், புண்ணியம் என்னுடையது. நான் அதைத் தரமாட்டேன். என் உடலை எடுத்துக் கொள் என்றான். சரி குறைந்த பட்சம் இரண்டு மணி நேர புண்ணியத்தையாவது கொடு என்று வேண்டிற்று. அப்போது சண்டாளன், என்னால் புண்ணியத்தைத் தரமுடியாது. அது சரி, உன்னுடைய பாவம் தான் என்ன? என்று சண்டாளன் கேட்டான். அப்போது பிரம்மராக்ஷசன் தன் வரலாற்றைக் கூறியது. என் பெயர் சோம சர்மா. நான் தேவசர்மா என்ற அந்தணரின் மகன். ஆனால், நான் தீய நடத்தையில் வாழ்ந்தேன். உபநயனம் ஆகாத ஒரு பிராமணன் யாகங்கள் செய்யத் தகுதியில்லாதவன், அப்படியான நான் ஒரு யாகத்தை நடத்தி விட்டேன். அதன் பயனாய் இப்பிறவியில் நான் பிரம்ம ராக்ஷசனாய் பிறந்துள்ளேன் என்றது. அது கேட்டு மனம் இறங்கிய சண்டாளன் தன் புண்ணியத்தில் ஒரு பகுதியை பிரம்மராக்ஷசனுக்கு அளித்தான். பிரம்மராக்ஷசன் மகிழ்ச்சியுற்று தன் நன்றியைத் தெரிவித்து ஒரு புனிதத் தீர்த்தத்தை அடைந்து தவமியற்றி விடுதலை பெற்றான். அதன்பின் சண்டாளன் தீர்த்த யாத்திரையாக பல இடங்களுக்குச் செல்ல ஓரிடத்தில் அவனுக்கு அவன் முற்பிறவி நினைவுக்கு வந்தது. அவன் முற்பிறவியில் சகல சாஸ்திர, வேதப் பண்டிதனாக இருந்தான். யாசகம் எடுத்து உணவு உண்டான். இந்நிலையில் ஒருநாள், சில திருடர்கள் பசுக்களைத் திருடி ஓட்டிவர அவற்றின் குளம்பு தூசி உணவில் விழ அவன் வெறுத்து யாசகம் பெற்ற உணவை வீசி எறிந்தான். அவ்வாறு அவ்வுணவை எறிந்ததால் சண்டாளனாகப் பிறந்தான். இந்தப் பாவத்திற்காகத் தவமியற்ற, அவன் மன்னிக்கப்பட்டான்.
34. காயத்ரி
காயத்ரி ஏற்பட்ட விவரத்தை முனிவர் கூறலானார்
மூலப்பிரம்மம் தன் நாபியிலிருந்து பிரம்மனைத் தோற்றுவித்தார். அவருக்கு பிரணவ ஒலி கேட்டது. அவ்வொலியைக் கேட்ட பிறகு அவருடைய நான்கு முகங்களிலிருந்தும் 24 எழுத்துக்கள் தோன்றின. அந்த இருபத்து நான்கு எழுத்துக்களும் பீஜாக்ஷரம் எனப்படும். அதுவே காயத்ரி மஹாமந்திரம் எனப்படும். அதன் பிறகு அவர் முகத்திலிருந்து நான்கு வேதங்கள் தோன்றின. எனவே காயத்ரி மந்திரம் வேதங்களுக்குத் தாயாகும். அதனை ஜபிப்பவர்கள் பிரம்ம விதியைப் பெறுவர்.
யோகம் : யோகம் என்பது ஆத்மாவைப் பரமாத்மாவுடன் அல்லது பரப்பிரம்மத்துடன் இணைப்பது. யோகம் செய்யப் புகுபவர் வேதத்தையும், புராணங்களையும் கற்க வேண்டும். சாத்விக உணவுண்டு இனிய பிரதேசத்தில் பழக வேண்டும். புலன்களை அடக்கி சரியான ஆசனங்களைப் பயின்று, மூக்கின் நுனியின் மீது திருஷ்டி வைத்துப் பயில வேண்டும். பற்றற்ற நிலை வேண்டும். சரியான முறையில் யோகம் செய்தால் எல்லா உயிர்களிலும் ஒரே பராமாத்மா இருக்கிறார் என்று அறியலாம். ஜீவராசிகளைத் தனித்தனியே காண்பது ஒரு மாயத் தோற்றமே. எல்லாவற்றிலும் ஒரே பரமாத்மா தான் இருக்கிறார்.
பிரம்ம புராணம் முற்றிற்று.